12 June 2020

வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள்

பத்திரிகைகள் ப்ராட்ஷீட்  (23.5" x 29.5"), பெர்லினர்  (12.4" x 18.5"), டேப்ளாய்ட்   (11.0" x 16.9"), டேப்ளாய்ட் அளவில் உள்ள காம்பாக்ட் என்ற நான்கு வகைகளில் உள்ளன. ப்ராட்ஷீட் பெரும்பாலும் ஆறு பத்திகளைக் கொண்டிருக்கும். அதற்கென ஒரு பாரம்பரிய முறையைக் கொண்டு ஆழமாகவும், நுணுக்கமாகவும் செய்தியை அணுகும். படித்தவர்கள் மத்தியில் ப்ராட்ஷீட் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். காம்பேக்ட் என்பது டேப்ளாய்ட் அளவினைப் போன்றதேயாகும். தரம் மற்றும் உயர்நிலை என்ற வகையில் தனித்து வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து சற்றே வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்காகவும், டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள விரும்புவதாலும் காம்பேக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் டேப்ளாய்டை ப்ராட்ஷீட்டின் பாதி என்பர். இருந்தாலும் இந்த வரன்முறையை முற்றிலும் உண்மை எனக் கூறிவிடமுடியாது. ஏ3 அளவிற்கும் டேப்ளாய்ட் அளவிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஏ2 தாளில் டேப்ளாய்டை அச்சடிக்கும்போது நாளடைவில் பொருத்தமாகிவிடுகிறது.  நாளிதழ் அளவுகளைக் குறிக்கப்படும் டேப்ளாய்ட், டேப்ளாய்ட் இதழியலையும் குறிக்கிறது.

1880களில் காணப்பட்ட, எளிதாக உட்கொள்ளக்கூடியதாகவுள்ள, தாராளமாகக் கிடைத்த டேப்ளாய்ட் மாத்திரைகளைக் குறிக்கவே முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, சீனா, ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் டேப்ளாய்ட் அளவிலான இதழ்கள் வெளிவருகின்றன.

21ஆம் நூற்றாண்டு டேப்ளாய்டின் நூற்றாண்டு என்று வர்ணிக்கப்படுகிறது. இதழியல் வரலாற்றாளர்கள் டேப்ளாயிடியசம் என்பதானது ஐந்து முக்கியமான சகாப்தங்களைக் கடந்து வந்ததாகக் கருதுகிறார்கள். முதல் சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் 30 வருடங்கள்   பென்னி பிரஸ் என்ற நிலையில் மலிவான அச்சு, அச்சுத்துறை மற்றும் அஞ்சல் துறை வளர்ச்சி, பரபரப்பான செய்திகளின் வாசிப்பாளர்கள் என்ற வகையில் அமைந்ததாகும். இரண்டாவது சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்கள், பத்திரிகை அதிபர்கள் கோலோச்சிய காலமாக அமைந்தது. அக்காலத்தில் புலன் விசாரணையிலான செய்திக்கான முறைகள் கடைபிடிக்கப்பட்டு, பரபரப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மூன்றாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 20 வருடங்கள், சுதந்திர, கவலையற்ற, ஜாஸ் பண்பாடு பரவிய காலமாகும். வானொலி விரிவடைந்துகொண்டிருந்த இக்காலகட்டத்தில் டேப்ளாய்ட் அச்சிதழின் ஊடாக ஜாஸ் இதழியல் போட்டியிட்டு செய்திகளைக் கொணர ஆரம்பித்தது. நான்காவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 70களில், தொலைக்காட்சியின் வரவு இதற்கு ஒரு போட்டியாக அமைந்தது. ஐந்தாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 90கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அச்சு ஊடகத்தில் மட்டுமின்றி மின்னூடகத்திலும், கணினிமூலமாக தகவல் பெறும் நிலையிலும் டேப்ளாய்ட் பரவலாகப் பேசப்பட ஆரம்பித்தது.

டேப்ளாய்ட் அதன் ஆரம்ப கால நிலையிலிருந்து பல பரிமாணங்களைக் கடந்து, வாழ்வின் ஓர் அங்கமாக மாறி வந்துகொண்டிருக்கிறது. டேப்ளாய்ட் இதழியல், பரபரப்பான அல்லது உணர்வுபூர்வமான செய்திகளைக் கொண்டுவருகின்ற இதழ்களோடு தொடர்புடையது. சுருக்கமான, எளிதாகப் படிக்கக்கூடிய, அதே சமயத்தில் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் செய்தியைத் தருவதாகும். டேப்ளாய்டில் ஐந்து பத்திகளுக்கு மேல் இருக்காது. நகரங்களில் வாழ்வோர் பேருந்தில் செல்லும்போது எடுத்துச்செல்லவோ, படிக்கவோ எளிதாக இருப்பதால் இதனைப் படிக்க ஆரம்பித்தனர்.

