Showing posts with label மொழியாக்கம். Show all posts
Showing posts with label மொழியாக்கம். Show all posts

24 July 2026

A Writing on Reading

தி இந்து, பிரண்ட்லைன், வெளிநாட்டு இதழ்கள் வாசிப்பு மற்றும் மொழிபெயர்ப்பு  அனுபவ அடிப்படையில் நான் எழுதிய ஆங்கிலக்கட்டுரை (A Writing on Reading) "இன்றைய மொழியியல்"  என்ற தேசிய கருத்தரங்கிற்காக அளிக்கப்பட்டு, "பேரா.ச.இராசேந்திரன் மணிவிழா மற்றும் பணியாற்றிய பேராசிரியர்களுக்கு பாராட்டு விழா மலர், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2012" என்ற கருத்தரங்கத் தொகுப்பில் இடம்பெற்றது.  

இதில் நான் வாசித்த இதழ்களின் தலைப்புகள்,  மனதில் பதிந்த சொற்கள் குறித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போது நண்பர்களிடம் விவாதிக்கும் சொற்களை ஒரு கட்டுரையாகக் கொணர வேண்டும் என்ற முயற்சி இதன்மூலம் நிறைவேறியது. ஆங்கிலத்தில் நான் எழுதியுள்ள கட்டுரைகளில் மிக முககியமானதாக இதைக்  கருதுகிறேன். 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: Current trends in Linguistics (இன்றைய மொழியியல்)
பதிப்பாசிரியர்கள்: முனைவர் கி.விஸ்வநாதன், முனைவர் ப.மங்கையர்க்கரசி
-------------------------------------------------------------------------------------------

16 July 2026

அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன்: ஜான் செரியன்

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன். தி இந்து உள்ளிட்ட ஆங்கில இதழ்களிலிருந்து பல கட்டுரைகளையும், செய்திகளையும் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ப்ரண்ட்லைன் இதழில் சே தொடர்பாக வெளியான ஒரு கட்டுரை முழுமையாக மொழிபெயர்த்ததும், அது நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம் இதழில் வெளியானதும் ஒரு மறக்க முடியாத அனுபவம். அவ்விதழிலிருந்து மொழியாக்கம் செய்த கட்டுரை இது ஒன்று மட்டுமே.  என் மொழிபெயர்ப்பு ஆர்வத்தை மேம்படுத்திய கட்டுரைகளில் இதுவும் ஒன்று.  






-------------------------------------------------------------------------------------------
கட்டுரையின் மொழிபெயர்ப்பு 
நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008
-------------------------------------------------------------------------------------------

01 July 2026

அரை நூற்றாண்டுக்கும் மேலான வாசிப்புப் பழக்கம்

இளம் வயதில் தோன்றிய வாசிப்பானது பல பரிமாணங்களில் தடம் பதிக்க எனக்கு உதவியதை அனுபவம் மூலமாக உணர்ந்துள்ளேன். மேம்போக்காக இல்லாமல் முழுமையான ஈடுபாட்டோடு வாசிக்கப்படும்போது கற்கின்ற நுட்பங்களும், பெறுகின்ற அனுபவங்களும் எண்ணற்றவையாகும். வாசிப்பானது பல துறை அறிவை ஊட்டும். நினைவாற்றலை மேம்படுத்தும். சிந்திக்கும் திறனை வளர்க்கும். அவ்வகையில் நான் கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கிறேன். 50 ஆண்டுகள் சற்றே பின்னோக்கிச் செல்வோம். 

1960கள். எங்களுடைய தாத்தா திரு ரெத்தினசாமி அவர்களின் நாத்திகம், நவசக்தி இதழ்களின் வாசிப்பானது பள்ளிக்காலத்தில் என்னுடைய வாசிப்புக்கு ஓர் ஆரம்பமானது. தாத்தாவின் நண்பர் நம்மை மேம்படுத்த வாசிப்புப்பழக்கம் உதவும் என்பார். அவ்வப்போது அவ்விதழ்களைப் படிப்பேன். 

