பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம் எழுதியுள்ள காந்தியத்தடம் என்னும் நூல் காந்தியும் அம்பேத்கரும், தீவிர இந்திய தேசியவாதிகளின் பாசறை (லண்டன் இந்தியா விடுதி), காந்தியும் லண்டன் இந்தியா விடுதியும், காந்தியும் பகத்சிங்கும், அரசியல் நிர்ணய சபை வரலாறு, காந்தியும் நேதாஜியும், காந்தி தலைமையேற்ற பெல்காம் காங்கிரஸ் 1924, காந்தியும் வ.உ.சி.யும், குருவாயூர் ஆலய நுழைவு சத்தியாக்கிரகம் 1931-32, காந்தியின் மதம் ஆன்மிகம், காந்தியத் தடம்: தென்னாப்பிரிக்கப் பயண அனுபவங்கள், தமிழ்நாட்டில் எழுச்சியுடன் நடைபெற்ற ஆகஸ்ட் புரட்சி 1942, “மகாத்மா காந்தியைக் காப்பாற்றத் தவறினேன்”-பேராசிரியர் ஜெக்தீஷ் சந்திர ஜெயின் குறிப்புகளைப் பற்றி ஓர் அலசல், காந்தியும் பெரியாரும் என்னும் 14 தலைப்புகளையும், துணைநூற்பட்டியலையும் கொண்டு அமைந்துள்ளது. இவை சத்திய ஒளி மகாத்மா நூலிலும், சர்வோதயம் மலர்கிறது மாத இதழிலும் வெளிவந்த கட்டுரைகளாகும்.
காந்தி எக்காலத்திற்கும் உரியவர், காந்தியம் என்பதானது எக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை நூலாசிரியர் பல நிகழ்வுகளுடன் நிறுவியுள்ள விதம் போற்றத்தக்க வகையில் அமைந்துள்ளது. காந்தியிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டோமோ என்று ஐயப்படுகின்ற காலகட்டத்தில் அவரை நினைவுகூர்வதானது அடுத்தடுத்த தலைமுறைக்கும், வரலாற்றுக்கும் முக்கியத் தேவையாக அமைகிறது. சிரமேற்கொண்ட ஒரு நற்பணியை நூலாசிரியர் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் மிகவும் எளிய நடையில் சான்றுகளோடு நிறுவியுள்ளதோடு, பல ஐயங்களைத் தெளிவுபடுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கதாகும். காந்தியத் தடத்தில் சிறிது தூரம் நாமும் பயணிப்போம்.
“காந்தியும் அம்பேத்கரும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொண்டிருந்ததைப் போன்று நாமும் அவர்களைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். நம் மனங்களில் புகழ் மணக்க வாழ்ந்து வரும் இருவரின்மேல் புழுதிவாரித் தூற்றாமல் இருப்பதே அவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.” (ப.39)
“இந்தியாவுக்கு வெளியே அமைந்த மிகவும் ஆபத்தான நிறுவனம் என்று இந்தியா விடுதியைப் பற்றி இங்கிலாந்து பத்திரிக்கைகள் ஏன் எழுத வேண்டும்?....இலண்டன் காவல் துறையால் ஏன் இந்தியா விடுதி தேசத் துரோக மையம் என்று கருதப்பட வேண்டும்?... இவ்விடுதியில் இருந்தோர் ஆங்கிலேயருக்கு எதிராகச் செயல்பட்டதால், இது இவ்வாறு அழைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளலாம்.” (ப.43)
“பகத்சிங்கின் செயல்கள் காந்தியின் அறநெறிப்பட்ட அரசியலுக்கு எதிரானது. அதனை காந்தி ஏற்காவிட்டாலும் பகத்சிங்கின் தியாகத்தை நாட்டுப்பற்று மிக்கதாகவே காந்தி கருதினார். எனினும் நாட்டுப்பற்றிற்காக தங்கள் இன்னுயிரை எவரும் இழப்பதை காந்தி ஒருபோதும் விரும்பவில்லை என்பதை அவருடைய செயல்களிலிருந்து நாம் புரிந்துகொள்ள முடியும்.” (ப.83)
“இந்திய அரசியல் நிர்ணய சபை வரலாறு நூறாண்டு கடந்தது. மிண்டோ-மார்லி சீர்திருத்தம் (1909) தொடங்கி, அமைச்சரவை தூதுக்குழு (1946) வரை பல்வேறு கோரிக்கைகள், தீர்மானங்கள், போராட்டங்கள் என்று பல முறை திலகர், காந்தி, நேரு, பெசண்ட் ஆகியோர் அரசியல் நிர்ணய சபையை அமைக்க வேண்டி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.… ” (ப.101)
“இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும், அந்தச் சுதந்திரத்தைக் காலதாமதமானாலும் அகிம்சை முறையில்தான் பெறவேண்டும் என்று காந்திஜி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். அதற்கு மாறாக இந்தியாவுக்கு சுதந்திரம் வேண்டும், அதுவும் உடனடியாக வேண்டும், அதற்கு எந்த வழிமுறையும் ஏற்றதுதான் என்று சுபாஷ் கருதினார். சுதந்திரத்தைப் பெற சாத்வீக முறையை மட்டும் நம்பியிருக்கக்கூடாது என்று அவர் கருதினார்.” (ப.114)
“காங்கிரஸின் ஆன்மாவாகவும் வழிகாட்டியாகவும் கருதப்பட்ட காந்தி பெல்காம் காங்கிரசுக்குத் தலைமையேற்றது காங்கிரசின் வரலாற்றுப் பக்கங்களில் சிறப்பாக இடம்பிடித்தது.” (ப.126)
“தமது கொள்கைகளை முற்றிலும் ஏற்க வ.உ.சி. மறுத்திருந்தாலும் அவர்மீது காந்தியடிகள் அன்பு செலுத்திவந்தார். வ.உ.சி.யின் களங்கமற்ற உள்ளத்தை, தன்னலமற்ற தேசபக்தியை அடிகளார் அறிந்ததே இதற்குக் காரணமாகும். காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே தூத்துக்குடியிலிருந்து அவரிடம் கடிதத்தொடர்புகொண்டிருந்தார் வ.உ.சி.” (ப.134)
“கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் விடுக்கப்பட்ட பிரகடனம், குருவாயூர் ஆலயத்தில் மட்டுமல்ல, இதன் விளைவாக பின்னாளில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் உள்ளிட்ட பல ஆலயங்களிலும் தீண்டத்தகாதார் நுழைய வழிசெய்தது என்றே கருதலாம்...தீண்டாமையை எதிர்த்தும், தீண்டத்தகாதாரை ஆலயங்களில் நுழையச் செய்யவும் 1933-34 ஆண்டுகளில் காந்தி இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.” (ப.154)
“காந்தி தன்னை ஒரு சனாதனி என்று கூறிக்கொண்டார். ஆனால் அவர் நம்பிய சனாதன இந்து மதத்தில் காலங்காலமாகப் புரையோடிப் போயிருந்த மூட நம்பிக்கைகளைக் களைய சனாதனிகளுடன் கடுமையாகப் போராடினார்.” (ப.158)
தென்னாப்பிரிக்காவில் இனவெறியை எதிர்த்து காந்தி நடத்திய போராட்டங்கள் தொடர்புடைய இடங்களுக்கும், தென்னாப்பிரிக்க விடுதலை வீரர் நெல்சன் மண்டேலா தொடர்புடைய இடங்களுக்கும் நூலாசிரியர் நேரில் சென்று, அந்த அனுபவத்தை உரிய புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளவிதம் வாசிப்போரை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இந்நூல் என்னை சுமார் 60 ஆண்டுகளுக்கு பின்னோக்கி, காந்தியைப் பற்றிய பல்வேறு நிகழ்வுகளை எங்களிடம் கதையாகக் கூறும் எங்கள் தாத்தா ரெத்தினசாமி அவர்களை நினைவுபடுத்தியது. கும்பகோணத்தில் எங்கள் வீட்டு முதன்மை வாயிலின் நிலைக்கு மேல் புன்னகைக்கும் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை எங்கள் தாத்தா வைத்திருந்தார். அவரைப் பின்பற்றி எங்கள் வீட்டில் காந்தியின் படத்தினை நானும் வீட்டு வாயிலின் நிலைக்கு மேல் வைத்துள்ளேன். காந்தியத்தடத்தின் ஒரு விதமான தாக்கமாகவே இதனை நான் உணர்கிறேன். இந்நூலைப் படிப்போர் மனதில் அத்தடத்தில் பயணிக்கிறோமா என்ற எண்ணம் இயல்பாக எழும். அவ்வாறு பயணிக்காதோர் இனி அவ்வழியைக் கடைபிடிக்க ஓர் உந்துகோலாக இந்நூல் உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். இது வளரும் தலைமுறையினருக்கு ஒரு வழிகாட்டி ஆவணமாகும். வரலாற்றுக்குப் பெரும் பங்களித்துள்ள நூலாசிரியரின் முயற்சி போற்றத்தக்கதாகும். அவருக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
தலைப்பு : காந்தியத் தடம்
ஆசிரியர் : பேராசிரியர் கோ.விஜயராமலிங்கம்
பதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை 600 050, தொலைபேசி 044-26251968/26258410
பதிப்பாண்டு : முதல் பதிப்பு, ஜனவரி 2026
விலை : ரூ.255
-----------------------------------------------------------
நன்றி : புக் டே இணையதளம்
-----------------------------------------------------------



No comments:
Post a Comment