Showing posts with label விக்கிப்பீடியா. Show all posts
Showing posts with label விக்கிப்பீடியா. Show all posts

28 May 2026

விக்கிப்பீடியா

விக்கிப்பீடியாவில் ஜூன் 2013இல் எழுத ஆரம்பித்து பெற்ற பல அனுபவங்களைப் பெறமுடிந்தது. ஆங்கிலத்தில் இல்லாத, தமிழ், தமிழ்ப் பண்பாடு போன்றவை தொடர்பான பதிவுகள் அனைவருக்கும் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுத ஆரம்பித்தேன். நான் கடந்து வந்த பாதை புதிய பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். சக விக்கிப்பீடியர்களின் துணையுடன் என் பயணம் தொடரும்.
  • பயனராகாமல் முதல் பதிவு, நீக்கம், ஜுன் 2013
  • என்னைப் பற்றி எழுதுதல், தலைப்புப் பிரிப்பு, பயனர் ஆதல்
  • முதல் பதிவு எழுதி மேம்படுத்துதல், 6 ஜுலை 2014
  • முந்தைய மாத 250 தொகுப்புகளுக்காக பாராட்டு பெறல், ஆகஸ்டு 2014
  • அசத்தும் புதிய பயனர், விடாமுயற்சியாளர், தொடர் பங்களிப்பு (ஆகஸ்டு 2014), சைவ சமயப் பங்களிப்பு (அக்டோபர் 2014) ஆகியவற்றுக்கான பதக்கங்கள் பெறல்.
  • விக்கிகாமன்சில் முதல் படிமம் பதிவு, 15 செப்டம்பர் 2014
  • முதற்பக்கத்தில் “உங்களுக்குத் தெரியுமா?” பகுதியில் நான் ஆரம்பித்த/ மேம்படுத்திய சரபேந்திர பூபாலக் குறவஞ்சி (15 அக்டோபர் 2014), ஆதுர சாலை (29 அக்டோபர் 2014), கங்கா ஆரத்தி (நவம்பர் 2014), ஆழித்தேர் (17 ஜுன் 2015), தஞ்சைப் பெருவுடையார் கோயில் (20 ஜனவரி 2016) கட்டுரைகளிலிருந்து தகவல்கள் வெளிவரல்


  • முகப்புப்பக்கத்தில் பங்களிப்பாளராக அறிமுகமாதல், 1 நவம்பர் 2015
  • என் கணக்கு தற்காவல் பயனர் உரிமைக்கு மாற்றப்படல், ஜுலை 2016
  • வேங்கைத்திட்டம் வெற்றியாளர், 260 பதிவுகள், மூன்றாம் இடம், 2019
  • ஆசிய மாதம் வெற்றியாளர், 115 பதிவுகள், இரண்டாம் இடம், 2019
  • விக்கிப்பீடியாவில் 1000 பதிவுகள் நிறைவு, ஏப்ரல் 2020


  • ஆங்கில விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில், “Did You Know?” பகுதியில், நான் ஆரம்பித்த Thukkachi Abatsahayesvar temple கட்டுரையிலிருந்து வெளிவரல், 20 ஆகஸ்டு 2017
  • ஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) திட்டத்தில் கலந்துகொள்ளல்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் முதன்முதலாக The Special Barnstar பதக்கத்தினைப் பெறல்
பதிவு அனுபவங்கள்


பேட்டிகள்/நாளிதழ் செய்திகள்


போட்டிகள்

நூல்


நிகழ்வுகள்/விக்கிப்பீடியா

நிகழ்வுகள்/பிற நிறுவனங்கள்
7.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

10 November 2025

விக்கிப்பீடியாவில் எழுதுதல்: அ.வ.வ.கல்லூரி

மயிலாடுதுறை, அ.வ.வ. கல்லூரித் தமிழாய்வுத் துறையின் ஸ்ரீலோசனி வரதராஜுலு அறக்கட்டளை சார்பாக 7.3.2024இல் விக்கிப்பீடியாவில் எழுதுதல் என்னும் பொருண்மையில் நிகழ்ச்சி நிரலில் கண்டபடி பயிலரங்கு நடைபெற்றது.






அப் பயிலரங்கில் திருவாரூர், கருவூலத் துறை துணை அலுவலரும், சக விக்கிப்பீடியருமான திரு கி மூர்த்தி அவர்களுடன் நானும் பயிற்சி உரை வழங்கினோம். நிகழ்விற்குக் கணிப்பொறித் துறைத் தலைவர் தலைமையுரையாற்றினார்.