எங்கள் தங்க ராஜா படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நவசக்தி இதழுடன்
நன்றி : கோல்டன் சினிமா

1970கள். எஸ்.எஸ்.எல்.சி. படித்தபோது என் நண்பரின் தந்தை ஆங்கிலச்சொற்றொடர்களைக் கூறி அதற்கான பொருளையும் கூறுவார். அப்போது ஆங்கில இதழை வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அண்டை வீட்டில் இருந்த தி இந்து வாசகர் வீட்டிற்குச் சென்று அதனை வாசிப்பேன்.  

கல்லூரியில் படித்தபோது தட்டச்சு போன்றவற்றைக்கற்றேன். புதிய சொற்களைத் தட்டச்சிடும்போது அதற்கான பொருளை அகராதிகளில் பார்த்துத் தெரிந்துகொள்வேன். வகுப்பில் ஆசிரியர் பாடமெடுக்கும்போது தெரியாத சொற்களுக்கு விளக்கம் கேட்பேன். இல்லம், தட்டச்சுப் பயிற்சி நிலையம்,  கல்லூரி என்ற  வகைகளில் தேடலைத் தொடர்ந்தேன்.  

நாளிதழ்களில் புதிய சொற்கள் பயன்படுத்தும்விதம், தலைப்புச் செய்திக்கான எழுத்துரு வடிவமைப்பு, பக்க அமைப்பு, பத்திப் பிரிப்பு, உரிய படங்கள் அமைக்கப்படல், பெட்டிச்செய்திகள் போன்றவற்றையும்,  ஒரே செய்தி பிற இதழ்களில் பல நடைகளில் அமையும் விதத்தையும் கவனிப்பேன்.  

1980கள். வெளியூர்களில் பணியாற்றியபோதும்  நாளிதழ் வாசிப்பு தொடர்ந்தது. வாசகர் கடிதம் எழுத ஆரம்பித்தேன்.  வங்கித்தேர்வு தொடர்பாக நான் எழுதிய கடிதம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில்  வெளியானது. தி இந்துவில் உங்கள் ஆங்கிலத்தைத் தெரிந்துகொள்ளுங்கள் என்ற பகுதியில் சில சொற்களுக்கான பொருளைக் கேட்டு நான் எழுதிய கடிதங்கள் என் பெயருடன் வெளியாயின.  


இந்திரா காந்தி இறந்தபோது தி இந்துவில் இந்திரா காந்தி அசாசினேட்டட் என்றும், இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் இந்திரா காந்தி ஷாட் டெட் என்றும் முதல் பக்கச் செய்தி வெளியாகியிருந்தது.  தி இந்து இதழின் சகோதர இதழாக அறிமுகமான பிரண்ட்லைன் இதழின் வாசகனானேன். அதிலும், இந்தியா டுடே உள்ளிட்ட பருவ இதழ்களிலும் நான் எழுதிய கடிதங்கள் வெளியாயின.  

1990கள். அடுத்து, சிறுகதை எழுத முயற்சி எடுத்தேன். முதல் சிறுகதை குங்குமம் இதழிலும், தொடர்ந்து பாக்யா, சாவி, குங்குமம், தின பூமி, கதைபூமி, மங்கையர் பூமி, இதயம் பேசுகிறது, தமிழரசி, வாசுகி, மேகலா, டி.ராஜேந்தரின் உஷா, ராஜரிஷி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின. சிலவற்றுக்கு காசோலை, மணியார்டர்  மூலமாக மதிப்பூதியம் பெற்ற அனுபவமும் உண்டு. 




ஒரு முறை தி இந்து நாளிதழில் வந்த, அல்லாடி கிருஷ்ணசாமி கட்டுரையை முதல் முதலாக நேரடியாக சுமார் 65 நிமிடங்களில் தமிழ்த் தட்டச்சுப்பொறியில் தட்டச்சு செய்தேன். பின்னர் இம்முறையில் பல கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்தேன். வாசிப்பு அனுபவமானது மொழியாக்க ஆர்வத்தை மேம்படுத்தியது.  

