17 November 2018

இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு : ரகு ராய்

இந்திரா காந்தியின் வாழ்வில் பல்வேறு காலகட்டங்களில் புகைப்படக்கலைஞர் ரகு ராய் எடுத்த புகைப்படங்களைக் கொண்ட நூல் இந்திரா காந்தி : ஒரு வாழும் மரபு  (Indira Gandhi: A Living Legacy, Raghu Rai) என்ற நூலாகும். 
புகைப்படக்கலைஞர் ரகு ராய் (பி.1942) எடுத்த புகைப்படங்களைக் கொண்ட தாஜ்மகால் (Taj Mahal) நூலினை 1980களின் இடையில் தமிழ்ப்பல்கலைக்கழக நூலகத்தில் முதன்முதலில் பார்த்தேன். அந்நூலில் அவர் தாஜ்மகாலை பல கோணங்களில், பல்வேறு நிலைகளில் எடுத்திருப்பார். அடுத்து, இந்திரா காந்தி இயற்கையெய்தியபோது India Today இதழில் A Photographic Tribute by Raghu Rai என்ற தலைப்புடன் அவர் எடுத்த, இந்திரா காந்தியின் பல புகைப்படங்களைக் காணமுடிந்தது. அப்போதுமுதல் ரகுராயின் புகைப்படங்கள், அதனைப் பற்றிய செய்திகளை ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். 
ரகு ராய் (நன்றி : மெக்னம் போட்டோஸ்)
ஸ்டேட்ஸ்மென்  (1966-76), சன்டே (1977-80), இந்தியா டுடே (1982-91) உள்ளிட்ட பல இதழ்களில் புகைப்படக்கலைஞராக பணியாற்றியவர். 1971இல் பாரிஸில் நடைபெற்ற அவருடைய புகைப்படக் கண்காட்சியின்போது புகழ்பெற்ற புகைப்படக்கலைஞர் ஹென்றி கார்ட்டர் பிரஸ்ஸன் என்பவரால் ஈர்க்கப்பட்டு உலகப்புகழ் பெற்ற மேக்னம் போட்டோஸ் புகைப்படக்கூட்டமைப்பில் நியமிக்கப்பட்டார். பல இந்திய, அயலக விருதுகளைப் பெற்றுள்ளார். லண்டன், பாரிஸ், நியூயார்க், ஹாம்பர்க், பிரேக், டோக்யோவிலுள்ள பங்கமூரா அருங்காட்சியகம், ஜுரிச் மற்றும் சிட்னி உள்ளிட்ட பல இடங்களில் புகைப்படக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ (1971), அமெரிக்காவில் சிறந்த புகைப்படக்காரர் விருது (1992) உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடைய புகைப்படக்கட்டுரைகள் டைம், லைப், நியூயார்க் டைம்ஸ், சன்டே டைம்ஸ், நியூஸ்வீக், இன்டிபென்டன்ட், நியூயார்க்கர் உள்ளிட்ட பல வெளிநாட்டு இதழ்களில் வெளிவந்துள்ளன. புகைப்படப் பத்திரிக்கையாளரான இவர் 18க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இந்நூல் இந்திரா காந்தியைப் பற்றிய அவருடைய மூன்றாவது நூலாகும். தொடர்ந்து மேக்னம் போட்டோஸ் அமைப்பிற்கு பங்களித்து வருகிறார்.

144 பக்கங்களைக் கொண்ட இந்நூலுக்கு இந்தர்ஜித் பத்வார் முன்னுரை (ப.11-22) வழங்கியுள்ளார். பல்வேறு சூழல்களில் ரகு ராய் எடுத்துள்ள இந்திரா காந்தியின் புகைப்படங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. 1964இல் நேரு இறந்தபோது அவருக்குப் பின்னால் யார் என நாடு ஏங்கிக்கொண்டிருந்த வேளையில் லால் பகதூர் சாஸ்திரி பொறுப்பேற்றது, அவர் தன் அமைச்சரவையில் இந்திரா காந்தியை தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக்கியது, அதற்கு முன்பாக அவர் நேருவுக்கு உதவியாக இருந்தது, ஆரம்பத்தில் தயக்கத்தோடு காணப்பட்ட இந்த இளம் பெண்மணி பின்னர் நேருவின் அரசியல் வாரிசாக வந்தது என்ற சூழ்நிலைகளில் தொடங்கி அப்போது ஸ்டேட்ஸ்மேன் இதழில் புகைப்படக்காரராகத் தன் பயணத்தைத் தொடங்கியதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் ரகு ராய். 

