தினமணி 4 நவம்பர் 2018 இதழில் நான் எழுதியுள்ள தீபாவளியைப் பற்றிய நினைவுகள் அது ஒரு பொற்காலம் என்ற தலைப்பில் வெளியாகியுள்ளது.
தீபாவளி நாளான இன்று அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,
அவ்விதழுக்கு நன்றியுடன்.
தீபாவளி நாளான இன்று அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன்,
அவ்விதழுக்கு நன்றியுடன்.
தீபாவளி
என்றதுமே நினைவிற்கு வருபவை பலகாரங்களும், வெடிகளும், புத்தாடைகளும்தான். கும்பகோணத்தில்
எங்கள் வீட்டில் தீபாவளிக்கு 10 நாள்களுக்கு முன்பே பலகாரம் செய்யும் பணி ஆரம்பித்துவிடும். திருமஞ்சன
வீதியில் படித்துக்கொண்டிருந்த நேரம். பள்ளிவிட்டு வீட்டுக்குச் செல்வதிலேயே கவனமாக
இருப்போம். எங்கள் ஆத்தா, எங்களை வளர்த்த அத்தை, எங்கள் அம்மா கூட்டாகச்சேர்ந்து பலகாரங்களைச்சுட
ஆரம்பிப்பர். முறுக்கு, அதிரசம், ரவா உருண்டை, பச்சைப்பயறு உருண்டை, கெட்டி உருண்டை
(எங்கள் ஆத்தா இதை புடலங்காய் உருண்டை என்பார்) ஆகிவற்றை ஆத்தா செய்ய ஆரம்பிப்பார்.
அரிசி மாவையும், உளுந்து மாவையும் கலந்து வாணலியில் உள்ள எண்ணெயில் ஊற்றிச் சுடும்போதே
வாசனை மூக்கைத் துளைக்கும். முறுக்கினை வெவ்வேறு அச்சில் வைத்து சாதா முறுக்கு, முள்
முறுக்கு என்று செய்வர்.
சாமி
கும்பிட்டபின்னர்தான் தருவோம் என்று ஆத்தா கூறினாலும் நாங்கள் அருகில் பாவமாக நிற்பத்தைப்
பார்த்ததும் தந்துவிடுவார். மாடிக்கோ, கொல்லைப்புறத்திற்கோ எடுத்துக்கொண்டு ஓடிவிடுவோம்.
தின்றுவிட்டு மறுபடியும் வந்து கேட்போம். போட்டு முடிந்தபின் அதற்காகவே உள்ள பெரிய
பித்தளைக்குவளையில் வைத்து பத்திரமாக மூடி வைத்துவிடுவார். அதிரசம் செய்வதற்காக வைத்துள்ள
மாவினைப் பார்க்கும்போது எச்சில் ஊறும். மிகவும் கெட்டியாக இல்லாமல், அதே சமயம் குழைவாகவும்
இல்லாமலும் இருக்கின்ற மாவினை சிறிய உருண்டையாக உருட்டி ஆத்தா தரும்போது அதிக ருசியாக
இருக்கும். அதிரசத்தைவிடவும் அந்த மாவினை நாங்கள் போட்டி போட்டு வாங்கி உண்போம். ரவா
உருண்டை இனிப்பாக இருந்தாலும் எனக்கு அதிகம் பிடித்தது பச்சைப்பயறு உருண்டைதான். ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு பலகாரமாகச் செய்வார்கள். எங்கள் வீட்டில் பலகாரம் செய்யும்போதே அடுத்தடுத்த
வீடுகளில் என்ன பலகாரங்கள் செய்கிறார்கள் என்று ஆர்வத்தோடு விசாரிப்போம்.
நடுத்தரக்குடும்பத்துக்கும்
சற்றே கீழான நிலையில் எங்கள் குடும்பம் இருந்ததால் ஆடம்பரமில்லாத, குறைந்த விலையிலான
துணியில்தான் எங்களின் தீபாவளி ஆடை அமையும். அப்போதெல்லாம் குறைந்த விலை, அதிக விலை
என்ற வேறுபாடோ, அதுதான் சிறந்தது இதுதான் சிறந்தது என்ற எண்ணங்களோ தெரியாது. தீபாவளிக்கு
புதிய துணி என்ற மகிழ்ச்சியே அனைவரிடமும் இருக்கும்.