இப்பயிலரங்கில் விக்கிப்பீடியாவில் எழுதுவது தொடர்பான ஓர் அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. விக்கிப்பீடியாவில் நான் எழுத ஆரம்பித்தது முதல், நான் எழுதிவருகின்ற பொருண்மைகளைக் குறித்துப் பேசியதோடு, கட்டுரைகளை ஆரம்பிப்பது மிகவும் எளிதானது என்றும் அந்தந்தப் பகுதி தொடர்பாக மாணவர்கள் கட்டுரை எழுதலாம் என்றும் கூறினேன். திரு கி.மூர்த்தி அவர்களின் உரை மூலமாகப் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன். 

பேராசிரியர்களும், மாணவர்களும் ஆர்வத்தோடு கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். அவர்களின் ஈடுபாடு பாராட்டும் வகையில் இருந்தது. அவர்கள் கேட்ட ஐயங்களுக்கு நாங்கள் இருவரும் மறுமொழி கூறினோம்.   மாணவர்களும் ஆசிரியர்களும் எழுதும் நிலையில் இரண்டாவது நிலையில் பயிலரங்கு தொடரும் எனத் தமிழாய்வுத்துறைத்தலைவர் முனைவர் தமிழ்வேலு தெரிவித்தார். அவருடைய முயற்சி சிறக்க என் வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.

03 October 2023

விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு: தஞ்சைக்கூடல்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆண்டுகள் நிறைவுற்று 21ஆம் ஆண்டு துவங்குவதைக் குறிக்கும் விழா தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 23-24.9.2023இல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை திரு மா.செல்வ சிவகுருநாதனும் திரு பி. மாரியப்பனும்  (சத்திரத்தான்) ஒருங்கிணைத்தனர்.


முதல் நாளன்று (23.09.2023) விக்கிப்பீடியாவின் சிஐஎஸ்-ஏ2கே அமைப்பும், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வி. திருவள்ளுவன் துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகிக்க, நோக்கவுரையினை திருவாரூர் கருவூல கூடுதல் அலுவலர் திரு கி. மூர்த்தி நிகழ்த்தினார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து வரவேற்புரையாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஸ்ரீபாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். 

துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றல். (உடன் இடமிருந்து : விக்கிப்பீடியர் பி.மாரியப்பன் (சத்திரத்தான்), விக்கிப்பீடியர் ஸ்ரீபாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், வளர்தமிழ்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், விக்கிப்பீடியர் கி.மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இரா.இந்து)

மேம்பாட்டுப்பயிற்சியின்போது பதிவு செய்த கல்லூரி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிந்து, புதிய கட்டுரைகளை எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, புதிய பயனராகப் பதியும் முறையை அறிந்துகொண்டனர். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச்சார்ந்த கட்டுரைகளைப் புதிதாகத் தொகுத்தனர். முன்னரே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தினர். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்குவதற்கான உத்திகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தம் பெயரில் பயனர் கணக்கினைத் தொடங்கினர். அவ்வாறாகத் தொடங்கப்படும் கணக்கில் பதியப்படும்போது ஒவ்வொருவரின் பங்களிப்பும் அறியவரும் என்றும், அதனால் அந்த முறையிலேயே தொடர வேண்டும் என்றும் அவர்களுக்குப் பயிற்றுநர்கள் வலியுறுத்தினர். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது, மிகவும் அணுக்கமாக விக்கிப்பீடியாவை அணுகலாம், எழுதலாம் என்பதானது பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தாமும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஓர் அவா இருந்ததைக் காணமுடிந்தது. விக்கிப்பீடியாவைப் பற்றியும், பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்களைப் பற்றியும் பயிற்றுனர்கள் சுருக்கமாக அறிமுகம் தந்தனர்.    

தமிழ் விக்கிப்பீடியா பயிற்றுநர்களாக பார்வதிஸ்ரீ, பா.ஜம்புலிங்கம், வெ.வசந்தலட்சுமி, தகவலுழவன், மா.செல்வகுருநாதன், ஞா.ஸ்ரீதர், பி.மாரியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். 

