18 December 2015

சிகரம் தீட்டிய சித்திரங்கள் : கே.பாலசந்தர்

என் அபிமான இயக்குநர் பாலசந்தரைப் பற்றிய எனது கட்டுரை அவரது முதலாண்டு நினைவையொட்டி (டிசம்பர் 23), இன்றைய தி இந்து நாளிதழில் வெளியாகியுள்ளது. அக்கட்டுரையைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவ்விதழுக்கு நன்றியுடன்.





கே.பி.முத்திரை என்பது என்ன? மரபுகளை மீறுவதுதான் கே.பி.முத்திரையா என்ற கேள்விக்கு பதிலளித்தார் இயக்குநர் சிகரம். "கே.பி.என்றால் மரபு மீறல்கள் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.  யாருமே எடுத்துத்துணியாத பல கதைகளை எடுத்து இயக்கியிருக்கிறேன். அபூர்வ ராகங்கள், அவள் ஒரு தொடர்கதை போன்றவை அந்த ரகம்தான்" என்று கூறியிருந்தார். 

திருவள்ளுவரின் அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்ற திருக்குறள் திரையில் தோன்றுவது முதல் அந்தப் படத்தின் இறுதிக்காட்சி, இறுதி பிரேமில் காணப்படும் சில  சொற்றொடர்கள் வரை விடாமல் பார்த்து ரசிக்கும் ரசிகர்களில் நானும் ஒருவன். 

இவருக்கு முன்னும் பின்னும் பல இயக்குநர்கள் வந்துபோனபோதிலும் இவரது வரவும் விட்டுச்சென்ற பதிவும் வித்தியாசமானவை. அனைத்து தரப்பினரையும், அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் பாணி இவரது இயக்கத்தில் காணப்படும். சமுதாயப் பிரச்சினைகளை முன்னுக்கு வைத்து அதனை அலசி ஆராய்ந்து, சில நிலைகளில் தீர்வுகளையும் தந்துள்ள இவரது சித்தரிப்புகளுக்குச் சில சலசலப்புகள் வந்தாலும், எதிர்த்தவர்களில் பலரே பின்னாளில் அவரது படங்களை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். 




இலக்கை அடைந்த பயணி
நாடகத்துறையில் நுழைந்து மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி உள்ளிட்ட பல நாடங்களை உருவாக்கி நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களைத் தனது நாடகங்களிலேயே பேசத் தொடங்கிவிட்ட கே.பி., மேடையிலிருந்து இடம் பெயர்ந்து திரைக்கும் நடுத்தர வர்க்கத்தின் வாழ்வை எடுத்துச் சென்றார். கதையின் கரு,  திரைக்கதையின் தெளிவு, உரையாடலின் கூர்மை, நடிகர் தேர்வு, இக்கம், காட்சிப்பின்னணி, தொழில்நுட்பம், உத்தி என்று ஒவ்வொன்றுக்கும் கதையோடும் சம காலத்தோடும் ஐக்கியம் ஏற்படுத்தி, நெடுந்தூரப் பயணத்தில் தன் இலக்கை அடைந்தவெற்றிகரமான திரைப்பயணி இயக்குநர் சிகரம்.

தமிழ்த்திரைப்படவுலகில் உள்ள நட்சத்திரங்களில் பலர் இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களே. ஒரே படத்தில் அதிகமான எண்ணிக்கையில் புதுமுகங்கள் என்ற நிலையில் (அவள் ஒரு தொடர்கதை) அவர் அறிமுகப்படுத்திய  அறிமுகங்களில் பலர் பின்னால் நன்கு பரிணமித்தவர்கள். சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தில் மிக துணிவோடு ஒரு நடிகையை (பிரமிளா, அரங்கேற்றம்) அறிமுகப்படுத்தி இன்றளவும் பேசப்படும் அளவு செய்தவர். நடிகை ஆலம் (மன்மத லீலை) கதாநாயகியாக முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் நடிக்கும்படி செய்தவர். இவருடைய படத்தில் நடிக்கும் எந்த ஒரு நடிகரும் நம்மை ஈர்த்துவிடுவார்கள். தப்புத்தாளங்கள் படத்தில் தடம் மாறிய பாத்திரங்களாக கதாநாயகனும், கதாநாயகியும் நடித்ததை ஈடுசெய்யும் வகையில் அந்தக் கதாநாயகிக்கு  முழுக்க முழுக்க புதிய பரிமாணம் கொடுத்தார் நூல் வேலி திரைப்படத்தில். இருமல் தாத்தா என்ற ஒரு கதாபாத்திரத்தை (எதிர்நீச்சல்) கடைசி வரை படத்தில் காண்பிக்காமலேயே இருப்பார். ஆனால் அந்த பாத்திரம் அத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். 

