Showing posts with label ஊடகம். Show all posts
Showing posts with label ஊடகம். Show all posts

13 September 2021

மன்மோகன் சிங் - பீடல் காஸ்ட்ரோ சந்திப்பு 2006

1970களின் இடையில் தி இந்து (ஆங்கில நாளிதழ்) வாசிக்க ஆரம்பித்து, 1999இல் அதில் வெளியான ஒரு கட்டுரையை மொழியாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டேன். தொடர்ந்து ஃப்ரண்ட்லைன் ஆங்கில இதழில் வெளியான நோம் சோம்ஸ்கியின் உரையை மொழியாக்கம் செய்தேன். மொழியாக்கம் செய்யும்போது எவ்வித குறிப்புகளையும் வைத்துக்கொள்வதில்லை. தட்டச்சுப்பொறியின் பக்கத்தில் மொழியாக்கம் செய்யவேண்டிய செய்தியை வைத்து அதனைப்  பார்த்துக்கொண்டு நேரடியாக தட்டச்சிடுவேன்.  பதிவின் இறுதியில் தட்டச்சிட எடுத்துக்கொண்ட நேரத்தையும் குறிப்பேன். 

அந்த வகையில் 2006இல் இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங், க்யூப அதிபர் ஃபீடல் காஸ்ட்ரோவைச் சந்திக்கச் சென்றது தொடர்பாக  தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் 18 செப்டம்பர் 2006, 19 செப்டம்பர் 2006 ஆகிய நாள்களில் வெளியான செய்திகளை, மொழியாக்கம் செய்தது ஒரு வித்தியாசமான அனுபவமாகும். ஆங்கில இதழில் வந்த செய்தி தமிழில் வந்தால் எப்படி இருக்கும் என உருவகப்படுத்திக்கொண்டு, செய்தி வெளியான நாளிதழின் பெயர், நாள் விவரம் (Newspaper title, publication date). கட்டுரையின் தலைப்பு (article title), துணைத்தலைப்பு (sub heading) கட்டுரையாளர்/செய்தியாளரின் பெயர் (name of author/reporter) செய்தியிலிருந்து தரப்படுகின்ற பெட்டிச்செய்தி (box columnஎன்ற வகையில் அதனை அமைத்திருந்தேன். தொடர்ந்து வருகின்ற நாளிதழ் வாசிப்பு என்னை மொழியாக்க முயற்சியில் ஈடுபட வைத்ததோடு, பல அனுபவங்களையும் தந்தது. அடுத்த பதிவில் பிறிதொரு மொழியாக்க அனுபவத்தைக் காண்போம். 




நன்றி : The Hindu

12 December 2020

ஆக்ஸ்போர்டு காற்புள்ளி (Oxford comma)

கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் (1976-1979) இளங்கலை படித்தபோது இந்தியப்பொருளாதார வளர்ச்சி என்ற பாடத்திற்கான ஆசிரியர் திரு கண்ணன் பொது அறிவு சார்ந்த பல செய்திகளைப் பகிர்ந்துகொள்ள சில நிமிடங்களை ஒதுக்குவார். அவர் கூறியவற்றில் ஒன்று காற்புள்ளி இடுவதைப் பற்றியதாகும். “காற்புள்ளி (கமா) போடும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அது சிக்கலில் விட்டுவிடும்” என்று கூறுவார். “மை ஒய்ப் கு ஈஸ் இன் மெட்ராஸ் கம்ஸ் டுமாரோ” (My wife who is in Madras comes tomorrow) என்பதற்கும், “மை ஒய்ப், கு ஈஸ் இன் மெட்ராஸ், கம்ஸ் டுமாரோ” (My wife, who is in Madras, comes tomorrow) என்பதற்கும் உள்ள வேறுபாட்டை அடிக்கடிக் கூறுவார். முதல் சொற்றொடர் “சென்னையிலுள்ள என் மனைவி நாளை வருகிறார்” என்பதையும், இரண்டாவது சொற்றொடர் “என் மனைவி, சென்னையில் இருப்பவர், நாளை வருகிறார்” என்பதையும் குறிக்கும் என்றும், இரண்டாவது சொற்றொடருக்கான பொருள் அந்த நபருக்கு பல ஊர்களில் மனைவிகள் இருப்பது போலவும், அவர்களில் சென்னையில் இருப்பவர் நாளை  வருவது போலவும் பொருள் கொள்ளும் வகையில் அமையும் என்றும் கூறியிருந்தார். அப்போது முதல் காற்புள்ளியை இடும்போது மிகவும் கவனமாக இருந்துவந்துள்ளேன். அண்மையில் இலண்டன் 50 பென்ஸ் நாணயத்தை வெளியிட்டபோது இந்த நிகழ்வு எனக்கு நினைவிற்கு வந்தது. 



ஐரோப்பிய கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருந்த பிரிட்டன் அதிலிருந்து 31  னவரி 2020இல் வெளியேறியதைக் குறிக்கின்ற பிரெக்ஸிட் நினைவாக ‘ஜனவரி 31’ என்ற தேதியைக் கொண்ட அரை பவுண்ட் மதிப்புள்ள 50 பென்ஸ் நாணயத்தை “Peace, prosperity and friendship with all nations” (அமைதி, செழிப்பு மற்றும் அனைத்து நாடுகளுடன் நட்புறவு) என்ற சொற்களோடு  வெளியிட்டது. “இந்த நினைவு நாணயமானது ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கம்” என்றார் கருவூலத்தின் தலைவரான சஜிட் டேவிட்.

