29 March 2014

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் : இராய.செல்லப்பா

அண்மையில் நான் படித்த நூல் வலைப்பூ நண்பர் திரு இராய.செல்லப்பா அவர்களின் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய். இவர் இமயத்தலைவன் மற்றும் செல்லப்பா தமிழ் டயரி ஆகிய வலைப்பூக்களை மிகவும் சிறப்பாக நடத்திவருபவர். 12 சிறுகதைகளைக் கொண்ட தன் நூலின் முன்னுரையில் அவர் கூறுகிறார்: ".........கல்வியின் காரணமாகவும், பணியின் நிமித்தமாகவும் பதினைந்து ஊர்களில் வாசம் செய்திருக்கிறேன். சில ஆயிரம் பேர்களையாவது சந்தித்திருக்கிறேன். அப்படி என்றால் எத்தனை ஆயிரம் நினைவுகளை நான் இந்த நாற்பது ஆண்டுகளாகச் சுமந்துகொண்டிருக்கவேண்டும்? அவற்றில் சிலவற்றையே இக்கதைகளில் சுமையிறக்கியிருக்கிறேன்........" 

அவர் இறக்கியது அவருக்குச் சுமையாக இருக்கலாம். ஆனால் அந்த சுமையின் வழியாக ஒருவகையான பிணைப்பை  நம்முடன் அவர் ஏற்படுத்துவதை அவருடைய கதைகளில் காணமுடிகிறது. ஒவ்வொரு கதையும் பின்புலம், போக்கு, அமைப்பு, முடிவு என்ற ஒவ்வொரு நிலையிலும் மனதில் பதியும்படி உள்ளது. வாழ்வின் நிகழ்வுகளை நாட்குறிப்பிலிருந்து எடுத்து சில கற்பனை கதாபாத்திரங்களை உட்புகுத்தி மெருகூட்டி வடிவம் தந்ததைப் போல ஒவ்வொரு கதையும் அமைந்துள்ளது.

மான் குட்டி மூலமாக வெளிப்படுத்தப்படும் தாய்ப்பாசம் (கண்ணே கலைமானே), கொடிய வறுமையிலும் செய்த உதவியை கடனாகக் கொள்ளக்கூடாது என்ற எண்ணம் (கடன்), கடித நடையிலேயே வாழ்வின் யதார்த்தங்கள் உணர்த்தப்படல் (பிருந்தாவனமும் மந்தாகினியும்), பிள்ளையை இழந்தவர் தாம் இழந்த பிள்ளையைப் போல ஒரு பிள்ளையைக் கருதி அன்பை வெளிப்படுத்தல் (இரண்டாவது கிருஷ்ணன்), உலகமயமாக்கலாலும், தொழில்நுட்பத்தாலும், அறிவியல் வளர்ச்சியாலும் நாம் இழந்துவிட்டவைகளில் ஒன்றான மண்ணின் பெருமை (தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்), நல்ல போதனையின் விளைவால் பக்குவமாகும் ஒரு மனம் (அன்னையைத்தேடி), உண்மை நிகழ்வின் பின்னணியில் ஓர் உண்மையான இதயத்தைப் புரிந்துகொண்ட மற்றொரு இதயம் (ஊன்றுகோல் நானுனக்கு), தாயன்புக்காக ஏங்கி தன்னைத் தானே ஏமாற்றிக்கொண்டு நாடக வாழ்க்கை வாழ்ந்து தோற்கும் மகனின் ஏக்கம் (பழமா, பாசமா), கடமை வழுவாமல் இருக்கும் புரோகிதரின் கனவை நினைவாக்கும் எதிர்பாரா திருப்பம் (சாந்தி நிலவவேண்டும்), பரிதவிக்கும் ஒரு பெண்ணுக்கு உதவ முயன்றும் பயனில்லா நிலையில் தத்தளிக்கும் ஒரு நல்ல மனம் (முடிவுற்ற தேடல்கள்),  பல சோதனைகளைச் சந்தித்து எதிர்பார்த்த வாழ்வினை பொறுமையாக எதிர்கொள்ளும் இரு இதயங்கள் (மனோரமா), வேலைக்காக அலையும் ஒருவன் வேலையில் சேரும் காலத்தில் எதிர்கொள்ளும் எதிர்பாரா நிகழ்வுகள் (ஏழு இரவுகள்) என ஒவ்வொரு கதையும் அழகான கருவினை கொண்டு அமைந்துள்ளது.       

திரு இராய.செல்லப்பா
ஒவ்வொரு கதையிலும் கையாளப்பட்டுள்ள பல உரையாடல்கள், நம் அருகாமையில் நடப்பன போல அமைந்துள்ளன. நூலாசிரியர் கதாபாத்திரத்தை எந்த அளவு நம்மிடம் நெருக்கமாகக் கொணர்கிறாரோ அல்லது நாம் எந்த அளவு கதாபாத்திரத்திற்கு அண்மையில் செல்கின்றோமோ அந்த அளவு கதையின் வெற்றி அமைகிறது. அந்நிலையில் இந்நூலாசிரியர் வாசிப்பவருக்கும் கதாபாத்திரத்திற்கும் இடையே மிக நெருக்கத்தைக் கொண்டுவந்துவிடுகிறார்.

"........இது தோல்வியில்லடி கண்ணு. இதுதான் தாய்மையோட பலம். காலம் காலமா உயிர்கள் அழியாம இருக்கிறதுக்கு இயற்கை கொடுத்திருக்கிற வரம். மனுஷனோ மிருகமோ யாராயிருந்தாலும் தாய்மைக்கும் கொழந்தைக்கும் உள்ள உறவுதான் ரொம்ப ஒசந்த உறவுன்னு உனக்குப் புரிஞ்சிடுத்து இல்லையா" என்றார் ராஜம்மா, அவளை இறுக அணைத்தபடி"  (ப.20).