நடிகர்களை மட்டுமே அவர் கதாபாத்திரங்களாக அறிமுகப்படுத்தவில்லை. "என்னை பாலசந்தர் இந்த படத்துல அறிமுகப்படுத்தியிருக்கார்" என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் பேசும் பொம்மை (அவர்கள்), டைட்டில் போடும் போது அருவியைக் காண்பித்து, இவர்களுடன் இந்த மலையருவி என்ற டைட்டிலுடன் காட்டப்படும் அருவியும் இந்தக் கதையிலி ஒரு முக்கிய கதாபாத்திரம் (அச்சமில்லை அச்சமில்லை) என்று டைட்டில் போட்டு உணர்த்துவார். கதையையொட்டி இயற்கையையும் வாழ்விடங்களையும் தெரிவு செய்து காட்சியில் கொண்டுவருவதில் அவரது கற்பனை வளம் வியக்கத்தக்கது. நாடகத்திலிருந்து வந்திருந்தாலும் காட்சிமொழியிலும் அதிக கவனத்தை அவர்காட்டியுள்ளார்.

பெண்மையின் வலியைப் பேசியவர் 
நடிகைகளை காட்சிப்பொருள் போல வைத்து படங்கள் வெளியான  நிலையை மாற்றி நடிகைகளுக்கு முக்கியமான பாத்திரங்களைக் கொடுத்து பெண்ணின் பெருமையைப் பேசவைத்த முதல் இயக்குநர். பெண்களை மையமாக வைத்து இவர் திரைப்படங்கள் எடுத்த அளவு வேறு யாரும் எடுத்திருக்க வாய்ப்பில்லை. பெண்ணினத்தையும், பெண்ணியத்தையும் நேசித்த இயக்குநர் என்ற வகையில் திரை வரலாற்றில் கே.பி. தனித்து நிற்கிறார். 

குடும்ப முன்னேற்றத்திற்காக தன்னையே மெழுகுவர்த்தியாக ஆக்கிக்கொண்டு முன்னணியில் நிற்கும் லலிதா (அரங்கேற்றம்) கதாபாத்திரத்துடன் வேறு எந்த  கதாபாத்திரத்தையும் ஒப்பிடமுடியாது. குடும்பத்தில் உடன் பிறந்தவர்கள் கண்ட கனவுகளை நினைவாக்கி தன்னையே தரும் ஒரு பெண்ணின் மன நிலையை வடிப்பது என்பது சாதாரணமானதல்ல. அம்பாளாக சிவராத்திரியன்று வேடமிட்டு வரும் கதையின் நாயகி கடைசி காட்சியில் கிட்டத்தட்ட பைத்தியமாக மாறுவதைப் பார்த்த ரசிகர்கள் ஏதோ தம் வீட்டுப் பெண்ணுக்கு ஏதோ நேர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வைப் பெற்றனர். அந்தக் காலகட்டத்தில் மிகவும் புரட்சிகரமாகப் பேசப்பட்ட அரங்கேற்றம் அவருடைய படைப்பில் ஒரு மைல்கல். 

கவிதா (அவள் ஒரு தொடர்கதை), லலிதாவிற்கு சளைத்தவல்ல. ஓடிப்போன அப்பா, விதவைத் தங்கை, ஒன்றுக்கும் பயனில்லா அண்ணன், எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கும் அம்மா என்ற சூழலில் குடும்ப பாரத்தை முற்றிலுமாக சுமந்து கடைசி வரை அவ்வாறே தன் நிலையிலிருந்து மாறாமல் இருக்கும் கவிதாவை பார்க்கும்போது நாம் நம் அடுத்த வீட்டில் உள்ள, நம் குடும்பத்தில் உள்ள பெண்ணைப் பார்ப்பது போல இருக்கும். 

