16.4.2019 நாளிட்ட தினமணியில் வெளியான
என் கட்டுரையின் மேம்படுத்தப்பட்ட வடிவில் பகிர்வதில் மகிழ்கிறேன்,
கட்டுரையை வெளியிட்ட தினமணிக்கு நன்றி.
மகளிர் சக்தி
பல துறைகளில் பரவிவருகின்ற நிலையில் அரசியல் களத்திலும் அவர்களுடைய சாதனைகளையும் அவர்கள்
சமூகத்தின்மீது ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் உணர முடிகிறது. உலகின் பல நாடுகளில்
பெண் அரசியல்வாதிகள் தலைமைப்பொறுப்பில் ஜனாதிபதிகளாகவும், பிரதமர்களாகவும் தற்போது
உள்ளனர். 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் அண்மையில் ஸ்லோவாகியாவைச்
சேர்ந்தவர் ஜனாதிபதி ஆகியுள்ளார். அவ்வகையில் 28 நாடுகளில் ஒரு பெண்மணியைத் தலைமைப்
பொறுப்பில் கொள்கின்ற எட்டாவது நாடாக அந்நாடு திகழ்கிறது.
ஐரோப்பிய
ஒன்றியத்தில் ஜெர்மனி (ஏஞ்சலா மெர்கல்), ஸ்லோவாகியா (ஜுஜுனா கபுடோவா), குரோஷியா (கொலிண்டா
கிராபர் கிட்டாரோவிக்), எஸ்தோனியா (கெர்ஸ்டி கல்ஜுலெய்ட்), லிதுவேனியா (டேலியா க்ரைபாஸ்கைட்),
ருமேனியா (வியோரிக்கா தான்சிலா), மால்டா (மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா), பிரிட்டன் (தெரசா
மே) ஆகியோர் தலைமைப்பொறுப்பில் உள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத
பிற ஐரோப்பிய நாடுகளில் நார்வே (எர்னா சோல்பர்க்), ஐஸ்லாந்து (கட்ரின் ஜாகோப்டாடிர்),
ஜார்ஜியா (சலோம் ஜௌராபிச்விலி), செர்பியா (அனா ப்னாபிக்) ஆகிய நான்கு நாடுகளில் பெண்கள்
தலைமைப் பொறுப்பில் உள்ளனர். அவர்களைப் பற்றி சுருக்கமாகக் காண்போம்.
ஏஞ்சலா மெர்கல் 2005இல் ஜெர்மனியின் முதல் பெண் அதிபராகப்
பொறுப்பேற்று, ஐரோப்பாவின் பெரிய பொருளாதாரத்தை நடத்திச்செல்வதோடு, மார்ச் 2018இல்
நான்காவது முறை வெற்றி பெற்றுள்ளார். போர்ப்ஸ் இதழ் வெளியிடுகின்ற சக்திவாய்ந்த பெண்களின்
பட்டியலில் 12 ஆண்டுகளாக தொடர்ந்து இடம் பெற்றுவரும் இவர் ஏழு ஆண்டுகளாக முதலிடத்தில்
உள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுபவம் வாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார்.
ஜுஜுனா கபுடோவா, ஸ்லோவாகியாவில் ஊழலுக்கு எதிராகப் போராடி
அதிபர் தேர்தலில் 58 சதவீத வாக்குகளைப் பெற்று பெற்றி பெற்றார். அத்தேர்தலானது நன்மைக்கும்
தீமைக்குமான போராட்டம் என்று கூறியிருந்தார். 2016ஆம் ஆண்டிற்கான கோல்ட்மேன் சுற்றுச்சூழல்
விருதினைப் பெற்றவர். ஸ்லோவாகியாவின் முதல் பெண் அதிபரான இவர் ஸ்லோவாகியா வரலாற்றில்
குறைந்த வயதில் (45) அதிபரானவர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
கொலிண்டா கிராபர் கிட்டாரோவிக் குரோஷியாவின் முதல் பெண் அதிபராக ஜனவரி
2015இல் பொறுப்பேற்றார். 2005 முதல் 2008 வரை
வெளியுறவு அமைச்சராகவும், 2008 முதல் 2011 வரை குரோஷியாவின் அமெரிக்கத் தூதராகவும்
பணியாற்றினார். 2017இல் போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் சக்திவாய்ந்த 39ஆவது பெண் என்று
அறிவித்தது. நேட்டோ எனப்படுகின்ற வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பில் உதவிப்பொதுச் செயலாளராக
2011 முதல் 2014 வரை பணியாற்றியவர். குறைந்த வயதில் (46) அதிபர் என்ற பெருமையை இவர்
பெறுகிறார்.
