20 June 2020

கடவுள்களுடன் தேநீர் : ஜ. பாரத்

எங்கள் மூத்த மகன் முனைவர் ஜ.பாரத் எழுதியுள்ள இரண்டாவது நூல், 40 அவதானிப்புகளைக்கொண்ட கடவுள்களுடன் தேநீர்.

இளமைக்கால யதார்த்தங்களில் தொடங்கி, சமூகத்தில் காணப்படுகின்ற அவலங்களையும், இதுதான் வாழ்க்கை என தமக்குத்தாமே அமைத்துக்கொள்கின்ற ஜோடனை வாழ்க்கையின் நிகழ்வுகளையும் முன்வைக்கிறது. உறவு மற்றும் நட்புகளின் பிரிவு மற்றும் இடைவெளி மனதில் உண்டாக்குகின்ற தாக்கங்களை அனுபவித்து எழுதியுள்ள விதம், படிக்கும் ஒவ்வொருவரும் இது தன்னோடு தொடர்புடையதோ என்று சிந்திக்க வைக்கும்படி உள்ளது.



இளமைக்காலத்தை நினைவூட்டுவதோடு, நசிந்து போகின்ற தொழிலைப் பற்றிய ஆதங்கத்தை வெளிப்படுத்தும் ‘பனையோலை நினைவுகள்’.

அத்தை இருப்பவர்கள் கொடுத்துவைத்தவர்கள், அத்தை மகளைக் கட்டியவர்கள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள் என்பதை முன்வைக்கும் ‘பாராமுகம்’.

இப்போது பெரும்பாலானோர் தொலைத்துவிட்ட ‘சிரிப்பு’.

வெயிலையும் ரசித்து ஏற்கும் பக்குவத்தை வெளிப்படுத்தும் ‘வெயில்’.

நாமாகப் பறித்துச் சாப்பிடுவதைவிட அன்போடு தரப்படும் கொய்யாவின் ருசியை நினைவூட்டுகின்ற ‘கொடுப்பினை’.

கேத வீட்டிலிருந்து சொல்லாமல் கிளம்பும்போது நமக்குள் வரும், நமக்கும் சாவுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்ற உணர்வினைப் பகிரும் ‘புள்ளி’.

ஒரு மாபெரும் ஆளுமையை சென்றபிறகே உணர வைத்துச் சென்ற ‘விதை’.

நெடுநாள் நண்பனைக் கண்டுபிடிக்க வழியினைத் தேடுகின்ற ‘நட்பு’.

வெறுமையின் வெளிப்பாடாக ஊமை வலியைத் தருகின்ற, கண் முன் தொலைந்துகொண்டிருக்கின்ற அருமையான கலையான ‘சர்க்கஸ்’.

அம்மாவை சின்ன வயது அம்மாவாக பார்க்க வைக்கின்ற ‘வானொலிப்பெட்டி’

ஒரு அரைவேக்காட்டை ஆளாக்கிய ஆசிரியையான ‘பொற்செல்வி’.

குழந்தைப் பருவத்தின் ஒட்டுமொத்த நினைவுகளையும் பிணைப்பையும் வெளிப்படுத்துகின்ற ‘உரிமை’.

என்றும் வாசனை வீசுகின்ற உறவினை உறுதி செய்யும் ‘தாய்மாமன்’.

மனித தெய்வங்களுடன் அமர்ந்து டீயும் மெது வடையும் சாப்பிடும் வாய்ப்பினைத் தந்த ‘கடவுள்களுடன் தேநீர்’.

நாம் நம் விரல்களால் அமுக்கும் ஒவ்வொரு ப்ளஷும் நம் எதிர் கால இந்தியாவை தண்ணீர் இல்லாத காட்டிற்கு தள்ளிக்கொண்டேயிருக்கும் மைல்கல் என்பதை நினைவுபடுத்தும் ‘தண்ணீர்ப்பஞ்சம்’.

ஒவ்வொரு வருடமும் இன்னொரு தீபாவளியாக தவறாமல் கொண்டாடிய, தேரோட்ட நினைவுகளைத் தருகின்ற  ‘ஆடிப்பெருக்கு’.

நுகர்வுப்பசியோடு அலைகின்ற, செயற்கைத்தனத்தோடு சூப்பர்மார்க்கெட்டில் பொருள் வாங்கும் நிலையை வெளிப்படுத்துகின்ற ‘கல்கண்டு’.

அன்பளிப்பின் வெளிப்பாட்டைத் தருகின்ற, சந்தோஷம் துக்கம்ன்னு இப்படி எல்லா நேரத்துலயும் கூடவே இருந்த ‘கைக்கெடிகாரம்’.

நேர்மையான முறையில் வியாபாரம் செய்பவர்களின் நிலையை முன்வைக்கின்ற ‘போளி தாத்தா’.