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பதிவாளர் (பொ), அறிவியல் துறைத்தலைவர், விக்கிப்பீடியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயனர்கள்

விழாவின் இரண்டாம் நாளன்று (24.9.2023) நடைபெற்ற பயனர்கள் கூடல் நிகழ்வில் வரவேற்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சுருக்கமாக தஞ்சாவூரைப் பற்றியும், விக்கிப்பீடியாவில் என்னுடைய அனுபவத்தையும் பேசினேன். இதே மேடையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்றதையும் உரையில் குறிப்பிட்டேன்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வரவேற்புரை 

குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.  அந்த வகையில் திரு மா.செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்தேன். இவ்வாறான விருதுகள் வளர்ந்து வரும் விக்கிப்பீடியர்களுக்கும்,  ஆர்வமாக செயலாற்றும் விக்கிப்பீடியர்களுக்கும் ஓர் உந்துதலாக இருப்பதோடு, பிற விக்கிப்பீடியர்கள் ஆர்வமாகப் பங்களிக்க உதவும் என்று நம்புகிறேன். 
 
விருது பெற்ற பயனர்கள்:
செயல்நயம் மிக்கவர் 
பார்வதிஸ்ரீ, நீச்சல்காரன், செல்வசிவகுருநாதன்
5000+ கட்டுரை எழுதியவர்
ஸ்ரீபாலசுப்ரமணியன், சத்திரத்தான்
அறிமுகப்பயனர்
ஷா.பத்ருநிஷா  
மா.செல்வசிவகுருநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், கி.மூர்த்தி, மா.செல்வசிவகுருநாதன், பா.ஜம்புலிங்கம்

தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை எடுத்துரைத்தார். 
மணி.மாறனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், தேனி.மு.சுப்பிரமணி, மணி.மாறன், பா.ஜம்புலிங்கம்
தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற தன்னார்வப் பயனர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டு கால வளர்ச்சி, கட்டுரைப் பதிவில் முன்னேற்றம், நெறிமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அடுத்தகட்ட நகர்வு, கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்தனர்.

அவர்களுடைய பேச்சு, இன்னும் எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைத் தந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அவர்கள் மறுமொழி தந்தனர். அப்போது, ஒவ்வொரு நாளும் கற்கிறோம் என்பதைப் போல பல புதிய செய்திகளையும், உத்திகளையும்  கற்றேன். 
விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்ற முதுகலை மாணவர்களுடன் பா.ஜம்புலிங்கம்

மதியம்  நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், கலைக்கூடம், தர்பால் ஹால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். போதிய நேரமின்மையைப் பொருட்படுத்தாது அவர்கள் ஆர்வமாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். 




நிகழ்வின் செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றன. துணைவேந்தரவர்களின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28 பிப்ரவரி 2024இல் உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு என்ற அறிவிப்பானது விக்கிப்பீடியர்களையும், தமிழின் மேன்மைக்காகப் பாடுபடுவோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த இலக்கு நோக்கி நகர இந்த அறிவிப்பானது ஓர் உந்துகோலாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியர்கள்
சுமார் 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, சுமார் 25 ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தற்போது முதுகலைப் பயிலும் மாணவர்களுடன் உரையாடியது ஒரு மறக்கமுடியாத அனுபவம். இம்மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.  

தி இந்து (ஆங்கிலம்), 23 செப்டம்பர் 2023


தினமணி, 24 செப்டம்பர் 2023


இந்து தமிழ் திசை, 24 செப்டம்பர் 2023

தினமலர், 25 செப்டம்பர் 2023

தினத்தந்தி, 25 செப்டம்பர் 2023


விழா அழைப்பிதழ்
 
இந்து தமிழ் திசை, 12 அக்டோபர் 2023


தினமணி, 12 அக்டோபர் 2023, ப.8


இதற்கு முன்னர் மதுரை, ஆனைக்கட்டி போன்ற இடங்களில் விக்கிப்பீடியா தொடர்பான கூடல்களில் கலந்துகொண்டபோதிலும் இதில் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவமாகும். நூல் ஆய்வுப்பணி காரணமாக முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், தொடர்ந்து விக்கிப்பீடியாவில் நான் எழுதி வருகிறேன். மூத்த விக்கிப்பீடியர்களின் பேச்சுகளும், வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினரின் ஆர்வமும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. நம்மால் முடிந்த வரையில புதிய கட்டுரைகளை எழுதுவோம், அதிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவோம்.  இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன் 1.57 லட்சம் கட்டுரைகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய மொழி விக்கிப்பீடியாவான தமிழ் விக்கிப்பீடியாவினை அடுத்த இலக்கிற்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒருமித்துப் பயணிப்போம். தமிழ் விக்கிப்பீடியாவினை முதன்மை இடத்திற்குக் கொணர நாம் அனைவரும் ஒன்று சேருவோம், வாருங்கள். 