2000கள். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வினை நிறைவு செய்து பல கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கினேன். கதை எழுதுவதிலிருந்து சற்றே மாறுபட்டு, உரிய மேற்கோள்கள், சான்றுடன் எழுதும் முறையை அறிந்தேன். இக்கட்டுரைகளை கருத்தரங்குகளில் வாசித்தபோது மேடைப் பேச்சு அனுபவம் கிடைத்தது. 

2010கள். ஒவ்வொரு ஆங்கில அகராதியும் ஒவ்வோராண்டும் ஆண்டின் சிறந்த சொல்லைத் தெரிவு செய்வர். அதனைக் கட்டுரைகளாக மொழிபெயர்த்தேன். 2017ல் சிறந்த சொல் என்ற கட்டுரை தி இந்து தமிழ்ப்பதிப்பிலும், தொடர்ந்து தினமணி உள்ளிட்ட இதழ்களிலும் வெளியாயின.  இதே காலகட்டத்தில் தி தி கார்டியன், டெய்லி மெயில், டெய்லி எக்ஸ்பிரஸ், தி டைம்ஸ், டெய்லி மிர்ரர், இன்டிபென்டன்ட், தி டெலிகிராப், தி சன், தி நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், பில்ட், டான் போன்ற வெளிநாட்டு இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளை மொழிபெயர்த்து முன்னணி தமிழ் இதழ்களில் எழுதினேன். 



இதே காலத்தில் தமிழ், ஆங்கில விக்கிப்பீடியாக்களில் கட்டுரைகள் எழுதினேன். அவற்றில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகளும் அடங்கும்.  நண்பர்கள், ஆய்வாளர்களின் நூல்களைப் பற்றிய மதிப்புரையினை புக் டே தளத்தில் எழுத ஆரம்பித்தேன்.

2020கள். இதழ்களின் வடிவமைப்பின் மூலமாக, இதழ்கள் வாசகர்களைச் சென்றடைய மேற்கொள்ளும் ரசனை உத்தியை அறியமுடியும். வெளிநாட்டு இதழ்களின் வடிவமைப்பு, டேப்ளாய்ட் இதழ்களின் முக்கியத்துவம், பெரிய எழுத்து பயன்பாடு, ஆக்ஸ்போர்டு காற்புள்ளி போன்ற பதிப்பு, அச்சு நடை தொடர்பாகக் கட்டுரைகள் எழுதினேன்.   


தி இந்து நாளிதழை 50+ வருடங்களாகவும், கார்டியன் இதழை 15+ வருடங்களாகவும் வாசிக்கிறேன். வெளிநாட்டு செய்திகளில் காணப்படுகின்ற நம் நாட்டு செய்திகளைக் கவனமாக வாசிப்பேன்.

கைப்பேசியிலும், மடிக்கணினியிலும் பல முன்னணி தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாசிக்கிறேன். குறிப்பிட்ட அரசியல் கட்சி, தலைவர் என்பனவற்றுக்கு அப்பாற்பட்டு செய்திகளை அணுகுகிறேன். இந்தியக் குடியரசுத் தலைவர், இந்தியப் பிரதமர், தமிழக முதலமைச்சர் உள்ளிட்டோரின் சமூக இணையதள பக்கங்களைத் தொடர்கிறேன்.     

இதுவரை 2,000+ கட்டுரைகளையும், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் உள்ளிட்ட 10 நூல்களையும் எழுதியுள்ளேன். தாத்தா மூலமாக ஆரம்பமான வாசிப்புப்பழக்கமானது, வாசகர் கடிதத்தில் தொடங்கி தற்போது குடியரசு தலைவர், குடியரசுத் துணைத்தலவர் ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கடிதங்கள் வாங்கும் வரை என்னை முன்னேற்றியுள்ளது. என்னுடைய வாசிப்பும், மொழிபெயர்ப்பும், எழுத்துப்பணியும் தொடரும். வாசிப்பை நேசிப்போம்.