ஆத்தா மற்றும்  பாட்டியிடம் வளர கொடுத்துவைத்திருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்ற ‘கடவுள் முன்’.

பேரா.கோ.விஜயராமலிங்கம் ஐயா அவர்கள் நூலின் அணிந்துரையில் “நம்மைச் சுற்றி நடப்பவற்றை எல்லோரும் பார்க்கிறோம். இவர் அவற்றின் உள்ளே சென்று உன்னிப்பாக அவதானித்திருக்கிறார்” என்று மதிப்பீடு செய்துள்ள விதம் அருமை.

நூலாசிரியரின், சமூகத்தில் காணப்படுகின்ற இடைவெளியைச் சுட்டிக் காட்டும் முயற்சிக்கு வாழ்த்துகள்.

ஆசிரியர் ஜ.பாரத் (99620 65436), பதிப்பகம் : ஜீவா படைப்பகம், 351MIG, NH1, நக்கீரர் தெரு, மறைமலைநகர், காஞ்சீபுரம் 603 209 (9994220250), ஜுன் 2020, ரூ.120, மின்னூல்: அமேசான்


6 ஜுன் 2020 அன்று நூலின் முதல் படியை திரு சீனிவாசன் அவர்களும், திரு சரவணன் அவர்களும் பெற்ற இனிய தருணங்கள் (இ-வ: சீனிவாசன், பாரத், சரவணன்), அவர்கள் இருவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.  

நன்றி  : எழுத்துக் குடும்பம், இந்து தமிழ் திசை, 2 ஜனவரி 2021


21ஜனவரி 2021இல் மேம்படுத்தப்பட்டது

29 comments:

  1. பாராட்டுகளும் வாழ்த்துகளும். புத்தகம் படிக்கும் ஆவல் வருகிறது. தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் பொருள் யாவுமே நெகிழ்ச்சியூட்டும் விஷயங்கள் என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  2. அன்பின் நல்வாழ்த்துகளுடன்....

    ReplyDelete
  3. மனம் மகிழ்வான விசயம் நூல் எழுதுவது என்பது எல்லா மனிதர்களாலும் இயலும் செயல் அல்ல!

    இதை சில மனிதர்களுக்கு மட்டுமே வரமளிக்கிறான் இறைவன். தங்களது மகன் முனைவர் ஜ.பாரத் அவர்களுக்கும் இந்த வரம் கிடைத்து இருக்கிறது.

    குடும்பத்தில் அனைவரும் எழுதுவது மிகப்பெரிய வரம். தங்களது குடும்பம் தொடர்ந்து பல நூல்களை வழங்கட்டும். வாழ்த்துகளுடன் - கில்லர்ஜி

    ReplyDelete
  4. அப்பாவுக்கு தப்பாமல்....
    இளமைக்கால நினைவு கூறும் பதிவு...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சிறப்பான நூல் அறிமுகம்.

    ஒவ்வொரு கதையைப் பற்றிய சிறு அறிமுகம் நன்று.

    தொடரட்டும் அவரது புத்தகங்கள்.

    ReplyDelete
  6. தங்கள் மகனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்

    ReplyDelete
  7. முனைவர் ஜ.பாரத் அவர்களுக்கு அன்பான வாழ்த்துகள்...

    ReplyDelete
  8. புலிக்கு பிறந்ததல்லவா வாழ்த்துகள்

    ReplyDelete
  9. ஒவ்வொரு அத்தியாயமும் இலக்கிய தரம் வாய்ந்தது என்பதை அதன் தலைப்புகளே சொல்கின்றன. புத்தகத்தை முழுமையாக படிக்கும் ஆவலை தூண்டிவிட்டிருக்கிறது.
    முனைவர் ஜ.பாரத்துக்கு வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  10. 'கடவுளுடன் தேநீர்' -- புதுமையான தலைப்பு தான், ஜம்புலிங்கம் ஐயா. குறிப்புகளைப் பார்த்தவுடன் நூலை வாசிக்கும் ஆர்வம் கூடுகிறது. முயற்சிக்கிறேன். தங்கள் திருமகனாருக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

    ReplyDelete
  11. இனிய வாழ்த்துகள். புத்தகம் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.

    ReplyDelete
  12. தங்கள் மகனுக்கு வாழ்த்துகள் ஐயா. எனது புத்தகம் வெளியீட்டில் பங்கெடுத்துச் சிறப்பித்தவர். மனமார்ந்த வாழ்த்துகள்!

    துளசிதரன்

    ReplyDelete
  13. மனமார்ந்த வாழ்த்துகள் தங்கள் மகன் பாரத்திற்கு.