விக்கிமேனியா, மதுரை, 14 ஆகஸ்டு 2022


விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை, ஆனைக்கட்டி, 26-28 ஜனவரி 2023


நன்றி : நாளிதழ்கள், படங்களைப் பகிர்ந்தவிக்கிப்பீடியர்கள், நண்பர்கள்

4 ஜூலை 2024இல் மேம்படுத்தப்பட்டது.

01 February 2023

வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை: 26-28 ஜனவரி 2023

2023 ஜனவரி 26-28இல் விக்கிப்பீடியாவின் வேங்கைத் திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை ஆனைக்கட்டியில் உள்ள ஸ்டர்லிங் உல்லாச விடுதியில் நடைபெற்றது. இதில் நான் கலந்துகொண்டு விக்கிப்பீடியாவிற்கு அப்பாற்பட்டு, அதன் சகோதர அமைப்பின் பணிகளையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றேன்.



பயிற்சிப்பட்டறையின் முதல் நாளன்று பயனர் என்ற முறையில் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். பிறரைப் பற்றியும் அறிந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் என்னுடைய பங்களிப்பினைப் பற்றியும், குடியரசு நாள் என்ற நிலையில் எங்கள் தாத்தா தொடங்கி வைத்த, எங்கள் இல்லத்தில் இன்றும் கொடியேற்றும் நிகழ்வினைப் பற்றியும் பேசினேன்.  




தொடர்ந்து விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் பற்றிய அறிமுகம்  ஆரம்பமானது. ஐந்து குழுவாகப் பிரிந்து கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்.  உள்ளடக்கம் மற்றும் வார்ப்புரு சார்ந்த அடிப்படைப் பயிற்சி, தொழில்நுட்பம், விக்கி பொதுவகம், விக்கிமூலம், விக்சனரி, விக்கிசெய்திகள், விக்கிதரவு, விக்கிப்பீடியாவின் கொள்கைகள், தகவற்பெட்டி அமைத்தல் மற்றும் இணைத்தல், மேஜிக் வேர்ட்ஸ், மேப் உருவாக்கம்  உள்ளிட்ட பல தலைப்புகளில் தொழில்நுட்பக்கலைஞர்கள் மிகவும் சிறப்பாக உரையாற்றினர். பயனர்கள் கேட்ட பல ஐயங்களுக்கு அவர்கள் மறுமொழி அளித்து, தெளிவுபடுத்தினர். பலவற்றிற்கு உரிய இணைப்புகளைச் சொடுக்கிக் காண்பித்து, மனதில் பதிய வைத்தனர். புதியவர்களை கட்டுரை எழுத பழக்கப்படுத்துதல், ஊக்குவித்தல், அவர்கள் எதிர்கொள்ளும் ஐயங்களுக்கு விடை தரல் உள்ளிட்டவையும் விவாதிக்கப்பட்டன. பஞ்சாபி, வங்காள மொழியைச் சார்ந்த பயனர்களும் வந்திருந்தனர். அவர்களில் சிலர் உரையாற்றினர். 

இக்கூட்டத்தில் பல மூத்த பயனர்களையும், வளர்ந்து வருகின்ற இளம் பயனர்களையும் சந்தித்து அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. பல ஐயங்களை மூத்த பயனர்களிடம் கேட்டறிந்தேன். இளைய பயனர்களோடு கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். பலரை நேரில் காணும் வாய்ப்பினைப் பெற்றேன்.  உள்ளடக்கம் என்பதற்கு அப்பாற்பட்டு தொழில்நுட்பம் என்ற வகையில் உரையாளர்கள் தத்தம் கருத்தினைப் பரிமாறிக்கொண்டபோது அதன் பரிமாணத்தை அறிந்து வியந்தேன். 

   . 

நிகழ்வினைச் சிறப்பாக நடத்திய பொறுப்பாளர்களுக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுதல், பொதுவகத்தில் ஒளிப்படம் இணைத்தல் என்பதற்கு மேலாக விக்கிமூலம், விக்கிதரவு உள்ளிட்டவற்றில் பல நிலைகளில் பங்களிக்க ஓர் உந்துதலை இந்த பயிற்சிப்பட்டறை தந்துள்ளதை உணர்கிறேன். அத்தகைய உந்துதலை விரைவில் செயல்படுத்துவேன்.