மரணத்தை முன்கூட்டி அறிந்த கதையின் நாயகன் வாழ்வினை நேசிக்கும், வாழத்துடிக்கும் தம் ஆவலை வெளிப்படுத்தும் காயமே இது பொய்யடா, காற்றடைத்த பையடா, அதிலும் பாதி பஞ்சருடா (நீர்க்குமிழி) என்ற ஏக்கமான சொற்கள், நல்ல நிலையில் வாழ்ந்த கணவன் அரசியல்வாதியாக மாறி கெட்டுப் போன நிலையில் அவனைக் கொல்லும் மனைவியின் மன நிலை (அச்சமில்லை, அச்சமில்லை), சமுதாயச் சூழலில் தவறான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட கதாநாயகனும் நாயகியும் திருந்தி வாழ விரும்பும்போது அதே சமுதாயம் மறுபடியும் அவர்களை அந்த பழைய நிலைக்கு இழுத்துச் செல்லும் அவல நிலை (தப்புத்தாளங்கள்), அதிகமான கனவுகளுடன் வேலை தேடி அலைந்து கடைசியில் கிடைத்த வேலையைத் தெரிவு செய்துகொள்ளும் இளைஞனின் மனப்பாங்கு (வறுமையின் நிறம் சிகப்பு) என கே.பி. திரையில் தீட்டியச்சென்ற சித்திரங்கள் தனித்துவம் மிக்கவை.

திரைச் சிற்பி
மன உணர்வுகளைக் கற்பனை மூலமாகவும், கதாபாத்திரங்கள் மூலமாகவும் எடுத்துவைப்பதில் அவருக்கு நிகர் அவரே. பொய், ரெட்டச்சுழி, உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தபோதிலும் நடிப்பைவிட இயக்கத்தை அதிகம் நேசித்த கே.பி. பச்சைக் களிமண்ணாகத் தன்னிடம் வந்த பலரை புகழ்பெற்ற கலைஞர்களாக மாற்றிக் காட்டிய திரைச்சிற்பி என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.




இந்து நாளிதழில் வெளியான கட்டுரையை தி இந்து நாளிதழில் பின்வரும் இணைப்பில் காணலாம்.
சிகரம் தீட்டிய சித்திரங்கள்

38 comments:

  1. வெளியுலகிலும் வெளிச்சம் பரப்பும் எழுத்தின் சொந்தக்காரருக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. சிகரம் தீட்டிய சித்திரங்கள் : கே.பாலசந்தர்
    நன்னிலம் தந்த நற்படைப்பாளர்
    இயக்குனர் சிகரம் கே. பால சந்தர் அவர்களின் சிறப்புகள் பற்றி
    இந்து நாளிதழ் வழங்கிய கட்டுரையின் மூலம் மேலும் பல செய்திகள் அறியவும் பெற்றேன். மிக்க நன்றி முனைவர் அய்யா.
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  3. திரைச்சிற்பியின் நினைவுகளில் ஆழ்ந்தது மனம் - தங்களிடைய பதிவினைக் கண்டு..

    ReplyDelete
  4. முதலில் தங்களுக்கு வாழ்த்துகள்
    கே. பாலசந்தர் ஒரு ஜனரஞ்சக இயக்குனர் எல்லா காலத்துக்கும் ஏற்றவாறு தன்னை மாற்றி அமைத்துக்கொண்டவர் என்பது 100க்கு100 மறுக்க முடியாத உண்மை இவரால் பலரும் திரையிலகில் அறிமுகமானவர்கள் இன்றுவரை நிலைத்து இருக்கின்றார்கள். நல்லதொரு விளக்கமான கட்டுரை வாழ்த்துகள்.
    தமிழ் மணம் 3

    ReplyDelete
  5. வாழ்த்துகள் ஐயா. தமிழ் இந்துவில் வெளிவந்தமைக்கு. இயக்குநர் சிகரம் என்றால் அவர்தான். கட்டுரையும் சிறப்பு.

    ReplyDelete
  6. வணக்கம்.

    காலையிலேயே
    படித்தேன். படி...தேன்.