தீபாவளியன்று
காலை கங்கா ஸ்நானம் எனப்படுகின்ற குளியலுக்காக பெற்றோர் எங்களை எழுப்பிவிடுவர். குளிப்பதற்குத்
தயாராக நாங்கள் வரிசையாக நிற்கவேண்டும். ஆத்தா தன் கையில் எண்ணெயை ஊற்றி தலையின் உச்சியில்
நச்சென்று வைத்து ஒவ்வொருவருக்கும் தேய்த்துவிடுவார். அப்போது கிடைக்கின்ற சுகத்திற்கு
ஈடு இணை எதுவுமேயில்லை. சாமியறையில் அனைத்து சாமி படங்களுக்கு முன்பாக புதிய துணிகள்,
பலகாரங்கள், பழங்கள், வெற்றிலை பாக்கு போன்றவை வைத்துப் படைப்பார்கள். புதிய ஆடைகளில்
மஞ்சள் தடவி வைத்திருப்பார்கள். பூசை முடிந்ததும் ஒவ்வொருவருக்காக தட்டில் அவரவர்களின் ஆடைகளுடன் சில்லறை
காசினை வைத்துத் தருவார்கள். ஆத்தா, தாத்தா கால்களிலும் பெற்றோர் கால்களிலும் விழுந்து
வணங்கி அதனைப் பெற்றுக்கொள்வோம். எங்களுக்கு நெற்றியில் திருநீறு பூசிவிடுவார்கள்.
வீட்டில் எங்களுக்கு காசு போட்டு வைப்பதற்காக தரப்பட்டுள்ள சிறிய பெட்டிகளில் அவர்கள்
கொடுத்த காசுகளை உடனே போட்டுவிடுவோம். பெரும்பாலும் அதில் நாலணா அதிகமாக இருக்கும்.
சேமிப்புப்பழக்கத்தை உண்டாக்கவும், பண மதிப்பை உணர்ந்துகொள்ளவும் அவர்கள் செய்த உத்தியை
இப்போது உணரமுடிகிறது.
புத்தாடை
அணிந்துகொண்டு அனைத்து உறவினர் வீடுகளுக்கும், நண்பர்கள் வீடுகளுக்கும், அண்டை வீட்டாருக்கும்
நாங்கள் கொண்டுபோய் கொடுப்போம். கொண்டு செல்லப்படுகின்ற வீட்டில் உள்ளோரின் எண்ணிக்கைக்குத்
தக்கபடி முறுக்கு, அதிரசம், உருண்டைகளின் எண்ணிக்கை அமையும். நாங்கள் தருவது போலவே
அவர்களும் எங்கள் வீட்டில் கொண்டு வந்து தருவார்கள்.
வீட்டில்
கொண்டாடிய பின்னர் நாங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வோம். அவ்வாறே
அவர்கள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள். நண்பர்களின் சகோதர சகோதரிகளோடும், பெற்றோரோடும்
மனம் விட்டுப் பேசுவோம். பலகாரங்கள், புத்தாடைகள், மத்தாப்பு மற்றும் வெடிகளை மையப்படுத்தியும்
பேசுவோம். சின்ன தாத்தா, சின்னாத்தா, சித்தி, சித்தப்பாக்கள், பெரிய தாத்தா, பெரியாத்தா,
பெரியத்தை, பெரிய மாமா வீடுகளுக்குச் சென்று அவர்களிடம் ஆசி பெறுவோம். அங்கிருந்து
சகோதர முறை உள்ளவர்களும், மாமன் மகள், அத்தை மகன் உறவு முறை உள்ளவர்களும் வருவார்கள்.
எங்கள் வீட்டில் தாத்தா, ஆத்தாவிடம் ஆசி பெற்றுச் செல்வார்கள். அவ்வாறு வரும்போது பெரியவர்கள்
காலில் விழவேண்டும் என்று கூறுவார்கள். அனைவரும் காலில் விழுந்து அவர்களின் ஆசியைப்
பெறுவர். பெரியவர்கள் எங்களுக்குத் தருவதற்காகவே சில்லறையாக காசுகளை வைத்திருப்பர்.
உறவினர் வீட்டுக்குச் செல்லும்போது போட்டி போட்டுக்கொண்டு வாங்கி, எங்கள் வீட்டு உண்டியலில்
சேர்ப்போம். அவர்களிடம் இல்லாத வெடி மத்தாப்புகளைத் தந்து எங்களிடம் இல்லாததை அவர்களிடமிருந்து
பண்டமாற்று முறையில் பெற்றுக்கொள்வோம்.
கல்லூரிக்காலம்,
தொடர்ந்து பணியில் சேரல், திருமணம் என்ற நிலையில் கூட்டுக்குடும்பத்திலிருந்து அனைவரும்
பிரிந்தோம். வீட்டுப் பெரியவர்களும் ஒவ்வொருவராக இறந்துவிட தனிக்குடும்பங்களாக அனைவரும்
பிரிந்துவிட்ட சூழலில் தற்போதைய தீபாவளிகள் கொண்டாடப் படுகின்றன.