-------------------------------------------------------------------------------------------

நன்றி: பாயும் ஒளி 100ஆவது இதழ்
-------------------------------------------------------------------------------------------

19 June 2026

2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்

தமிழில் அறிவியல் செய்திகள் வெளிவரவேண்டும் என்ற நோக்கில் 23.12.2000 நாளிட்ட தி இந்து நாளிதழில் வெளியான ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்து "2000ஆம் ஆண்டின் மிகச்சிறந்த அறிவியல் ஆய்வுகள்" என்ற தலைப்பில் நான் எழுதிய கட்டுரை அறிக அறிவியல் இதழில் வெளியானது. 1997க்குப் பின் இவ்வாறாக, தி இந்து நாளிதழிலிருந்து மொழிபெயர்த்து நான் எழுதிய இரண்டாவது கட்டுரை இதுவாகும்.






-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிக அறிவியல், மே 2001
-------------------------------------------------------------------------------------------

18 June 2026

அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை-1997இன் அரிய அறிவியல் சாதனைகள்

ஒவ்வோராண்டின் ஆரம்பத்திலும் தி இந்து ஆங்கில நாளிதழில் அதற்கு முந்தைய ஆண்டின் முக்கியமான அறிவியல் செய்திகள், கண்டுபிடிப்புகள்,  சாதனைகள் கட்டுரையாக வெளிவரும். அவ்வாறான கட்டுரைகள் தமிழில் வெளிவரவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்துகொண்டே இருந்தது. 1997ஆம் ஆண்டு அதற்கான ஆரம்பமாக அமைந்தது. இதுதத்துவ மையத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்ட காலத்தில் எழுதியதாகும். 

1.1.1998இல் தி இந்து இதழில் வெளியான கட்டுரையை "அறிவியில் தமிழ் வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் தேவை: 1997இன் அரிய அறிவியல் சாதனைகள்" என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தேன். 12-13.12.1998இல் தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நடைபெற்ற அறிவியல் தமிழ் வளர்ச்சிப் போக்குகள் என்ற கருத்தரங்கில் அளித்தேன். அறிவியல், மொழியாக்கம் என்ற வகையில் அமைந்த அக்கட்டுரை, பின்னர் அறிவியல்தமிழ் வளர்ச்சி என்ற நூலில் இடம்பெற்றது.










கருத்தரங்கத்தின்போது மலரின் 
முகப்பும், கட்டுரையின் முதல் பக்கமும்



-------------------------------------------------------------------------------------------
நன்றி: அறிவியல்தமிழ் வளர்ச்சி, பதிப்பாசிரியர்கள்: 
முனைவர் சா.கிருட்டினமூர்த்தி, முனைவர் சா.உதயசூரியன்
-------------------------------------------------------------------------------------------

18.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

28 April 2023

தட்டச்சு ஒரு கலை

தட்டச்சு என்பது ஒரு கலை. தட்டச்சு கற்பது வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனளிக்கும். அதிக வேகம், அதே சமயம் நிதானம் போன்றவற்றை தட்டச்சுப்பயிற்சியில் பெறலாம். புதிய சொற்களைத் தெரிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும். நினைவாற்றல் மேம்படும். மொழியறிவு வளரும். தட்டச்சுத் தேர்வினை எழுதிவிட்டு, கணினியில் தட்டச்சு செய்தால் இன்னும் பல உத்திகளைக் கைக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களும், பணிக்கு விண்ணப்பிப்போரும் தம் தகுதியை மேம்படுத்திக்கொள்ள தட்டச்சுப் பயிற்சியை மேற்கொள்ளலாம். இந்தக் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்தும் விதமாக மாணவர்கள் தட்டச்சுப்பயிற்சியில் இப்போதே ஈடுபட ஆரம்பிக்கலாம்.

50 ஆண்டு கால தட்டச்சு இப்போது எனக்குத் தந்த ஓர் அனுபவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். நான் தட்டச்சு பயின்ற கும்பகோணம் ஈஸ்வரன் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும், கும்பகோணம் பாரத் தட்டெழுத்துப் பயிற்சி நிலையத்தையும் நன்றியோடு நினைவுகூர்கிறேன்.

