25 May 2019

சிற்பக்கலைஞர் ராஜசேகரன்

சிற்பக்கலைஞர் திரு என். ராஜசேகரன் (பி.1958), கும்பகோணம் கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் படித்த காலம் தொடங்கி, சுமார் அரை நூற்றாண்டுக்கு மேலாக என் நண்பர். அவருடைய பெற்றோரும், என்னுடைய பெற்றோரும் குடும்ப நண்பர்களாக இருந்துள்ளனர். கும்பகோணத்தில் தற்போது சிற்பக்கலை வல்லுநர்களில் முக்கியமானவர். எங்கள் வீடு கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் (பின்னர் கே.ஜி.கே.தெரு) இருந்தது. அவருடைய வீடு திருமஞ்சன வீதி பதினாறு கட்டிலும் (10க்கும் மேற்பட்ட வீடுகளைக் கொண்ட தொடர் வீடுகள்), அவருடைய அத்தை வீடு அருகே பேட்டையிலும் (நடுவில் மைதானம் போன்ற அமைப்புடன் வட்ட வடிவினைக்கொண்ட அமைப்பில் வீடுகள், இப்போது அது இடிக்கப்பட்டுவிட்டது) இருந்தன. இரு இடங்களிலும் அவர் தம் பணிகளை மேற்கொள்வது வழக்கம். எங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அவருடைய பணியிடத்திற்குச் சென்றுவிடுவேன். அவர் இத்துறைக்கு வந்ததைப் பற்றிப் பேசும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.  

இளமைக்காலம்
இளமைக்காலத்தில் அவருடைய வீட்டிற்குச் செல்லும்போது குமுதம், சாவி, ஆனந்தவிகடன் உள்ளிட்ட இதழ்களில் வெளியான ஓவியங்களை அவ்வப்போது வரைந்துகொண்டிருப்பதைப் பார்த்துள்ளேன். ஓவியர் ஜெயராஜ், ராமு, மணியம் செல்வன், மாருதி போன்றோரின் ஓவியங்களைப் பார்த்து அப்படியே வரைந்து காட்டுவார்.

புகுமுக வகுப்பு
கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படித்துக்கொண்டிருந்தபோது நாங்கள் மொழி வகுப்புகளில் மட்டும் ஒன்றாக அமர்ந்திருப்போம். ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருக்கும்போதே அவர் மேசையில் படங்களை வரைந்து கொண்டிருப்பதைப் பார்த்து ரசிப்போம். ஒரு முறை அதனை கவனித்த தமிழ் விரிவுரையாளர் திரு ஞானசேகரன் அவரைப் பாராட்டி, “நீ படிக்க வேண்டிய இடம் இதுவல்ல. இதே கும்பகோணத்தில் உள்ள கலைக்கல்லூரி உனக்கேற்ற இடம்”  என்று கூறினார். அப்போதுதான் அவருக்கு கலைக்கல்லூரியைப் பற்றிய அறிமுகம் கிடைத்துள்ளது. புதுமுக வகுப்பில் தோல்வியுற்றபோது அவருடைய மனதில் தங்கியிருந்த ஓவியத்தின்மீதான ஆர்வம் வெளிப்படவும், அவருடைய இலக்கிற்கு வடிவம் கொடுக்கவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.  

கவின் கலைக்கல்லூரி
கும்பகோணம் கவின்கலைக்கல்லூரியில் நுண்கலையில் டிப்ளமா ஐந்து வருடங்கள் சேர்ந்த அவர் முதல் இரண்டு வருடங்களுக்கு ஒருங்கிணைந்த தொகுப்புப் படிப்பினையும், அடுத்து மூன்று வருட டிப்ளமாவினையும் படித்துள்ளார். முதல் இரண்டு வருடங்களில் வரைகலை, வண்ண ஓவியக்கலை, விளம்பரம் சார் கலை, சிற்பக்கலை என்ற அனைத்து பிரிவுகளையும் கொண்ட பாடங்களைப் பயின்ற அவர், கடைசி மூன்று வருடங்களுக்கு சிறப்புப்பாடமாக சிற்பக்கலையினையும் தேர்ந்தெடுத்துள்ளார். படித்துக்கொண்டிருக்கும்போது நடைபெற்ற சிற்பக்கலைஞர்களுக்கான போட்டியில் வெற்றி பெற்றதையும், இறுதியாண்டு படிக்கும்போது Extra Dimension என்ற சிற்பத்திற்காக தமிழக அரசின்  ஓவிய நுண்கலைக்குழு விருதினைப் பெற்றுள்ளார்.  