எங்கள்
வீட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கங்களை தொடரத் தொடங்கினார், என் மனைவி. முறுக்குக்கும்,
பச்சைப்பயறு உருண்டைக்கும் மில்லில் மாவு அரைத்து வந்து விடுவோம். பலகாரத் தயாரிப்பில்
ஆரம்பத்தில் நானும், பின்னர் மகன்களும் இணைந்துகொண்டனர். எங்களுக்குத் தக்கவாறு பலகாரங்களை
செய்வோம். தீபாவளியன்று புத்தாடை அணிந்ததும்
நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அண்டை வீட்டாருக்கும் கும்பகோணத்தைப் போல
இல்லாவிட்டாலும்கூட தீபாவளி பலகாரங்களை கொடுத்தல், வாங்கல் தொடர்கிறது.
இருந்தாலும்
அக்காலகட்டத்தில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மையை பெரும்பாலானோரிடம் காணமுடியவில்லை.
ஒருசிலர் மட்டுமே மிகவும் அணுக்கமாகப் பழகுகின்றனர். புத்தாடையைப் பார்க்கும்போதே இது
என்ன விலையிருக்கும் என்று மனக்கணக்குப் போடுவது, அது உயர்ந்தது, இது உயர்ந்தது, எந்தக்கடையில
வாங்கியது என்ற எண்ணத்தில் இருப்பதையே காணமுடிகிறது. வீட்டிற்கு வரும் பிள்ளைகளில்
பெரும்பாலும் மனம் திறந்து பேசுவதில்லை. கொடுக்கும் பலகாரங்களைக்கூட ஏதோ மேலைநாட்டவர்
நாகரிகமாக உண்ணுவது போல சிறிதளவு கையில் வைத்துக்கொண்டு, உண்பதா வேண்டாமா என்ற நிலையில்
இருப்பதைக் காணமுடிகிறது. குழந்தைகள் பெற்றோரின் முகத்தைப் பார்க்க அவர்கள் கண்கள்
மூலமாக இடும் கட்டளைகளில் குழந்தைகள் எடுத்ததையும் கீழே வைத்துவிடுகின்றன. அல்லது பெற்றோரே
குழந்தைக்கு அது ஒத்துக்கொள்ளாது இது ஒத்துக்கொள்ளாது என்று கூறுவதைக் காணமுடிகிறது.
பல உறவினர்களின் வீட்டில் குழந்தைகள் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதும் இல்லை. அவர்களில்
பெரும்பாலோர் தொலைக்காட்சியைப் பார்த்துக்கொண்டும், கைபேசியை வைத்துக்கொண்டும் வேண்டாவெறுப்பாக
இருப்பதைக் காண முடிகிறது.
கூட்டுக்குடும்பச்
சிதைவு, பணமே வாழ்க்கை என்ற மன நிலை, மற்றவரோடு ஒப்புநோக்கி தாழ்வு மனப்பான்மையுடனோ,
உயர்வு மனப்பான்மையுடனோ பழகுதல் என்பதானது இப்போது பெருகிவிட்டது. இவ்வாறான காலகட்டத்தில்கூட
சில குடும்பங்களில் பழைய பழக்க வழக்கங்களைக் கடைபிடிப்பதைப் பார்க்கும்போது அந்த நாள்கள்
நினைவிற்கு வரும். இளமைக்கால தீபாவளியை நினைக்கும்போது “நாம இன்னம் சின்ன பிள்ளையாவே
இருந்திருக்கலாமோ?” என்று எண்ணத்தோன்றும்.
புடலங்காய் உருண்டையா? பொருவிளங்காஉருண்டையா?
ReplyDeleteஇனிய நினைவுகள். அன்னாளைப்போல இந்நாள் இல்லை என்னும் எண்ணம் நிரந்தரம்.
இனிய தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்.
பொருள்விளங்கா உருண்டைதான். வேககதியில் புடலங்கா உருண்டையாக ஆகி இருக்கு! எங்க வீட்டில் வயசானவங்க எல்லாம் பொருளங்கா உண்டை என்பார்கள்.
Deleteஇனிய நினைவுகள்.....
ReplyDeleteஇப்போதெல்லாம் தீபாவளி - Celebrating, just for the sake of celebration என்ற நிலையில் தான் இருக்கிறது....
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்....
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
ReplyDeleteகட்டுரையில் வெளிவந்தமைக்கு முனைவர் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்.
