15 August 2014

இந்திரா பிரியதர்ஷினிக்கு நேரு எழுதிய உலக வரலாறு

இந்திரா பிரியதர்ஷினிக்கு அவருடைய தந்தை ஜவஹர்லால் நேரு எழுதியுள்ள கடிதத் தொகுப்பைக் கொண்ட  "உலக வரலாறு' (Glimpses of World History) என்ற நூலில் தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஆன ஒரு பிணைப்பினையும், பாசத்தையும் உணரமுடியும். பல்வேறு காலகட்டங்களில் தன் மகளுக்கு எழுதிய கடிதங்களில் உலக நாடுகளின் தோற்றம், பல நாடுகளில் சமய, சமூக, பண்பாட்டு நிலை, புரட்சிகள், உலகப்போர்கள் போன்றவை உள்ளிட்ட பல செய்திகளைப் பற்றி விவாதிக்கிறார்.  தன் மகளுக்கு அவர் சொற்களாலும் சொற்றொடர்களாலும் அவர் கொண்டுள்ள அத்தகைய பிணைப்பைக் காண்போம்.


"...உனக்கு நினைவிருக்கிறதா? முதன்முதலாக ஜோன் ஆப் ஆர்க்கைப் பற்றிப் படித்தபோது நீ எவ்வளவு ஆச்சர்யப்பட்டாய் தெரியுமா? அவரைப் போல சாதிக்க வேண்டும் என்ற உனது விருப்பம் எந்த அளவு இருந்தது தெரியுமா? சாதாரண ஆணோ பெண்ணோ கதாநாயகர் ஆகிவிடுவதில்லை. அவர்களுக்கு அன்றாட உணவு, உடை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளல், வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள். ஆனால் நேரம் வரும்போது ஒட்டு மொத்த ஆண்களும் பெண்களும் கதாநாயகர்களாக ஆகிவிடுகின்றார்கள். வரலாறு படைக்கப்படுகிறது. பெருந்தலைவர்களிடம் உள்ள அத்தகைய உணர்வு மக்களைத் தூண்டிவிடுவதோடு நல்ல பல ஆக்கபூர்வமான சாதனைகளை மேற்கொள்ள உதவுகிறது... ...இந்தியாவிற்கு சேவை செய்யும் அளவு மிகச் சிறந்த தைரியமான வீரராக நீ வளர்வாய் அன்பு மகளே...."(ப.2,3)

"வரலாறு படிப்பது சிறப்பானது. அதனைவிட சிறப்பானது வரலாற்றைப் படைக்க உதவுவது.... " (ப.4). "எனக்குப் பிடித்த வரலாற்றை நான் உனக்கு எழுதப்போவதில்லை. அதற்கு நீ பிற நூல்களைப் படிக்கவேண்டும். நான் அவ்வப்போது உனக்குக் கடந்த காலத்தைப் பற்றியும்,அப்போது வாழ்ந்த மக்களைப் பற்றியும், உலக அரங்கில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியவர்களைப் பற்றியும் எழுதுவேன். என் கடிதங்கள் உனக்கு ஆர்வத்தை உண்டாக்குமா என்பது எனக்குத் தெரியாது......இருப்பினும் என்னுடைய சொந்த மகிழ்ச்சிக்காக நான் எழுதுகிறேன். அவை என்னிடம் உன்னை மிகவும் நெருக்கமாகக் கொணர்கின்றன. அப்போது கிட்டத்தட்ட நான் உன்னுடன் நேரில் பேசுவதைப் போல உணர்கிறேன். பேனாவையும் வெள்ளைத்தாளையும் நான் எடுத்துக்கொண்டு அமர்ந்தவுடன்  உன் நினைவு எனக்கு வந்துவிடுகிறது. நீ அமைதியாக என் அருகில் வருகிறாய். நாம் இருவரும் பல செய்திகளைக் குறித்துப் பேசுகிறோம். கடந்த காலத்தைக் கனவு காண்கிறோம். கடந்த காலத்தைவிட எதிர்காலத்தைப் பெருமையுடையதாக்க வழி தேடுகிறோம்."  (ப.5)

