31 October 2017

திரு கோ.சு.சாமிநாத செட்டியார் (GSS) நூற்றாண்டு மலர் : தொகுப்பு சீ.தயாளன்-சி.கோடிலிங்கம்

திரு கோ.சு.சாமிநாத செட்டியார் அவர்களின் நூற்றாண்டு விழா நினைவாக 29 அக்டோபர் 2017 அன்று திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீஸ்ரீ காசிவாசி முத்துகுமாரசாமித் தம்பிரான் சுவாமிகளால் அவர்களால் வெளியிடப்பட  நூற்றாண்டு விழா மலரின்  (தொகுப்பு : சீ.தயாளன், சி.கோடிலிங்கம், சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம், கும்பகோணம், 2017முதல் படியை பெறும் பேற்றினைப் பெற்றேன். 
நன்றி : தினமணி, 30 அக்டோபர் 2017 
இம்மலரில் கோ.நடராச செட்டியார் (மூவெழுத்தாலான மூலவர்), சி.கோடிலிங்கம் (நாம் கண்ட வள்ளல்), ருக்குமணி இரத்தினசபாபதி (மறைந்தும் மலர்ந்தான் குழந்தை சாமிநாதன்), குமரகுரு கோமளவல்லி (தர்மமும் தமிழ்க்கடவுளும்), பி.சோமலிங்கம் (அய்யா அவர்களைப் போற்றுவோம்), சீ.தயாளன் (தயாளன் கண்ட தருமராசா), விமலா தயாளன் (பரிவு, பாசம், பண்பு சார்ந்த பல்கலைக்கழகம்), சீனிவாசன் (உள்ளம் குளிர்ந்தேன்), கோ.மாறன் (என் வாழ்விற்கு வழிகாட்டி), சுந்தரேசன் (தடுத்தாட்கொண்டார்), பா.ஜம்புலிங்கம் (மாமனிதரின் வான்புகழ்),கன்னையன் (அறச்சாலையின் வழியே ஒரு தவப்பயணம்), இராமசேஷன் (மணிவிழா நாயகர்), கோ.பார்த்தசாரதி (நான் கண்ட சாமிநாதப் பெருவளளல்), எம்.அப்துல் ஹமீது (அவர் ஆசி என்றும் உண்டு), கோவிந்தராசன் (நன்னகர் கண்ட நயனுடைச் செல்வர்), மா.வைத்தியலிங்கம் (ஜி.எஸ்.எஸ்.அண்ணன்), சென்னையில் ஜி.எஸ்.ஸும் நூலகத்தவமும்) ஆகியோரின் கட்டுரைகளும், சாமிநாதன் அமிர்தவல்லி (ஜி.எஸ்.எஸ்.என்கிற மூன்றெழுத்தின் பெருமை), தெய்வத்தமிழ் மன்றம் (அண்ணலே வாழி), பால.இராசு (வள்ளல் பெருந்தகைக்கு நூற்றாண்டு விழா), கோ.பரிதி (ஜி.எஸ்.எஸ்.என்னும் சகாப்தம்), அரு.காந்தி (வழங்குவதை வாழ்வாக்கிக் கொண்ட வள்ளல்), மேகலா (ஓங்கிய ஒளியின் உத்தமர்), குரு. செயலட்சுமி (நாளும் அவரைப் பாடுவோம்) ஆகியோரின் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. சாமிநாத செட்டியாரின் (1917-1997) வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.
  • பெற்றோர் சி.சுப்பராய செட்டியார்-கோமளத்தம்மாள்
  • கல்வி : நேட்டிவ் உயர்நிலைப்பள்ளி
  • நிர்வாக அறங்காவலர் : ஆதிகும்பேசுவரர் கோயில்
  • கும்பாபிஷேகக்குழுத்தலைவர் : காசி விசுவநாதர் கோயில்
  • குழு உறுப்பினர் : கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில்
  • உறுப்பினர் : கும்பகோணம் நகர்மன்றம்
  • நிருவாகக்குழு உறுப்பினர் : நேடிவ் உயர்நிலைப்பள்ளி
  • நிருவாகக்குழு இயக்குநர் : குடந்தை நில அடைமான வங்கி, சிட்டி யூனியன் வங்கி
  • நிறுவனர் வள்ளலார் மாணவர் இல்லம் 
  • நிறுவனர் : சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் 
  • தினமும் கும்பேஸ்வரர் கோயில் மாலை வழிபாடு செய்யும் கொண்டவர்
  • காசி, ராமேஸ்வரம்,கண்டி, கதிர்காமம் மற்றும் பல சிவத்தலங்களையும், வைணவ திவ்ய தேசங்களையும் வழிபட்டவர்
  • ஈகை, அன்பு, வள்ளல் தன்மை, பரிவு போன்ற அருங்குணங்களைக் கொண்டவர்
  • எப்பொழுதும் திருநீற்றுடன் காணப்படுபவர்
  • இல்லையென்று வருவோர்க்கு தன்னாலான உதவிகளைச் செய்தவர்
  • பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து குடும்பங்களில் விளக்கேற்றியவர்
இந்நூற்றாண்டு மலரில் நூலகத்துடனான என்னுடைய சுமார் 40 ஆண்டு கால அனுபவம் குறித்து மாமனிதரின் வான்புகழ் என்ற தலைப்பில் நான் எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. 
மலரின் முகப்பு