தற்காலக் கலை
கலைக்கல்லூரியில் படித்த அனுபவம் தற்காலக் கலையில் (contemporary art) அரை உருவச்சிலை, மற்றும் முழு உருவச்சிலைகளை ப்ளாஸ்டர் ஆப் பாரிஸ், செமிண்ட், உலோகங்கள் (வெண்கலம், பித்தளை, வெள்ளி, தங்கம்), ஃபைபர் க்ளாஸ் ஆகியவற்றில் செய்தலும், நவீன சிற்பக்கலையில் (modern art) பொருண்மை எதுவாக இருந்தாலும் அலங்கார அமைப்புகள், வரவேற்பு அறையில் காட்சிப்படுத்தல் போன்றவற்றில் அமைக்கப்படும் வகையில் சிற்பங்கள் செய்தலும் என்ற வகையில் அவருக்கு உதவியது. அவ்வகையில் சுடுமண் சிற்பங்களையும் அவர் வடிக்க ஆரம்பித்துள்ளார்.

குறிப்பிடத்தக்க பணிகள், அனுபவங்கள்
படித்து முடித்த பின் வேலை தேடல் என்ற நிலையில் தான் கற்ற கல்வி மிகவும் உதவியாக இருந்துள்ளது. பெரும்பாலான வடிவங்களில், உலோகங்களில் சிற்பங்களை வடித்துள்ளார். அவர் செய்த சிற்பங்களில் மிகவும் சிறியது பாம்பன் முழு உருவச் சிற்பம். மிகவும் பெரியது சுவரில் மேரி மாதா புடைப்புச் சிற்பம். இரு வேறு நிலைகளில் வடித்தாலும் அவற்றை செய்வதற்கு ஒரே மாதிரியாக முக்கியத்துவம் தந்துள்ளார்.
கும்பகோணம் ஏ.ஆர்.ஆர்.சீவல் நிறுவனரும் தொழிலதிபருமான ஏ.ஆர்.ஆர். சிலையினை 9 அடி உயரத்தில் குழுவோடு இணைந்து உலோகச் சிற்பமாக வடிவமைத்துள்ளார். திருப்பரங்குன்றம் நகராட்சி பூங்கா வளாகத்தில் இவர் சிமெண்டில் செய்த பாரதியாரின் அரையுருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
1970களின் இறுதியில் கலைக்கல்லூரியில் படிக்கும்போதும், படிப்பினை நிறைவு செய்யும் காலகட்டத்திலும் சிற்பக்கலைக்கான வேலை வாய்ப்பு மிகவும் அரிதாகவே இருந்ததாகவும், ஏதோ கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல இருந்ததாகவும் “எனக்கு சிலை செய்யத் தெரியும். நீங்கள் தருகின்றீர்களா? என்று யாரிடம் போய்க் கேட்பது”  என்றும் அந்நாளைய அனுபவங்களை வேதனையோடு கூறினார்.  ஆங்காங்கே சுவாமிமலை பகுதிகளிலும், கும்பகோணத்திலும் சிற்பக்கலை வல்லுநர்கள் இருந்தபோதிலும் அவர்கள் பெரும்பாலும் கோயில் சார்ந்த சிற்பங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்ததையும், வழிவழியாக அவர்கள் செய்து வந்ததையும், தனியொருவனாக அத்துறையில் புதிதாக நுழைய சிரமமாக இருந்ததையும் கூறினார்.  ஆரம்ப காலத்தில் ஆங்காங்கே கிடைக்கின்ற வேலைகளை சுயமாகத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது என்று ஆதங்கப்பட்ட அவர் அதில் கிடைக்கின்ற வருமானமும் மிகவும் குறைவாகவே இருந்தது என்றார்.