"...நவராத்திரி ஒன்பது நாட்களும் விமரிசையாக இருக்கும். தெருவில் மாக்கோலம், கதவெல்லாம் வண்ணக்காகிதங்களின் பூத்தோரணம், மல்லிகையும் மருக்கொந்தும் அடுத்த தெருவரை மணக்கும். எல்லாரும் கொலு வைத்திருப்பார்கள். ஏழு முதல் பதினோரு படிகள் வைத்து ஏராளமான பொம்மைகளை அலங்காரமாக நிறுத்தியிருப்பார்கள்........" (ப.22) 

"அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் என் கண்கள் குளமாயின. அசையாமல் நின்றேன். தனது சிறு துன்பத்தையும் ஊதிப் பெரிதாக்கி அனுதாபம் தேடும் உலகில், தன்னுடைய ஒரே குழந்தையைப் பறிகொடுத்ததையும் இயல்பாக எடுத்துக்கொண்டு, அடுத்தவருக்கு உதவ முன்வரும் நந்தாவைப் போன்றவர்களை அதிகம் பார்த்ததில்லை நான்...." (ப.43)

"...ஓ, நல்லமுத்து சாரின் போதனையின் விளைவா இது? அதனால்தான் அன்று அழுதானா? போட்டோவில்கூட இல்லாத அம்மாவை இருப்பவளாக்கி வியாபாரம் செய்கிறோமே என்ற குற்ற உணர்வா! அதனால்தான் போட்டோவைத் தேடி ஓடியிருக்கிறானா?....." (ப.62)


"....தன்னுடைய நிலத்தில் தன் கையால் விளைந்த நெல்லை அவள் இப்போது உண்ணப் போகிறாள். இரவானதும் சாராயக் கடைக்குச் செல்லும் மற்ற ஆண்கள் மாதிரி இல்லாமல் அவளுடைய கணவன் அவள் சொல்லுக்கு இணங்கி நல்ல ஒழுக்கமுள்ளவனாய் நடந்துகொள்கிறான். ஒரே குழந்தை. அதுவும் ஆண் குழந்தை. வேயெறன்ன வேண்டும் ஓர் ஏழைப் பெண்மணிக்கு? நாளை விடிந்ததும் மாரியம்மனுக்குக் கூழ் ஊற்றுவதாய் மனதிற்குள் நேர்ந்து கொண்டாள் அஞ்சலை....." (ப.94)

கதைகளைப் படிக்கும்போது நம் வீட்டிலோ, அருகிலோ நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மகிழ்ச்சி, கோபம், ஆற்றாமை என அனைத்துவகையான மன உணர்ச்சிகளையும் கதைகளில் காணமுடிகிறது. மனதில் நிற்கும் அட்டைப்படம். அவர் ரசித்த மற்றும் ருசித்த தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் நமக்கும்தான்.   இந்தச் சிறுகதைத் தொகுப்பை வாசிப்போமே. 

தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய், இராய.செல்லப்பா (அலைபேசி 9600141229/9840993592), அகநாழிகை பதிப்பகம், எண்.33, மண்டபம் தெரு, மதுராந்தகம் 603 306, தமிழ்நாடு (அலைபேசி 999 454 1010), ஜனவரி 2014, ரூ.120

12 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  விமர்சனத்தை படித்த போது.புத்தகத்தை படித்தது போல ஒரு உணர்வு....சிறப்பாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்

  புத்தகம் மிக விரைவில் என் கைக்கு கிடைக்கும் ஐயா..

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  ReplyDelete
  Replies
  1. நூல் விமர்சனத்தைத் தாங்கள் உணர்ந்த விதம் எனக்கு நிறைவாக இருந்தது. நன்றி.

   Delete
 2. ஒவ்வொரு பக்கமாக குறிப்பிட்டு, அழகிய ரசனையுடன் ஆழ்ந்த விமர்சனம் ஐயா... நன்றி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. படித்து, இயலும்வரையில் எனது கருத்துக்களைப் பரிமாறியுள்ளேன். நன்றி.

   Delete
 3. நானும் தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் படித்திருக்கிறேன் பெயரும் புகழும் பெற்ற கதாசிரியர்கள் புத்தகங்களுக்கு மட்டுமே பதிவர்கள் விமரிசனம் எழுதும் இக்காலத்தில் ஒரு சகபதிவரது நூலுக்கு விமரிசனம் பாராட்டுக்குரியது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது எழுத்து என்னை நெகிழச் செய்துவிட்டது. தங்களின் பாராட்டுக்கு நன்றி.

   Delete
 4. Enjoyed the methodology of introduction,The style of presentation is different.Congrats.dr.k.ravindran

  ReplyDelete
  Replies
  1. ஆய்வாளனாக இருப்பதால் ஆய்வுக்கண்ணோட்டம் என்ற நிலையில் அந்த முறைமையும் வந்துவிடுகிறது. நன்றி.

   Delete
 5. அருமை ஐயா
  திரு செல்லப்பாஅவர்களின் அனுபவ வார்த்தைகள் ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது.
  அருமையான விமர்சனத்திற்கு நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. அவருடைய ஒவ்வொரு கதைகளையும் நான் அனுபவம் என்ற நிலையிலேயே உணர்ந்து படித்தேன். நன்றி.

   Delete
 6. தங்களின் ஆய்வு விமர்சனம் அருமை

  ReplyDelete
 7. தங்களின் வருகை என்னை இன்னும் எழுத வைக்கிறது. நன்றி.

  ReplyDelete