அமெரிக்காவில் 1970களில் பெரும்பாலான டேப்ளாய்டுகள், வார இதழ்களாயின. அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ப்ராட்ஷீட்களாக தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் போன்ற ப்ராட்ஷீட் இதழ்களைக் கூறலாம். அச்சு விலையேற்றம் காரணமாக பல ப்ராட்ஷீட் இதழ்கள் தம் அளவினை குறைக்க ஆரம்பித்தன. 2008இல் தி நியூயார்க் டைம்ஸ் இதழும், தொடர்ந்து தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இதழ்களும்  அளவினைக் குறைத்தன.  பின்னர் அதன் நடையும், தரமும் மாறி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக 2000க்குப் பிறகு பெரும்பாலான இதழ்கள் வாசிக்க எளிதாக அமைவதாகக்கூறி, டேப்ளாய்ட் வடிவிற்கு மாற ஆரம்பித்துள்ளன.

நியூயார்க் வேர்ல்ட் இதழின் பதிப்பகத்தாரான ஜோசப் புலிட்சர், இலண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் இதழின் நிறுவனரான ஹாம்ஸ்வொர்த் என்பவரை அழைத்து அவ்விதழை ஒரு நாளைக்கு வடிவமைத்துத் தரும்படி கூற, வழக்கமான பத்திரிகைக்கு மாறாக, அதன் பாதி அளவில் அவர் வடிவமைத்த இதழ் ஜனவரி 1, 1901இல் வெளியானது.

அப்போது அது 20ஆம் நூற்றாண்டின் பத்திரிகைள் என்று வர்ணிக்கப்பட்டது. இதழை வடிவமைத்தபோது அவர், அளவிற்கு முக்கியத்துவம் தராமல், சரியான முறையில் முழுமையாக அச்சிடும் இடத்தைப் பயன்படுத்தல் என்பதை இலக்காகக் கொண்டு, சிறிய அளவிலான கட்டுரைகள், சிறிய பத்திகள், எளிதான சொற்றொடர்களைக் கொண்டு அவ்விதழை அமைத்திருந்தார். 1903இல் அவர் இலண்டனில் டெய்லி மிர்ரர் என்ற டேப்ளாய்டை ஆரம்பித்தார். டேப்ளாய்டில் காணப்படுகின்ற சிகப்பு முகப்புப்பட்டையினை அவ்விதழில் காணலாம். அதில் குற்றச்செய்திகள், மனித சோகங்கள், பிரபலங்களின் கிசுகிசுக்கள், விளையாட்டு, நகைச்சுவை, புதிர் போன்றவற்றுடன் அதிக எண்ணிக்கையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அக்காலகட்டத்தில் டெய்லி ஸ்கெட்ச் மற்றும் டெய்லி கிராபிக் இதழ்கள் அவருடைய இந்த உத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. 

20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலண்டனின் பெரும்பாலான ப்ராட்ஷீட் இதழ்களான தி இன்டிபெண்டன்ட், தி டைம்ஸ், தி ஸ்காட்ஸ்மேன் போன்றவை அளவைச் சுருக்கி காம்பேக்ட்டிற்கு மாறின.  இலண்டனில் டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மிர்ரர், டெய்லி ஸ்டார், டெய்லி மெயில், சன், தி மெயில் ஆன் சன்டே (ஞாயிறு),  சன்டே எக்ஸ்பிரஸ் (ஞாயிறு) ஆகியவை டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்றன. 

தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் பெயர் மாற்றம் பெற்ற கார்டியன் இதழ் ப்ராட்ஷீட் (1821-2005), பெர்லினர் (2005-2018) இதழில் வெளியாகி 2018 முதல் டேப்ளாய்ட்டாக அல்லது வெளியாகிறது.