சோழ நாட்டில் பௌத்தம் நூலின் மேலட்டை


2018இல் பாரத் தட்டெழுத்துப்பயிற்சி நிலையத்தில் நிறுவனர் திரு பாஸ்கரன் அவர்களுடன்

அண்மையில் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூல் (புது எழுத்து, 2/203, அண்ணா நகர், காவேரிப்பட்டிணம் 635 112, செப்டம்பர் 2022, அலைபேசி: +91 9842647101, +91 6374230985, மின்னஞ்சல் : editorpudhuezuthu@gmail.com) வெளியானது. அந்நூலை ஆங்கிலத்தில் எழுதும் முயற்சியில் எதிர்கொண்ட அனுபவங்களில் ஒன்று தட்டச்சு தொடர்பானது.

ஆங்கில நூலுக்கான முதல் மெய்ப்பினை (ஒரு பகுதி மட்டும்/சுமார் 80 பக்கங்கள்/ஏ4 தாள்) திருத்தும் பணியில் தற்போது ஈடுபட்டுள்ளேன். இதனை மொழிபெயர்த்துக் கணினித்தட்டச்சு செய்யும்போது நான் கூகுளையோ, ஸ்பெல்செக்கரையோ பயன்படுத்தவேயில்லை. முழுக்க முழுக்க நேரடியாக மொழிபெயர்த்துவருகிறேன். ஐயமேற்படும்போது அகராதிகளைத் துணைகொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் கூடுதலாகச் செய்தியைச் சேர்க்கிறேன். இவ்வாறாக 80 பக்கங்களின் மெய்ப்புத் திருத்தப்பணியை மேற்கொண்டபோது இரு இடங்களில் மட்டுமே தட்டச்சுப்பிழை (Only two words were found with spelling mistake) இருந்தது. இவ்விரு இடங்களைத் தவிர எங்கும் சொற்பிழை காணப்படவில்லை என்பதை எனக்கு வியப்பினைத் தந்தது. வந்த சொல் பலமுறை வருதல், கூறியது கூறல், சொற்கள் இடம் மாற்றம், சாய்வெழுத்து அமைப்பு, அடிக்கோடுடன் சொல் அமைப்பு, போன்றவற்றில் பல தவறுகளும், விடுபாடுகளும் காணப்பட்டாலும் மிகவும் குறைவான சொற்பிழையே இருந்தது. இதற்குக் காரணம் கடந்த 50 ஆண்டுகளாக நான் ஈடுபட்டுவரும் தட்டச்சுப்பணி அனுபவமே என நினைக்கிறேன்.

1970களின் இடையில் முதன்முதலாக ஆங்கிலத்தட்டச்சு சேர்ந்த காலகட்டத்திலேயே தட்டச்சுத்தேர்வுக்குத் தயாராகும்போது வைக்கப்படுகின்ற வகுப்புத்தேர்வில் பல முறை நான் பிழையே இன்றி தட்டச்சு (Typed matter with NIL mistake) செய்துள்ளேன். நான் தட்டச்சு செய்தவற்றில் எத்தனை பிழைகள் உள்ளன என்பதைக்கூட கூறிவிடுவேன். அப்போதெல்லாம் தட்டச்சு செய்யும்போதே எந்த இடத்தில் தவறு வருகிறது என்பதையும் மனதில் கொண்டு, தட்டச்சு செய்யப்பட்ட தாளில் இவ்வளவு எண்ணிக்கையில் தவறு உள்ளது என்று உறுதியாகக்கூறுவேன். நான் சொல்லுமளவிற்கு தட்டச்சுப்பிழையின் எண்ணிக்கை இருக்கும். அப்பழக்கம் என்னையும் அறியாமல் இன்னும் தொடர்கிறது.