குதிரை (6" miniature resin casting for 5' bronze casting)
காமராஜர் (12" bronze)

கருணாநிதி (8" clay model for bronze casting)

கோயில் வளாகம் (6' fibreglass)

அலெக்ஸாண்டர் (15" fibreglass portrait)


(Clay model, based on photograph)

(Clay model 15")

கட்டிக்குளம் சுட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் (bronze)

சுவரோவியம் (terracota)

(Resin portrait with bronze effect 15" x 12")

 தற்போதைய நிலையும் வேலை வாய்ப்புச் சூழலும்
10 ஆண்டுகள் கழித்து சிற்பக்கலையில் ஒரு மாற்றம் வந்ததை அவர் உணர்கிறார். அதற்கான தேவை அதிகரித்துவிட்டதை மக்களின் எண்ணம் தெளிவுபடுத்த ஆரம்பித்த காலகட்டம். ஒவ்வொருவரும் தம் வீட்டில், வரவேற்பறையில், நுழைவாயிலில், தோட்டத்தில் சிற்பங்களை பல உலோகங்களில் அமைக்க ஆரம்பித்தது இத்துறைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாக அவர் கருதுகிறார். டெர்ரகோட்டா, ஃபைபர் கிளாஸ் போன்றவற்றில் உள் அலங்காரம், வெளி அலங்காரம் செய்யும் வகையில் மக்களின் ரசனை மேம்பட ஆரம்பித்துவிட்டதாகவும், அவர்களின் தேவைக்கேற்ற அளவில், தேவைக்கேற்ற உலோகத்தில் சிற்பங்களை வடிக்கும் பணியில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதாகக் கூறுகிறார். 
அண்மைக்காலத்தில் சுய வேலைவாய்ப்பு மூலமாக இத்துறையைச் சார்ந்தோர் அதிகமாக பணியினைப் பெற வாய்ப்புள்ளது என்றும், சிற்பக்கலையில் படிப்போருக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது என்றும், அதற்கேற்றவாறு அதிகமான ஊதியத்தைப் பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறுகிறார். சுய வேலைவாய்ப்பு என்ற நிலையில் அனிமேசன் துறையும், மினியேச்சர் மாதிரி உருவங்களுக்கான தேவை அதிகமாக இருப்பதாகவும் அதன் விளைவு நல்ல வேலை வாய்ப்பு என்றும் பெருமையோடு கூறுகிறார்.
ஓவியக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர்களை தாழ்வு மனப்பான்மையோடே பார்க்கின்றனர் என்றும் கூறும் அவர் பெயிண்டிங், கமர்சியல் ஆர்ட், டிஜிட்டல், விளம்பரப்பதாகை என்பனவே தற்காலத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன என்றும் கூறுகிறார்.
அவருடைய கல்லூரிக்காலத்தில் களிமண், சிமெண்ட் போன்றவற்றைக் கொண்டு பயிற்சிகள் தரப்பட்டதாகவும், தற்காலத்தில் தகடு, செம்பு, பித்தளை மற்றும் வார்ப்பு என்ற நிலையில் வெண்கலம் போன்றவை தொடர்பாக பாடத்திட்டத்தில் பாடங்கள் உள்ளன என்றும் அதற்கான பாடங்கள் செய்முறையுடன் நடத்தப்படுவதால் மாணவர்கள் அதிகம் கற்றுக்கொண்டு பயன் பெற முடியும் என்றும் கூறுகிறார். இவ்வளவு இருந்தும் மகளிர் இத்துறையில் அதிகமான ஈடுபாட்டோடு காணப்படுவதில்லை என்ற ஆதங்கத்தை அவர் முன்வைக்கிறார். 

எங்களின் மூத்த மகன் (பாரத்-அமுதா, 2013) மற்றும் இளைய மகன் (சிவகுரு-சிந்துமதி, 2019) திருமணங்களின்போதும் மணமக்களுக்கு, புத்தரின் ஓவியத்தை வரைந்து அன்பளிப்பாகத் தந்தார். அவை எங்களின் இல்ல நூலகத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.  

