20 February 2021

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (ஆறாம் பகுதி) : ப.தங்கம்

கல்கியின் பொன்னியின் செல்வனை சித்திரக்கதையாக வரைந்து சாதனை படைத்துள்ள ஓவியர் தங்கம் அண்ணன் அவர்களிடமிருந்து அண்மையில் ஓர் அன்பு அழைப்பு. "பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் பத்தாம் பகுதியும் அண்மையில் நிறைவடைந்துவிட்டது. உன்னைப் பார்த்துத் தரவிரும்புகிறேன், வா, சந்திப்போம்"அடுத்த நாள் காலை கீழவாசல் வந்து அலைபேசியில் அழைத்தார். காணச்சென்றேன். பொன்னியின் செல்வன் சித்திரக்கதையின் 10 பகுதிகளையும் தந்தார். மகிழ்ச்சியுடன் பெற்றேன். பொன்னியின் செல்வன் வாசகனான நான் அண்ணன் தங்கம் அவர்களின் சித்திரக்கதையின் வாசகனாக ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன.

"தொடர்ந்து எழுது. படி. உன் ஆய்வைக் கண்டு பிரமித்துப்போனவன் நான். உனக்கு என் வாழ்த்து என்றும் உண்டு." என்று மன நிறைவோடு வாழ்த்தினார். நூல்களுடன் அவருடைய வாழ்த்தினைப் பெற்றேன்.

கல்கியின் பொன்னியின் செல்வனை 10 பகுதிகளாகப் பிரித்து 1000 படங்கள் வரையத் திட்டமிட்டு நான்காண்டு காலத்தில் 1050 படங்களுக்கு மேல் வரைந்து சித்திரக்கதையாக நிறைவு செய்துள்ளார். அயரா உழைப்பிற்கும், ஆர்வத்திற்கும், ஈடுபாட்டிற்கும் அவர் ஒரு முன்னுதாரணம் ஆவார்.

அவருடைய புன்சிரிப்பும், வாழ்த்தும் என்றும் என் ஆய்விற்குத் துணையாக இருக்கும். அவருடைய வாழ்த்துடன் என் பணியைத் தொடர்வேன்.

இந்நூலின் முதல் ஐந்து பகுதிகளை முன்னர் நாம் வாசித்துள்ள நிலையில் இப்போது ஆறாம் பகுதியைக் காண்போம். 

"சித்திரக்கதைகள் படிக்க வேண்டும் என சிறு வயதில் தேடித்தேடிப் படித்ததுண்டு. அதேபோன்ற ஆவலில் இளவயது கரங்களிலம் பொன்னியின் செல்வன் என்ற வார்த்தையில் உள்ள ஈர்ப்பில் மீண்டும் மீண்டும் படிக்கின்றவர் எத்தனையோ பேர். அவர்களின் கரங்களிலும் இது வலம் வரும்" என்று ஆறாம் பகுதியின் வாழ்த்துரையில் திருச்சி எஸ்.ஆர்.எம் ம்ருத்துவக்கல்லூரி மருத்துவ மனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் முதல்வர் டாக்டர் அ.ஜேசுதாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

