26 October 2021

சத்யஜித்ரே நூற்றாண்டு நினைவு சிறப்பிதழ் : ப்ரண்ட்லைன்

ப்ரண்ட்லைன் சத்யஜித்ரே சிறப்பிதழை (The World of Ray, Frontline, A CommemorativeIssue, November 5, 2021) நேற்று காலை அஞ்சல்வழியாகப் பெற்றேன். 132 பக்கங்கள் கொண்ட இதழை நேற்று படிக்க ஆரம்பித்து சுமார் மூன்று அமர்வில் எட்டு மணி நேரத்தில் இன்று மதியத்திற்குள் முழுமையாகப் படித்துவிட்டேன். வழக்கமாக சிறப்பிதழுக்குத் தருகின்ற முக்கியத்துவத்தோடு இவ்விதழ் தயாரிக்கப்பட்டதைக் காணமுடிந்தது.



அட்டைப்படம் தொடங்கி அனைத்துப்பக்கங்களும் ரசனையோடு அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். இதழாசிரியர் இதழ் உருவாக மேற்கொண்ட முயற்சிகளைச் சுருக்கமாகக் கூறியுள்ளார். ஓர் இமாலய முயற்சியை சிறப்பாக நிறைவேற்றியுள்ள அவர்களுக்கு முதல் பாராட்டு. பொருளடக்கப் பக்கத்தில் சிகப்பு வண்ணத்தில் தலைப்பு, தொடர்பான புகைப்படம், கட்டுரையின் செறிவான தேர்ந்தெடுக்கப்பட்ட வரிகள், கட்டுரையாளர்/பேட்டியாளரின் பெயர், பக்க எண் தரப்பட்ட விதம் மிகவும் அருமை. சில முழுப்பக்க புகைப்படங்களைப் (பக்.6, 7, 8, 33, 68, 72-73, 130) பார்த்துக்கொண்டே இருக்கலாம். ஒவ்வொரு கட்டுரைக்கும் பெரிய எழுத்தில் கட்டுரையின் பொருண்மையை உணர்த்தும் வகையில் தரப்பட்டுள்ள நடுவில் அமைக்கப்பட்டுள்ள தலைப்பு, தேவைப்படும் இடங்களில் ஒற்றை மேற்கோளுடன் தலைப்பு, தொடர்ந்து அதன்கீழ் உட்தலைப்பாக சில சொற்களில் கட்டுரையின் சுருக்கம், முற்றிலும் வாசகருடைய படிப்பின் ஆர்வத்தை மிகுவிக்கும் வகையில் பெரிய எழுத்தில் கட்டுரையின் முதல் வரி, பேட்டிகளில் கேள்விகள் தடித்த எழுத்திலும் பதில்கள் சாதாரண எழுத்திலும் தந்துள்ள விதம் என்ற வகையில் எந்த அளவிற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது. கட்டுரையின் உள்ளே ஆங்காங்கே தரப்பட்டுள்ள பெட்டிச்செய்திகள், அதற்கான புகைப்படங்கள், அவற்றுக்காக தனியாக எழுத்துரு மிகவும் நல்ல உத்தி. வாசிப்பில் அயற்சி தராமல் இருப்பதற்காக சில பதிவுகள் நீல நிறப் பின்புலத்தில் அமைக்கப்பட்டுள்ள விதம் அருமை.

இத்தகைய பின்புலத்தில் அமைந்துள்ள இதழுக்கு உரிய செய்திகளையும், புகைப்படங்களையும் திரட்ட ஆசிரியர் குழுவினர் மேற்கொண்ட முயற்சி பெரிதும் போற்றத்தக்கது. இதழாசிரியர் கூறியதைப் போல உரிய நேரத்தில் ஆண்ட்ரியூ ராபின்சனின் தொடர்பு ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகிறது. பல்துறைச் சார்ந்தோருடைய நினைவலைகள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் உள்ளதை அவருக்கு சூட்டப்பட்ட புகழாரங்கள் உணர்த்துகின்றன.