 

பிரபல புதின எழுத்தாளரான பிலிப் புல்மான் உள்ளிட்டோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். புல்மான், “பிரெக்ஸிட்டின் 50 பென்ஸ் நாணயத்தில் ஆக்ஸ்போர்டு காற்புள்ளி இடம்பெறவில்லை. ஆதலால் கல்வியறிவுள்ள அனைவரும் இந்த நாணயத்தை புறக்கணிக்க வேண்டும்,” என்றார். “செழிப்பு (prosperity) என்ற சொல்லுக்கு அடுத்தபடியாக காற்புள்ளி இல்லாத நிலை என்னை வதைக்கிறது” என்றார் டைம்ஸ் இலக்கிய இணைப்பிதழின் ஆசிரியரான ஸ்டிக் ஆபெல்.


இது 1801இல் அமெரிக்க ஜனாதிபதியாக தாமஸ் ஜெபர்சன் பதவியேற்றபோது உரையாற்றிய, அவருடைய அரசின் முக்கியக் கொள்கைகளாக கூறியனவற்றுள் இருந்த, “Peace, commerce, and honest friendship with all nations, entangling alliances with none” (அமைதி, வணிகம், மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு எந்த நாடுகளுடனும் சிக்கல் இல்லா கூட்டு)” என்பதை எதிரொலித்தது.  இதில் வணிகம் (commerce) என்ற சொல்லை அடுத்து காற்புள்ளி இடம்பெற்றிருந்தது. இங்கு காற்புள்ளியின்  பயன்பாட்டினையும் முக்கியத்துவத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும்.

ஆக்ஸ்போர்டு காற்புள்ளியை (Oxford comma) சீரியல் காற்புள்ளி (serial comma) என்றும் அழைப்பர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வாசகர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்களால் பயன்படுத்தப்படுவதால் இது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி என்ற பெயரினைப் பெற்றது. மேற்கோள் குறிகளை எங்கெங்கு பயன்படுத்தவேண்டும் என்று தெளிவாக விதி உள்ளது. ஆனால் இதனைப் பொறுத்தவரை தெளிவு எதுவுமில்லை. கிராமர்லி தளத்தின் ஆசிரியர் பிரிட்னி ரோஸ், “பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள், அல்லது வெறுக்கிறார்கள், அல்லது அது என்னவென்றே தெரியாமல் இருக்கின்றார்கள்” என்கிறார். ஆக்ஸ்போர்டு அகராதி, “மூன்றோ மூன்றுக்கும் மேலோ உள்ளவற்றைக்குறிப்பிடும்போது, கடைசியாக உள்ள சொல்லுக்கு முன்னே காணப்படுகின்ற ‘மேலும்’ அல்லது ‘அல்லது’ என்ற சொல்லுக்கு முன் இடம்பெறுகின்ற காற்புள்ளியைக் குறிக்கும்” என்கிறது.

 

“நான் இன்று என் பள்ளி நண்பர்கள், குமரன், மேலும் முருகன் உடன் உணவகம் சென்றேன்” என்ற சொற்றொடரில் பள்ளி நண்பர்கள், குமரன், ராமன் என்பது வெவ்வேறு நபரை/நபர்களைக் குறிக்கிறது. குமரனும் ராமனும் பள்ளி நண்பர்கள் இல்லை என்பதை தெளிவுபடுத்த ‘குமரன்’ மற்றும் ‘மேலும்’ என்பதற்கிடையே காற்புள்ளி இடப்பட்டுள்ளது. குமரன் மற்றும் ராமன், பேசப்படுபவரின் பள்ளி நண்பர்கள் அல்ல, அவர்களுடன் உணவகம் வரும் நண்பர்கள். குமரன் மற்றும் ராமன் பள்ளி நண்பர்களாக இருந்திருந்தால் அப்போது என்னுடைய பள்ளி நண்பர்கள், குமரன் மற்றும் ராமன் என்று குறிப்பிட்டிருக்கலாம்.

 

பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் காற்புள்ளியை பயன்படுத்தலாம், அல்லது பயன்படுத்தாமல் விட்டும்விடலாம். ஆனால் அமெரிக்க ஆங்கிலத்தில் அது பொதுவாக பரவலாகக் காணப்படுகிறது. அமெரிக்க உளவியல் அமைப்பின் கையேடு (APA manual), கார்னரின் நவீன அமெரிக்கப் பயன்பாடு (Garner’s Modern American Usage), நவீன மொழிச் சங்கத்தின் நடைக் கையேடு (The MLA Style Manual), ஸ்ட்ரங் மற்றும் ஒயிட்டின் நடைக்கூறுகள் (Strunk and White’s Elements of Style), அமெரிக்க அரசின் அச்சக அலுவலக நடைக் கையேடு (The U.S. Government Printing Office Style Manual) ஆகியவை ஆக்ஸ்போர்டு காற்புள்ளியின் பயன்பாட்டைக் கட்டாயம் என்று கூறுகின்றன.  