இதற்கு முன் மதுரையில் 14 ஆகஸ்டு 2022இல் நடைபெற்ற விக்கிமேனியாவில் கலந்துகொண்டபோது பெற்ற அனுபவத்தைவிட இது சற்றே வித்தியாசமானதாக இருந்ததை அறியமுடிந்தது.







ஒளிப்படங்கள் நன்றி  : சக விக்கிப்பீடியர்கள்

3 பிப்ரவரி 2023இல் மேம்படுத்தப்பட்டது. 

15 April 2022

மயிலாப்பூர் சப்த சிவத்தலங்கள்

மார்ச் 2022இல் அறக்கட்டளைச்சொற்பொழிவிற்காகச் சென்னை சென்றிருந்தபோது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் விழா நடைபெற்றுக்கொண்டிருந்ததை அறிந்தேன்.

அப்போது எனக்குக் கும்பகோணத்தில் கோயில் திருவிழாவில் கலந்துகொண்டு சென்றது நினைவிற்கு வந்தது. கோயிலைச் சுற்றி பெரிய அழகான வீதிகள். அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா வரும் காட்சியைக் கண்டு ரசித்து உடன் சிறிது தூரம் சென்றேன். அழகான பெரிய குளத்தைக் கண்டு சிறிது நேரம் அங்கே நின்றேன்.

கபாலீஸ்வரர் கோயிலுடன் தொடர்புடைய கோயில்கள் மயிலாப்பூரில் இருப்பதாகவும், அவற்றை ஒரே நேரத்தில் தரிசிப்பது சிறப்பு என்றும் கூறினர். அவை 1) கபாலீஸ்வரர் கோயில், 2) காரணீஸ்வரர் கோயில், 3) வெள்ளீஸ்வரர் கோயில், 4) மல்லீஸ்வரர் கோயில், 5) விருப்பாட்சீஸ்வரர் கோயில், 6) வாலீஸ்வரர் கோயில், 7) தீர்த்தபாலீஸ்வரர் கோயில் என்பனவாகும். இவற்றில் தீர்த்தபாலீஸ்வரர் கோயில் திருவல்லிக்கேணியில் உள்ளது. அனைத்துக் கோயில்களுக்கும் அடுத்தடுத்து சென்று சுமார் இரண்டு மணி நேரத்தில் தரிசனத்தை நிறைவு செய்தேன்.


கபாலீஸ்வரர் கோயில் விமானம்
அதிகாரநந்தியின்மீது கபாலீஸ்வரர் உலா

கபாலீஸ்வரர் கோயில் குளம்


வெள்ளீஸ்வரர் கோயில் விமானம்

மல்லீஸ்வரர் கோயில் விமானம் 

விருப்பாட்சீஸ்வரர் கோயில் நுழைவாயில்

தீர்த்தபாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

வாலீஸ்வரர் கோயில் நுழைவாயில்

காரணீஸ்வரர் கோயில் விமானம்

ஏழு சிவன் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, மாதவப்பெருமாள் கோயிலுக்கும், முண்டகக்கண்ணியம்மன் கோயிலுக்கும் சென்றேன்.



அட்டவீரட்டத்தலங்கள், சப்தஸ்தானத்தலங்கள், சப்தமங்கைத்தலங்கள் என்பதைப் போல இக்கோயில்களை சப்த சிவத்தலங்கள் என்று கூறுகின்றனர். கும்பகோணத்தில் மகத்தின்போதும் பிற விழாக்களின்போதும் ஒரே நாளில் 10க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுள்ளேன். அத்தகைய கோயில்களுக்குச் சென்ற நினைவினை மயிலாப்பூரில் உணர்ந்தேன். மன நிறைவோடு அங்கிருந்து திரும்பினேன்.

இவற்றுள் காரணீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர் கோயில், விருப்பாட்சீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், முண்டகக்கண்ணியம்மன் கோயில் ஆகிய கோயில்களுக்கு விக்கிப்பீடியாவில் பதிவு இல்லாத நிலையில் புதிய பதிவுகளை தொடங்கி உரிய ஒளிப்படங்களை இணைத்தேன். தீர்த்தபாலீஸ்வரர் கோயில் பதிவு இருந்த நிலையில் ஒளிப்படத்தை இணைத்தேன். இணைப்புகளைச் சொடுக்கி விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த கட்டுரைகளைக் காண அழைக்கிறேன். தொடர்ந்து அப்பதிவுகளை மேம்படுத்துவேன்.