03 June 2015

ஐந்தாம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்

தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, ஞானசம்பந்தர் தேவாரத்தினையும், நாவுக்கரசர் தேவாரத்தில் முதல் திருமுறையினையும் நாவுக்கரசர் தேவாரத்தில் நான்கு மற்றும் ஐந்தாம் திருமுறையினை நிறைவு செய்து, ஆறாம் திருமுறை வாசிக்கத் துவங்கியுள்ளேன். பிரபந்தத்தில் திருமங்கையாழ்வார் அருளிய பெரிய திருமொழியினைத் தொடர்கிறேன். 

நான்காம் திருமுறையில் இருப்பது போலவே நாவுக்கரசர் இறைவனையும், இயற்கையையும், பிற சமயங்களையும் பாடியுள்ள விதம் மனதில் பதியும் வகையில் உள்ளது. அவருடைய வயதின் முதிர்ச்சியை அவரது சில பாடல்கள் தெளிவுபடுத்துகின்றன. ஐந்தாம் திருமுறையிலிருந்து அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம்.



1) திருமீயச்சூர்
இறைவனுக்கு ஏற்றமுடைய கோயிலாக திருமீயச்சூர் கோயிலைப் போற்றுகிறார். 

தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும்
வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க்
கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையாற்
கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே.
(பதிகத்தொடர் எண்.124 பாடல் எண்.1) 
இந்நாள் வரை தோன்றிய கோயில்களும், இனித் தோன்றும் கோயில்களும், வேற்றுக் கோயில்களும் பலவுளேனும், கூற்றுவனைத் தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்.

2) திருக்கடம்பூர்
திருக்கடம்பூர் பதிகப் பாடல் ஒன்றில் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்கிறார். அப்பாடலைப் பார்ப்போம். 

நங்க டம்பனைப் பெற்றவன் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான் 
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி னெசய்து கிடப்பதே.
(பதிகத்தொடர் எண்.132 பாடல் எண்.9) 
கடம்ப மாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பஙகில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றோரைத் தாங்குதல்;  என் போன்றோர் கடன் பணி செய்து தற்போதம் இன்றி இருத்தல்.

3) திருவாய்மூர்
இப்பதிகத்தின் ஒரு பாடலில் திருமறைக்காட்டில் கதவு திறக்கப் பாடிய ஞானசம்பந்தரையும், செந்தமிழையும் போற்றிவிட்டு, இறைவனை பித்தரே என்று ஏத்துகிறார்.

திறக்கப் பாடிய என்னினுஞ் செந்தமிழ்
உறைப்புப் பாடி யடைப்பித்தா ருந்நின்றார்
மறைக்க வல்லரோ தம்மைத் திருவாய்மூர்ப்
பிறைகொள் செஞ்சடை யாரிவர் பித்தரே.
(பதிகத்தொடர் எண்.163 பாடல் எண்.8)
   
வேதங்களால் பூசைக்கப்பெற்று அடைக்கப்பெற்றிருந்த மறைக்காட்டுத் திருகதவத்தைத் திறக்குமாறு பாடிய என்னினும், செந்தமிழ்ப்பாடலை உறுதியுடன் பாடி அடைப்பித்தவராகிய திருஞானசம்பந்தப்பிள்ளையார் உதோ நின்றார். திருவாய்மூரில் பிறையைக் கொண்ட செஞ்சடை உடையாராகிய பெருமான் தம்மை மறைக்க வல்லலோ? இவர் பித்தரேயாவர்.

4) பொது
ஒன்று முதல் பத்து என்ற எண்களைக் கொண்டு ஆரம்பிக்கும் இப்பதிகப் பாடல்களில் ஒன்றை அவர் பாட நாம் கேட்போம்.

ஏழு மாமலை யேழ்பொழில் சூழ்கடல்
ஏழு போற்றுமி ராவணன் கைந்நரம்
பேழு கேட்டருள் செய்தவன் பொற்கழல்
ஏழுஞ் சூழடி யேன் மனத் துள்ளவே.
(பதிகத்தொடர் எண்.202 பாடல் எண்.7) 

ஏழு மலை, ஏழு புவனம், ஏழ் கடல் போற்றும் இராவணனது ஏழிசை கேட்டு அருள் செய்தவன். அவன் திருவடிகள் எழு பிறவிகளிலும் என்னுள்ளத்தின்கண்ணே உள்ளன.



5) பொது
புழுவினுடன் தம்மை ஒப்புநோக்கி அவர் தன்னைப் புழுவினும் கடையேன் என்று கூறும் பாடலைக் கேட்போம்.