" அன்பு மகளே, உனக்கு நான் என்ன எழுதப்போகிறேன்? எங்கு ஆரம்பிக்கப் போகிறேன்? கடந்த காலத்தை நினைக்கும்போது என் மனதில் பலவிதமான நிகழ்வுகள் படங்களாகத் தோன்றுகின்றன. சில படங்கள்  நெடுநேரம் மனதில் நிற்கின்றன. அவை எனக்குப் பிடித்தவையாகும். கடந்த கால நிகழ்வுகளை தற்போதைய நிகழ்வுகளோடு ஒப்பு நோக்குகிறேன்.அதன் மூலமாக எனது வழிகாட்டலுக்கு ஒரு பாடமாக அவற்றைக் கருதுகிறேன். "(ப.6)

"நம்முடைய கடைசி மூன்று கடிதங்களில் 2500 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பாக உலகம் எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றி சிந்திக்க முயன்றோம். நான் எதிலும் நாள்களைப் பற்றிக் குறிப்பிடவில்லை. காரணம் எனக்கு அது பிடிக்கவில்லை. அவ்வாறு தந்து உனக்கு தொந்தரவு கொடுக்கவும் நான் விரும்பவில்லை. பின்னர் அது முக்கியமானதாகக் கருதப்பட்டது.  உண்மைகளைச் சரியாகப் புரிந்துகொண்டு மனதில் வைத்துக்கொள்ள  இவை தேவைப்பட ஆரம்பித்துவிட்டன.... "(ப.22)

"வரலாற்றின் நீண்ட சாலையில் பயணிப்போம். 2500 ஆண்டுகளுக்கு முன்பாக, அதாவது இயேசுவிற்கு முன் 600 ஆண்டுகளுக்கு முன்பான காலத்திற்கு வந்துள்ளோம். இது சரியான நாள் என்று நினைத்துக்கொள்ளாதே. நான் ஒரு குறிப்பாகத்தான் தருகிறேன். இக்காலகட்டத்தில்தான் சீனா, இந்தியா தொடங்கி பெர்சியா மற்றும் கிரேக்கம் வரை பெரும் தலைவர்களும், சிந்தனையாளர்களும், பல சமயங்களைத் தோற்றுவித்தவர்களும் தோன்றினர்....."(ப.35)

"வழக்கத்திற்கு மாறாக இன்று பெரிய கடிதமாக எழுதிவிட்டேன். உனக்கு அலுப்பு தட்டியிருக்கும். இருந்தாலும் இவை தொடர்பாக சிலவற்றையாவது சொல்லவேண்டும் என்பதே என் ஆசை. உன்னால் புரிந்துகொள்ள முடியாவிட்டால் கவலைப்படாதே. விரைவில் புரிந்துகொள்வாய்...."(ப.38)

"நாம் கன்னியாகுமரி சென்றது உனக்கு நினைவிருக்கிறதா?... சொல்லப்போனால் இந்தியத்தாயின் காலடி அருகே அராபியக் கடலும், வங்காள விரிகுடாக் கடலும் சந்திக்கும் இடத்தருகே நாம் அமர்ந்திருந்தோம். அந்த இரு கடல்களும் இந்தியாவை வணங்குவதைப் போல நாம் கற்பனை செய்தோம். உண்மையில் மிகவும் அமைதியான இடம். என் மனம் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் தாண்டி இமயமலைக்குச் சென்றது. இவ்விரண்டிற்கும் இடையே எவ்வளவு சோகம், வறுமை?..... "(ப.56) 

"இப்போதைக்கு நாம் ரோமானியப் பேரரசையும், ஐரோப்பாவையும் விட்டு உலகின் பிற பகுதிகளுக்குச் செல்வோமா? இந்தியாவிலும் சீனாவிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள ஆசியாவுக்குப் போவோம்........ "(ப.97)


"...ஆகாயவிமானத்தில் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு நீ பறந்து சென்றால் பலிம்ரா மற்றும் பால்பாக்கின் எச்சங்களைக் காணமுடியும். வரலாற்றில் அதிக முக்கியத்துவம் பெற்ற பாபிலோன் எங்கிருந்தது என்றுகூடப் பார்க்கலாம். இப்போது அது இல்லை......... "(ப.98)