மாறாக ஐரோப்பாவின் மிகப்புகழ் பெற்ற ஜெர்மன் டேப்ளாய்டான பில்ட் வழக்கமான டேப்ளாய்டைவிட சற்றுப் பெரிதாக அதே சமயத்தில் ப்ராட்ஷீட்டைவிட சற்றுச் சிறிதாக அச்சிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்ற அவ்விதழ் அளவில் ப்ராட்ஷீட், நடையில் டேப்ளாய்ட் என்ற பெயரைப் பெற்றதாகும். ஜெர்மானிய மொழியில் பில்ட் என்றால் படங்களைக் குறிக்கும். புகைப்படங்களை அதிகம் கொண்டிருந்ததால், அதற்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

8 ஜுன் 2020 அன்று வெளியான பில்ட்

பிரிட்டனில் டேப்ளாய்டுகள் முகப்புப்பக்கத்தில் சிகப்பு வண்ணப்பட்டையைக் கொண்டிருக்கும். அமெரிக்க டேப்ளாய்டுகளைவிடவும் அவை அதிக அளவிலான உணர்வுபூர்வ செய்திகளையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, இலண்டனில் இது தொடர்பாக சில விதிமுறைகளை நிர்ணயிக்கப்பட்டன.

இந்தியாவில் வெளிவருகின்ற பத்திரிகைகள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் அளவில் வெளிவருகின்றன. 1941 முதல் வெளிவந்த பிளிட்ஸ் இந்தியாவிலிருந்து வெளிவந்த முதல் டேப்ளாய்ட் என்ற பெருமையினைப் பெற்றது. ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த அவ்விதழ்  1990களின் இடையில் நின்றுவிட்டது.

இந்தியாவிலிருந்து டேப்ளாய்டாக வெளிவந்த/வெளிவருகின்ற இதழ்கள் தி ஆஃடர்னூன் டிஸ்பேச் கூரியர், (ஆங்கில நாளிதழ், மும்பை, 1985 முதல்), எபேலா (பெங்காளி நாளிதழ், கொல்கத்தா, 2018 வரை), கேரள கௌமாண்டி (மலையாள மாலை நாளிதழ், 2006 முதல்), ராஷ்ட்ர தீபிகா (மலையாள மாலை நாளிதழ், 1992 முதல்), பிரபஞ்சன் சாங்கட் (உருது நாளிதழ், ஆக்ரா, 2008 முதல்), நியூடெல்லி டைம்ஸ் (ஆங்கில வார இதழ், புதுதில்லி, 1991 முதல்), மெட்ரோ நவ் (ஆங்கில காலை நாளிதழ், 2006-2009) என்பனவாகும். இந்தியாவில் முதன்முதலாக பெர்லினர் அளவில் வெளியான இதழ் மிண்ட் (ஆங்கில நாளிதழ், புதுதில்லி, 2007), 2016இல் ப்ராட்ஷீட்டாக மாறியது.

தமிழகத்தில் தற்பொழுது வாசிக்கப்படுகின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வகையைச் சார்ந்ததாகும்.  தினமணி இதழின் அளவு தோராயமாக 21.0" x 26.5" ஆகும். தமிழகத்தில் சிறப்பு நிகழ்வுகளின்போது சில இதழ்கள் டேப்ளாய்ட் அளவிலான இணைப்பினை வெளியிடுகின்றன. ஆனந்த விகடன் வார இதழ், சில ஆண்டுகளுக்கு முன் சகோதரப்பதிப்பாக ஜுனியர் போஸ்ட் என்ற இதழை டேப்ளாய்ட்டில் வெளியிட்டது.

எங்கள் தாத்தா ஜ. ரத்தினசாமி, நவசக்தி நாளிதழ் மற்றும் போல்ஸ்டார் நாளிதழ்களின் வாசகர் ஆவார். 1960களில் அவ்விதழ்களைப் பார்த்ததும், அவற்றுள் டேப்ளாய்ட் அளவில் வெளியான போல்ஸ்டார் நாத்திகம் இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாகவும் நினைவு.