புழுவுக் குங்குணம் நான்னெக் கும்மதே
புழுவுக் கிங்கெனக் குள்ளபொல் லாங்கில்லை
புழுவி னுங்கடை யேன்புனி தன்தமர்
குழுவுக் கெவ்விடத் தேன்சென்று கூடவே.
(பதிகத்தொடர் எண்.204 பாடல் எண்.4) 

புழுவுவக்கும் குணம் நான்கு. எனக்கும் அவ்வாறே. ஆயினும் எனக்குள்ள பொல்லாங்கு புழுவுக்கில்லையாதலின் புழுவினுங்கடையேனாகிய அடியேன் புனிதனாகிய பெருமானைச் சார்ந்தஅடியார் கழுவினுக்குச் சன்றுகூட எவ்விடத்தை உடையேன் ஆவேன்?
பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008 
இதற்கு முன் நாம் வாசித்தவை : 
முதல் மூன்று திருமுறைகள் : திருஞானசம்பந்தர் தேவாரம்
நான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்
------------------------------------------------------------------------------------------------
சோழநாட்டில் பௌத்தம் வலைப்பூவில், The New Indian Express இதழில் வெளியான ஆய்வு தொடர்பான பேட்டியைப் பகிர்ந்துள்ளேன். அப்பேட்டியைக் காண அழைக்கிறேன்.
Tracing footprints of Buddhism in Chola country



-----------------------------------------------------------------------------------------------

20 comments:

  1. இளங்காலைப் பொழுதில் அப்பர் பெருமானின் தேவாரம் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  2. புழுவினுடன் ஒப்பீடு ரொம்பவே அருமை ஐயா...

    The New Indian Express இதழில் வந்தமைக்கு வாழ்த்துகள்... பாராட்டுகள்...

    ReplyDelete
  3. ஆன்மிக மணம் கமழும் அழகுப் பதிவு!
    த ம 3

    ReplyDelete
  4. தேவாரம் பற்றி தங்கள் மூலம் கற்ற ஆரம்பித்து இருக்கிறோம் ஐயா.நன்றி தம 1

    ReplyDelete
  5. தேவாரம் பற்றி தங்கள் மூலம் கற்ற ஆரம்பித்து இருக்கிறோம் ஐயா.நன்றி தம 1

    ReplyDelete
  6. இனிக்கின்ற தேவராம் இனியும் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. The New Indian Express இதழில் வந்தமைக்கு வாழ்த்துகளும்.. பாராட்டுகளும்

    ReplyDelete
  8. அருமையான ஆன்மீக பதிவு.

    என்னுடைய வலைப்பூவையும் உங்களுடைய blog list இல் சேர்த்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  9. என்றோ படித்தவை! முதுமையால் தற்போது எதையும் படிக்கவோ நினைவில் கொள்ளவோ இயலவில்லை!

    ReplyDelete
  10. திருச்சிற்றம்பலம்!சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா

    ReplyDelete
  11. அய்யா வணக்கம், அருமையான பகிர்வு. நன்றி.

    ReplyDelete
  12. தேவாரம் படித்ததோடு இல்லாமல் அதை பிறருக்கும் பயன் படும் வகையில் சில குறிப்புகளை தந்தமைக்கு நன்றி முனைவரே

    The New Indian Express ரதிவுக்கு வந்திருந்தேன் மீண்டும் வாழ்த்துகள்
    தமிழ் மணம் 8

    ReplyDelete
  13. அப்பர் பெருமானின் தேவாரம் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி
    தம 9

    ReplyDelete
  14. வணக்கம்
    ஐயா

    அருமையானஆண்மீக பதிவு . தங்களின் தேடலுக்கு கிடைத்த வெகு மதி...பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள். த.ம 10
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  15. ஆய்வும் தோய்வும் அருமை.

    த ம 11.

    நன்றி

    ReplyDelete
  16. உள்ளத்தை உருக்கும்-இறை
    அன்பை பெருக்கும் அடியார்
    அகப்பொருள் தேவாராம்!

    ஆன்மீக ஆய்வின்
    மூலம்
    அகிலத்தை வென்று விட்டீர்கள் அய்யா! ஆய்வின்
    த ம 15
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  17. மன்னிக்கவும் முனைவர் அய்யா!
    த ம 12
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  18. அய்யா,

    தேவாரம் பற்றி அதிகம் அறிந்தவனில்லை நான்... உங்களின் பதிவின் மூலம் அதன் சிறப்பையும், சுவையையும் அறிந்து வியக்கிறேன்...

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    ReplyDelete
  19. அரிய பொக்கிசம் தெவாரங்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
    பத்திரிகைச் செய்தியும் வாழ்த்தக்குரியது.

    ReplyDelete
  20. நாவுக்கரசரின் தேர்ந்தெடுத்த ஐந்தாம் திருமுறை தேவாரப் பதிகங்கள், விளக்கம் எல்லாம் அருமை. Tracing footprints of Buddhism in Chola Country. I will try to read your interview in indian Express.

    ReplyDelete