"நான் உன்னிடம் சொல்லியிருக்கிறேனா? அல்லது உனக்குத் தெரியுமா? நம் நாட்டிற்கு இந்தியா அல்லது இந்துஸ்தான் என்று ஏன் பெயர் வந்தது? இரு பெயர்களும் இன்டஸ் அல்லது சிந்து என்ற ஆற்றின் பெயரிலிருந்து வந்ததாகும்.  சிந்துவை கிரேக்கர்கள் இன்டோஸ் என்றனர். பின்னர் அது இந்தியா என்று ஆனது. சிந்துவிலிருந்து பெர்சியல்கள் இந்து என்பதைப் பெற்றார்கள். அதிலிருந்து இந்துஸ்தான் என்ற சொல் வந்தது..... "(ப.121)

"இந்த கடிதம் பெரிய கடிதமாகிவிட்டது. இருப்பினும் இடைக்காலத்தில இந்தியா இருந்த நிலை பற்றி உனக்கு எழுத வேண்டியுள்ளது. அடுத்த கடிதம் வரை பொறுத்திரு.... "(ப.129)

"கிறிஸ்துவுக்கு 1000 ஆண்டுகளுக்குப் பிறகான ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் சில பகுதிகள் என்ற நிலையில் உலகின் சில பகுதிகளைப் பற்றி சுருக்கமாக நாம் அறிந்துகொண்டோம். தற்போது மறுபடியும் ஆசியாவிற்குச் செல்வோம்...." (ப.179)

"மறுபடியும் இந்தியாவைப் பற்றிப் பார்ப்போமா? அங்கு ஆட்சிகளும், பேரரசுகளும் மாறியதைப் பற்றி அறிந்துகொள்வோமா? அது அமைதியான படங்கள் ஒன்றை ஒன்று தொடர, தொடர்ந்துகொண்டேயிருக்கின்ற ஒரு முடிவில்லாத திரைப்படத்தைப் பார்ப்பதைப்போல இருக்கும்..... " (ப.253)


"தொழில் புரட்சி என்பதைப் பற்றி பார்ப்போமா? அது இங்கிலாந்தில் தொடங்கியது. அது தோன்றிய சரியான நாளை என்னால் கூறமுடியவில்லை. ஏனென்றால் ஏதோ மாஜிக் போல மாற்றம் என்பதானது ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை....... 100 வருட கால இடைவெளியில் வாழ்க்கையின் முகத்தை அது மாற்றிக்காட்டியது.  இக்கடிதங்கள்  மூலமாக நீயும் நானும் வரலாற்றின் போக்கினைத் தொடர்ந்து வருகிறோம். ஆரம்ப காலக்கட்டம் தொடங்கி பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் வரை பல மாற்றங்களை நாம் கண்டுள்ளோம்....... "(ப.345)

"இரு வாரங்களாக நான் உனக்கு கடிதம் எழுதவில்லை. ஏனோ மந்தமாக இருந்துவிட்டேன்.. ...தற்போது நாம் 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருக்கிறோம். 19ஆம் நூற்றாண்டின் 100 ஆண்டு நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது. நம்மிடம் இன்றிருந்து நாம் 132 ஆண்டுகள் குறித்து விவாதிக்கவேண்டியுள்ளது.  இந்த 132 ஆண்டுகள் பற்றி நான் அதிகமாகக் கூறவேண்டியுள்ளது.. .... "(ப.377) 

"1814இல் நெப்போலியன் வீழ்ச்சியடைந்தார். அடுத்த ஆண்டு எல்பாவிலிருந்து திரும்பினார். மறுபடியும் தோற்கடிக்கப்பட்டார். 1814இல் அவரது முறையானது தோற்றது. சரியாக 100 ஆண்டுகளுக்குப் பின் 1914இல் உலகப்போர் தொடங்கியது. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பரவிய இந்த போர் பல இழப்புகளையும், சோகங்களையும் கொண்டிருந்தது. இந்த 100 ஆண்டுகள் குறித்து நாம் விரிவாக பேச வேண்டியுள்ளது..... "(ப.397)

