"அழகியல் கோட்பாடுகள் என்பதனை வரையறுக்கும்போது அறிவுசார் துறைகளிலும், இயற்கையிலும் மற்றும் மனிதனின் செயல்பாடுகளிலும் கலைத்துறையில் பார்க்கும் மெய்யியல் அனுபவம் என்று கூறலாம்." (ப.2)
"தமிழகத்தில் அழகியல் கோட்பாடு இதுவரை தனியாக தோற்றுவிக்கப்படவில்லை எனக் குறிப்பிடலாம். ஆனால் அழகு மற்றும் அழகியல் தொடர்பான சிந்தனைகளும், ஆதாரங்களும் அதிகமாக இலக்கியங்கள் வாயிலாகப் பெறப்படுகின்றன. தொல்காப்பியம் முதலாக வழிவழியாக வந்த இலக்கிய மரபுகள் அழகியல் கோட்பாடுகள் அட,ங்கியுள்ளதாகக் காணப்படுகின்றன." (ப.5)
"......ஒரு காலைப்பொழுது இயற்கைக்காட்சியை வரையும்பொழுது காலைப்பொழுது ஒவ்வொரு கலைஞனுக்கும் மாறுபட்ட காட்சியாக இருக்கும். ஒரே இடக்காட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு நாட்களுக்கும் வித்தியாசங்கள்., மாற்றங்கள் பல நிகழ்கின்றன. அதேபோல் ஒளி, நிழல் வித்தியாசம் அடைகிறது. இக்காரணத்தை வைத்துப் பார்க்கும்போது ஒவ்வொரு கலைப்படைப்பும் முன்னால் படைக்கப்படாத கலைப்படைப்பாகத் தோன்றுகிறது. அவ்வாறே சிற்பக்கலைப் படைப்பும் தோன்றுகிறது எனக் கருதலாம்." (ப.31)
"சிற்பிகள் விளக்கத்தன்மையோடு நின்றுவிடாது உணர்வுகளை அழகிய தன்மையோடு கோடுகளைக் கொண்டு சிற்பங்களைப் படைக்கின்றனர். அதனால் சிதைந்துபட்ட சிற்பத்தின் ஒரு பகுதி கிடைப்பினும் நம்மால் அதனை இரசிக்க முடிகிறது." (ப.39)
"கோயில் சிற்பங்களில் காணப்படும் சிற்ப உருவங்களை அமைப்பதற்கு மிக முக்கியமானது தாள அளவு ஆகும். சிற்பங்களுடைய பல்வேறு உறுப்புகளின் நீள அகலங்களை ஒப்புநோக்கி, தொடர்புபடுத்தி இலக்கணம் கண்டு, சிற்பங்களை அழகுறச் சமைக்க, சிற்பத்தின் முக உயர அளவையே சிற்பக் கலைஞர்கள் கைக்கொண்டுள்ளார்கள்." (ப.45)
"சாந்தம் அல்லது சாந்தரசம் என வடமொழியில் கூறப்பட்டுள்ளதனைத் தொல்காப்பியர் கூறவில்லை. ஒருவேளை அதையும் வெளிப்படுத்தாத அல்லது வெளிப்படுத்தக்கூடாத அமைதியை மெய்ப்பாடுகளில் கூறவேண்டாம் என்று கூறாது விட்டிருக்கலாம் என்றாலும் அமைதி அல்லது சாந்தம் என்னும் ரசத்தைக் கலைகளில் காணலாம். உதாரணமாக புத்தர், சிவபெருமான் முதலியோர் தியான நிலையில் காட்டப்பட்டிருக்கும் சிற்பங்களைக் கூறலாம்.....தொல்காப்பியர் கூறும் எண்வகை மெய்ப்பாடுகளும் கோயிற்சிற்பங்களில் மற்றும் தற்காலத்தில் செய்யும் கோயில் சிற்பங்களிலும் நவீன சிற்பங்களிலும் வெளிப்படுகின்றன...." (ப.75)
"மேலை நாட்டுக் கலை விமர்சகர்கள் மேலை நாட்டு சிற்பங்களில் ஓவியங்களில் இசங்களைப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் தமிழகச் சிற்பக்கலையில் பிரித்துக்கூறாமல் மேலை நாட்டவர் கூறும் அத்துணை இசங்களும் பிரித்து ஆய்வுபடுத்தாமல் கலந்து காணப்படுகிறது...." (ப.91)
"தமிழகக் கோயில் கலையில் சிற்பங்கள் சமயம் சார்ந்தவை. அதாவது தத்துவம், கலை, சமயம் ஒன்றோடொன்று பிணைந்து காணப்படுகின்றன. ஆனால் தமிழகத்தின் நவீனச் சிற்பக்கலையுடன் ஒப்பிடுகையில் கலை கலைக்காகவே என்ற கூற்று ஒப்புநோக்கத்தக்கதாக உள்ளது எனலாம்." (ப.107)
"தொல்காப்பியத்தின் எண் வகை மெய்ப்பாடாக ரசம் நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என எட்டாகப் பிரித்துக் குறிப்பிடுகிறார்." (ப.118)
நூலாசிரியர், வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் கலைஞர்களின் பெயர்களையும், அழகியல் மற்றும் சிற்பக்கூறுகள் மற்றும் கோட்பாடுகள் தொடர்பான சொற்களையும் தெளிவிற்காக ஆங்கிலத்திலும், ஓவிய மற்றும் சிற்ப அமைப்பு, வடிவங்கள் தொடர்பான முறையைப் பற்றி அடைப்புக்குறிக்குள் தமிழிலும் தந்துள்ள விதம் சிறப்பாக உள்ளது. பல வகையான இசக்கோட்பாடுகளைப் பற்றி விவாதிக்கும்போது புனைவியல் என்ற நிலையில் நூலாசிரியர் தான் வடித்த சிற்பத்தின் ஒளிப்படத்தைத் தந்துள்ள விதம் கலையின்மீதான அவருடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்துகிறது. அழகியல் கோட்பாடுகள் அழகியல் தன்மையோடு நூலில் இடம்பெற்றுள்ளது. வாசகர்கள் ரசனையோடு தம்மை ஈடுபடுத்திப் படிக்கும் வகையில் சிறப்பான நூலைப் படைத்துள்ள ஆசிரியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
நூல் : தமிழர் சிற்பக்கலையில் அழகியல் கோட்பாடுகள்ஆசிரியர் : சு. திருநாவுக்கரசு (அலைபேசி 95009 78191)
பதிப்பகம் : தாழி புத்தகக் கடை, 33, செங்குந்தர் வீதி, புதுச்சேரி
ஆண்டு : 2021
விலை : ரூ.200
சுவாரஸ்யமான தகவல்கள். நல்லதொரு அறிமுகம்.
ReplyDeleteநூலின் விவரிப்பு சிறப்பான முறையில் இருக்கிறது.
ReplyDeleteஆசிரியருக்கு வாழ்த்துகள்
நம்முடைய கலைத் திறன் ஒப்பு உவமைகளுக்கு அப்பாற்பட்டது..
ReplyDeleteசுவாரஸ்யமான தகவல்களுடன் நூல் அறிமுகம் சிறப்பு
ReplyDeleteகீதா