 

அசோசியேட்டட் ஊடக நடை நூல் (The Associated Press Stylebook)  இதன் பயன்பாடு தேவையில்லை என்கிறது. மாறாக, சிகாகோ நடைக்கையேடு (The Chicago Manual of Style) இது தேவை என்கிறது.  “அசோசியேட்டட் பாணியா சிகாகோ பாணியா என்று பார்க்கும்போது பாணி என்ற சொல்லின் முக்கியத்துவத்தை பெரும்பாலானோர் மறந்துவிடுகிறார்கள் என்று நினைக்கிறேன். பாணி எப்போது ஒத்துவரவில்லையோ, உங்களுக்கு ஒத்துவருவதை ஏற்கவேண்டும்,” என்கிறார் ரோஸ். ஆங்கில மொழியில் மிகவும் குழப்பமான இலக்கண விதிகள் பட்டியலில் ஒன்றாக ஆக்ஸ்போர்டு காற்புள்ளி அமைந்துவிடுகிறது. தி டைம்ஸ் நடை கையேடு (The Times style manual) "ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைத் தவிர்த்துவிடுங்கள். 'அவன் ரொட்டி, வெண்ணெய், மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்பதற்கு பதிலாக 'அவன் ரொட்டி, வெண்ணெய் மற்றும் ஜாம் சாப்பிட்டான்' என்றே கூறுங்கள்." மாறாக, கார்டியன் நடைக் கையேடு (The Guardian style guide), “நேரடியாகப் பொருளைத் தரும் வகையில் அமையும்போது ஆக்ஸ்போடு காற்புள்ளி தேவையில்லை. ஆனால் சில சமயங்களில் வாசகர்களுக்கு அது அதிகம் உதவுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சில நேரங்களில் அது முக்கியமாக தேவைப்படுகிறது. ‘‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ், மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’ என்பதை ‘நான் இந்த நூலை என் பெற்றோர், மார்ட்டின் அமிஸ் மற்றும் ஜேகே ரௌலிங்-க்கு அர்ப்பணிக்கிறேன்’.” என்பதோடு ஒத்துப்பார்க்கும்போது வேறுபாட்டையும் காற்புள்ளியின் தேவையையும் உணரலாம்.


ஒரு தெளிவினைத் தரும்நிலையிலும்கூட காற்புள்ளியை பலர் பயன்படுத்த விரும்புவதில்லை. குறிப்பாக அதிக இடத்தைப் பிடித்துக்கொள்ளும் என்பதால் ஊடகவியலாளர்கள் இதனைப் பயன்படுத்துவதில்லை. பள்ளிக்காலம் தொடங்கி அவ்வாறே சொல்லித்தருவதால் பலர் இதனை எப்போதும் பயன்படுத்துவதில்லை. இருந்தாலும் காற்புள்ளியை எளிதாகக் கருதிவிட முடியாது. இடத்திற்குத் தகுந்தாற்போல் அது உணர்த்தும் தனித்தன்மையை மனதில் கொள்ள வேண்டியது அவசியமாகும். அண்மைக்காலத்தில் இந்த காற்புள்ளியின் முக்கியத்துவத்தை உணரவைத்த பெருமை பிரெக்ஸிட் நாணயத்தையே சாரும். பயன்பாட்டு நோக்கில் பார்க்கும்போது ஆக்ஸ்போர்டு காற்புள்ளி ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறலாம். குழப்பமற்ற பொருளைத் தருவதால் முடிந்தவரை நாம் ஆக்ஸ்போர்டு காற்புள்ளியைப் பயன்படுத்த முயல்வோம்.


துணை நின்றவை :

After Deadline, Philip B.Corbett, The New York Times Blog, 23 June 2015 

For Want of a Comma, Carmel McCoubrey, 16 March 2017

 What Is the Oxford Comma—And Why Can’t the Grammar World Agree on Whether to Use It?, Isabel Roy and Sam Benson Smith, The Reader’s Digest, 18 July 2019

Philip Pullman calls for boycott of Brexit 50p coin over 'missing' Oxford comma, Alison Flood, The Guardian, 27 Jan 2020