"நமது முந்தைய கடிதத்தில் நமக்கு மிகவும் பரீட்சயமான ஐரோப்பாவின் பெரிய நாடுகளில் ஒன்று அமைவது குறித்துப் பேசினோம். இப்போது மற்றொரு நவீன நாடாக ஜெர்மனி உருவானதைப் பற்றிப் பேசுவோம்..... "(ப.511)

"கடைசியாக நான் எழுதிய கடிதத்தில் 19ஆம் நூற்றாண்டில் காணப்பட்ட அறிவியல் வளர்ச்சி பற்றிக் கூறியிருந்தேன். இந்த நூற்றாண்டின் மற்றொரு முக்கியமான நிகழ்வான ஜனநாயகக்கருத்து என்பதன் வளர்ச்சி குறித்து இப்போது பார்ப்போம்... (ப.527)

"பெரிய போர் என்றழைக்கப்படும் இந்த உலகப் போரைப் பற்றி (1914-18) நான் என்ன எழுதப்போகிறேன்? நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவையும் ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும்  அழித்ததோடு மட்டுமன்றி இலட்சக்கணக்கான இளைஞர்களின் இன்னுயிரை பலி கொண்டது. போர் என்பதானது ஆரோக்கியமாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்றல்ல. அது அருவறுக்கத்தக்கது. இருப்பினும் அது போற்றப்படுகிறது. ........ .... "(ப.625)

"...நவீன கால போர் என்றால் என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் விவரங்களை உனக்குத் தருகிறேன். போரினாலான இழப்பு பின் வருமாறு அமையும்.

இறந்த வீரர்கள் 10,000,000, இற்ந்ததாகக் கருதப்படுபவர்கள் 3,000,000, இறந்த பொதுமக்கள் 13,000,000, காயமடைந்தவர்கள் 20,000,000, கைதிகள் 3,000,000, போரினால் அனாதையானவர்கள் 9,000,000, போரினால் விதவையானவர்கள் 5,000,000, அகதிகள் 10,000,000. இந்த எண்ணிக்கையைப் பார். அதிலுள்ள மக்களின் வேதனையைப் பார். அனைத்தையும் சேர்த்துக் கூட்டு. இறந்த மற்றும் காயம் பட்டவர்களின் எண்ணிக்கை 46,000,000. பண விரயம்? இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ........ .... "(ப.639)