    மிகச் சிறந்த சிந்தனையாளர். நேரில் சந்தித்திருக்கிறேன். புத்தகத் தலைப்பும் சரி சொல்லப்பட்ட ஒவ்வொரு விஷயமும் தலைப்பும் மனதை ஈர்க்கிறது.

    கீதா

    ReplyDelete
  14. திரைப்பட உலகம், அரசியல் உலகம் போன்றவற்றி வாரிசு அரசியல் குறித்து பேசுகின்றோம். எழுத்து உலகத்தில் மிக மிக குறைவு. ஆச்சரியமான அப்பா. அதிசியமான மகன். அப்பாவும் முனைவர். மகனும் முனைவர். பல விதங்களில் பொருத்தம் ஜோர். வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. ஆத்தாடி....ஆத்தாடி ...அருமையான செய்தி அய்யா...எங்கள் அன்பின் வாழ்த்துகள்...

    உங்கள் அன்பு மகனுக்கு எங்கள் நல்லாசியும் கூறுங்கள்.

    பதிப்பகத்திற்குப் பேசி புத்தகம் பெற்று வாசிப்பேன்..மிக்க நன்றி

    எஸ் வி வேணுகோபாலன்
    9445259691

    ReplyDelete
  16. தங்கள் அன்பு மகன் எழுதிய நூலாக இருப்பினும், அதை அழகாக விமர்சனம் செய்தீர்கள்!
    படிக்கவேண்டிய நூல்!

    ReplyDelete
  17. தந்தை நாள் இன்று. பெற்ற மகனைப் பெருமையோடு அறிமுகப்படுத்தும் ஒரு வெற்றி பெற்ற, நல்ல தந்தைக்கும் தனயனுக்கும் என் வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வணக்கம் சகோதரரே

    தங்கள் புத்தக விமர்சனம் நன்று. விமர்சனம் நூலை படிக்கும் ஆவலை தூண்டுகிறது. நூலை சிறப்புற எழுதிய தங்கள் மகன் முனைவர் ஜ.பாரத் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  19. கவிஞர் பாரத்துக்கு வாழ்த்துகள்

    படைப்புகள் தொடரட்டும்

    ReplyDelete
  20. ஜ. பாரத் சாருக்கு என் வாழ்த்துக்கள் ஐயா. அறிமுகத்தைப் படிக்கும்போதே இந்தப் புத்தகத்தை எப்படி பெறுவது என்று யோசித்தேன். அமேசான் என்று வழிகாட்டியதற்கு நன்றி. நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
  21. அய்யா யதார்த்தமான நடை ...வாழ்வியலின் நுட்பமான விடயங்களை பகிர்ந்துள்ளதை உணரமுடிகிறது... சிறப்பு

    ReplyDelete
  22. பாராட்டி வாழ்த்துகின்றேன்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா---இலங்கை

    ReplyDelete
  23. மகனின் நூலைப் பற்றித் தந்தை எழுதுவது என்பது, மகன் தந்தைக்குக் கொடுக்கும் பெரும்பாக்கியம்.
    அந்தப் பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருக்கிறது.
    தங்களின் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  24. புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? தங்களின் செல்வன் முனைவர் ஜ.பாரத் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!'தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்' என்ற அய்யன் வள்ளுவனின் வாக்கை செயல்படுத்திவிட்டீர்கள்.பாராட்டுகள்! அருமையான நூல் அறிமுகம் நூலை படிக்கத்தூண்டுகிறது.படிக்க இருக்கிறேன்.

    ReplyDelete
  25. தங்கள் மகனும் ஓர் எழுத்தாளர் என்பது வியப்பும் மகிழ்ச்சியும் ஐயா. அறிமுகம் அருமை.

    ReplyDelete
  26. நூல் அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  27. ஐயாவிற்கு அநேக நமஸ்காரங்கள்.

    குட்டி 16 அடி தாண்டியும் பாயப்போவது உறுதி. முனைவர் இருவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  28. நிகழ்காலம், வாரிசுகளின் காலம்! அரசியல் - சினிமா- பத்திரிகை- வாணிபம்- ஐஏஎஸ் - என்று எல்லாத் தளங்களிலும் வாரிசுகளுக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. ஆனாலும் திறமையுள்ள வாரிசுகள் தான் தங்களை நிலைனிறுத்திக்கொள்ள இயலும். அந்த வகையில், தங்கள் வாரிசு தனது திறமையை நிலைநாட்டுதற்கான அடித்தளத்தை இந்த இரண்டாவது நூலில் கட்டமைத்திருப்பதாகவே தோன்றுகிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  29. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அருமையான கருத்துக்களோடு கூடிய புத்தக அறிமுகத்திற்கு நன்றி. அதிலும் உங்கள் மகன் என்றால் கேட்கவும் வேண்டுமா? புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகளும், புத்தக அறிமுகத்திற்கு நன்றியும்.

    ReplyDelete