12 April 2014

செம்மேகம் : கலியுகன் கோபி

திரு. கலியுகன் கோபி
பேச்சும் சிந்தனையும் கவிதையாகக் கொண்டுள்ளவர் நண்பர் கலியுகன் கோபி. தொழிலாளர்களுக்கான செங்கவிதைகள் என்ற நிலையில் அவர் எழுதியுள்ள செம்மேகம், கவிதை உலா என்ற கவிதைத்தொகுப்புகளைப் படித்தேன். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு படித்த கவிதைகளும், பிற இதழ்களில் வெளிவந்த கவிதைகளும் இவ்விரு தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. சுமார் 50 கவிதைகளைக் கொண்ட செம்மேகம் கவிதைத் தொகுப்பில் உழைக்கும் வர்க்கத்தினரைப் பற்றிய கவிதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. கவிதைகளில் உணர்வுகளை அவர் வெளிப்படுத்தும் விதம் சிறப்பாக உள்ளது. நெற்றி வியர்வை நீரால் நிலத்தை நனைத்துக் குளிரவைக்கும் உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தொகுப்பை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார். குறிப்பிட்ட சில கவிதைகளை நாம்  பகிர்வோம்.


"காவிரி நதியெனப் பெருகி
கழனி யெங்கும் செழித்து
உழவர் தம் குடிசைகளில்
கும்மாளம் கண்டு மகிழ சித்திரை மகளே வருக.." (சித்திரை மகளே, ப.14)

"வள்ளலார் முறை வகுத்தார்
வள்ளுவர் புலால் மறுத்தார்
வயிறு வளர்த்தால் தொந்தி
வரம்பு மீறினால் வாந்தி" (உணவு, ப.16)

"உலகத்தொழிலாளர்கள்
கட்டி வைத்த 
அன்புப்பாசறை!.......
எட்டு மணி வேலை கேட்ட
சிகாகோ தோழர்களின்
சரித்திர முத்திரை" (செங்கொடி, ப.21)

"எவ்விரு மேகங்கள்
வந்திங்கு மறைத்தாலும்
எத்தனை இடர்கள்
தந்திங்கு வெறுத்தாலும்
தளரமாட்டோம்" (ஆர்ப்பரிப்போம்!..., ப.24)

"காலங்கள்
காலடியின் கிடக்கும்போது
கண்கள் கனவுகளில்...!
விழித்தபோது
கால்கள்
காலங்களைத் தேடித்தேடி!" (கனவுகளும் காலங்களும், ப.32)

"அவநம்பிக்கைப் புயல்
வீசும்போது
அஞ்சாமல் 
எதிர்த்து நில்
போராட்டத்தின் முடிவில் 
வெற்றிக்கோப்பைகள்
வரவேற்கும்" (வெற்றியின் அழைப்பு, ப.52)

(செம்மேகம், கலியுகன் கோபி, இலக்கிய உயராய்வு மய்யம், சத்திரம் தெரு, நெல்லிக்குப்பம், கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, ஆகஸ்டு 2012, ரூ.40)


கவிதை உலா கவிதைத்தொகுப்பு செம்மேகம் தொகுப்பிலிருந்து சற்று மாறுபட்டது. பலவகையான தலைப்புகளில் சுமார் 40 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள், தமிழ்மொழி, தாய்நாடு, பல்வேறு உணர்வுகள் மற்றும் செயல்பாடுகள்  என்ற பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. பல கவிதைகள் தன்னம்பிக்கையை வளர்ப்பவனாக உள்ளன. உலகத்தமிழ் நெஞ்சங்களுக்கு இத்தொகுப்பை ஆசிரியர் சமர்ப்பணம் செய்துள்ளார். சிலவற்றை நாம் இங்கு ரசிப்போம்.

"எண்ணங்களை விலைபேசாது
வண்ணங்களிடம் மண்டியிடாது!
அச்சுறுத்தலுக்கு அஞ்சாது
மாற்றுக் கருத்துக்களைத் தூற்றாது!"
(கொள்கைகள்)
"மேடுபள்ளங்கள் தள்ளிவிடும்
பயணம் தொடருவேன்!
துரத்தித்துரத்தி காலம் விரட்டும்
காயப்படுவேன்...
சிந்தனைகள் புதிய பாதையில்
இலட்சியம் வகுக்கும்
நிமிர்ந்திடுவேன்!"
(இலட்சியப்பயணம்)
"வாழ்க்கைத் தோட்டத்தில்
வண்ண வண்ணப் பூக்களாய்
வகை வகையாய்
நூல்கள் பூத்திருக்கும்.....
அதில் தேனாய் 
தேங்கியிருக்கும் நல்லொழுக்கம்!"
(கல்வியும் ஒழுக்கமும்)

"சாமான்ய மக்களுக்கும் செல்வாக்கு கோரி
வாதாடி வெற்றிகண்ட வழக்கறிஞர்!
மூடப்பழக்கத்து சிறைகளில் முடங்கியோரின்
கதவுப்பூட்டைத் திறக்கவந்த சாவியானவர்!"
(அரசியல் சிந்தனையில் சிங்காரவேலனார்)