கெர்ஸ்டி கல்ஜுலெய்ட் எஸ்தோனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக அக்டோபர்
2016இல் பொறுப்பேற்றார். எஸ்தோனியா, ஆங்கிலம், பின்னிஷ், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் சரளமாகவும்,
குறிப்பிட்ட அளவிற்கு ரஷ்ய மொழியிலும் பேசக்கூடியவர். குறைந்த வயதில் (46) ஜனாதிபதியானவர் என்ற பெருமையை
இவர் பெறுகிறார்.
டேலியா க்ரைபாஸ்கைட் லிதுவேனியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக 2009இல்
பொறுப்பேற்றார். இரண்டாவது முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை இரும்புப்பெண்மணி
என்று அழைக்கின்றனர். ஐரோப்பிய கமிஷனராக இவர் பணியாற்றியுள்ளார். மிகவும் சாதாரண குடும்பத்தில்
பிறந்தவர். தந்தையார் எலெக்ட்ரீசியன் மற்றும் ஓட்டுநர் வேலை பார்த்துள்ளார். தாயார்
ஒரு கடையில் விற்பனைப் பெண்ணாகப் பணியாற்றியவர்.
வியோரிக்கா தான்சிலா ருமேனியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்
பெற்றவர். 2009 முதல் 2018 வரை ருமேனியாவின் சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பொறுப்பில் இருந்துள்ளார். சமூக மக்களாட்சிக் கட்சியின் தலைவராவார்.
மேரி லூயிஸ் கொலிரோ பெர்கா மால்டாவின் ஒன்பதாவது ஜனாதிபதியாக பிரதமரின்
ஆலோசனைப்படி ஏப்ரல் 2014இல் பொறுப்பேற்றார். அந்நாட்டின் இரண்டாவது பெண் ஜனாதிபதி ஆனார்.
மார்ச் 2013 முதல் மார்ச் 2014 வரை குடும்ப
மற்றும் சமூக ஒற்றுமைக்கான அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். சமூக மற்றும் வாழ்க்கைத்தரத்தினை
மேம்படுத்த முயற்சிகளை மேற்கொள்வதற்காக சமூக நன்மைக்கான ஜனாதிபதியின் அமைப்பு என்ற
லாப நோக்கமற்ற அமைப்பினை உருவாக்கினார். குறைந்த வயதில் (55) அப்பொறுப்பினை ஏற்றவர்
என்ற பெருமையையுடையவர்.
தெரசா மே, மார்கரெட் தாச்சருக்குப் பின், ஜுலை 2016இல்
பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து
விலகல் தொடர்பான ஓட்டெடுப்பில் டேவிட் காமரூன் பதவி விலகியபோது இப்பொறுப்பினை ஏற்றார்.
நீண்ட காலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். ஒருங்கிணைந்த பிரிட்டன் என்பது அவருடைய இலக்காக உள்ளது. போர்ப்ஸ்
இதழின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பெற்றவர்.
எர்னா சோல்பர்க், நார்வேயில் 2004 முதல் கன்சர்வேட்டிவ் கட்சியின்
தலைவராக இருந்து வருகிறார். 2013இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று
நார்வேயின் 28ஆவது பிரதமராகப் பதவியேற்றார். இவர் நார்வேயின் இரண்டாவது பெண் பிரதமராவார்.
கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த அதிக காலம் பிரதமாக உள்ளவர் என்ற பெருமையினைப் பெற்றவர்.
கட்ரின் ஜாகோப்டாடிர் ஐஸ்லாந்தின் 28ஆவது மற்றும் தற்போதைய பிரதமராக
2017இல் பதவியேற்றார். 2009 முதல் 2013 வரை இவர் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும்
நார்டிக் கூட்டுறவுத்துறையின் அமைச்சராக இருந்துள்ளார். இவர் ஜோஹன்னா சிகுரோர்டாடிருக்குப்
பின்னர் பிரதமர் பதவியில் இருக்கும் இரண்டாவது பெண் பிரதமராவார். இடதுசாரி பசுமை இயக்கம்
என்ற பொருளாதார சமூக அரசியல் கட்சியின் துணைத்தலைவராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சலோம் ஜௌராபிச்விலி ஜார்ஜியாவின் ஐந்தாவது மற்றும் தற்போதைய ஜனாதிபதியாக
2018இல் பதவியேற்றார். ஆறு ஆண்டுகள் இவர் இப்பதவியில் இருப்பார். இவர் பிரான்சின் முன்னாள்
தூதுவருமாவார். இனிவரும் காலங்களில் நாட்டின்
தலைவர் மறைமுகமாக தெரிவு செய்யப்படுகின்ற தேர்தல் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளதால்,
இவர் ஜார்ஜியாவின் பிரபலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடைசி ஜனாதிபதியாக இவர் கருதப்படுகிறார்.