வாசகர்கள் இலவச இணையதளத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துவிட்டதால் அண்மைக்காலமாக ப்ராட்ஷீட்டாகட்டும், டேப்ளாய்ட்டாகட்டும் இரண்டுமே கடினமான சூழலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இணைய வசதி எளிதில் கிடைக்கின்ற நிலையில் மிக விரைவில் ப்ராட்ஷீட் பத்திரிகைகள், டேப்ளாய்ட் அளவில் இணையத்தில் படிக்க வாய்ப்புகள் பெருக ஆரம்பித்துள்ளன. இணைய தளங்களில் ப்ராட்ஷீட், கிட்டத்தட்ட டேப்ளாய்ட் அளவிற்கே மாற ஆரம்பித்துவிட்டது எனலாம். அச்சிதழைவிட இணைய இதழ் கண்ணைக் கவரும் வகையில் தலைப்புச் செய்திகள், பார்க்க ஆவலைத்தூண்டுகின்ற வண்ணங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக தி நியூயார்க் டைம்ஸ் இதழின் இணைய இதழ் நான்கு பத்திகளைக் கொண்டு, கிட்டத்தட்ட டேப்ளாய்ட்டைப் போலவே காட்சியளிக்கிறது. இரண்டாவது பத்தியானது மற்ற மூன்று பத்திகளைவிடவும் சற்றே அகலமாக இருக்கிறது. அந்த வகையில் நோக்கும்போது ப்ராட்ஷீட் நிலையிலான ஆழ்ந்த, பரந்த வாசிப்பு என்பதானது குறைய ஆரம்பித்து, டேப்ளாய்ட்டின் பக்கம் அனைவரும் திரும்பிப்பார்க்கின்ற நேரம் வந்துவிட்டது எனலாம்.

பரபரப்பான, உணர்வுபூர்வமான செய்திகளைத் தருகின்ற இதழியல் என்ற நிலையிலிருந்து மாறி அனைவரும் படிக்கும் வகையிலான செய்திகளைக் கொண்டு வருகின்ற இதழ், வாசிக்கவும் கையாளவும் எளிதான இதழ் என்ற வகையில் தற்போது டேப்ளாய்ட் இதழியலின் பயணம் தொடர்கிறது. போதிய விளம்பரம் இன்மை, அதிகமாக விற்பனையாகா நிலை போன்றவற்றின் காரணமாக அச்சு இதழிலிருந்து இணைய இதழிற்கான மாற்றம் வந்துவிட்ட நிலையில் மிக விரைவில் தமிழ்ப் பத்திரிகைகளும் காம்பேக்ட்டிலிருந்து டேப்ளாய்டுக்கு மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளன, அச்சு வடிவில் மட்டுமன்றி, இணைய இதழாகவும்.   

நன்றி : தினமணி, வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள், 11 ஜுன் 2020


27 comments:

 1. விரிவான, மிகவும் சுவாரஸ்யமான தகவல்கள்.  பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  ReplyDelete
 2. ஸ்வாரஸ்யமான தகவல்கள். டேப்ளாய்ட் அளவு பத்திரிகைகள் படிப்பது ஒரு வசதி. தில்லியில் கூட சில நாளிதழ்கள் இந்த அளவு வந்து கொண்டிருந்தது - மாலை நேர வெளியீடாக - Shaam da times என்று நினைவு. இப்போது வருவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. சுவாரஸ்யமான ஸ்வாரஸ்யமான ....... இதில் எது சரியான வார்த்தை

   Delete
  2. இதழியல் ஆய்வாளர்களுக்கு. ஒரு நல்ல பதிவு. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்

   Delete
  3. சரியான தமிழ் சொல் 'சுவாரசியமான' என்பதுதான்.

   Delete
 3. டேப்ளாய்ட் பற்றிய தகவல்கள் அருமை ஐயா...

  ReplyDelete
 4. பிரமிப்பான தகவல்கள் அதை படிப்படியாக சொல்லிய விதம் அருமை.

  ReplyDelete
 5. http://deviyar-illam.blogspot.com/2020/06/tamilnadu-head-line-news-episode-05-08.html இதை நீங்கள் வாசித்திருக்க கேட்டுருக்க வாய்ப்பில்லை. ஆனால் தமிழக பத்திரிக்கையாளர்களுக்கு நீங்க சென்று தான் பாடம் எடுக்க வேண்டும். முக்கால்வாசி எடிட்டர்களுக்கு உங்களுக்குத் தெரிந்து விசயமெல்லாம் தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை.

  ReplyDelete
 6. விரிவான பல தகவல்கள்.

  ReplyDelete
 7. ஏராளமான விவரங்கள். அனைத்தும் அருமை. இதழியல் படிப்பவர்களுக்கு உபயோகமான பதிவு.

  தமிழுக்கும் டேப்ளாய்ட் சைஸுக்கு எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். டேப்ளாய்ட் சைஸில் வெளிவந்த சில நாளிதழ்கள் வந்த வேகத்திலேயே மூடுவிழா கண்டன. தற்போது மாலை நாளிதழாக வெளிவரும் 'தமிழ் முரசு' தொடக்கத்தில் டேப்ளாய்ட் சைஸில் தான் வந்தது. ஓரிரு மாதங்களிலேயே அது வழக்கமான காம்பேக்ட் சைஸுக்கு மாறிவிட்டது.