லால்பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பின் இந்திரா காந்தி பிரதமராக பொறுப்பேற்கிறார். ஒரு புதிய சகாப்தம் ஆரம்பமாகிறது. இவ்வாறு தன் நூலில் ஆங்காங்கே உரிய குறிப்புகளோடு இந்திரா காந்தியின் புகைப்படங்களைத் தந்துள்ளார். முக்கிய அரசியல் பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்களோடு இந்திரா காந்தி, பொது நிகழ்ச்சிகள், அரசு மற்றும் பிற விழாக்களில் அவர் கலந்துகொள்ளல், செங்கோட்டையில் பேச்சு என்று அவர் கலந்துகொண்ட நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இந்நூலில் உள்ளன. இந்திரா காந்தியின் குணாதிசயங்களை வெளிப்படுத்தும் வகையில் அவை காணப்படுகின்றன. இந்திரா காந்தியின் ஆளுமையை மதிப்பவர்களும், புகைப்படக்கலையை நேசிப்பவர்களும் இந்நூலை விரும்புவர்.  (கீழுள்ள புகைப்படங்களுக்குரிய செய்திகள் அவருடைய நூலில் உள்ளபடி தரப்பட்டுள்ளன)

அவரை பிரதமராக்கிய காமராஜருடன் 

மறுமொழிக்கு தகுதி எனக் கருதிய கடிதங்களுக்கு தனிப்பட்ட முறையில்
அவரே மறுமொழி அனுப்புவார்

ராஜ்காட்டில் தியாகிகள் தினத்தின்போது பிரார்த்தனைக்கூட்டத்தில் 

கிராமத்துப் பள்ளியில் தேநீர் அருந்துதல்
பாராளுமன்ற இல்லத்தில் அவருடைய அலுவலகத்தில் இரவில் பணியாற்றல்
அணிவகுப்பு மரியாதையை ஏற்றல்
வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டையிலிருந்து உரையாற்றியபோது அதிக எண்ணிக்கையிலான மக்களை அவர் ஈர்த்தார் 

இந்திரா காந்தி இறந்தபோது வெளியான India Today இதழில் (10 நவம்பர் 1984) ரகு ராய் எடுத்த இந்திரா காந்தியின் படங்கள் (A Photographic Tribute by Raghu Rai, பக்.78-84) வெளியாகியிருந்தன. அந்த படத்தொகுப்பிற்கு அவர் தந்துள்ள முன்னுரையிலிருந்து : 

"1966இல் அவர் பிரதமரானபோது நான் தொழில்ரீதியாக புகைப்படம் எடுக்க ஆரம்பித்தேன். ஒரு நபர் என்ற நிலையிலிருந்து அவர் பிரதமராக உருவெடுப்பதைக் கண்டுபிடிப்பதில் ஆர்வமாக இருந்தேன்.  இந்தக் காலகட்டத்தில் அவரை மிக நெருக்கமாக புகைப்படம் எடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது...... அவரை புகைப்படம் எடுப்பது என்பதானது ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ஆற்றின் பல்வேறு நிலைகளைப் படம் பிடிப்பது போலிருக்கும்.....கடைசியாக நான் அவரை படமெடுத்தபோது அவருடைய முகத்தில் காணப்பட்ட அமைதி கலந்த வெளிப்பாடு ஏதோ ஒரு புதிரை என்னிடம் உண்டாக்கியது, அது எனக்கு வலியைத் தந்தது"  (19 நவம்பர் இந்திரா காந்தி பிறந்த நாள்) 
புகைப்படங்கள் நன்றி : ரகு ராய் 

17.நவம்பர் 2018 மாலை மேம்படுத்தப்பட்டது.

13 comments:

 1. மிகவும் சுவாரஸ்யமான புகைப்படங்கள். என் தந்தை அலுவலக விஷயமாக ஒருமுறை டெல்லி சென்றபோது இந்திரா காந்தியைச் சந்தித்து (பொது மக்கள் வரிசையில்) வந்தார்.

  ReplyDelete
 2. மனம் கவர்ந்த பதிவு..
  வாழ்க நலம்..

  ReplyDelete
 3. அரிய செய்திகள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி

  ReplyDelete
 4. அருமையான தகவல்
  பாராட்டுகள்

  ReplyDelete
 5. அருமை. இந் நூலைப் பார்ப்பதற்காகவே உங்கள் இல்லத்திற்கு வரலாம் போலுள்ளது. இதேபோல் காந்தியைப் பற்றிய புகைப்படத் தொகுப்பு நூல் ஒன்று என்னிடம் உள்ளது.

  ReplyDelete
 6. என்னைக் கவர்ந்த மாபெரும் தலைவி அவர் . சிறப்பான ஆவணப் பதிவு ஜம்பு சார் !

  ReplyDelete
 7. அரிய படங்களுடனான அருமையான பதிவு. நூலைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.விரைவில் சந்திக்கிறேன். நன்றி

  ReplyDelete
 8. அப்போதைய மந்திரி சபையில் இருந்தஒரெ ஆணென்று பராட்டப்பட்டவர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மாக்கியவர்

  ReplyDelete
 9. அரிய படங்களின் அணிவகுப்பு

  ReplyDelete
 10. இன்று அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவை வல்லரசாக உயர்த்திக் காட்டியவர்.படங்களுடன் கூடிய விரிவான பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 11. அருமையான புகைப்படங்கள். இந்திராகாந்தியின் பிறந்தநாளான இன்று, சிறப்பான நினைவஞ்சலி.

  ReplyDelete
 12. மிகவும் அருமையான புகைபடங்கள்!

  ReplyDelete