மலரின் பின்னட்டை
மாமனிதரின் வான்புகழ் 
என்னுடைய பள்ளிக்காலத்தில் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்துக் காட்டும்படிக் கூறுவார் எங்கள் தாத்தா. கும்பகோணத்தில் சம்பிரதி வைத்தியநாதய்யர் அக்கிரகாரத்தில் இருந்த எங்கள் வீட்டில் நாங்கள் அவர் முன்பு அமர்ந்து நூலின் சில பத்திகளைப் படிப்போம். அடுத்த நாள் தொடர்வோம். நூற்கட்டு செய்யப்பட்ட அந்தப் புதினம் ஐந்து தொகுப்புகளாக இருந்தது. படிக்கப் படிக்க பொன்னியின் செல்வன் மீது ஆர்வம் ஏற்பட்டது. அந்த ஆர்வமே என்னை சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்திற்கு இட்டுச் சென்றதோடு அந்நூலகத்தின் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் அருமை பெருமைகளைத் தெரிந்துகொள்ளும் வாய்ப்பினைத் தந்தது.

பள்ளிக்காலம்
தொடர்ந்து பேட்டைத்தெருவிலுள்ள அறிஞர் அண்ணா அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்தபோது (1972-75) சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தைப் பற்றி அறிந்தேன். பிறகு ஒரு நாள் தனியாகச் சென்று அந்நூலகம் இருக்கும் இடத்தை அறிந்து அங்கு செல்ல ஆரம்பித்தேன். முதன்முதலாக அங்கு சென்றபோது ஐயாவைச் சந்தித்தேன். பள்ளி மாணவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என் தாத்தாவைப் பற்றியும், வாசிப்பு ஆர்வத்தைப் பற்றியும் கூறினேன். அவர் நூலகத்தின் நடைமுறையை எடுத்துக் கூறினார். முதன்முதலாக அங்கு நான் படிக்க ஆரம்பித்தது வரலாற்றுப் புதினங்களே.  தொடர்ந்து பள்ளியில் உடன் படித்த நண்பர்களை அழைத்துச் சென்றேன்.  பள்ளி விடுமுறை நாள்களில் எங்களுக்கு அடைக்கலம் தந்தது சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையமே. நாங்கள் அனைவரும் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு நூல்களை வாசிக்க ஆரம்பித்தோம். அதிகமான பக்கங்களை யார் படிக்கின்றார்கள் என்று எங்களுக்குள் போட்டி வைத்துக் கொள்வோம். தொடர்ந்து நாங்கள் படித்த நூல்களைப் பற்றி விவாதிப்போம். ஒரு நூலை வாசித்து முடிக்கும்போது அடுத்து வாசிக்க வேண்டிய நூல் குறித்து ஐயாவிடம் விவாதிப்போம். தொடர்ந்து அதனைப் படிப்போம். நாங்கள் வாசிக்கும் நூல்களைப் பற்றி அறிந்த அவர் எங்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டிவிட்டார்.  அடுத்தடுத்து விடுபாடின்றி நாங்கள் பல நூல்களைப் படிக்க அவருடைய அந்த கவனிப்பு எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது.  