வழக்கம்போல இப்பகுதிகளிலும் ஓவியத்தில் உணர்ச்சியின் வெளிப்பாடுகளை உணரமுடிகிறது. இளவரசரைக்குறி பார்த்து வந்த அம்பை, குதிரையில் தலைக்கயிற்றை இழுத்துத் திரும்பும்போது அவருடைய சுதாரிப்பு (ப.542), இளவரசருக்கு யானையின் பாஷை தெரிந்தபோதிலும் பொறுப்பு காரணமாக சேனாதிபதியின் முகத்தில் வெளிப்ப்டுகின்ற அச்சம் (547),  தொண்டைமானாறு கரை ஓரத்தில் புதரில் தான் மறைத்து வைத்திருந்த படகை ஆற்றில் பூங்குழலி செலுத்திக்கொண்டுவந்தபோது இளவரசர் அடைந்த வியப்பு (552), தஞ்சாவூர் சிங்காதனத்தில் வீற்றிருக்க வேண்டிய பெருமாட்டி என தன் பெரியம்மாவைப் பற்றிக்கூறி ஏங்குகின்ற ஏக்கம் (557), வாய் திறந்து தன் உணர்ச்சிகளை வெளியிட முடியாத மூதாட்டியின் கண்ணீர் வெளிப்படும் ஆதங்கம் (560), மிதக்கும் பாய் மரத்தூணோடு வந்தியத்தேவனைக் கயிற்றினார் இறுகக்கட்டி, அவனை இளவரசர் பாதுகாப்பாக்கும் அரவணைப்பு (592), கையில் பிடித்த துடுப்புடன் சித்திரப்பாவையினைப் போல பூங்குழலி இளவரசரைநோக்கிய பார்வை (597), பழுவேட்டரையரின் தலையைத் தன் மடியில் எடுத்துவைத்து தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவிக்க மேற்கொள்ளும் முயற்சி (608), மூன்று முறை ஆந்தை அலறிய சமிக்ஞை மூலமாக ரவிதாசன் வந்ததை அறிந்த நந்தியின் படபடப்பு (624), இளவரசரைக் காப்பாற்ற பூங்குழலியின் பிரார்த்தனை (633) என்பன போன்ற ஓவியங்கள் மூலமாக நூலாசிரியர் நம்மை கதாபாத்திரங்கள் இருக்கும் இடத்திற்கே அழைத்துச் சென்றுவிடுகிறார். 

உணர்வு வெளிப்பாடுகளைத் தூரிகை மூலமாக நுணுக்கமாகக் கொணர்ந்து ஓவியங்களைப் படைத்ததோடு, ஆங்காங்கே உரிய உரையாடல்களையும் சிறப்பாக அமைத்துள்ள விதம் போற்றத்தக்கதாகும்.  

குழகர் கோயிலின் வாசலில் பூங்குழலி நிற்பதைப் பார்த்தபோது நாங்கள் குடும்பத்துடன் மார்ச் 2015இல் அங்கு சென்றதும் அப்போது பொன்னியின் செல்வனையும், பூங்குழலியையும் பற்றி பேசியதும் நினைவிற்கு வந்தன. (கீழுள்ள, கோடியக்கரைக் குழகர் கோயிலின் கோபுர புகைப்படம் நாங்கள் அப்போது எடுத்ததாகும்.)


இதுவரை இந்நூலின் ஆறு பகுதிகளைப் படித்துள்ளோம். பிற நான்கு பகுதிகளும் (கீழுள்ள புகைப்படம்) வெளிவந்துள்ளன. பிற பகுதிகளிலும் இவ்வாறான ஓவியங்களைக் காணமுடிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களைத் தீட்ட அவர் மேற்கொண்ட முயற்சியும், எடுத்துக்கொண்ட நேரமும், அவருடைய ஆத்மார்த்தமான ஈடுபாடும் நம்மை வியக்கவைக்கும். ஆர்வமுள்ளோர் அவரைத் தொடர்பு கொண்டு அவற்றை வாங்கிப் பார்த்து, படித்து, ரசித்து கருத்துகளை அவரிடம் தெரிவிக்க வேண்டுகிறேன். நம் மண்ணின் அரிய ஓவியக்கலைஞருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
   

அவரைப் பற்றி ப.தங்கம் என்ற பெயரில் விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த பக்கத்தைப் பார்த்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.தொடர்புக்கு : ஓவியர் ப.தங்கம், தங்கப்பதுமை பதிப்பகம், பிளாட் எண்.14, ஞானம் நகர், ஆறாவது தெரு, மெயின் ரோடு, மாரியம்மன் கோயில், தஞ்சாவூர், அலைபேசி 9159582467) 
முதல் ஒன்பது தொகுதி ஒவ்வொன்றும் ரூ.200, பத்தாவது பகுதி ரூ.300,

(புகைப்படங்கள் : 10 பகுதிகளின் முகப்பட்டைகள், ஓவியர் தங்கம், நண்பர் ரவி ஆகியோருடன், இடம் : மகா மெடிக்கல்ஸ், கீழவாசல், தஞ்சாவூர், மற்றும் ஆறாம் பகுதியில் வெளியான ஓவியங்கள்)

20 பிப்ரவரி 2021 காலை 7.00 மணியளவில் மேம்படுத்தப்பட்டது

12 comments:

 1. பாராட்டப் படவேண்டிய அரிய சாதனை.  அவரை வணங்குகிறேன்.