“சத்யஜித்ரேயின் திரைப்படங்கள் அரிய கருவூலங்கள். திரைப்பட ஆர்வலர்கள் அவற்றை அவசியம் பார்க்க வேண்டும்….ரேயின் சிறந்த திரைப்படங்களை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் அவை புதிய பரிமாணங்களைத் தருகின்றன” (ஆண்ட்ரியூ ராபின்சன், ப.9),

“இரு நிலைகளும் எனக்கு ஒன்றுதான். பல மணி நேரங்கள் என்னால் பேசாமல் இருக்கமுடியும். அவ்வாறே ஒரே சமயத்தில் தொடர்ந்து 17-18 மணி நேரங்கள் பணியாற்றவும் முடியும்.” (ஆண்ட்ரியூ ராபின்சன் பேட்டி, ப.22),

“இத்துணைக்கண்டத்தின் பண்பாட்டு உலகில் ரே முக்கியமான இடத்தைப் பெறுகிறார். நூற்றாண்டின் ஆரம்பக்காலக்கட்டத்தில் ரவீந்திரநாத் தாகூரைத் தவிர வேறு எவரும் தேசிய அளவிலும், உலகளவிலும் அத்தகைய பெருமையைப் பெறவில்லை.” (மிகிர் பட்டாச்சார்யா, ப.26),

இந்திய சினிமாவில் பன்முகத்திறன் கொண்டவர் ரே…ரசிகர்களை இழுக்கவேண்டும் என்பதற்காக அவர் தன் கொள்கையை சமரசம் செய்துகொள்ளவில்லை… ஒவ்வொன்றிலும் முழுக்கவனமும் செலுத்துவார். (ஆடூர் கோபாலகிருஷ்ணன் பேட்டி, ப.29),

வங்காள சினிமாவில் வண்ணத்திரைப்படங்கள் அரிதாக இருந்த காலகட்டத்தில் ஒரு வண்ணப்படத்தை எடுத்து, அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். (மோய்நக் பிஸ்வாஸ், ப.32),

“அவருக்கு வந்த கடிதங்களுக்கு அவரே மறுமொழி எழுதுவார். அப்போது வருகின்ற கடிதங்கள் மறுமொழி அட்டையுடனே வரும். அதில் அவர் பதில் எழுதி அனுப்புவார்.” (சந்திப் ரே பேட்டி, ப.37),

“அவர் தனிமையிலே இருப்பார், அவரை நெருங்கமுடியாது என்று பலர் கூறக்கேட்டிருக்கிறேன். ஆனால் அப்படியல்ல…அவர் வீட்டு வாசலில் உள்ள அழைப்பு மணியை அடித்துவிட்டு அவரைச் சந்திக்கலாம்.” (கௌதம் கோஷ், ப.53),

“ரே ஒரு அதீத வாசகர். அவருடைய இலக்கிய ஆர்வம் பன்முகத்தன்மையுடையது. உடல் நலன் குன்றியபோது, செயலாற்ற முடியாத நிலையில், அவருக்குப் படிக்க அதிக நேரம் கிடைத்தது..” (தீர்த்திமன் சட்டர்ஜி, ப.74),

“அவர் மிகவும் அரிதாக அரசியல் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவார். இருந்தபோதிலும் தன் நிலைப்பாட்டினை திரைப்படத்தில் காட்சிகளிலும், வசனங்களிலும் தெளிவாகக் கொணர்ந்துவிடுவார்.” (சுக்ரித் சங்கர் சட்டோபாத்யாய், ப.77),

“ரே ஒரு நூலை வாசிக்க ஆரம்பித்தால் அவருடைய மனதில் கதாபாத்திரங்கள் இயல்பாகத் தோன்ற ஆரம்பித்துவிடும்..” (பரூன் சந்தா, ப.83),

“மாணிக்டா (சத்யஜித் ரே) காட்சிகளைப் பற்றியும், அவை எடுக்கப்படவேண்டிய முறை பற்றியும் மிகவும் தெளிவாக இருப்பார். அவருடைய இலக்கிற்கு வடிவம் கொடுப்பதில் எங்களுக்கு எவ்விதச் சிக்கலும் இருந்ததில்லை.” (ஷர்மிளா தாகூர் பேட்டி, ப.89),

“அவர் எங்களை கதாபாத்திரமாக முற்றிலும் மாற்றிவிடுவார்” (அபர்னா சென் பேட்டி, ப.103),

“சினிமா சத்யஜித்ரேக்கு முன், சத்யஜித்ரேக்குப் பின் –ச.மு., ச.பி.,-. என்ற வகையில் அமையும்.” (ஷ்யாம் பெனேகல் பேட்டி, ப.109),

“அவர் யாரையும் குறை கூறியதில்லை.” (ரகுராய் பேட்டி, ப.122),

சத்யஜித்ரே இயற்கையெய்திய பின்னர் ஒரு காலகட்டத்தில் பிரண்ட்லைன் இதழ் மறுவடிவாக்கம் பெறப்பட்டபோது அவ்விதழில் “ரே உயிரோடிருந்திருந்தால் இந்த வடிவத்தை ரசித்திருப்பார்” என்று வாசித்த நினைவு. அதே கருத்து இச் சிறப்பிதழுக்கும் நூற்றுக்கு நூறு பொருந்தியிருக்கும் என நினைக்கிறேன்.