Rules for Comma usage, Grammarly Blog

Serial comma, Wikipedia                                                                      

What Is The Oxford Comma, Lexico

10 October 2020

15-நிமிட நகரம்

டைம்ஸ் இதழ் அறிவித்துள்ள, 2020ஆம் ஆண்டின் 100 மிகப் பிரபலமானவர்களில் ஒருவர் என்ற சிறப்பினைப் பெறுகிறார் இரண்டாவது முறையாக பாரிஸ் நகரின் மேயராகப் பொறுப்பேற்ற அன்னி ஹிடல்கோ.  மேயராக 2014ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் இவர் அப்பதவியினை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பினைப் பெறுகிறார். சோசலிசக் கட்சியின் உறுப்பினராக இவர், 2001 முதல் 2014 வரை துணை மேயராகப் பணியாற்றியுள்ளார்.  மேயராக முதல் முறை பணியாற்றிய காலத்தில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கை தலைமையகத்திலும் ஹைப்பர் ஹேச்சர் சூப்பர் மார்க்கட்டிலும் தீவிரவாதத் தாக்குதல்,  131 பேர் பலியான தற்கொலைப்படைத் தாக்குதல், இயற்கைப் பேரிடர்களான பெருவெள்ளம் மற்றும் வெப்ப அலை, மஞ்சள் சட்டைப் போராட்டம், ஓய்வூதியத்திட்டத்திற்கு எதிர்ப்பு, அகதிகள் மற்றும் புலம் பெயர்ந்தோரின் வருகை, சுற்றுச்சூழல் மாசு உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொண்டார். பாரிஸ் மேயராக இருப்பது கடுங்காற்றில் கட்டுமரத்தை ஓட்டுவதற்கு ஒப்பானது என்றார்.


 

இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட காலகட்டமான பிப்ரவரி 2020இல், பாரிஸ் நகரில் “15-நிமிட நகரம்” என்ற திட்டத்தை முன்வைத்தார். கடை, பூங்கா, சிற்றுண்டி விடுதி, விளையாட்டு மைதானம், ஆரோக்கிய மையம், பள்ளி, பணியாற்றும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களுக்கும் சிறிது நேரத்தில் நடந்தோ, சைக்கிளில் பயணித்தோ சென்று அடையும் வகையில் அந்த இலக்கானது அமைந்தது. கால் மணி நேரம் என்றழைக்கப்படுகின்ற அந்த வசதியானது பாரிஸ் நகரில் உள்ளோர் வீட்டுக்கு அருகிலேயே அனைத்தையும் பெறும் வாய்ப்பினைத் தரும். இதன் மூலமாக மாசு, மன அழுத்தம் குறைவதோடு சமூக, பொருளாதாரரீதியில் ஒருங்கிணைந்த மாவட்டங்களை உருவாக்கும் என்றும், அங்கு வசிப்போரின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என்றார். “பாரிஸ் மற்ற நகரங்களைப் போலல்ல…..அது ஒரு சுதந்திரமான, சுறுசுறுப்பான எப்போதும் இயங்குகின்ற நகரம் ஆகும். கடந்த காலத்தை மறக்காமல் புதிய வரலாற்றை உருவாக்கும் தகுதி அந்நகருக்கு உண்டு,” என்றார் அவர்.


 “15-நிமிட நகரம்” உத்திக்கான பின்னணியில் முக்கியமான பங்கினை வகித்த, பாரிஸில் உள்ள சோர்போனைச் சேர்ந்த பேராசிரியரும் அறிவியலாளருமான  கார்லஸ் மொரீனோ, “பொதுமக்களின் நடவடிக்கைகள், வாகனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் அமையவேண்டும்.  வாழும் இடங்களுக்கு அருகிலேயே பணியிடங்களும்,  கடைகளும் அமையும் நிலையில் மக்களுக்கு போதிய நேரம் கிடைப்பதோடு, அவர்கள் நிம்மதியாக வாழவும் வழி வகை செய்யும். இல்லங்களிலிருந்து பணியாற்றும் இடம் தொலைவில் இருப்பதால் பணி என்பதானது பெரும்பாலும் பிரச்னைகள் சார்ந்ததாக அமைந்துவிடுகிறது” என்றார். தன்னுடைய 20 வயது முதல் பாரிஸில் வாழ்ந்து வரும் அவர்,  “பொலிவுறு நகர வாழ்வு” என்ற தன்னுடைய திட்டம் மேயரின் தேர்தல் களத்தில் ஒரு முக்கியமான கூறாக அமைந்ததை பெருமையோடு நினைவுகூர்கிறார்.   “இது தொடர்பாக மேயர் என்னை  சந்திக்க அழைத்து தன் ஆர்வத்தை என்னிடம் வெளிப்படுத்தியபோது, தேர்தல் முகாமில் இது ஒரு சிறு பங்காக இருக்கின்றபோதிலும், அதற்கான முக்கியத்துவம் மிக அதிகமாக இருப்பதை உணர்ந்தேன்” என்று கார்டியன் இதழுக்கு அளித்த பேட்டியில் மொரீனா கூறியிருந்தார்.

 

“அக்கம்பக்கம் வெறும் கட்டடங்கள் மட்டுமே இருக்கக்கூடாது. சமூக உறவுகள் பேணப்படுவதோடு, உணர்வுகள் பரிமாறப்படுகின்ற இடமாக இருக்கவேண்டும்” என்று கூறிய அமெரிக்க-கனடா எழுத்தாளரும் செயற்பாட்டாளரும், 1961இன் செவ்வியல் நூலான அமெரிக்க மாநகரங்களில் இறப்பும் வாழ்வும் என்ற நூலின் ஆசிரியருமான ஜான் ஜேகப்ஸ் என்பவரால் இத்திட்டத்தினை வடிவமைக்க தான் தூண்டப்பட்டதாக கார்லஸ் மொரீனோ கூறினார்.  