  ReplyDelete
 2. படங்கள் அருமை. விமர்சனம் நன்று. புத்தக விலை அதிகம்..... கடுமையான உழைப்பில் தயாராயிருந்த போதும்.

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரரே

  அத்தனை படங்களும் அருமை. பொன்னியின் செல்வன சித்திர கதை நிறைவான பத்தாவது பகுதி வெளியீட்டுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த படப்புத்தகத்தை குறித்த தங்களின் விமர்சனம் அருமையாக உள்ளது. எத்தனை முறை வேண்டுமானலும் அலுக்காமல் படிக்க கூடிய இந்த நாவலை சித்திரப் படக்கதையுடன் தந்திருப்பது வெகு சிறப்பு. இதில் சிறந்த சாதனை படைத்த ஓவியர் ப.தங்கம் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள். இந்தப் பதிவில் 6, மற்றும் 7ஆம் பகுதியையும் வாசித்து மகிழ்ச்சி அடைந்தேன். மற்ற விபரங்களுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 4. ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள்... மிகப்பெரிய சாதனை... வாழ்த்துகள்...

  ReplyDelete
 5. பெரும் சாதனை
  வியப்பை ஏற்படுத்தும் மனிதர்

  ReplyDelete
 6. மிகப்பெரிய சாதனையே வாழ்த்துவோம் இணைந்தே...

  ReplyDelete
 7. சாதனை மனிதர் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள், பத்து தொகுப்புகள் - நீங்கள் தரும் தகவல்களை, படிக்கும்போதே வியப்பு மேலிடுகிறது. ஓவியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 8. பொன்னியின் செல்வனை
  இந்த கடும் முயற்சியில் கண்ணில் நிற்கும் காட்சிகள் அற்புத
  சாதனை. அன்பு முனைவர் ஐயா, இந்தப் புத்தகங்களை வாங்க முடிந்தால்

  நன்றாக இருக்கும். திரு தங்கம் அவர்களுக்கு என் வணக்கம்.. அவரைப் பதிவிட்ட உங்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 9. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோட்டோவியங்கள் வரைவது என்பது ஒரு ஆழ்ந்த தவம் போல! அதற்கு மிகப்பெரிய உறுதியும் விடா முயற்சியும் கற்பனைகளும் வேண்டும். ஒரு ஓவியரான எனக்கு இது எத்தனை கஷ்டமான விஷயம் என்பது முழுமையாகப் புரிகிறது. ஓவியரின் சாதனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
  பெண்கள் மாத இதழான ' குமுதம் சினேகிதி ' இதழில் இந்த சித்திரக்கதை தவறாமல் வந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது அவற்றைப் பார்த்து ரசிப்பதுண்டு.

  ReplyDelete
 10. ஆகா! படங்கள் அழகாகக் கதை சொல்கின்றனவே! ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து தொடரும் ஓவியர் திரு.தங்கம் அவர்களின் உழைப்பிற்கு வணக்கங்கள். அவரைப் பற்றி நீங்கள் விக்கியில் பதிந்தது சிறப்பு ஐயா. நன்றி

  ReplyDelete
 11. வியக்கவைக்கின்றன படங்கள் .இது மிகப்பெரிய சாதனை .தங்கம் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .ஒரு சிறு ஏக்கம் .தமிழ் படிக்க முடியாத என் மகள் போன்றோருக்கு இந்த சித்திரக்கதை ஆங்கிலத்தில் வந்தால்   மகிழ்ச்சியடைவேன் 

  ReplyDelete