ReplyDelete//கொடுக்கும் பலகாரங்களைக்கூட ஏதோ மேலைநாட்டவர் நாகரிகமாக உண்ணுவது போல சிறிதளவு கையில் வைத்துக் கொண்டு, உண்பதா வேண்டாமா என்ற நிலையில் இருப்பதைக் காணமுடிகிறது//
நிதர்சனமான நடைமுறை உண்மையை பல இடங்களில் பொட்டில் அறைந்தது போல சொல்லி இருக்கின்றீர்கள்.
அதிரச மாவை திருடித்தின்னும் சிறுவயது நினைவுகளை மீட்டி விட்டது இந்தப் பதிவு.
அன்பின் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteஇனிய மலரும் நினைவுகள்.
ReplyDeleteஎங்கள் வீடுகளிலும் புத்தாட்டையை எடுத்து கொடுத்த பின் அணிந்து வருவோம் அப்புறம் பெரியவர்களிடம் ஆசி வாங்கிய பின் எல்லோருக்கும் காசு தருவார்கள்.
பலகாரம் அம்மா கொடுத்தாலும் எடுத்து தின்பது ஆனந்தம். இப்போது பொரி விளங்கா சாப்பிட பற்களும் இல்லை செய்வதும் இல்லை.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
ReplyDeleteஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பரே நண்பரே நண்பரே
ReplyDeleteஇந்த நாள் அன்று போல் இல்லையே
அது ஏன் ஏன் நண்பரே
மலரும் நினைவுகளைச் சுமந்த
மகத்தான கட்டுரை
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
அன்பு முனைவர் ஐயாவுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.
ReplyDeleteபொருள் இருந்ததோ இல்லையோ அருள் நிறைய இருந்த காலம் அதுதான்.
பெரியவர்கள் காலில் விழுந்து ஆசி வாங்குவது முழுதும் அற்றுவிட்ட
நாட்கள்.
ஆடம்பரத்துக்காகச் செய்யப்படும் நிகழ்வுகள்.
நாம் முடிந்தவரை சொல்லிக் கொடுக்கலாம். பின்பற்றினால் சரி இல்லாவிடில் என்ன செய்ய முடியும்,
இறைவனிடம் பக்தி செலுத்துவதில் என் மக்கள் குறை வைக்கவில்லை.
ஆனால் பழக்க வழக்கங்களைக் கடைபிடிக்க
அவரவர் இருக்கும் இடங்களைப் பொறுத்து அமைகிறது.
நம் ஊரையும் பெருமைகளையும் பேரனுக்குச் சொல்லி வைக்கிறேன்.
அதுதான் என்னால் முடிந்தது. நன்றி ஐயா. தங்கள் குடும்பத்தினருக்கு என் ஆசிகளும் வாழ்த்துகளும்.
துளசிதரன்: அருமையான இனிமையான நினைவுகள் ஐயா. இனியா தீபாவளி வாழ்த்துகள். கட்டுரை வெளியானமைக்கும் வாழ்த்துகள்!
ReplyDeleteகீதா: உங்கள் நினைவலைகள் என் நினைவுகளையும் மீட்டது ஐயா. அந்த இன்பம் இப்போது இல்லை எனலாம். எத்தனையோ இழந்துவிட்டோம். நல்ல நினைவலைகள். அது ஒரு பொற்காலமே.
கட்டுரை வெளியானமைக்கு வாழ்த்துகள் ஐயா.
அருமை...
ReplyDeleteஇனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்...
நேற்று சன் டிவியில் பட்டிமன்றம் சாலமன் பாப்பையாதலைமையில் நடந்தது பார்த்தீர்களா எந்த தீபாவளி மகிழ்ச்சி நிறைந்தது
ReplyDeleteஅக்காலகட்டத்தில் காணப்பட்ட வெளிப்படைத்தன்மையை பெரும்பாலானோரிடம் காணமுடியவில்லை. ஒருசிலர் மட்டுமே மிகவும் அணுக்கமாகப் பழகுகின்றனர்.
ReplyDeleteI readily endorse your view. The article is commendable one.
அந்த நாள் நெஞ்சிலே வந்ததே.............
ReplyDeleteஎங்க வீடுகளிலும் பெரியவங்க தான் புத்தாடைகளை மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து எடுத்துத் தருவார்கள். கூட்டுக் குடும்ப மகிழ்ச்சியே தனி தான்! சில, பல சமயங்களில் ஆடைகள் மாறிப் போய்ப் பின்னர் மாத்திப்போம். சிரிப்பு கலகலக்கும்!
ReplyDeleteதெளிவாக அழகாக எதார்த்தமாக வந்துள்ளது இந்தப் பதிவு.
ReplyDeleteஉண்மை. அருமை .வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை ஐயா.
ReplyDelete