"சிதறிய முத்துக்களாய்
நிலை மறந்திருந்தபோது
அதனைக் சோர்த்து
சரமாக்கியவனே....
உதிரிப்பூக்களாய் கிடந்தவர்களை
மாலையாய்த் தொடுத்து
மணம் நுகர்ந்தவனே
மகாகவியே!"
(மகாகவி பாரதியார்)

"தலைகனங்கொண்டோரை
தமிழ்ப்பாட்டால்
தலையிலடித்தது
உன் எழுதுகோல்....!
நீ பட்ட கடனும்
நீவிட்ட கண்ணீரும்
வறுமை தந்த தொல்லைகளும்
வரம்புக்கா உட்பட்டது!"
(கவியரசர் கண்ணதாசன்)

(கவிதை உலா, கலியுகன் கோபி (அலைபேசி 9487155909), ஐந்தாம் உலகத் தமிழ்ச்சங்க அறக்கட்டளை, 47, குமரன் கோவில் தெரு, கடலூர் துறைமுகம் 607 003, சூன் 2011, ரூ.25)

26 comments:

  1. பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .இருவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ஐயா .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

      Delete
  2. நல்ல கவிதை நூல்களைப் பற்றிய பதிவு கண்டு மகிழ்ச்சி.. நல்வாழ்த்துக்களுடன்!..

    ReplyDelete
    Replies
    1. சந்திக்கும்போதெல்லாம் கவிதையைப் பற்றி அதிகம் பேசும் நண்பர் கோபியின் முயற்சி பாராட்டத்தக்கதாகும். தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  3. அருமையான வரிகள் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. என் பதிவுகளை அன்போடு தொடர்ந்து வரும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  4. #உலகத் தொழிலாளி வர்க்கத்திற்கு இத்தொகுப்பை அவர் சமர்ப்பணம் செய்துள்ளார்#
    கவிதை வரிகளிலும் சிகப்புச் சாயம் தெரிகிறதே !

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். அவருடைய பேச்சிலும் அவ்வுணர்வினை நான் கண்டிருக்கிறேன். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  5. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. அருமையான கவிதைகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அண்மைக்காலமாகத் தான் கவிதைகளை அவ்வப்போது படித்து வருகிறேன். அவ்வகையில் நண்பரின் எழுத்தை அறிமுகப்படுத்தவேண்டும் என்ற ஆவலே இப்பதிவு. நன்றி.

      Delete
  7. முதல் தொகுப்பில் காலங்கள் பற்றிய கவித மனதில் பதிந்தது.எல்லாக் கவிதைகளிலும் ( இரு பதிப்புகளிலும்) அவரது கொள்கைகளில் அவரது ஈடுபாடு தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. எப்போது சந்தித்தாலும் அவருடைய பேச்சில் ஒரு தெளிவினையும், உத்வேகத்தையும் காணமுடியும். தங்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  8. உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அன்பான வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.

      Delete
  9. அன்பின் இனிய புத்தாண்டு
    நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  10. கருணைகொண்ட முகத்தழகில் நற்
    காந்தமென ஒட்டிக் கொள்ள புன்னகைப் பூக்கள்
    இனிக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்
    வாழ்த்துக்கள் ஐயா .

    ReplyDelete
  11. அன்பான வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  12. இளம் கவிஞர்களைக் கைதூக்கிவிடும் உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. கலியுகன் கோபி அவர்களே, விரைந்து முன்னேற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  13. இவ்வாறு பகிர்ந்துகொள்ளும்போது நண்பர்களை அறிமுகப்படுத்த ஓர் அரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கிறது.எனக்கும நண்பர் கோபிக்குமான தங்களின் வாழ்த்துக்கு அன்பார்ந்த நன்றி.

    ReplyDelete
  14. திரு கோபி அவர்களின் சிந்தனைக் கவிதைகளின் சிறப்பை எடுத்துப் பகிர்ந்த தங்கள் இனிய உள்ளத்திற்கு வணக்கம். இதற்கொரு பெருந்தன்மை வேண்டும். அவரது-
    "சாமான்ய மக்களுக்கும் செல்வாக்கு கோரி
    வாதாடி வெற்றிகண்ட வழக்கறிஞர்!
    மூடப்பழக்கத்து சிறைகளில் முடங்கியோரின்
    கதவுப்பூட்டைத் திறக்கவந்த சாவியானவர்!" - எனும் சிங்கார வேலரைப் பற்றிய சிந்தனை அருமை!

    ReplyDelete
  15. பெருந்தன்மை என்பதைவிட நண்பரது எழுத்துச் சாதனைகளைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற பேரவாவே என்னை இவ்வாறு எழுத வைக்கிறது. எனது பதிவுகளுக்கு தங்களின் கருத்துக்கள் மெருகூட்டுகின்றன. தங்களின் வருகைவு மனதிற்கு நிறைவைத் தருகிறது. நன்றி.

    ReplyDelete
  16. பகிர்வு கண்டு மகிழ்ந்தேன் .என் மனமார்ந்த வாழ்த்துக்கள் G. Rajendran .

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி.

      Delete