    தொடர்கிறேன் ஐயா.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி! அய்யா...

    ReplyDelete
  8. Mr SV Venugopalan (sv.venu@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    ...ஆஹா..நீங்கள்தானா...நீங்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்....வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. புரட்சி இயக்குனர். ஆனால் அவர் தன் கதாநாயகிகளை சந்தோஷமாக இருக்க விட்டதில்லை! ஆரம்பப் படங்கள் நாடக மேடை நாடகங்கள் போலவே இருந்தன என்ற விமர்சனம் இருந்தாலும், மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி உள்ளிட்ட படங்களை ரசிக்க முடிந்தது. அவர் இயக்கத்தில் நடித்த நடிகர்கள் நடிப்பில் ஒரு மெருகேறும். அவர்கள் நடிப்பில் ஒரு பொதுப்பாணி தெரியும். நாகேஷின் நடிப்புத் திறமையை வெளிக் கொணர்ந்த முதல் இயக்குனர்.

    தம +1

    ReplyDelete
  10. அருமையாக இருந்தது. பத்திரிகையில் வெளிவந்ததற்கு வாழ்த்துகள்!
    த ம 6

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா,

    காலையில் ‘தி இந்து’ நாளிதழில் படித்தேன். மிகமிக அருமையாக இயக்குநர் சிகரம் கே.பி. அவர்களைப் பற்றியும் அவரது நாடகங்கள், திரைப்படங்கள் பற்றி முழுமையான அலசல். அவரை நேசிக்கக்கூடியவர்களில் தாங்களும் ஒருவர் என்பதை எண்ணுகின்ற பொழுது மிகவும் பெருமையாக இருக்கிறது.

    முதலாம் ஆண்டான இந்தத் திங்களில் அவரை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  12. கூட்டாமலும் குறைக்காமலும் திரைச் சிற்பியை சரியாக கணித்து எழுதியுள்ளீர்கள் ,வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. அருமை
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  15. பிற்காலத்தில் எனக்கு நானும் வேறு துறையைத்(நாடக திரை) தேர்ந்தெடுத்து இருந்தால் பாலசந்தர் போல வந்திருக்கலாமோ என்று தோன்றியதைப் பதிவினீல் பகிர்ந்திருக்கிறேன் ஒரு தேர்ந்த ரசிகன் என்ற முறையில் எழுதி இருக்கிறீர்கள் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  16. பதிவு நன்று! அவர் ஒரு சிகரம் தான் த- ம 10

    ReplyDelete
  17. அருமையான கட்டுரை. சிவாஜி ப்டம் எம்ஜிஆர் படம் என்று நடிகர்களை வைத்தி படங்களை மக்கள் அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால் இயக்குனருக்காக படம் பார்க்க வைத்தவர் பாலச்சந்தர். ஹிந்து வில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  18. அறிஞர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் சொல்வது போல
    நடிகர்களுக்காகப் படம் பார்க்காமல்
    இயக்குனர்களுக்காகப் படம் பார்க்க
    வைத்தவர் பாலச்சந்தர் என்பதில்
    உண்மை இருக்கிறது

    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    ReplyDelete
  19. தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்!

    'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'இரு கோடுகள்' மிகவும் சிறப்பான படங்கள்!!

    ReplyDelete
  20. நான் நினைத்திருந்ததை யாருமே சொல்லவில்லையே என்று படித்துக் கொண்டே வந்தேன். ஸ்ரீராம் சொல்லிவிட்டார். அவர் படத்தில் நாயகர்கள் ஜம்மென்று (தவறு செய்தபின்னும்) திருமணம் ஆகி ஜாலியாக இருப்பார்கள். நாயகிகள் நடுத்தெருவில் நிற்பார்கள். இந்தக் காரணத்திற்காகவே நான் பாலச்சந்தரின் படங்களை விரும்பிப் பார்ப்பதில்லை. இன்னொரு மைனஸ் பாயிண்ட் வசனங்கள் பேசிப்பேசியே கொன்று விடுவார்கள். அதுவும் pun அவரது வசனங்களில் அளவுக்கு மீறி இருக்கும். இருகோடுகளில் life, file என்று பேசி பேசி நம்மை அலுக்க வைத்துவிடுவார்கள்.
    எதிர்மறையான கருத்துரைகள் சொன்னதற்கு மன்னிக்கவும்.
    ஹிந்துவில் வெளிவந்தமைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  21. வணக்கம்
    ஐயா