அனா ப்னாபிக் செர்பியாவின் முதல் பெண் பிரதமருமாவார். இவர்
2017இல் பதவியேற்றார். முன்னர் இவர் பொது நிர்வாகம் மற்றும் உள் சுயாட்சித்துறையின்
அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2018இல் போர்ப்ஸ் இதழ் இவரை உலகின் 91ஆவது சக்தி வாய்ந்த
பெண் என்னும், 21ஆவது சக்தி வாய்ந்த அரசியல்
மற்றும் கொள்கைத்தலைவர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
ஐரோப்பாவில்
மட்டுமன்றி உலகின் பிற நாடுகளின் அரசியலிலும் தற்போது மகளரின் செல்வாக்கு பரவலாகக்
காணப்படுகிறது. சீனக்குடியரசின் முதல் பெண் பிரதமர் சாய் இங் வென், நேபாளத்தின் முதல்
பெண் குடியரசுத் தலைவரான, இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வித்யா தேவி பண்டாரி, மார்ஷல் தீவுகளின் பிரதமரான அந்நாட்டின் முதல் டாக்டர்
பெற்ற ஹில்டா ஹைன், வங்காளதேசத்தின் இரண்டாவது
பெண் பிரதமரான ஷேக் ஹசீனா, ட்ரினிடாட் டொபாகோ குடியரசின் முதல் பெண் ஜனாதிபதியான பாலாமே
வீக்கெஸ் போன்றோர் அரசியலில் தம் பங்கினை அளித்துவருகின்றனர்.
இந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பெறும் மற்றொரு பெண்மணி ஜெஸிந்தா ஆர்டர்ன்
ஆவார். இவர் தன் மனிதநேயத்தாலும், அன்பாலும் அண்மையில் உலகையே தன்னைப் பார்க்கவைத்த
நியூசிலாந்தின் 40ஆவது பிரதமர் ஆவார். உலகிலேயே இளம் வயதில் (37) நாட்டின் உயர்ந்த
பதவியை வகிக்கும் பெருமையை உடைய இவர் பதவியில் இருக்கும்போதே குழந்தையைப் பெற்றெடுத்த
இரண்டாவது பெண்மணி ஆவார். குடிமக்கள்மீதான பற்று, மன உறுதி, ஆளுமைத்திறன், சமூக நலனில்
அக்கரை போன்றவற்றின் காரணமாக அரசியல் களத்தில் மகளிரின் ஈடுபாடும் பங்களிப்பும் உயர்ந்துகொண்டே
வருவதைக் காணமுடிகிறது. தாம் எவர்க்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும், தம்மால் சாதித்துக்காட்ட
முடியும் என்பதையும் அவர்களுடைய ஆட்சி உணர்த்துகிறது.
கட்டுரை வெளியாவதற்கு முதல் நாள் வந்த செய்தி |
(https://www.forbes.com/lists/power-women/#299c46ca5a95)
Women in power in the European Union, France24, March 2019
(https://www.france24.com/en/20190331-women-power-european-union)
அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்! போல்டுஸ்கை, 19 ஜுலை 2018 (https://tamil.boldsky.com/insync/life/2018/inspiring-women-political-leaders-present-day/articlecontent-pf149534-021700.html)
Women in power in the European Union, France24, March 2019
(https://www.france24.com/en/20190331-women-power-european-union)
அரசியலில் உலகளவு தடம் பதித்த இன்றைய பெண் தலைவர்கள்! போல்டுஸ்கை, 19 ஜுலை 2018 (https://tamil.boldsky.com/insync/life/2018/inspiring-women-political-leaders-present-day/articlecontent-pf149534-021700.html)
முதன்முதலில்
அதிகாரத்துக்கு வந்த பெண்கள் இவர்கள்தான், தமிழ்வின்,
2
ஜனவரி 2018 (https://www.tamilwin.com/women/01/169772)
Planetrulers,
Current Heads of State and Dictators (https://planetrulers.com/category/female-leaders/)
Top
female leaders around the world, TIME, (http://content.time.com/time/specials/packages/completelist/0,29569,2005455,00.html)
'She power' in Europe, The Hindu, 1 April 2019
'She power' in Europe, The Hindu, 1 April 2019
சிறப்பு. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
ReplyDeleteநீங்கள் அனுப்புவதை அவர்கள் சுருக்கி விடுகிறார்களா?