கடைசி கடிதம் 9.8.1933
"மலையளவு எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதிவிட்டேன். அப்பப்பா. எவ்வளவு உள்நாட்டுத் தாளில் எவ்வளவு உள்நாட்டு இங்க் பயன்படுத்தியுள்ளேன். அவையனைத்தும் பயனுள்ளதா என நினைந்து வியக்கிறேன்.
இந்த அனைத்து தாள்களும், இங்கும் உனக்கு ஆர்வத்தைத் தூண்டும் செய்தியைத் தருகின்றதா? நீ 'ஆம்' என்றுதான் கூறுவாய். ஏனென்றால்  வேறுவிதமாக மறுமொழி கூறினால் நான் சங்கடப்படுவேன் என்று நினைப்பாய். அவ்வாறான ஒரு நிலையை எடுக்கும்போது பாரபட்சமாகவே இருப்பாய்..........
நான் இங்கே அமர்ந்திருக்கிறேன். உனக்காக எழுதுகிறேன். உன்னைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறேன். காலங்கள் போய்க்கொண்டே இருக்கின்றன...........
நான் இக்கடிதங்களில் சொன்னதே இறுதியானது என நீ எடுத்துக்கொள்ளக்கூடாது...
இக்கடிதங்கள் அனைத்தும் மெல்லிய நூலால் இணைக்கப்பட்ட ஒரு அழகான வடிவமே...சில நூற்றாண்டுகளை விட்டுவிட்டேன். சில முக்கியமான நிகழ்வுகளையும் விட்டுவிட்டேன். அதே நேரத்தில் எனக்கு ஆர்வமானவை பற்றி அதிகம் எழுதியுள்ளேன்.... 
ஒரு மேல் தோற்றமாகத் தந்துள்ளேன். இது வரலாறல்ல.  இவை நமது கடந்த காலப் பதிவுகள். வரலாறு உனக்கு ஆர்வமூட்டினால் வரலாற்றின் அழகை நீ உணர்ந்தால் பல நூல்களின் துணையோடு கடந்த காலத்தைப் பற்றி அறிந்துகொள்ளமுடியும்.....
 நூல்களைப் படிப்பது மட்டுமே உனக்கு உதவப்போவதில்லை. கடந்த காலத்தைக் கருணையோடும் புரிதலோடும் நோக்கவேண்டும். பல்லாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு நபரைப் பற்றி அறிந்துகொள்ள அவருடைய சூழலையும், அவர் வாழ்ந்த நிலையையும், அவர் மனதில் இருந்த எண்ணங்களையும் நீ அறிந்துகொள்ளவேண்டும்...
கவிஞர்களிடமிருந்தும் பிறரிடமிருந்தும் நான் உனக்காக பல மேற்கோள்களைச் சுட்டியுள்ளேன். இன்னுமொரு மேற்கோளுடன் இதனை முடிப்பேன். அது தாகூர் எழுதிய கீதாஞ்சலியிலிருந்து......'மனமானது எங்கு பயமின்றி இருக்கிறதோ..... '
நம் பணி நிறைவுற்றது. இந்த கடைசி கடிதமும் முடிந்தது. கடைசிக்கடிதம்? உண்மையில் இல்லை. இன்னும் பல கடிதங்களை எழுதுவேன். இந்த வரிசைக் கடிதம் முடிகிறது.........." (ப.954)

---------------------------------------------------------------------------------------------------
 Glimpses of World History, Jawaharlal Nehru, Jawaharlal Nehru Memorial Fund/Oxford University Press, 15th impression 1999 என்ற நூலிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பொருளிலோ, புரிதலிலோ ஐயமிருப்பின் மூல நூலில் உரிய பக்கங்களை அன்புகூர்ந்து காணவேண்டுகிறேன்.

நேருவின் உலக வரலாறு நூலிலிருந்து முந்தைய கட்டுரை
 ராஜராஜன் நேருவின் பார்வையில் 
---------------------------------------------------------------------------------------------------

விக்கிபீடியாவில் நான் எழுதியுள்ள கட்டுரைகளைக் காண பின்வரும்  இணைப்பினைச் சொடுக்கலாம்.
விக்கிபீடியாவில் தொடங்கிய கட்டுரைகள்
---------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் (16.8.1982) 33ஆம் ஆண்டு தொடங்குவதையும், The Hindu  நாளிதழைப் படிக்கத் தொடங்கி 40ஆம் ஆண்டு தொடங்குவதையும் நினைவுகூரும் வகையில் பொன்னியின் செல்வன் புதினத்தை அடுத்து நான் அதிகம் படித்த Glimpses of World History நூலில் நான் ரசித்த சில பகுதிகளைப் பகிர்வதில் மகிழ்கிறேன்.
---------------------------------------------------------------------------------------------------
25ஆம் ஆண்டு பணி நிறைவுப்பாராட்டு. 
10.12.2017இல் மேம்படுத்தப்பட்டது.

37 comments:

 1. இதுவரை நான் அறிந்திடாத புதிய விசயத்தை கொடுத்த முனைவர் ஐயா அவர்களுக்கு நன்றியும் சுதந்திரதின வாழ்த்துக்களும்,
  எனது சுதந்திரதின பதிவு ''வெட்கப்படுவோம்'' காண்க...

  ReplyDelete
  Replies
  1. கல்லூரியில் படித்த நாள் முதலே எனக்கு இந்நூலில் ஈர்ப்பு. தற்போதுதான் மொழிபெயர்த்து எழுத வாய்ப்பு கிடைத்தது. நன்றி.