    பத்திரிகையில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள் கட்டுரை நன்றாக உள்ளது த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  22. வாழ்த்துகள்
    இப்போது மலர்தருவிலும் (முகநூல் பக்கத்தில் )

    ReplyDelete
  23. அய்யா, எனது G+இல் பகிர்ந்துள்ளேன்.
    நடுத்தர வர்க்கத்து உணர்வுகளை, குறிப்பாகப் பெண்களின் உணர்வுகளை வெளிக்கொண்டு வந்ததில் எழுத்தாளர் கு.ப.ரா.வோடு ஒப்பிட்டுப் பேசத்தக்கவர் இயக்குநர் திரு கே.பி.அவர்கள். அவரது சில வசனங்கள் பார்த்தவர்களோடு “மறக்கமுடியாதபடி ஒரு ஞாபக யுத்தம் செய்யும்” என்பதே என் கருத்து. அவரது கதைக்கருவில் சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரது கலைநேர்த்தி, விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது. சரியான நேரத்தில் எழுதி, இங்கும் பகிர்ந்த உங்களுக்கு என் வணக்கமும் நன்றியும். தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அஒதொக. படத்தில், கவிதா பேசும் வசனம் -
      “பெண்கள் கல்யாணத்திற்கு முந்தி, கர்வமா இருக்கலாம், கர்ப்பமாத்தான் இருக்கக் கூடாது!”
      அரங்கேற்றம் படத்தில் லலிதாவின் அப்பா பெண்பார்க்க வந்தவர்கள் பெண்ணைப்பற்றி ஏடாகூடமாகப் பேசியதும் வீட்டார் அனுமதி கேட்டு 2வார்த்தை பேசுவார் -
      “எந்திருச்சிப் போங்கடா”
      இன்னும் நிறையச் சொல்லலாம்..

      Delete
  24. Wonderfull writing.Balachander is from a place called Nallamangudi,outskirt of Nannilam and studied at Board high school,Nannilam passing SSLC arround 1947.I am proud that years later I studied in the same school.His flow of Tamil,story concept etc could be generated from that mother earth,which I later sprinkled at south pole.

    ReplyDelete
  25. வாழ்த்துக்கள் ஐயா,

    மிக நல்ல பகிர்வு, தொடருங்கள்.

    ReplyDelete
  26. Mr Subramanian kamatchi gouder
    (subramaniankamatchigouder@gmail.com மின்னஞ்சல் வழியாக)
    அற்புதமாக கே.பி.அவர்களின் திரைப்பயணத்தை தொகுத்து வழங்கியதற்கு நன்றி..தங்களது பன்முக ஆய்வு சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  27. அதற்குள் ஓராண்டு ஓடிவிட்டதா!
    நிறைய படங்களில் அவரின் முத்திரை இருந்தாலும் தொடர்கதையும் அரங்கேற்றமும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள்.

    ReplyDelete
  28. சில படங்களே பார்த்திருக்கிறேன்.. நீங்கள் குறிப்பிட்டுள்ள படங்களைப் பார்க்க முயற்சி செய்கிறேன் ஐயா. பகிர்விற்கு நன்றி , தி ஹிந்துவில் வெளியானதற்கு வாழ்த்துகள் ஐயா.

    ReplyDelete
  29. நினைவலைகளின் அழகான மீட்டல் முனைவர் சார்!

    ReplyDelete
  30. Mrs Punitha Ganesan (g.punithaganesan@gmail.com மின்னஞ்சல் மூலமாக)
    வணக்கம் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  31. wonderful article Dr. Good keep it up. by kalvi today editor ram. Note kalvi today bilingual monthly magazine reliesed by my guru and great director know.balachndar.2007. Web .www.kalvitoday.net

    ReplyDelete
  32. wonderful article Dr. Good keep it up. by kalvi today editor ram. Note kalvi today bilingual monthly magazine reliesed by my guru and great director know.balachndar.2007. Web .www.kalvitoday.net

    ReplyDelete