கலையின் வாரிசு என்ற நிலையில் அவருடைய மூன்று மகன்களில் ஒருவரான அவருடன் பல பணிகளில் இணைகிறார். அவருடைய ஓவியத்தின்மீதும், சிற்பத்தின்மீதும் காட்டும் அவருடைய ஈடுபாட்டினை நேரில் பார்ப்போர் உணர்வர். எங்களின் அரை நூற்றாண்டு கால நண்பரும், கும்பகோணத்தின் போற்றத்தக்க சிற்பக்கலைஞருமான அவருடைய பணி மென்மேலும் வளர வாழ்த்துவோம்.

சிற்பக்கலைஞரும், வாரிசும் இணைந்து உருவாக்கும் சுவரோவியம்
(Fiber glass wall panel 8' × 6.5' with copper sheet metal effect)
மேற்கண்ட ஓவியம் நிறைவுறும் பணி
சிற்பக்கலைஞரின் பேத்தி


சிற்பக்கலைஞரின் பேத்தி
(pen and ink drawing)


குரு கௌரி வித்யாசங்கர் ஸ்தபதி அவர்களுடன் சிற்பக்கலைஞர்


 கும்பகோணம் கலை மற்றும் கவின்கலைக்கல்லூரில் இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது (1983-84) லலித் கலா அகாடமி நடத்திய 6ஆவது ஆண்டு கலைக்கண்காட்சியில் பெற்ற மாநில விருது சிற்பம்

ஓவியம் வரைதல், சிற்பம் வடித்தல், கவின்கலை தொடர்பான விவரங்கள் மற்றும் ஐயங்களைக் கேட்க சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரன் (9994850847) அல்லது அவரது மூத்த மகனைத் (சிற்பக்கலைஞர் நரேந்திரன் என்கிற முரளி, 9629472849) தொடர்புகொள்ள நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன். 

21 பிப்ரவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது.

37 comments:

  1. சிறந்த பகிர்வு, சிறந்த அறிமுகம்.

    அவருக்கு ஓவியக்கலை இயல்பாகவே கைவந்திருந்த காரணத்தினால் இத்துறையில் ஜொலிக்கிறார். அவருடைய சிற்பங்கள், ஓவியங்கள் கண்களையும் கருத்தையும் கவர்கின்றன. அவருக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும். உங்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம். ....

      Delete
  2. அருமை. கலைஞருக்கு வாழ்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி........

      Delete
  3. போற்றுதலுக்கு உரிய கலைஞர்
    போற்றுவோம், வாழ்த்துவோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி கரந்தை ஜெயக்குமார் ........

      Delete
  4. இவையெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அவருடைய வாரிசும் இப்பணியில் புகழ் பெற வாழ்த்துவோம்.

    ReplyDelete
  5. அருமையான கலைஞர் ஒருவரைப்பற்றிய அருமையான பதிவு. கலைஞர்கள் போற்றப்படவேண்டும். வரலாற்றின் எச்சங்கள் இன்னும் இருப்பது சிற்பிகளின் பங்களிப்பினல்தான். உங்கள் இருவருக்கும் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நன்றி கொங்கு கல் வெட்டு ஆய்வு .......

      Delete
  6. சிற்பக்கலைஞர் திரு ராஜசேகரன் அவர்களுக்கு வாழ்த்துகள்...

    பேத்தியின் ஓவியம் அற்புதம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திண்டுக்கல் தனபால் .........

      Delete
  7. பேத்தியை வரைந்து இருப்பது அப்படியே அச்சு அசலாக மனதை கவர்ந்த ஓவியம்.
    உங்கள் நண்பர் ஓவியங்கல், சிற்பங்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி அரசு......

      Delete
  8. அற்புதமான கலைஞர் பற்றிய செய்திகளுடன் இனிய பதிவு....

    திரு. ராஜசேகரன் அவர்களுக்கு எல்லா நலன்களையும் இறைவன் அருள்வானாக..

    ReplyDelete
    Replies
    1. நன்றி துரை செல்வராஜு........

      Delete
  9. திரு.இராஜசேகரன் பற்றிய அறிமுகம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இவர் ஒரு பிறவிக் கலைஞர் என்பதை நிரூபித்துள்ளார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி இரா. முத்துசாமி ......