 

பல ஆண்டுகளாக பாரிஸ், வாகனப் போக்குவரத்தினை அறிமுகப்படுத்துவதில் முன்னுதாரண நகரமாக இருந்து வருகிறது. தொழில்நுட்பம் வளர்ந்த இக்காலகட்டத்திலும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு, குறிப்பாக வாழ்விடத்திலிருந்து பணியிடத்திற்குச் செல்வதற்கு, அதிக நேரம் செலவழிப்பதைக் காணமுடிகிறது. பாரிஸ் மட்டுமன்றி ஒவ்வொரு நகரிலும் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதில் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை தம் சொந்த வாகனங்களில் பள்ளிக்கு அழைத்துச் செல்லும் நேரத்தில் போக்குவரத்து பல இடங்களில் ஸ்தம்பித்துவிடுகிறது. நகர்ப்புற இரைச்சல்கள், வாகன ஒலி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற தாக்கங்களும் ஏற்படுகின்றன.  பொதுமக்களுக்கு அணுக்கமாக உள்ள திட்டமாக அன்னி முன்வைக்கின்ற இத்திட்டமானது தேக ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, நடைப்பயிற்சிக்கும் முக்கியத்துவம் தரும். ஒரு நகரமானது மக்களுக்காகத்தானேயன்றி, கார்களுக்காக அல்ல என்கிறார் மேயர் அன்னி.


 

பாரிஸ் நகரத்தவர் சமூகரீதியாகவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கரை செலுத்துவதைக் காணமுடிகிறது. கடந்த ஆறு வருடங்களாக அன்னி செயல்படுத்தி வரும் திட்டங்கள் அவர்களால் ஏற்கப்படுகின்றன. குறிப்பாக குறிப்பிட்ட சில இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்படக்கூடாது என்ற அவருடைய கருத்து பரவலாக ஏற்கப்பட்டதே இதற்கு சான்றாகும். பாரிஸ் நகர வரைபடத்தினை பார்க்கும்போதே கார்களற்ற நகரம் என்ற இலக்கினை எளிதாகச் செயல்படுத்தலாம் என்பதை உணரமுடியும். இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பல கிலோமீட்டர் தொலைவிற்கு சைக்கிள் பாதை அமைக்கும் பணியும் அடங்கும். இவ்வாறான திட்டம் அறிமுகப்படுத்தும் நிலையில் சொந்தமாக வாகனம் வைத்துள்ளோர் இயல்பாகவே பிறர் நலனைக் கருத்தில் கொண்டு தம் எண்ணத்தை மாற்றிக்கொள்ள வகையுள்ளது என்ற நிலையில் பாரிஸ் ஒரு நம்பிக்கைக்கீற்றாகத் தெரிகிறது.

 

2024க்குள் அனைத்துத் தெருக்களிலும் சைக்கிள் செல்வதற்கான தனியான பாதைகள் அமைக்கப்படவுள்ளதாக அன்னி தெரிவித்துள்ளார். வாகன நிறுத்தத்திற்கான 60,000 இடங்களை அகற்றிவிட்டு அங்கு பசுமைசார் இடங்களையும் விளையாட்டு மைதானங்களையும் அமைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். முன்னதாக அந்நகரில் உள்ள செய்ன் நகரையொட்டியும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் கார் ஓட்டுதல் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 கிமீ தொலைவிற்கு சைக்கிள் செல்வதற்கான அமைக்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் “20-நிமிட  நகரம்” திட்ட சோதனை முயற்சியில் களம் இறங்கியுள்ளது. இத்தாலி, வெனிஸ் அருகேயுள்ள லாசரெட்டோ பகுதியில் “15-நிமிடம்” திட்டத்தை முன்னெடுத்துள்ளது. நகரவாசிகளின் தேவைகளுக்காக, சற்றொப்ப இதையொத்த “மிக அண்மை” என்ற திட்டத்தை டென்மார்க்கின் தலைநகரான கோபன்ஹேகன், நெதர்லாந்தின் உத்ரெக்ட் ஆகிய நகரங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளன. அன்னி ஹெடல்கோவின் சைக்கிளுக்கான, பாதசாரிகளுக்கான அதன்மூலமாக சுற்றுச்சூழலுக்கான ஆதரவு உலகின் பிற நகரங்களிலும் பரவுவதை இதன்மூலம் அறியமுடிகிறது. 



-------------------------------------------------------------------------------------------
நன்றி:  தினமணி, மகளிர் மணி, 7.10.2020
(கட்டுரையின் மேம்பட்ட வடிவம்)
-------------------------------------------------------------------------------------------
பிற கட்டுரைகளை வாசிக்க: கட்டுரைகள்
-------------------------------------------------------------------------------------------
19.6.2026இல் மேம்படுத்தப்பட்டது.

03 October 2020

தொடரும் மொழியாக்க அனுபவம்

1970களின் இடையில் The Hindu நாளிதழ் வாசிக்கத் தொடங்கிய காலத்தில் ஆரம்பமான புதிய சொற்களுக்கான தேடலையும், ஆரம்ப கால மொழியாக்க அனுபவங்களையும் முந்தைய பதிவில் கண்டோம். 