கல்லூரிக்காலம்
கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில்  புகுமுக வகுப்பும் (1975-76), இளங்களை பொருளாதாரமும்(1976-79) படித்தபோதும் தொடர்ந்து நூலகத்திற்குச் சென்றேன். அக்காலகட்டத்திலும் அவருடைய ஆலோசனைகள் எனக்கு பேருதவியாக இருந்தது.  வரலாற்றுப் புதினங்கள் தவிர இலக்கியம், வரலாறு என்ற நூல்களை அவரிடம் கேட்டுத் தெரிவு செய்து வாசிக்க ஆரம்பித்தேன். அவர் கூறிய கருத்துகள் என்னுடைய வாசிப்பின் வேகத்தை அதிகரிக்க உதவின.    

பணிக்காலம்
        1979இல் கல்லூரிப் படிப்பு நிறைவு செய்த பின்னர் பணி நிமித்தமாக சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களுக்குச் சென்றேன். பணிக்காலத்தில் விடுமுறையில் கும்பகோணம் வரும்போது நூலகத்திற்கு வருவதை வழக்கமாகக் கொண்டேன். முன்பு வந்து வாசித்ததுபோல அதிக நேரம் கிடைக்கவில்லை. இருந்தாலும் நூலகத்திற்கு வரும் வழக்கத்தினை விட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். பணிச் சூழல் காரணமாக பணியில் சேர்ந்த செய்தியை ஐயாவிடம் தாமதமாகத் தெரிவிக்கும் நிலை ஏற்பட்டது. நூலகத்திற்கு வருவது குறைந்துவிட்டதே என்று அவரிடம் ஆதங்கப்பட்டுக் கொண்டேன். அப்போது அவர், நேரமிருக்கும்போது வரும்படி அறிவுரை கூறினார்.


அக்டோபர் 2017இல் நூலகம் சென்றபோது
ஆய்வுக்காலம்  
1993இல் பௌத்தம் தொடர்பாக  ஆய்வு மேற்கொள்ளத் தொடங்கிய முதல்  இங்கு சென்று பல நூல்களைப் படித்துக் குறிப்பு எடுத்துள்ளேன்.  புதினம் என்ற நிலையிலிருந்து மாறி ஆய்வு தொடர்பாக நூல்களைப் படிக்க ஆரம்பித்தபோது அவருடன் ஆய்வினைப் பற்றி பல முறை விவாதித்துள்ளேன். என் ஆய்வு தொடர்பாக நான் படித்தவற்றில் பூர்வாச்சாரியார்கள் அருளிய ஆறாயிரப்படி பன்னீராயிரப்படி குருபரம்பரப்ரபாவம் (பூமகள் விலாச அச்சுக்கூடம், சென்னை, 1928), தமிழர் மதம் (மறைமலையடிகள், திருமகள் அச்சுக்கூடம், பல்லாவரம், 1941), தென்னிந்திய சிற்ப வடிவங்கள் (க.நவரத்தினம், சுன்னாகம் திருமகள் அழுத்தகம், யாழ்ப்பாணம், 1941), புத்த சரித்திரம், பௌத்த தருமம், பௌத்த சங்கம் (உவேசா, கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1945), பிற்காலச்சோழர் சரித்திரம் (சதாசிவப்பண்டாரத்தார், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், 1951), முதற்குலோத்துங்கசோழன் (சதாசிவப் பண்டாரத்தார், பாரி நிலையம், 1955), பூம்புகார் (புலவர் ப.திருநாவுக்கரசு, அஸோஸியேஷன் பப்ளிசிங் ஹவுஸ், சென்னை, 1957), தமிழக வரலாறு (அ.மு.பரமசிவானந்தம், தமிழ்க்கலை பதிப்பகம், சென்னை, 1958) உள்ளிட்ட பல நூல்கள் அடங்கும். 
பள்ளிக்காலம் தொடங்கி இன்று வரை இந்நூலகத்துடன் தொடர்பு கொண்டுள்ளதை நினைக்கும்போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. 1995இலும், 2015இலும் பார்வையாளர் குறிப்பேட்டில் நூலகத்தைப் பற்றிய எனது கருத்தை பதியும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டிய, ஐயாவினால் நன்கு பேணி பாதுகாக்கப்பட்ட இந்நூலகத்தைப் பற்றி, 2016இல் மகாமகம் மலரில் எழுத வாய்ப்பு கிடைத்தது. அப்போது நூலகத்திற்கு வந்து குறிப்புகள் எடுத்தபோதுதான்  இந்நூலகம் உருவான வரலாற்றை அறிந்தேன். அதனை என் கட்டுரையில் பதிவு செய்தேன்.