   Delete
 2. இந்த கடிதத்தின் ஒரு பகுதி எனக்கு பாடப்பகுதியாக 9 ஆம் வகுப்பில் வந்தது. ஒரு மகளுக்கு பாசமுள்ள தந்தையாக மட்டுமல்லாமல் ஆசானாகவும் இருந்தார் நேரு என்பதை அறிய முடிகிறது! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஒவ்வொரு நிகழ்வும் மாணவ சமுதாயம் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது. வருகைக்கு நன்றி.

   Delete
 3. அன்புடையீர்..
  இனிய சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete
 4. நேரு இந்திரா காந்திக்கு எழுதிய கடிதங்களின் ஒரு பகுதி எங்களுக்குப் பாடத் திட்டத்தில் வந்திருக்கின்றது! நல்ல தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மொழிபெயர்க்கும்போது எதை சேர்ப்பது, எதை விடுவது என்று குழப்பமாக இருந்தது. நூலில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு பொருளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

   Delete

 5. வணக்கம்!

  உலக வரலாற்றை உற்றுப் படித்தேன்!
  குலவும் தமிழில் குளிதுந்து!

  ReplyDelete
  Replies
  1. மொழிபெயர்ப்பில் குறையிருப்பின் பொறுத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. வருகைக்கு நன்றி.

   Delete
 6. You are sincere in service both as a researcher and administrator.You are a roll model!congrats!!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்து என்னை இன்னும் எழுத வைக்கும் என்பது உண்மை. வருகைக்கு நன்றி.

   Delete
 7. a learned father educating his daughter. that is why they became PM later

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மைதான். அதனால்தான் பலருக்கு முன்னுதாரணமாகவும் இருக்கின்றார்கள். வாழ்த்துக்கு நன்றி.

   Delete
 8. ஜவஹர்லால் நேரு தனது மகளுக்கு எழுதிய கடிதங்களிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட கடித வரிகள். நல்ல தமிழாக்கம். பகிர்வுக்கு நன்றி!

  பள்ளி மாணவனாக இருந்தபோது எங்கள் வீட்டில் இருந்த இந்த உலக சரித்திரம் – முதல் தொகுதியை (ஓ.வி.அளகேசன் மொழி பெயர்த்தது) முழுதும் படித்து இருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. பதிவு எழுதத் தொடங்கும் முன் சில நண்பர்கள் மொழிபெயர்க்க சிரமப்படுவதற்குப் பதிலாக மொழிபெயர்ப்பையே படித்து எழுதிவிடலாமே என்று கூறினர். நேரடியாக ஆங்கிலத்தில் படித்து உணர்ந்து முடிந்தவரை தமிழில் மொழிபெயர்க்கவேண்டும் என்ற எனது ஆசையே இப்பதிவிற்குக் காரணம். நன்றி.

   Delete
 9. ஒவ்வொரு நிகழ்வையும் நினைவு படுத்தும் வகையில் வாசிப்பு இருப்பதும் அதைப் பகிர்வதும் நல்ல செயலே. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இவ்வாறாகப் பகிர்ந்துகொள்ளும்போது மனம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றது. வாழ்த்துக்கு நன்றி.

   Delete
 10. அன்பின் ஜம்புலிங்கம் - பதிவு நன்று - மிக்க மகிழ்ச்சி - மீண்டும் ஓரிரு முறைகள் படித்து உள் வாங்கி - பிறகு கருத்துகளைக் கூறுகிறேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. பலவற்றைப் படித்தாலும் எழுதுவதற்கென்று நேரம் ஒதுக்குவது சற்றுச் சிரமமாகவே உள்ளது. இருப்பினும் இந்த அரிய நூலைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணமே இப்பகிர்வுக்குக் காரணம். அன்பான வருகைக்கு நன்றி.

   Delete
 11. ///வரலாறு படிப்பது சிறப்பானது. அதனைவிட சிறப்பானது வரலாற்றைப் படைக்க உதவுவது.... " ///
  நேருவின் மகள் வரலாறு படைத்தது இதனால்தானோ?