இவ்விதழின் அனைத்து சிறப்பிதழ்களையும் வாசித்த வாசகன் என்ற நிலையில் இதுவரை வந்த இதழ்களில் இது சிறப்பிடத்தைப் பெறுகிறது என்பதைப் பகிர்வதில் மகிழ்கிறேன். பாராட்டுகள், ப்ரண்ட்லைன் ஆசிரியருக்கும், குழுவினருக்கும்.

27 ஆகஸ்டு 2022இல் மேம்படுத்தப்பட்டது

12 comments:

  1. இப்படி புகழ் பெற்றவர்களுக்கு சிறப்பிதழ் வெளியிட்டு கௌரவப்படுத்துவது சிறப்பு.  சுவாரஸ்யமான தகவல்கள்.

    ReplyDelete
  2. சிறப்பிதழ் குறித்த தங்கள் மதிப்புரை மிகவும் நன்று. சிறப்பிதழ் வெளியிடுவதும், அதை சிறப்பாக மதீப்பீடு செய்வதும் பாராட்டுக்குரியது. தொடரட்டும் தங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  3. ப்ரண்ட்லைன் ஆசிரியர் Vijayasankar Ramachandran (முகநூல் வழியாக)
    விரிவான அலசலுக்கு நன்றி ❤️

    ReplyDelete
  4. Jayabalan Kannan (முகநூல் வழியாக)
    சத்யஜித் ரே தாஸ்தாவ்ஸ்கி போலவும் ரித்விக் கட்டக் டால்ஸ்டாய் போலவும் ஒரே காலகட்டத்தில் இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற பங்கினை ஆற்றி உள்ளனர். வாழ்த்துக்கள் ஐயா சிறப்பான ஒரு பதிவு.

    ReplyDelete
  5. Inian Govindaraju (முகநூல் வழியாக)
    ஓர் இதழைக் கூட இப்படி அருமையாகத் திறனாய்வு செய்ய முடியுமா?

    ReplyDelete
  6. இராஜகுரு வேல்சாமி (முகநூல் வழியாக)
    ஐயா தங்களின் ஒவ்வொரு எழுத்தும் பிரமிப்பு. இதழை ஆய்வு செய்தது அருமை

    ReplyDelete
  7. சிறப்பிதழுக்கு உங்கள் மதிப்பபுரை அருமை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. சிறப்பிதழும்
    சிறப்பிதழுக்கான தங்கள்
    ஆய்வுரையும்
    சிறப்பு

    ReplyDelete
  9. ரேவிற்கான சிறப்பிதழ் அருமை. தகவல்களும் சிறப்பு, ஐயா. அதனை இங்கு உங்களின் பார்வையில் சிறப்பித்துப் பகிர்ந்தமையும் அருமை.

    துளசிதரன்

    ReplyDelete
  10. சத்யஜித் ரே குறித்து அவரது கதை படமாக்கப்பட்டது குறித்து சமீபத்தில்தான் எங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தேன். இப்போது அவரைச் சிறப்பித்த இதழ் பற்றிய உங்கள் பதிவு சிறப்பாக இருக்கிறது. நல்ல கலைஞருக்கு இப்படியான சிறப்பிதழ் அவரைக் கௌரவப்படுத்துவது அவசியம்.

    அருமையான படைப்பாளி. மிக மிக யதார்த்தமாக இருக்கும் அவரது படங்கள். ஒரு சில காட்சிகள் தான் பார்த்திருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  11. ப்ர்ண்ட் லைன் சத்யஜித்ரே சிறப்பிதழ் குறித்த தங்களின் மதிப்புரை நன்று. புத்தகத்தை வாசிக்கும் ஆவலை உண்டு பண்ணுகின்றது. வாழ்த்துகள்!

    ReplyDelete