நூலகம் உருவான வரலாறு
“1947ஆம் ஆண்டில் கும்பேஸ்வரர் கோயிலில் அறங்காவலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது தேர்த்திருவிழா ஏற்பாட்டிற்காக ஜி.எஸ்.சுவாமிநாத செட்டியார்  தருமபுரம் ஆதீனத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அங்கேயிருந்த ஞானசம்பந்தம் நூல் நிலையம் அமைக்கப்பட்டிருக்கும் முறை அவரைக் கவர்ந்துவிட்டது.  அப்போது அவருடைய மனதில் அவருடைய தந்தையின் தந்தை கோபு சிவகுருநாதன் செட்டியார் எம்.ஏ., பி.எல்., பெயரில் நூல் நிலையம் அமைக்கும் எண்ணம் உருவானது.  அவர் பெயரில் சில ஆண்டுகள் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கியுள்ளார்.  அவ்வாறு பயின்ற பலர் நல்ல நிலையில் வாழ்வதை அறிந்த  அவர் நூல் நிலையம் ஒன்றும் அவர் பெயரில் அமைத்தால் அனைவரும் பயனடைவர் என்று எண்ணினார். இந்நூலகம் உருவாவதற்கு அடிப்படை இதுவேயாகும்.”

இந்நூலகத்தின் பெருமையை அனைவரும் அறியவேண்டும் என்ற அவாவின் காரணமாக நூலகத்திற்குச் சென்று நூலகம் பற்றிய செய்திகளைத் திரட்டி தமிழ் விக்கிபீடியாவிலும், ஆங்கில விக்கிபீடியாவிலும் பதிவுகள் தொடங்கி உரிய புகைப்படங்களை இணைத்தேன். கும்பகோணத்தில் அரை நூற்றாண்டிற்கும் மேலாக நகர மக்களின் வாசிப்புத்தேவையைப் பூர்த்தி செய்துவரும் இந்நூலகத்தினைப் போற்றும் இந்நேரத்தில் திரு சுவாமிநாத செட்டியார் அவர்களின் ஈடுபாட்டையும், ஆர்வத்தையும், மனித நேயத்தையும், வாசகர்களோடு அவர் பழகும் பாங்கினையும் நினைவுகூர்கிறேன். தமிழைப் போலவே அம்மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். 


முன்னர் நாம் வாசித்த இந்நூலகம் தொடர்பான பதிவுகள்  







விழா அழைப்பிதழ்


18 comments:

  1. ஓய்வுக் காலத்தை பயனுள்ள வகையில் கழிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. முனைவர் அவர்களின் இளையமகனின் பெயர் சிவகுரு என்பதற்கான காரணம் புரிந்தது தங்களது உழைப்பு பிரமிக்க வைக்கிறது.

    சிறுவயது முதலே தங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து இருக்கின்றார்கள் இது இறைவன் உங்களுக்கு கொடுத்த அருட்கொடை.

    ReplyDelete
  3. அருமையான தொகுப்பாய் பதிவே சுவைக்கிறது..நீங்கள் எத்தனை ஆராய்ச்சி செய்து கொண்டுவந்தாலும்...நாங்கள் உங்களைக்கண்டடைந்ததே மாபெரும் கண்டுபிடிப்பு அய்யா...வணங்குகிறேன்..