  அண்மையில்தான் இந்நூலை வாங்கினேன் ஐயா
  என்னவொரு எளிமையான ஆங்கிலம்
  அனைவரும் படிக்க வேண்டிய அற்புத காலப் பெட்டகம் ஐயா இந்நூல்
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. ///வரலாறு படிப்பது சிறப்பானது. அதனைவிட சிறப்பானது வரலாற்றைப் படைக்க உதவுவது.... " /// என்ற சொற்றொடரை இந்திரா காந்தி இறந்தபோது அவரைப் பற்றிய செய்திகளில் அதிகமாக மேற்கோளாகக் காட்டப்பட்டது இன்னும் என் நினைவில் உள்ளது. வாழ்த்துக்கு நன்றி.

   Delete
 12. தகுந்த நேரத்தில் நேருவுக்கு மரியாதை

  ReplyDelete
  Replies
  1. ரத்தினச்சுருக்கமான தங்களது மதிப்புரைக்கு நன்றி.

   Delete
 13. அடுத்த தலைமுறைக்குப் பயனுள்ள செய்திகளைத் தொடர்ந்து எழுதுகிறீர்கள். வாழ்த்துக்கள். நேருவின் கடிதங்கள், பள்ளிப் பருவத்தில் படித்தால் மிகவும் சுவையாக இருக்கும். ஆசிரியர்கள் சிபாரிசு செய்யவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. படித்ததை முடிந்தவரை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருந்துகொண்டே இருக்கிறது. தாங்கள் கூறியது போல பள்ளிப்பருவத்தில் படித்தால் மிகவும் சுவையாக இருக்கும். தங்களின் வருகைக்கு நன்றி.

   Delete
 14. என்னிடம் இருக்கிறது, பல வருடங்களாக, படிக்கப்படாமல்... உங்கள் பதிவை படிக்கும் போது இந்த புத்தகத்தை முடித்து விடவேண்டும் என்று மீண்டும் தோன்றுகிறது...

  ReplyDelete
  Replies
  1. இந்த மதிப்புரை தங்களுக்குப் படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியதறிந்து மகிழ்ச்சி. பொறுமையாக அனுபவத்துப் படியுங்கள், மிகவும் ரசனையோடு இருக்கும். நன்றி.

   Delete
 15. வணக்கம் ஐயா. அருமையான பல விசயங்களை மகளுக்குச் சொல்லியுள்ளாரே நேரு. அழகாக மொழியாக்கம் செய்து பதிவிட்டதற்கு நன்றி..இந்த புத்தகம் வாங்கிப் படிக்க ஆர்வத்தைத்தூண்டிவிட்டீர்கள் ஐயா.

  ReplyDelete
 16. உலக நடப்புகளைப் பற்றிய முழுமையான பார்வையை இந்நூலில் காண முடியும். தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. சிறந்த பகிர்வு
  தொடருங்கள்

  ReplyDelete
 19. தங்களின் அன்பான வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து எழுதுவேன்.

  ReplyDelete
 20. Dear sir,
  Very nice script in time. Your script takes me to the Pre-independence period and recollect the world history.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

   Delete 21. அன்பு தமிழ் உறவே!
  வணக்கம்!

  இன்றைய வலைச் சரத்தின்,
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
  "எல்லோருக்கும் பிடித்த ஹீரோ"

  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துகள்!

  வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
  உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
  உவகை தரும் உமது பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
  தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
  (குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)

  வலைச் சரம்

  கவி மழை புவி புகும்
  இல்லம் வலைச் சரம்!
  கதை நல் விதை விதைக்கும்
  விளை நிலம் வலைச்சரம்!
  கட்டுரைத் தேன் தென்றல் தழுவிடும்
  மேனி வலைச் சரம்
  செந்தமிழ் இலக்கியம் பைந்தமிழ் இலக்கணம்
  பிறக்கும் கருவறை வல்லோர்
  நிறைந்த வலைச்சரம் வாழி!

  புதுவை வேலு

  ReplyDelete
 22. அருமையான பதிவு. படிக்கும்போது நேருவின் ஆழமான பார்வையை உணரமுடிகிறது. மகள் அறிந்து கொள்ள தான் விரும்பிய செய்தியை கடிதமாக எழுதியது மிகவும் அருமை

  ReplyDelete