26 October 2025

தேனுகா : 11ஆம் ஆண்டு நினைவு

தேனுகா அவர்களின் 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று (25.10.2025) மாலை கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் கழக அமைப்பாளர் திரு பாலுஜி என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலையில் நடைபெற்றது.

உள்ளூர்ப் பிரமுகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலர்  கலந்துகொண்டு அவருடைய பெருந்தன்மை, கலை ரசனை, விட்டுக்கொடுத்துப்பேசும் தன்மை, மாற்றுக்கருத்துக்கொண்டோரிடமும் இன்முகத்துடன் பழகும் பாங்கு, அவருடைய நட்பினால் தாம் பெற்ற அனுபவம் என்ற பல நிலைகளில் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.






அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர். அவருடனான என்னுடைய நட்பினைப் பற்றிப் பேசும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். 

"தேனுகா என்ற பெயரைக் கேட்டாலே அவருடைய சாதனைகள் நினைவிற்கு வரும். அவரைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்வதில்  மகிழ்கிறேன். அவருடைய கலைத்துறை சார்ந்த செயல்பாடு, என்னுடைய ஆய்வு தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணைப்பு என்ற வகையில் அவருடைய நட்பு அமைந்தது. அவ்வப்போது நாளிதழ்களில் அவருடைய செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்தபோதுதான் அவரைப் பற்றி அறிந்தேன். அதனடிப்படையில் அவரை முதன்முதலாக அவர் பணியாற்றிய, கும்பகோணம் பொற்றாமரைக்களக்கரையில், மூர்த்திக்கலையரங்கை அடுத்திருந்த பாரத மாநில வங்கி அலுவலகத்தில் சந்தித்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் என் பௌத்த ஆய்வினைப் பாராட்டினார். திருவலஞ்சுழியிலும், புகழ்பெற்ற களம்கரி ஓவியக்கலைஞர் இருந்த சிக்கல்நாயக்கன்பேட்டை (நான் பேசும்போது இவ்விடத்தில் பெயரை மறந்துவிட்டேன். பின்னர் திரு ஆடலரசன் அவ்வூரின் பெயரை நினைவுபடுத்தினார்) அருகிலும் புத்தர் சிலைகள் இருந்ததாகத் தான் கேள்விப்பட்டதாகக் கூறினார். 

அவர் கூறிய திருவலஞ்சுழி சிலை சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதை, 1940இல் மயிலை சீனி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவரிடம் கூறினேன். பிறிதொரு பயணத்தில் அவர் சொன்ன மற்றொரு சிலையைப் பார்க்கச் சிக்கல்நாயக்கன்பேட்டைக்குச் சென்றபோது பல வருடங்களுக்கு முன் அம்மணசாமி என்ற ஒரு சிலை இருந்ததாகவும், தற்போது இல்லை என்றும் கூறினர். பின்னர் அங்கு ஓவியக்கலைஞரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து திரும்பினேன். 

தமிழ் விக்கிப்பீடியாவில் தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள், தஞ்சாவூர் மாவட்ட முக்கிய நபர்கள், நான் படித்த பள்ளி, கல்லூரி, நூலகம் என்ற நிலைகளில் பதிவுகளைப் பதிய ஆரம்பித்தபோது முக்கிய நபர்கள் என்ற வகையில் முதலில் மனதிற்கு வந்தவர் தேனுகா. அவரிடம் சில விவரங்களைப் பெற்று விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பதிவினை செப்டம்பர் 2014இல் தொடங்கினேன்.  ஒவ்வொன்றாகப் பதிந்துவரும்போது அவருடைய புகைப்படத்தையும் பதிவில் இணைத்தேன். சக விக்கிப்பீடியர்கள் புகைப்படத்தைப் பதியும்போது சில நெறிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அவரிடம் எழுத்து அனுமதி பெற்றுப் பதிவில் இணைத்தால் காப்புரிமை சிக்கல் எழாது என்று கூறவே அவரிடம் அதை அனுப்பும்படிக் கேட்டேன். 

வாய்ப்பிருப்பின் நேராகவே கும்பகோணம் வந்து அவரைப் புகைப்படம் எடுப்பதாகக் கூறினேன்.  மறுநாள் அனுப்புவதாகக் கூறினார். நான் புகைப்படத்தை எதிர்ப்பார்த்த வேளையில் அவர் இயற்கையெய்திய செய்தி இடியாய் வந்தது. கும்பகோணத்தில் அவருடைய வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினேன். அவர் பற்றிய பக்கத்தை ஆரம்பித்து அவருடைய மரணச்செய்தியைப் பதிவில் சேர்க்கவேண்டிய சூழல் எனக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்தது. நான் பதிய எண்ணி அவருடைய பக்கத்தைத் திறந்தபோது சக விக்கிப்பீடியர் தினமணி செய்தியை மேற்கோள் காட்டி அவர் இயற்கையெய்திய செய்தியை இணைத்திருந்தார். அவருடைய புகைப்படமும் பிறிதொரு விதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

தினமணி நாளிதழில் அவர் எழுதிய தொடரைப் பற்றி அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்போது நான் கூறிய சில தகவல்களை கூடுதல் தகவல்கள் என்று கூறி மனம் மகிழ்ந்தார். அவருடைய இவ்வாறான மற்றவர்களின் கருத்தைக் கூர்ந்து கேட்டு, ஏற்கும் பழக்கம் என்னை அதிசயிக்கவைத்தது.

தி இந்து நாளிதழின் சகோதர இதழான ப்ரண்ட்லைன் இதழை அவ்வப்போது வடிவமைப்பு மாற்றம் செய்வார்கள். ஒரு முறை அவ்வாறு மாற்றம் பெற்றபோது சத்யஜித்ரே இருந்தால் இந்த வடிவமைப்பை வரவேற்றிருப்பார் என்ற குறிப்பு அவ்விதழில் இடம்பெற்றிருந்தது. அவ்வாறே தற்போது தேனுகா இருந்திருந்தால் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் இதழின் வடிவமைப்பைப் பாராட்டியிருப்பார். அவருடைய கலை ரசனை அத்தகையது.

இத்தகு புகழ் பெற்ற கலைஞரின் நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வது நம் அனைவரின் கடமை."

கழகம் வெளியிடும் இதழ் அன்னாரை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. அவரைப் பற்றிய பாலுஜியின் கவிதையுடன் அவருடைய படத்தைக் கொண்டிருந்த அவ்விதழில் தேனுகாவின் சிறப்பியல்புகள் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக அவர் நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன.

அவரைப் பற்றிய நினைவோடு அங்கிருந்து, திரு பாலுஜி அவர்களுக்கும், நண்பர்களுக்கும்  நன்றி கூறிவிட்டுக் கிளம்பினேன். நினைவு தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அம்மாமனிதரை மறக்கமுடியுமா?

-----------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி : திரு ஆடலரசன், 
திரு அயூப்கான்/களஞ்சியம் இதழ்
-----------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்

1 comment:

  1. எனதினிய நண்பர் தேனுகா எனும் சீனிவாசன், சகோதரராய் திகழ்ந்த வரின் நினைவூட்டலுக்கு எனது நன்றி.

    ReplyDelete