      Delete
  10. கதம்பம் போல ஒரு அழகிய போஸ்ட் . குழந்தையின் பின்சில் ரோயிங் மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பாவி அதிரா......

      Delete
  11. Che Guevaraவிற்கு Alberto Granado எப்படியோ அதேபோல்தான் ஜம்புலிங்கத்திற்கு ராஜசேகர் என்கிற எங்கள் சேகர் மாமா.

    சிறு வயதில் சேகர் மாமா எனக்கு கையை எடுக்காமலேயே நட்சத்திரம், கோடுகள், வட்டம், போன்ற வடிவங்களை வரையவும், ஒரு ஓவியத்தை வரைய அவுட் லைன் எப்படி போட வேண்டும் என்பதையும் எனக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார். இவர் பிரமாண்ட சிலைகள் செய்யும்போதும் நேரில் பார்த்திருக்கிறேன்.

    எனக்கு ஒருமுறை (During 1997) 25 பைசா போஸ்ட்கார்டில் முகப்பு முழுவதும் Pencil Drawing மூலம் அருவியை வரைந்து எனக்கு வாழ்த்து அனுப்பியிருந்தார்.

    உலகிலேயே அழகை வெளிப்படுத்தும் சிலையில் நடராஜரும் புத்தரும்தான் முன்னிலை என அப்பாவிடம் மாமா கூற கேட்டிருக்கின்றேன்.

    என் அப்பாவை "டா" போட்டும், "டேய் ஜம்பு" என்றும் அதே பள்ளி மற்றும் கல்லூரி கால தொணியில் இன்னமும் அவர் அழைப்பதை கேட்க அவ்வளவு இயற்கையாகவும் அழகாகவும் இருக்கும்.

    மிகவும் Down to earth person. அலட்டலோ ஜம்பமோ இல்லாத அமைதியான திறமைக்காரர்.

    ReplyDelete
  12. நன்றி பாரத்......

    ReplyDelete
  13. மிக அருமையான கலைஞர் ஒருவரை அறிமுகப்படுத்தியதற்கும் அவரின் படைப்புகளை வெளியிட்டு ரசிக்க வைத்ததற்கும் என் மனமார்ந்த நன்றி!

    அந்த டெரக்கோட்டா ஓவியம் மிக அழகு. ஓவியரும் அவர் தம் மகனும் இணைந்து படைத்திருக்கும் கலைப்படைப்பும் மிக அழகு. தஞ்சை வரும்போது அவர்களின் கலைப்படைப்புகளை அவசியம் பார்த்து ரசிக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மனோ சாமிநாதன்....

      Delete
  14. Replies
    1. நன்றி ஸ்ரீமலையப்பன்......

      Delete
  15. nice introduction and detail analysis..mesmerising works..

    ReplyDelete
  16. சிற்ப கலைஞர் ராஜசேகரன் அய்யா அவர்களை அறிவதில் மகிழ்ச்சி. பாராட்டுக்கள்
    அன்பன் E

    ReplyDelete
    Replies
    1. நன்றி அன்பு மலர் .......

      Delete
  17. ஓர் அற்புதமான கலைஞரைப் பற்றிய அருமையான பதிவு / இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தஞ்சை ச. அப்பாண்டைராஜ்......

      Delete
  18. அருமையான பதிவு. இத்தகு திறமைசாலிகளை கண்டறிந்து உலகுக்கு அறிமுகம் செய்தவிதம் அருமை.அனைத்து ஓவியங்களும் சிற்பங்களும் சிறப்பு, அதிலும் அவரது பேத்தியின் ஓவியம் அருமையிலும் அருமை.

    அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    கோ

    ReplyDelete
  19. Excellent article sir. Very proud of you. Ramki 9884694708

    ReplyDelete
  20. அருமை நண்பரை பற்றிய பதிவு..மிகவும் சிறப்பு..போற்றப்பட வேண்டிய கலைஞர்..வாழ்க வளமுடன்,வாழ்க நலமுடன்..என் இனிய நண்பர் என்ற முறையில் மிகவும் பெருமைகொள்கிறேன்

    ReplyDelete