    ReplyDelete
  4. உங்கள் நட்பு வட்டத்தை சொல்.. உன்னை பற்றி சொல்கிறேன்னு சொல்றது உங்களுக்குதான்பா பொருந்துது. பணி ஓய்வு எல்லாருக்கும் நல்லதா அமையாது. உங்களு அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இறைவனுக்கு நன்றி சொல்லுங்க..

    ReplyDelete
  5. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
    மலரின் முதல் படியினைத் தாங்கள் பெற்றது கண்டு மகிழ்ந்தேன்
    ஒருமுறை சிவகுருநாதன் நூலகத்திற்கு அவசியம் செல்ல வேண்டும் ஐயா
    தாங்கள் அடுத்தமுறை அந்நூலகத்திற்குச் செல்லும்போது கூறுங்கள், நானும் வருகின்றேன்
    நன்றி

    ReplyDelete
  6. உங்களின் தேடல்கள் அனைத்தும் அருமை...

    தொடர வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  7. அருமை ஐயா...
    அருமையானதொரு தொகுப்பாய் உங்கள் கட்டுரையுடன்....

    ReplyDelete
  8. 'மாமனிதரின் வான்புகழ்'-- தலைப்பே கவிதை நயம் கொஞ்ச இருக்கிறது.

    நூலகத்துடனான உங்கள் பிணைப்பை அழகாக விவரித்துள்ளீர்கள். 'நேட்டிவ் ஸ்கூல்' வாசிப்பு எங்கள் குடும்பத்துடனுடன் இணைந்த ஒன்று.

    வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக் கேட்ட நிறைய பழைய நினைவுகள் இக்கட்டுரையை வாசித்ததும் மீட்டப்பட்டன. மிக்க நன்றி, ஐயா.

    ReplyDelete
  9. பலரும் எனக்கு அறி முகப் படாதவர்கள் உங்கள் தேடலு வழங்கலும் பாராட்டுக்குரியது

    ReplyDelete
  10. அற்புதமான பதிவு.உங்களுடன் ஒருமுறை நூலகம் காணவேண்டும் ஐயா .
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அருமையான மனிதர், நூலகம் பற்றிய தகவல். என் கணவர் அடிக்கடி இந்த நூலகம் போவார்கள்.

    //தமிழைப் போலவே அம்மாமனிதரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும். //

    உண்மைதான் சார்.
    நல்ல பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  12. தமிழ் காதலருக்கு நல்லதொரு அஞ்சலி ,நூற்றாண்டு மலர் !உங்களின் கட்டுரைக்கும் வாழ்த்துகள்:)

    ReplyDelete
  13. நான் அறியாத வரலாறு!அறிந்தேன்! நன்றி!

    ReplyDelete
  14. உங்களின் படைப்பாற்றல் இரகசியம் என்னவென்று இப்போது புரிந்துவிட்டது. கட்டுரை மிக அருமை.

    ReplyDelete
  15. அறியாத பல தகவல்கள். கட்டுரையும் மிகவும் சிறப்பு. தாங்கள் தங்களின் ஓய்வு நேரத்தை மிகவும் பயனுள்ளதாகக் கழிக்கின்றீர்கள் என்பதையும் அறிய முடிகிறது. எல்லோருக்கும் சிறந்த உதாரணம்.

    ReplyDelete
  16. ஆய்வுக் கட்டுரைப் போன்று அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி அய்யா

    ReplyDelete
  17. எனக்கு வங்கி அதிகாரியாக முதன்முதலில் வேலை கொடுத்தது (கும்பகோணம்) சிட்டி யூனியன் வங்கிதான்! அதன் இயக்குனர் குழுவில் திரு GSS அவர்களும் இருந்ததை இப்போதுதான் அறிகிறேன். பொதுவாக வங்கிகளில் சேர்மன் ஒருவர்தான் முன்னிளைபடுத்தப்படுவார். இயக்குனர்கள் பெரும்பாலும் பின்னணியிலேயே இருப்பார்கள். அதனால் தான் இவரை இதுவரை அறியாமல் இருந்துவிட்டேன். தங்களின் கட்டுரையால் இன்று பயன்பெற்றேன். மிக்க நன்றி!

    -இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

    ReplyDelete