25 April 2023

சென்று வாருங்கள், ராண்டார் கை

தி இந்து ஆங்கில நாளிதழில் நான் தொடர்ந்துவிரும்பி வாசித்த பத்திகளில் ஒன்று ராண்டார் கை எழுதிவந்த திரைப்படம் தொடர்பான மதிப்புரைகள். அப்பதிவுகள் மூலமாக அவருடைய நினைவாற்றலையும், மொழி ஆழத்தையும் அறிந்து வியந்தேன். தொடர்ந்து அடுத்த வாரம் அவருடைய பத்தி எப்பொழுது வெளியாகும், எந்தப் படமாக இருக்கும், எந்த வகையில் எழுதுவார் என்ற எண்ண ஓட்டங்களோடு காத்திருப்பேன். தி இந்து ஆங்கில நாளிதழை தொடர்ந்து 50 வருடங்களாக நான் படித்துவருவதற்குக்காரணம் இவரைப் போன்ற எழுத்தாளர்களின் எழுத்துக்களும் முக்கியக் காரணம். அவருடைய அப்பதிவுகள் மூலமாக பல புதிய ஆங்கிலச்சொற்களைக் கண்டு வியந்ததுண்டு. As there is nobody to compete with him, he is competing with himself (இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் பற்றிய ஒரு பதிவில்), The first scene will bring to you to the edge of the seat (பாலசந்தரின் புன்னகை மன்னன் திரைப்படம்), She had been to yonder blue (நடிகை பண்டரிபாய் இறந்தபோது என நினைக்கிறேன்), Reams have been written about him (நாகேஷ் பற்றிய பதிவில்), The title of film is spelt with capital V (referring to violence, வன்முறையை முதன்மையாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு). இவர் எழுதிய கட்டுரைகளில் ஒரே பதிவில் அதிகமான புதிய வார்த்தைகளை நான் பார்த்தது ஸ்ரீவித்யா இறந்தபோது என நினைக்கிறேன். அதனைப் பல முறை படித்தேன், இவருக்காகவும், ஸ்ரீவித்யாவிற்காகவும்.

கட்டுரை வெளிவரும் நாளன்று ராண்டார் கை எழுதியுள்ள மதிப்புரையை முதலில் படித்துவிட்டு, பின்னர்தான் தி இந்து நாளிதழின் முதன்மைப்பக்கங்களைப் படிக்க ஆரம்பிப்பேன்.



நான் பல முறை ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று பத்து கட்டளைகள்(Ten Commandments) ஆங்கிலத்திரைப்படம். அத்திரைப்படம் வெளியான 50ஆவது ஆண்டு நினைவாக அவர் இவ்விதழில் (A Randor Guy, Memorable Milestone, The Hindu, Friday Review, 8.6.2007, p.1) எழுதிய கட்டுரையை அப்போது நான் நேரடியாக 70 நிமிடங்களில் மொழிபெயர்த்தேன், அவருடைய எழுத்தின்மீது உள்ள ஆர்வம் காரணமாக. இன்னும் அதனைப் பாதுகாத்து வருகிறேன். (இந்த மொழியாக்கத்தில் நிறைகுறைகள் இருக்க வாய்ப்புள்ளது), நான் மொழிபெயர்த்த, நினைவில் நிற்கும் பதிவுகளில் இதுவும் ஒன்று.




7 ஜூன் 2023இல் மேம்படுத்தப்பட்டது.

30 December 2021

2021ஆம் ஆண்டின் சிறந்த சொல்

2021இன் சிறந்த சொல்லை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகளும், டிஸ்னரி இணையதளமும் தெரிவு செய்துள்ளன. இவ்வாண்டின் சிறந்த ஆங்கிலச் சொற்களையும், அதற்கான  பின்னணியையும் காண்போம். 