1980-82இல் கோயம்புத்தூரில் ரேஸ் கோர்ஸ் சாலையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, பணி நேரத்திற்குப் பின் மாலை நேரத்தில், ஐ.சி.டபிள்யூ.ஏ. படித்தேன். எனக்கு வகுப்பெடுத்த ஆசிரியர்களில் ஒருவர் ஆங்கில சொற்களை அனாயாசமாகப் பயன்படுத்துவார். வகுப்பில் ஒரு முறை, “Your words should be pregnant” என்றார். எனக்கு அதற்குப் பொருள் புரியவில்லை.  வகுப்பு முடிந்தபின் அவரிடம் அதற்கான பொருளைக் கேட்டபோது அவர் “நீங்கள் பேசுகின்ற வார்த்தைகள் பொருள் பொதிந்தவையாக இருக்கவேண்டும்” என்றார். இவ்வாறாக பல சொற்களையும், பயன்பாட்டு முறையையும் அவரிடமிருந்து அறிந்தேன். கோயம்புத்தூர் அனுபவம் மொழிபெயர்ப்புக்கான ஆவலின் அடுத்த கட்டமாக அமைந்தது. 

தஞ்சாவூரில் பணியில் சேர்ந்தபின்னர் இது தொடர்ந்தது. 1980களின் இறுதியில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், பதிப்புத்துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியபோது அலுவலகப்பணிகளோடு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழிலும் (தமிழ்ப் பல்கலைக்கழகச் செய்தி மலர்) ஆங்கிலத்திலும் (Tamil University News Bulletin) வெளியான மாத இதழுக்கான செய்திகளைத் தட்டச்சிடும் பணியும் என்னால் மேற்கொள்ளப்பட்டது. கருத்தரங்க நிகழ்வுகள் மற்றும் தொடர்பான செய்திகள் சில சமயங்களில் தமிழில் மட்டுமே சில துறையிலிருந்து பெறப்படும்போது அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் சூழல் எழும். உதவிப்பதிப்பாசிரியரும் பிறரும் அதனை மொழிபெயர்க்கும்போது நானும் அவர்களுடன் சேர்ந்து அப்பணியில் ஈடுபடுவேன். நாளடைவில் தனிப்பட்ட ஒரு செய்தியை/நிகழ்வினை மொழிபெயர்க்கும் வாய்ப்பும் எனக்கு அமைந்தது. ஐயம் ஏற்படும்போது அகராதிகளைத் துணைகொள்வதுண்டு. இதுதொடர்பாக உரிய துறைத்தலைவர்களுடனோ ஆசிரியர்களுடனோ விவாதித்து உரிய சொற்களை அறிந்துகொள்வதும் உண்டு. இளநிலை உதவியாளர் என்ற நிலைக்கு அப்பாற்பட்டு, ஆங்கில மற்றும் தமிழ் மொழியறிவை வளர்த்துக்கொள்ள மொழிபெயர்ப்பு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு சொல்லுக்கான பொருளை ஒரு முறை பயன்படுத்தியபின்னர் அது இயல்பாக மனதில் பதிந்துவிடுவதை உணர்ந்தேன்.

மொழிபெயர்ப்பின் ஆர்வம் காரணமாக அவ்வப்போது தி இந்து (ஆங்கிலம்) நாளிதழில் வெளிவருகின்ற கட்டுரைகளை மொழிபெயர்த்து அவற்றை தனியாக ஒரு கோப்பில் இடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு மொழிபெயர்த்த முதல் கட்டுரை “Cooperation, not confrontation, Alladi Kuppusami, The Hindu, 16 August 1999, p.12” என்பதாகும். அப்போது தொடங்கி தொடர்ந்து மொழிபெயர்த்து வந்துள்ளேன். மொழிபெயர்ப்புக்கு ஆகும் நேரத்தையும் கட்டுரையில் குறித்துக் கொள்வேன். தி இந்து நாளிதழை மேசையில் வைத்துக்கொண்டு அதனைப் பார்த்துக்கொண்டு அப்படியே தமிழ்த் தட்டச்சுப்பொறியில் நேரடியாகத் தட்டச்சு செய்வேன். இப்பணியினை பெரும்பாலும் உணவு இடைவேளையின்போது மேற்கொள்வேன். சில சமயங்களில் ஒரு கட்டுரையினை ஒன்றுக்கு மேற்பட்ட அமர்வில் தட்டச்சிடும் நிலை ஏற்படும்போது அதற்கு ஆகின்ற ஒட்டுமொத்த நிமிடங்களைக் குறித்துக்கொள்வேன். ஆங்கில மற்றும் தமிழ்த் தட்டச்சில் தேர்ச்சி பெற்ற அனுபவமும், அவற்றைக் கற்றபோது உரிய நேரத்திற்குள் முடிக்கவேண்டும் என்றிருந்த இலக்கும் மொழிபெயர்ப்பினை மேற்கொள்ளும் நேரத்தினைக் குறித்துக் கொண்டு வேகத்தினை மேம்படுத்த உதவியது. தற்போதும் கூகுள் கருவிகளின் துணையின்றியே மொழிபெயர்த்து வருகிறேன். தேவைப்படும் சொற்களுக்கு அவ்வப்போது அகராதிகளைப் பார்த்து வருகிறேன்.