  டேப்ளாய்ட் சைஸில் வெளிவரும் ஆங்கில இதழ்கள் கூட தமிழகத்தில் பெரிதாக விற்பனை அளவை தொட்டதில்லை என்பதுதான் வேதனை. இதற்கு என்ன காரணம் என்பதை தனி ஆய்வாகவே நடத்தலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கின்றன.

  ReplyDelete
  Replies
  1. அருமை... இதற்காகவாவது வலைப்பூவிற்கு வந்தமைக்கு நன்றி...

   Delete
  2. பிரபல தொழில் அதிபர் செந்திலுக்கு ஜே.

   Delete
 8. மிகச் சிறப்பான கட்டுரை. இம்மாதிரிக் கட்டுரைகளை இளைஞர்கள் பெரிதும் விரும்புவர். நான் கூட ஒருமுறை 'அமெரிக்கப் புத்தகச் சந்தை' என்பது பற்றி எழுதியபோது மிகுந்த வாசிப்பைப் பெற்றது. பிறனாட்டு செய்தித்தாள்கள், இதழ்கள் இவற்றின் வரலாறும் சந்தாதாரர் எனண்ணிக்கை, எழுத்தாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் போன்றவற்றையும் தாங்கள் எழுதவேண்டும். தமிழ் மட்டுமே தெரிந்த வாசகர்களுக்கு விருந்தாகும்.

  ReplyDelete
 9. blitz பத்திரிக்கை வாசித்திருக்கிறேன் அதன் ஆஸ்ரீயர் கர்ஞ்சியா புகழ் பெற்றவர் பத்திரிகைகளின் ஒரு விக்கி நியுஸ்

  ReplyDelete
 10. சிறிய செய்தி, அதை சுவாரசியமாக........ நன்றி

  ReplyDelete
 11. சிறப்பான பதிவு

  ReplyDelete
 12. மிகவும் சிறப்பான பதிவு. பயனுள்ளதும் ஆகும்.

  துளசிதரன்

  //வாசகர்கள் இலவச இணையதளத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துவிட்டதால் அண்மைக்காலமாக ப்ராட்ஷீட்டாகட்டும், டேப்ளாய்ட்டாகட்டும் இரண்டுமே கடினமான சூழலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இணைய வசதி எளிதில் கிடைக்கின்ற நிலையில் மிக விரைவில் ப்ராட்ஷீட் பத்திரிகைகள், டேப்ளாய்ட் அளவில் இணையத்தில் படிக்க வாய்ப்புகள் பெருக ஆரம்பித்துள்ளன.//

  ஆம் இணையத்தில் நிறைய வந்துவிட்டது.

  நல்ல விளக்கமான பதிவு ஐயா

  கீதா

  ReplyDelete
 13. ஐயா அவர்களுக்கு அநேக நமஸ்காரங்கள்.

  நுணுக்கமான செய்திகளை துல்லிய அளவுகோலுடன் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

  இங்கே வெளிவரும் ஈவினிங் போஸ்ட் மற்றும் மெட்ரோ செய்தித்தாள்களும் டேப்ளாய்டுகள் வகைதான்.

  கோ.

  ReplyDelete
 14. டேப்ளாய்ட் பற்றிய தகவல் மிகவும் அருமை. தாங்கள் ஒரு சிறந்த ஆராய்ச்சியாளர் என்பதை இந்த கட்டுரையும் விளக்குகிறது ஐயா. விரிவான தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 15. Thro email (sridharmythily@gmail.com)
  Very interesting information...nalvalthukkal..k.sridaran.

  ReplyDelete
 16. விரிவான தகவல். நன்றி

  ReplyDelete
 17. டேப்ளாய்ட் பற்றியத் தகவல்கள் வியக்க வைக்கின்றன

  ReplyDelete
 18. நல்ல விளக்கமான தகவல்கள் பதிவு

  ReplyDelete
 19. அடேங்கப்பா.....இப்படியும் ஒரு தகவலை அணுகமுடியுமா...என்கிற அளவிற்கு மிக நுட்பமான ஆய்வே நடந்திருக்கிறீர்கள் அய்யா...
  அற்புதம்

  ReplyDelete
 20. அருமையான சிறப்பான அரிய தகவல்கள் மிக்க நன்றி ஐயா

  ReplyDelete