ஆக்ஸ்போடு அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vax (தடுப்பூசி) என்ற சொல்லை ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. ஆக்ஸ்போர்டு அகராதியியலாளர்கள் ஆங்கில மொழித் தொகுப்பினைத் தேடியபோது அச்சொல் அவர்களால் குறிப்பிட்ட வகையில் அதிகமாக ஈர்த்ததாகவும், இந்த ஆண்டு வரை இச்சொல் மிகவும் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் வாக்கில் அதன் பயன்பாடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 72 பங்கு அதிகரித்தாகவும் இவ்வகராதி கூறியுள்ளது. இச்சொல் vax sites (தடுப்பூசி போடப்படும் இடங்கள்), vax cards (தடுப்பூசி அட்டைகள்), to getting vaxxed (தடுப்பூசி போடப்படுதல்), being fully vaxxed (முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்டிருத்தல்) என்பன பல சார்புச்சொற்களையும் உருவாக்கியுள்ளதாகவும், அவை அலுவல்சாரா முறையில் பயன்படுத்தப்படுவதாகவும், இச்சொல்லைத் தவிர வேறு எந்தசொல்லும் கடந்த ஆண்டு சூழலை இந்த அளவிற்கு ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்கிறது இவ்வகராதி. 

 கேம்பிரிட்ஜ் அகராதி


2021இன் சிறந்த சொல்லாக perseverence (விடாமுயற்சி) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்து இன்று அறிவித்துள்ளதுகேம்பிரிட்ஜ் அகராதி. Perseverance என்றால் ஒன்றை சாதிக்க, நிறைவேற்ற சில சமயங்களில் ஆதிக நேரம் ஆனாலும்கூட, மேற்கொள்ளப்படுகின்ற தொடர் முயற்சி எனப்படும் என்றும் 2021இல் உலகம் முழுவதும் கோவிட்19 மற்றும் பல பிரச்னைகளை வாழ்வில் எதிர்கொண்டபோது தொடர்முயற்சி எடுத்து அதனை எதிர்கொண்டனர் என்றும் இவ்வகராதி கூறுகிறது. "கடினமான சூழலை மக்கள் எதிர்கொள்ளும்போது அவர்களைப் புகழ்கிறோம். அவ்வகையில் இச்சொல் ஓர் நேர்மறைச்சொல்லாகிறது. கேம்பிரிட்ஜ் அகராதியின் வலைப்பக்க வாசகர்கள் தம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள அதனைத் தொடர்ந்து வாசித்தும், பகிர்ந்தும், அதில் இடப்படுகின்ற பதிவுகளுக்கு மறுமொழி தந்தும் தம் மன உறுதியைக் கடைபிடித்துவந்துள்ளதைக் காண்கிறோம். வாசகர்களின் ஆதரவு எங்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்துள்ளது. நீங்கள் எங்கள் அகராதியை நாடுவதற்குக் காரணம் நாங்கள் தருகின்ற விளக்கங்கள் குறிப்பாக ஆங்கிலம் கற்போருக்காகவே அமைந்துள்ளன. அவை ஆங்கிலம் எந்த வகையில் உண்மையாகப் பயன்படுத்தப்படுகிறது என்ற ஆழமான ஆய்வின்மூலமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. கற்போரால் இச்சொல் அதிகமாகப் பயன்படுத்தாவிட்டாலும், உலகளாவிய நிலையில் இச்சொல்லானது 2021இல் 2,43,000 முறை பயன்படுத்தப்பட்டதை எங்களின் புள்ளிவிவரப்படி அறியமுடிகிறது. செவ்வாய்க்கிரகத்தில் நாசாவின் ரோவர் தரையிறங்கியபின்னர், 18 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி வரை 30,847 முறை இச்சொல் தேடப்பட்டது. இச்சூழலில் 2021இன் சிறந்த சொல்லாக இச்சொல் தேர்ந்தெடுக்க இக்காரணிகள் துணையாக இருந்தன" என்கிறது இவ்வகராதி. நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியானது எந்த அளவிற்கு நடப்பு நிகழ்வுகளில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை இவை போன்ற காரணிகளே நிர்ணயிக்கின்றன.

