14 September 2022

மனதில் நிற்கும் சுருக்கெழுத்து

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் இளங்கலை படித்தபோது  கூடுதல் தகுதிக்காக சுருக்கெழுத்தினைக் கற்க ஆரம்பித்தேன். தட்டச்சினைப் போல இதையும்  ஆங்கிலத்தில் தொடங்கி தமிழில் தொடர்ந்தேன்.  
டிசம்பர் 1978 தேர்வுக்காக எடுக்கப்பட்ட ஒளிப்படம்

பயிற்சியின்போது ஒரு சொல்லுக்கான குறியீட்டை (stroke) குறைந்தது ஐந்து வரிகள் எழுத வேண்டும். ஒரு சொல் பயிற்சிக்குப் பின் பல சொற்கள், சொற்றொடர் என்ற வகையில் பழகவேண்டும்.  கல்லூரி நேரம் தவிர பிற நேரம் சுருக்கெழுத்துப்பயிற்சிக்கான நேரமாக அமைந்தது.  

கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் கூடத்திலும், வாசல் திண்ணையிலும் உள்ள தூண்களில் சாய்ந்துகொண்டு எழுதுவது வழக்கம். அந்த இரு இடங்கள்தான் சுருக்கெழுத்து எழுதப் பயிற்சி எடுத்த பிரத்யேகமான இடங்கள். கணக்குப்பிள்ளையாக இருந்த எங்கள் தாத்தா பயன்படுத்திய சிறிய மேஜையை (writing desk) பயன்படுத்தினேன்.  சுருக்கெழுத்துச் பென்சிலை (Shorthand pencil) சரியாக கூர்மையாகச் சீவி எழுத வேண்டும். அவ்வாறாக ஒவ்வொரு பக்கத்திலும் எழுதியதைப் பார்க்கும்போது அழகான கோலம் போட்டதைப் போலவோ, கோயிலில் காணப்படுகின்ற சிற்ப வரிசையினைப் போலவோ இருக்கும்.  தட்டச்சுப் பயிற்சியைப் போலவே சுருக்கெழுத்துப் பயிற்சியும் ஒரு கலையியல் ரசனையோடு மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.  

குறிப்பிட்ட மாதிரியான சொற்களுக்காக அதையொத்த சுருக்கக் குறியீடுகளை எழுதும்போது பல சொற்களைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பயிற்சிக்கால நிறைவில் ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களை ஒரே குறியீடாக  எழுதும் பழக்கம் இயல்பாக வந்துவிடும்.  

நோட்டின் நடுவே ஒரு கோட்டினை போட்டு இரண்டாகப் பிரித்துக்கொள்வேன். எந்த அளவிற்கு சுருக்கெழுத்துக் குறியீட்டை (Stroke for word/sentence) சிறிதாக எழுத முடியுமோ அந்த அளவிற்குச் சிறிதாக எழுதுவேன். புள்ளி வைக்கவேண்டிய இடங்களில் இடைவெளி விட்டுவிடுவேன். இவ்வாறான உத்திகள் குறிப்பிட்ட நிமிடத்தில் அதிகமான சொற்களை/சொற்றொடர்களை எழுத முடியும். சுருக்கெழுத்துப் பயிற்சியைப் பின்பக்கத்தில் எழுதுவதில்லை. பயிற்சியின்போது பின் பக்கத்தில் எழுதாமல் அடுத்த பக்கத்தில் எழுதுவது வழக்கம்.  பக்கங்கள் முடிவுற்ற பின் நோட்டை முழுதாகத் திருப்பி எழுதுவார்கள். ஒரு பக்கத்தை முடித்து அடுத்த பக்கத்தில் எழுதுவதற்காக தாளைப் புரட்டும்போது எவ்விதச் சலனமோ, பதட்டமோ இருக்கக்கூடாது. 

எழுதும் குறியீட்டில் ஐயமிருப்பின் சுருக்கெழுத்து அகராதியைப் பார்த்துக்கொள்வேன். அதிலுள்ள  சொற்களுக்குரிய குறியீடுகளைப் பயன்படுத்தும்போது புதிய சொற்களை அறிந்துகொள்ளவும், வேகத்தை அதிகப்படுத்தி எழுதவும் முடியும். 

என்னுடன் பல நண்பர்கள் சுருக்கெழுத்துப் பயிற்சி மேற்கொண்டபோதும் மிகச்சிலரே தொடர்ந்து எழுதினோம். டிசம்பர் 1978இல் சுருக்கெழுத்து கீழ் நிலைத் தேர்வினை (ஒரு நிமிடத்திற்கு 80 சொற்கள்) தட்டச்சுப்பயிற்சி நிறுவனம் மூலமாகவும், அடுத்தடுத்த தேர்வுகளை நேரடியாகவும் எழுதி வெற்றி பெற்றேன். 

