23 January 2021

100 நூறு வார்த்தை கதைகள் : ஜ. சிவகுரு

எங்கள் இளைய மகன் திரு ஜ.சிவகுரு (9597961646) எழுதியுள்ள முதல் நூல் 100 நூறு வார்த்தை கதைகள்.


பாத்திரங்களின் அறிமுகம், சூழல், கதையின் மையக்கரு என்ற அனைத்தையும் 100 வார்த்தைகளுக்குள் உள்ளடக்கி ஒரு கதையைக் கூறுவது என்பது சற்று சிரமமே. எந்தக் கருத்தைக் கூறுவது, எதனை விட்டுவிடுவது என்ற நிலையில் அவர் எதிர்கொண்ட நிலையை, கதைகளைப் படிக்கும்போது உணரமுடிகிறது. இருந்தாலும் இடைவெளி எதுவும் வாசகரால் உணரப்படா வகையில் கதைகளை முழுமையாக நிறைவு செய்துள்ளார். அந்த முயற்சியினை மேற்கொண்டு முடிந்தவரை தாம் எண்ணியதை வெளிப்படுத்துகின்ற நூலாசிரியரின் பாணி பாராட்டத்தக்கது. சமூக நிலையோடு கூடிய யதார்த்தத்தினை வெளிப்படுத்தும் கதைகள் மட்டுமன்றி அறிவியல், வரலாறு என்ற பல துறைகளைச் சார்ந்த கதைகளையும் இத்தொகுப்பில் காணமுடிகிறது.

“…..சரியாக 100 வார்த்தைகளில் கதை சொல்ல முயல்வதால் வர்ணனைகள், விளக்கங்கள் இல்லாமலும், பாத்திரங்களின் குணாதிசயங்களும், சில கதைகளின் பின்னணியும், சில கதைகளின் முடிவும் படிப்பவரின் கற்பனைக்கே விட்டுவிதமாகவும் அமைந்திருக்கும்…..” என்றும் தமிழில், முதல் முறையாக 100 வார்த்தை கதைகளை பிரபலப்படுத்தும் முயற்சியே இந்நூல் என்றும் கூறுகிறார் நூலாசிரியர்.

விபத்தில் குரல் இழந்த நிஷாவின் ஆவலை வெளிப்படுத்தும் அரங்கேற்றம் (ப.1), வெள்ளாம சரியில்லாத காட்டில் தன் நம்பிக்கையை வைத்திருக்கும்  பொன்னனின் அறுவடை (ப.2), பழைய ரூபாய் நோட்டுகளை வாங்க வேண்டாம் என்ற அரசின் அறிவிப்பு உண்டாக்கும் பாதிப்பில் தேடி வரும் உதவி (ப.3), மகனின் ஆவலைப் பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கும்போது தன் தந்தையின் கவலையைப் போக்கும் அந்த மகன் (ப.5)  கேன்சரை எதிர்கொண்டவளுக்குக் கிடைக்கும் இன்ப அதிர்ச்சி (ப.6), பிரபல நடிகனின் வீழ்ச்சி அவனை கேன்சர் நோயாளி வேடமேற்க இட்டுச்செல்லும் அவலம் (ப.11), பெண் பிள்ளைக்குக் காலேஜ் எதற்கு என்று கேட்ட பாட்டியிடம் சண்டைபோட்டவள் அதே பாட்டிக்கு இருதய மாற்று சிகிச்சை செய்யும் நிலை (ப.20), பெத்த குழந்தைகளுக்கு எப்பவுமே நான் அம்மாதான் என்று கூறும் வாடகைத்தாயின் பெருமனம் (48), வீடியோகான்பரன்சுக்காக தம்மை அலங்காரித்துக்கொள்ளும் குடும்பத்தார் (57), ஐ.டி.கம்பெனியில் வேலை பார்ப்பவர்களை அவர்களின் நிலையறியாமல் மாற்றுக்கண்ணோட்டத்தில் பார்க்கும் சமூகம் (63) என்றவாறு கதைகள் அமைந்துள்ளன.

