25 August 2018

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி : பேயாழ்வார்

பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதியை (2282-2381) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



மனத்து உள்ளான், மா கடல் நீர் உள்ளான், மலராள்
தனத்து உள்ளான், தண் துழாய் மார்பன், - சினத்துச்
செருநர் உகச் செற்று, உகந்ததேங்கு ஓத வண்ணன்,
வரு நரகம் தீர்க்கும் மருந்து. (2284)
திருப்பாற்கடலிலே கண் வளர்ந்திருப்பவனும், பிராட்டியின் கொங்கைத் தடத்திலே அடங்கிக் கிடப்பவனும், திருத்துழாயைத் திருமார்பில் அணிந்தவனும், பகைவர் அழியும்படி சீற்றத்தினால் அழித்து மகிழ்ந்தவனும், கடல் போன்ற வடிவையுடையவனும், தப்பாமல் நேரக்கூடிய சம்சாரமாகிய நரகத்தைப் போக்க வல்ல மருந்து போன்றவனுமான சர்வேச்வரன் என் மனத்திலே வந்து சேர்ந்துவிட்டான்.

பேசுவார், எவ்வளவு பேசுவர், அவ்வளவே
வாச மலர்த் துழாய் மாலையான், - தேசு உடைய
சக்கரத்தான், சங்கினான், சார்ங்கத்தான், பொங்கு அரவ
வக்கரனைக் கொன்றான் வடிவு. (2302)
மணம் மிக்க மலர்களோடு கூடிய திருத்துழாய் மாலையை அணிந்தவனு ஒனியையுடைய திருச்சக்கரத்தை ஏந்தியவனும், திருச்சங்கத்தை உடையவனும், சார்க்கவில்லை உடையவனும், மிக்க ஆரவாரமுடையவனாய் வந்த தந்தவக்கிரனைக் கொன்றொழித்தவனுமான எம்பெருமானுடைய வடிவு எப்படிப்பட்டதென்றால், பேசுகின்ற அவரவர்கள் எவ்வெவ்வளவு பேசுகின்றார்களோ அவ்வவ்வளவேயாம்.

சேர்ந்த திருமால் கடல் குடந்தை வேங்கடம்
நேர்ந்த என் சிந்தை நிறை விசும்பும், வாய்ந்த
மறை, பாடகம், அனந்தன் வண் துழாய்க் கண்ணி,
இறை பாடி ஆய இவை. (2311)
திருப்பாற்கடல், திருக்குடந்தை, திருமலை, நேர்ப்பட்ட எனது மனம், நிறைந்த பரமபதம், அமைந்த வேதம், திருப்பாடகம், ஆதிசேடன் - ஆகிய இவையெல்லாம் அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துள்ள எம்பெருமான் நித்தியவாசம் செய்ப் பெற்ற இராசதானிகளாம்.

நிறம் வெளிது, செய்து, பசிது, கரிது என்று
இறை உருவம் யாம் அறியோம், எண்ணில் - நிறைவுஉடைய
நா-மங்கை தானும் நலம் புகழ வல்லளே
பூ மங்கை கேள்வன் பொலிவு? (2337)
எம்பெருமானுடைய திருமேனியானது நிறத்தால் வெளுத்திருக்குமோ, சிவந்திருக்குமோ? பச்சென்றிருக்குமோ? கறுத்திருக்குமோ? எவ்வண்ணமிருக்கும் என்று ஆராயுமிடத்தில் நாம் அறியமாட்டோம்;  (இதுநிற்க) ஞான சக்திகளில் நிறைவுடையவளான கலைமகளும் பூவிற் பிறந்த பெரிய பிராட்டிக்குக் கணவனான எம்பெருமானுடைய பொலிவை நன்றாகப் புகழச் சக்தியுடையவளோ? (அல்லள்)

அது நன்று, இது தீது, என்று ஐயப்படாதே,
மது நின்ற தண் துழாய் மார்வன் - பொதுநின்ற
பொன்னன் கழலே தொழுமின்; முழு வினைகள்
முன்னம் கழலும், முடிந்து. (2369)
'அது நல்லதோ இது கெட்டதோ?என்று சந்தேகப்பட்டுக் கொண்டிராமல் தண்துழாய் மாலையைத் திருமார்பிலணிந்த பெருமானுடைய சர்வ சாதாரணமான விரும்பத்தக்க அழகிய திருவடிகளையே தொழுங்கள். (அப்படித் தொழுதால்) முந்துறவே எலலா வினைகளும் உருமாய்ந்துவிட்டு நீங்கும்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: இரண்டாம் திருவந்தாதி : பூதத்தாழ்வார்

10 comments:

  1. அருமையான விளக்கங்கள் ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  2. பாடல்களும் விளக்கமும் நன்று.

    ReplyDelete
  3. மிக அருமையான விளக்கவுரை!

    ReplyDelete
  4. பாடலும் விளக்க உரையும் அருமை.
    நன்றி.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரரே

    பாடல்களும், அதற்கேற்றவாறு படித்துணரும் வண்ணம் எளிய முறையில் விளக்கங்களும் மிக அருமையாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  6. பேயாழ்வாரின் திருவந்தாதி பாசுரங்களுக்கு சுருக்கமான விளக்கம்! (அதைச் செய்வதுதானே கடினம்) நாலாயிரத்திற்கு முனைவர் இரா.வ.கமலக்கண்ணனின் உரை புதியவர்களுக்குப் புரியும்படியாக இருக்குமா?

    ReplyDelete
  7. பாடல்களும் அதன் விளக்கமும் அருமை ஐயா

    ReplyDelete
  8. விளக்கத்துக்கு நன்றிப்பா.

    நம்மூர்லலாம் ஏன் எதுக்குன்னு கேட்டா பிள்ளைகளை வாயை மூடுன்னு சொல்லி அடக்கிடுவோம்.

    ReplyDelete