பொறுமை, நிதானம், ஈடுபாடு உள்ளிட்ட குணங்கள் இருந்தால்தான் இப்பயிற்சியைத் தொடர முடியும். மிக எளிது என நினைத்து எழுதினால்  வெற்றி பெறலாம். எழுதுவது சிரமம் என நினைப்பவர் தொடர்வது அரிதே. கல்லூரியில் ஆசிரியர்கள் பாடம் நடத்தியபோதும், பின்னர் பணியில் சேர்ந்தபோதும், மாணவர்களுக்கு கற்றுத்தரவும் சுருக்கெழுத்து பெரிதும் உதவியது.  அது தொடர்பான அனுபவங்களைப் பிறிதொரு பதிவில் காண்போம்.

14 செப்டம்பர் 2022 மாலை பதிவு மேம்படுத்தப்பட்டது.

10 comments:

  1. தட்டச்சுத் தேர்வு என்பது 30 லிருந்து ஆரம்பித்து என்று வந்திருக்கவேண்டுமோ?

    நான் தட்டச்சு ஹையரிலும் முதல் வகுப்பு. ஹை ஸ்பீட் எழுதணும் என்று ரொம்ப ஆசை. நிறைவேறவில்லை.

    சுருக்கெழுத்து கற்றுக்கொள்ள ஆரம்பித்து நேரமின்மையால் விட்டுவிட்டேன். இப்போது சுருக்கெழுத்துக்கு வேலையில்லாமல்போய்விட்டது, காலமாற்றத்தின் காரணமாக. எழுதுவது, எழுதியதைப்பிழையறப் படிப்பது என்பதே பெரும் திறமைதான்.

    ReplyDelete
    Replies
    1. டிசம்பர் 1978இல் சுருக்கெழுத்து கீழ் நிலைத் தேர்வினை (ஒரு நிமிடத்திற்கு 80 சொற்கள்) என்றிருக்கவேண்டும். தற்போது திருத்தம் செய்துவிட்டேன். நன்றி.

      Delete
  2. கும்பகோணம் சார்ங்கபாணி கோவில் வெளிச்சுற்றில் (மதிலுக்கு உள்புறம்) நிறைய பேர், அரசுத் தேர்வுகளுக்காகப் படித்துக்கொண்டிருப்பதை நிறைய தடவை பார்க்கிறேன். வெயில் அதிகமாகும்போது கோவில் மண்டபத்திலும் மற்ற நேரங்களில் குழுவாக வெளிச்சுற்றிலும் பலர் டி என் பி எஸ் ஸி தேர்வு போன்று பல தேர்வுகளுக்குப் படிக்கிறார்கள். அமைதியான இடம்.

    ReplyDelete
  3. எனக்கு வெகுகாலமாக இந்த சுருக்கெழுத்து கற்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதற்கான வழிமுறைகள் தெரியாமல் இருந்து விட்டேன்.

    தங்களது அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  4. மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்!
    தாத்தா காலத்திய, உட்கார்ந்து எழுதுவதற்கான சிறிய மேஜையைப்பற்றி படித்ததும் நானும் அந்த காலத்தில் அப்படி அமர்ந்து படித்த நினைவு வந்து விட்டது. அப்போதெல்லாம் எதற்கெடுத்தாலும் கூடத்திலும் முற்றத்திலும் அமர்ந்து, படுத்து விளையாடிய நாட்கள் - அது ஒரு பொற்காலம்!
    நானும் சுருக்கெழுத்து பயில ஆரம்பித்து விட்டு விட்டேன். ஆனாலும் அந்த எழுத்தில் இருந்த ஆர்வம் இப்போதும் இருக்கிறது! எப்போதும் என்னுடனேயே வைத்திருப்பேன். சென்ற மாதம் தான் ஊருக்குப்போகும் படித்த புத்தகங்களிடையே அதையும் எடுத்து வைத்து விட்டேன்.

    ReplyDelete
  5. சுருக்கெழுத்து சேர்ந்து தொடர முடியாமல் போன வருத்தம் எனக்கு உண்டு. தட்டச்சு ஹையர் முடிக்க முடிந்தது.

    உங்கள் அனுபவம் அருமை. சுருக்கெழுத்து பல வகைகளிலும் பயன்படும்

    கீதா

    ReplyDelete
  6. நீங்கள் சொல்லியிருப்பது போல் பொறுமையும் ஈடுபாடும் மிக மிக அவசியம்

    கீதா

    ReplyDelete
  7. சுருக்கெழுத்து அனுபவம் அருமை.

    சிறிய மேஜை (writing desk) இருந்தது. இப்போது தேவை இல்லாமல் இடத்தை அடைக்கிறது என்று பிள்ளைகள் தேவைபடும் உறவினர் குழந்தைக்கு கொடுத்து விட்டார்கள்.

    ReplyDelete
  8. ஆங்கிலமும் தமிழும் தட்டச்சு உயர்நிலை முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றபின் சுருக்கெழுத்தில் சேர்ந்தேன்.  ஏனோ மனம் ஒன்றவே இல்லை.  அந்தக் கலை எனக்கு கை வரவில்லை! 

    ReplyDelete
  9. சுருக்கெழுத்து கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் என்றும் உண்டு... ஆனால் நடக்கவில்லை... இருந்தாலும் அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்திய குறள் இருப்பதில் மகிழ்ச்சி...

    ReplyDelete