வலையுலகிலும், அமேசான் தளத்திலும் சாதனை படைத்துவருகின்ற நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் நூலின் அணிந்துரையில் “…இவரது ஒவ்வொரு கதையும் நம்மை ஏதோ ஒரு விதத்தில்  பாதிக்கத்தான் செய்கின்றன. இளையவர்தான், ஆனாலும் எழுத்தில் ஒரு முதிர்ச்சி தெரிகிறது. உலகியலை நன்கு அறிந்தவர் என்னும் உண்மை புரிகிறது. எழுத்துலகில் சாதிக்கத் துடிக்கும் இவரது மன நிலை தெளிவாய் தெரிகிறது. சாதிப்பார் என்ற நம்பிக்கையும் பிறக்கிறது. ஏனெனில், இவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதைக் களம் அப்படிப்பட்டது. தமிழில் யரும் நுழையாத தளத்திற்குள் நுழைந்து, தனித்து நின்று வாளெடுத்துச்சுழற்றி, வெற்றி வீரராய் வெளி வந்திருக்கிறார்….. தமிழில் இதுவரை இல்லாத ஒரு புது வடிவத்தை, புது உருவத்தை, தமிழுக்குக் கொண்டு வந்து அறிமுகம் செய்திருக்கிறார். இங்கிலாந்து பர்மிங்காம் பல்கலைக்கழகத்தின் அறிவியல் புனைகதை மன்றமானது 1980ஆம் ஆண்டுவாக்கில் சிறுகதை வடிவத்தில் ஒரு புதுமையைப் புகுத்தி உருவாக்கிய Drabble என்ற வடிவத்தை தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார்….” என்று குறிப்பிடுகிறார்.

வித்தியாசமான பாணியை தமிழுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ள நூலாசிரியரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.

நூலின் படியை நாங்கள் பெற்ற இனிய தருணங்கள்



அச்சு நூலைப் பெற : 1) தமிழ்க்குடில் பதிப்பகம், 19, எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர் விரிவாக்கம், கீழ வாசல், தஞ்சாவூர் 613 001, அலைபேசி 9488969722, நவம்பர் 2020, ISBN: 9789354260575, 120 பக்கங்கள், ரூ.120

2)http://www.tamilbookman.in/products/general-tamil-books/100-varthai-kadhaigal-j-sivaguru.html?fbclid=IwAR0U4jO7Nd_E82DbQRqOrH4J5dC_spodIjhYM9QUJE2-TA7w1Z2fZpDFIJ8

மின்னூலைப் பெற: https://www.amazon.in/dp/B08PSCXRYZ

கருத்தினை பதிய: https://www.goodreads.com/book/show/56170846-100



 

15 comments:

  1. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.  படங்களின் பின்னணியில் தெரியும் புத்தக அலமாரி கவர்கிறது.

    ReplyDelete
  2. அருமையான விவரிப்பு.
    கதையின் தலைப்பே மனதில் ஓர் ஈர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது.

    தங்களது மகனின் புதிய முயற்சிகள் மேலும் பல சாதனைகளை தொடரட்டும்.

    ReplyDelete
  3. தங்கள் பிள்ளைகளும் எழுத்தாளர்கள் என்பதை இப்போதுதான் அறிந்து கொண்டேன். நூலினை வாங்கி வாசிக்கின்றேன். வாழ்த்துகள் ஐயா. நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

    ReplyDelete
  4. புதிய நூல் - தங்கள் குடும்பத்திலிருந்து - பாராட்டுகளும் வாழ்த்துகளும் ஐயா. சிறப்பாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள்.

    100 வார்த்தைகளில் கதை - நல்ல முயற்சி. வார்த்தைக் கட்டுப்பாடு வைத்துக் கொண்டு கதை எழுதுவது பெரிய விஷயம். ஆசிரியருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

    ReplyDelete
  5. பற்பல சாதனைகளை நிகழ்த்துவதற்கு வாழ்த்துகிறேன்...

    அன்புட்ழ்ன்,
    துரை செல்வராஜூ..

    ReplyDelete
  6. வித்தியாசமான முயற்சியில்
    வெற்றி பெற்றிருக்கிறார்
    தங்கள் அன்பு மகனுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
    குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. மிக அருமை அய்யா. தங்கள் குடும்பம் ஒரு பல்கலைக்கழகம். அவரது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. உங்கள் மகனுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. அருமை அருமை ஜம்பு சார் & பாக்யவதி மேடம், பாரத் & சிவகுரு தம்பிஸ் :) வாழ்த்துக்கள் அனைவருக்கும். :)

    ReplyDelete
  11. மிகவும் தனித்துவமான முயற்சி. தோழர் வெற்றி பெற்றிருக்கிறார்.
    மனம் கனிந்த பாராட்டுக்கள்

    ReplyDelete