ஆரம்பத்தில் பெரும்பாலும் கோயில்கள் தொடர்பாக வந்த கட்டுரையினையே மொழிபெயர்த்தேன். அவற்றுள் Temple with special significance (V.Ganapathy, The Hindu, 3 March 2000), Stepped in legend (T.A.Srinivasan, The Hindu, 7 April 2000), Restoring the glory of a holy spot மற்றும் (Prema Nandakumar, The Hindu, 23 December 2000) உள்ளிட்ட பல கட்டுரைகள் அடங்கும். சில கட்டுரைகளை நேரடியாக மொழிபெயர்த்து எழுதுவதும் உண்டு. அவ்வகையில் எழுதிய கட்டுரையில் ஒன்று N.V.Ramaswamy, Where the Lord is a learner, The Hindu, 10 November 2000 என்பதாகும்.


 
கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 22 நவம்பர் 2001இல் நடைபெற்ற சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்றபோது நோம் சோம்ஸ்கி ஆற்றிய உரை Frontline இதழில் (Understanding human language, Frontline, December 21, 2001) வெளியாகியிருந்தது. அதனை மொழிபெயர்த்து பேராசிரியர் கி.அரங்கன் அவர்களிடம் காண்பித்தபோது அவர் அதனைப் பாராட்டினார். அதனை அவரும் மொழிபெயர்த்தார். அப்போது இரண்டிற்கும் இடையேயான வேறுபாட்டினை என்னால் உணரமுடிந்தது. ஆரம்ப காலத்தில் நான் மொழிபெயர்த்தனவற்றுள் முக்கியமானதாக இதனைக் கருதுகிறேன்.

இவ்வாறான ஆரம்பகால மொழிபெயர்ப்புப்பணிகள் Tantric Tales of Birbal (2002), Judgement Stories of Mariyathai Raman (2002), Jesting Tales of Tenali Raman, (2005), Nomadic Tales from Greek, (2007) New Century Book House, Chennai போன்ற மொழிபெயர்ப்பு நூல்களையும், தி இந்து நாளிதழில் வந்த படியாக்கம் (cloning) தொடர்பான செய்திகளை அவ்வப்போது சேகரித்து, ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து, படியாக்கம் (தாமரை பப்ளிகேஷன்ஸ் பி.லிட், சென்னை, 2004) என்ற நூலினை எழுதினேன். 

இந்த மொழியாக்க அனுபவமானது An icon for all time, John Cherian, Frontline, 4 July 2008 (அனைத்துக் காலத்திற்கும் பொருந்தும் கதாநாயகன், ஜான் செரியன், நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம், நவம்பர் 2008), The art of slow reading, Patrick Kingsley, The Guardian, 15 July 2010 (நிதான வாசிப்பு ஒரு கலை, பேட்ரிக் கிங்ஸ்லி, தி இந்து, 13 ஜனவரி 2014), Claire Boobbyer, On the trial of Che Guevara’s last days in Bolivia, The Guardian,  27 September 2017 (சே குவாராவின் இறுதி நிமிடங்கள், கிளையர் பூபையர், கார்டியன், பத்திரிகை.காம்., 9 அக்டோபர் 2017), How artificial insemination conceived a new era in US-Cuba relations, Mark Tran, The Guardian, 22 October 2014 (இப்படியும் ஒரு ராஜ தந்திரம், மார்க் டிரான்,  தி இந்து, 5 ஜனவரி 2015), Che Guevara’s  legacy still contentious 50 years after his death in Bolivia, Laurence Blair, Dan Collyns, The Guardian, 5 October 2017, (என்றென்றும் நாயகன் சேகுவாரா, லாரன்ஸ் பிளையர், டான் காலின்ஸ்,  தி இந்து, 9 அக்டோபர் 2017, சே குவாராவின் 50ஆம் ஆண்டு நினைவு தினம்) போன்ற பல கட்டுரைகளை மொழியாக்கம் செய்ய மிகவும் உதவியாக இருந்தது. 

மேலும் The Guardian,  Daily Mail, Daily Express, The Times, Daily Mirror, Independent, The Telegraph, The Sun, The New York Times, Washington Post, Bild, Dawn உள்ளிட்ட ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளில் செய்திகளைத் திரட்டி தமிழில் பல இதழ்களில் எழுதினேன். இந்த ஆண்டின் சொல் எது? (தி இந்து, 12 ஜனவரி 2014), ஃபுளோரிடாவிலிருந்து ஹவானாவிற்கு (தி இந்து, 1 ஏப்ரல் 2016), மைக்ரோசிப் அனுசரணையா? ஆபத்தா? (பத்திரிகை.காம், 9 அக்டோபர் 2017), 2017இன் சிறந்த சொல் (தி இந்து, 7 ஜனவரி 2018), 10 நாடுகளைச் சேர்ந்த 27 பிரபல நாளிதழ்கள் வெளியிட்ட அந்தக் கட்டுரை எது தெரியுமா? (பத்திரிகை.காம், 2 பிப்ரவரி 2018), உலக அரசியல் களத்தில் மகளிர் (தினமணி, 17 ஏப்ரல் 2019), மாற்றத்திற்கான மங்கை கிரேட்டா தன்பர்க் (தினமணி, 4 செப்டம்பர் 2019), 'ரியலி கிரேட்'டா தன்பர்க் (புதிய தலைமுறை பெண், அக்டோபர் 2019), உலகின் இளம் பெண் பிரதமர் சன்னா மரின் (தினமணி, 8 மார்ச் 2020),  2019ஆம் ஆண்டின் சிறந்த சொற்கள் அகராதிகளின் தெரிவு (தினமணி, 11 மே 2020)வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள் (தினமணி, 11 ஜுன் 2020), அயலக இதழ்கள் புகழாரம் சூட்டிய அப்துல் கலாம் (தினமணி, 27 ஜுலை 2020) உள்ளிட்ட பல கட்டுரைகளை எழுதவும் இந்த அனுபவம் துணை நின்றது.  