மெரியம் வெப்ஸ்டர் அகராதி

2021இன் சிறந்த சொல்லாக Vaccine (தடுப்பூசி) என்ற சொல்லை மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. "நம் மதிப்பீடுகளை, எண்ணங்களை, ஆசைகளை வெளிப்படுத்த நாம் தினமும் சொற்களைப் பயன்படுத்துகிறோம். கருத்தியல்ரீதி்யிலான மோதலில் அவை முக்கியமான பங்காற்றுகின்றன. 2021இல் இதுதான் நிகழ்ந்தது. 2020இல் வாழ்வில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்திய கொரோனா பரவலானது அரசியல்ரீதியான விவாதத்தையும், பிரிவிற்கான ஓர் ஆதாரத்தையும் உண்டாக்கியது. நம் காலத்திய பெரிய அறிவியல் நிகழ்வானது விவாதப்பொருளாக மாறியது. இச்சூழலில் தடுப்பூசி என்ற சொல் முக்கியமான இடத்தைப் பெறுகிறது" என்கிறது மெரியம் வெப்ஸ்டர் அகராதி.

 

காலின்ஸ் அகராதி

காலின்ஸ் அகராதி NTF என்ற சொல்லை இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அறிவித்துள்ளது. Non-fungible token என்பதன் சுருக்கமான NFT டிஜிட்டல் வடிவிலான அடையாளம் ஆகும். அதிகம் நாடப்படுகின்ற ஒளிப்படங்கள், வீடியோக்களுக்காக வர்த்தகத்தின்போது பரிமாறப்படுகின்ற டிஜிட்டல் விலைமதிப்பினை இது குறிக்கிறது. இதனை டிஜிட்டல் சொத்து என்று கூறலாம். .இவ்வகராதி இவ்வாண்டு தேர்ந்தெடுத்த 10 சொற்களில் இச்சொல் உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த மூன்று சொற்களும் அடங்கும் என்கிறது இவ்வகராதி.

டிஸ்னரி இணைய தளம்


2020ஆம் ஆண்டின் துருவப்படுத்தப்பட்ட நிலையும், இருத்தல் அல்லது சர்வதேசப்பரவல் காரணமான தாக்கங்களும் அவற்றை எதிர்கொள்ள பல வழிமுறைகளை நாம் 2021இல் கையாண்ட வகையில், alllyship (கூட்டு அல்லது கூட்டணி) என்ற சொல்லைத் தெரிவு செய்துள்ளது டிஸ்னரி இணையதளம். "ஓர் ஆண்டில் காணப்பட்ட பரவலை ஒற்றைய சொல்லில் அடக்கிவிடமுடியாது. இருந்தபோதிலும் இச்சொல் பலவற்றுடன் பின்னிப்பிணைந்த ஒரே சொல்லாகும். இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இச்சொல் எங்கள் அகராதிக்குப் புதியது என்ற வகையில் சிறப்பினைப் பெறுகிறது. சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலும் உள்ள பாதிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட வகையிலான பிரிவிற்காக குழுவின் ஓர் உறுப்பினர் என்ற நிலையிலன்றி ஒன்றிணைந்து தம் தலைமைப்பொறுப்பிலும், பார்வையிலும் செயல்படுவதை இச்சொல் குறிக்கிறது" என்கிறது இவ்வகராதி.

2020இன் சிறந்த சொல்லாக "க்வாரன்டைன்" (கேம்பிரிட்ஜ்), "பான்டெமிக்" (மெரியம் வெப்ஸ்டர் மற்றும் டிஸ்னரி இணையதளம்),  "லாக் டவுன்" (காலின்ஸ்) ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டன. சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் கூறியிருந்தது ஆக்ஸ்போர்டு அகராதி.

கொரோனா தீநுண்மியின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதை உணர்த்தும் வகையில் 2021இலும் அது தொடர்பான சொற்கள் அகராதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தமிழில் இவ்வாறாக ஆண்டின் சிறந்த சொல் தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒரு முயற்சி மேற்கொள்ளப்படும் நாள் விரைவில் வரும் என நம்புவோம்.      


துணை நின்றவை: மேற்கண்ட அகராதிகளின் தளங்கள்