அவர்கள் இடத்திற்கேற்றவாறு தகவமைத்துக்கொள்வர். இக்கட்டுரையை நானே சுருக்கமாக எழுதியிருந்தேன்.
Deleteமுனைவர் அவர்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமை ஐயா... வாழ்த்துகள்...
ReplyDeleteபயன்மிக்க அருமையான தகவல் திரட்டு.
ReplyDeleteபாராட்டுகள்!
நல்ல கட்டுரை. தினமணியில் வெளிவந்தமைக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDeleteஅய்யா வணக்கம்
ReplyDeleteஅசத்தல் கட்டுரை
தொடரட்டும் மகளிர் மகத்துவ பதிவுகள்
இதில் நியூசிலாந்து பிரதமர் குறித்து தனியாக எழுத வேண்டும். மிக சிறப்பான ஆச்சரியமான பெண்மணி அவர்.
ReplyDeleteநீங்கள் கூறியுள்ள நியூசிலாந்து பிரதமரைப் பற்றி தனியாக ஒரு கட்டுரை எழுதி ஒரு நாளிதழுக்கு அனுப்பியுள்ளேன். இதழில் வெளிவராவிடில் விரைவில் அதனை என் தளத்தில் பதிவேன்.
Deleteஅருமையான கட்டுரை! தினமணியில் வெளியானதற்கு இனிய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!!
ReplyDeleteஎனக்கு ஒரு அடிப்படை சந்தேகம். மேற்கத்திய நாடுகளில்
ReplyDeleteஆணோ - பெண்ணோ, எந்தந்த துறைகளில் யார் யார் சிறந்து விளங்குகிறார்களோ அவர்கள் இயல்பாக அவர்களின் உழைப்பு, ஆர்வத்தின் அடிப்படையில் தலைமைப் பொறுப்புகளுக்கு தகுதி உடையவர்களாய் ஆகிறார்கள்.. இது முற்றிலும் அவரவர் தகுதி சம்பந்தப்பட்ட விஷயம்.
அங்கு கூட ஆண்--பெண் என்று நாம் பிரித்துப் பார்க்கிற மாதிரி பார்க்கிறார்களா?.. பெண் என்று வரும் பட்சத்தில் அவர்களின் பங்களிப்பின் அவசியம் கருதி ஏதாவது ஒதுக்கீடுகள் செய்கிறார்களா?..
இல்லை எனில், மகளிர் சக்தி என்று தனித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாது போகிறது.
அங்கு இல்லாத ஆண்-பெண் பாகுபாட்டை வலிந்து அவர்கள் மேல் நம் பார்வையில் ஏற்றிச் சொல்கிறோம் என்று நினைக்கிறேன். அப்படியா?..
நான் படித்தவகையில் அவர்கள் நாம் பிரித்துப்பார்ப்பதுபோல பார்ப்பதில்லை. அவர்களில் சிலருடைய பேச்சினையும் எழுத்தினையும் கண்டு வியந்துள்ளேன். நம்மவர்களிடம் பாகுபாடு என்பது அதிகமாக உள்ளது.
Deleteபெண்ணிற்குத் தான் அதிகம் மதிப்பு, அவள் தான் உயர்த்தி என்றெல்லாம் சொல்லும் நம் சமூகத்தை விட மேல் நாடுகளில் தான் அவர்களை அதிகம்மதிப்பதாகவும், பெருமைப்படுவதாகவும் தெரிகிறது. நம் நாட்டில் இப்படி எல்லாம் ஓர் பெண்மணி இருந்தால் பாராட்டுக்கள் கிடைக்குமா, சந்தேகமே!
ReplyDeleteஅருமையான கட்டுரை ஐயா. தங்கள் கட்டுரை தினமணியில் வெளிவந்தமைக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
என் நினைவு சரியானால் இந்தியாவில்தான் மகளிர் அதிகமாக அரசியலில் ஈடுபடுகின்றனர் எல்லா வயது வந்தோருக்கானஓட்டுரிமை இந்தியாவில்தான் இருந்தது இருக்கிறது
ReplyDeleteNice article, good information and write about more articles about it.
ReplyDeleteKeep it up! Keep writing
https://www.biofact.in/