இந்த 20 ஆண்டு கால மொழியாக்கப் பயணம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை ஆங்கில விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரைகளை தமிழ் விக்கிப்பீடியாவிலும் மொழியாக்கம் செய்யவும் ஒரு காரணியாக அமைந்தது.

ஒரு மொழியில் குறிப்பிட்ட பொருண்மையில் இல்லாதவற்றை வெளிக்கொணரவும், மொழியறிவை மேம்படுத்திக்கொள்ளவும் மொழியாக்கம் பெருந்துணை செய்கிறது.  

25.2.2026இல் மேம்படுத்தப்பட்டது.     

15 August 2020

15 ஆகஸ்டு 1947 : தி இந்து (ஆங்கிலம்) சுதந்திர தின இதழ்

சந்தாதாரர் என்ற வகையில், 15 ஆகஸ்டு 1947ஆம் நாளன்று வெளியான இதழினை மின்னஞ்சலில் The Hindu எனக்கு அனுப்பியிருந்தது. வரலாற்றுப் பக்கங்களைத் திரும்பிப் பார்க்கின்ற நல்ல வாய்ப்பினை அதன்மூலம் பெற்றேன். முன்னுரை மற்றும் முகப்புப்பக்கத்துடன், அந்நாளில் வெளிவந்த The Hindu 12 (1-12) முதன்மைப்பக்கங்களையும் +20 (I-XX) இணைப்புப்பக்கங்களையும் அவ்விதழ் கொண்டிருந்தது. முதல் மூன்று பக்கங்கள் முழுக்க விளம்பரங்களைக் காணமுடிந்தது. 74ஆவது இந்திய சுதந்திர தின நாளில், இந்த சிறப்பிதழின் சில பக்கங்களைக் காண்போம். 











நகரம் முழுவதும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இந்தியாவின் பிற பகுதிகளைப் போலவே சென்னையிலும் சுதந்திர இந்தியாவின் பிறப்பினைக் காண விழாக்கோலம் பூண்டது. நகரில் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில் வணிகள் போட்டி போட்டுக்கொண்டு தம் வளாகங்களை அலங்கரித்திருந்தனர். அரசுக்கட்டடங்களில் காலை தேசியக்கொடி ஏற்றப்படவிருந்தபோதிலும், வணிக நிறுவனங்கள் நேற்று மாலையே கொடியை ஏற்றிவைத்திருந்ததைக் காணமுடிந்தது.  தேசியக்கொடி அணியாத எவரையும் காணமுடியவில்லை. (Celebration in Madras, p.4) 

சென்னை அரசின் பிரதமரும் பிற அமைச்சர்களும் நாளை காலை 9.00 மணியளவில் பதவிப்பிரமாணம் மேற்கொள்ள உள்ளார்கள். (Ministers to take oath, p.4) 

சென்னை மாநகராட்சியின் ஆணையர், மேயருடன் விவாதித்தன் அடிப்படையில், ரிப்பன் கட்டடத்தில், மேற்கொள்ளப்படவுள்ள நிகழ்ச்சி நிரலைத் தெரிவித்தார். (Corporation Programme, p.4) 

சுதந்திர தின விழாவினை நாளை துறைமுகத்தில் கொண்டாட ஏற்பாடு செய்யப்படுள்ளது. பொதுமக்களின் பார்வைக்காக துறைமுகம் திறந்துவிடப்படும். கொடி ஏற்றப்படும்போது துறைமுகத்திலும், துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பல்களிலிருந்தும் ஒலி எழுப்பப்படும். கப்பல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.  (Arrangements at Port Trust, p.4) 

மைலாப்பூரிலுள்ள இந்துஸ்தான் சாரணியர் அமைப்பின் தலைமையகத்தில் தேசியக்கொடி ஏற்றிவைத்த தொழில்துறை அமைச்சர் சீதாராம ரெட்டி வெற்றியைக் கொண்டாடுகின்ற இந்த நேரத்தில் நம் நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த தியாகசீலர்களை நினைவில்கொள்வதோடு, தேசத்திற்காக அவர்கள் ஆற்றிய தியாகத்தையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். (Ministers’ advice to scouts, p.4) 

இந்திய சுதந்திர தினத்திற்காக ஆகஸ்டு 15 வெள்ளிக்கிழமை அனைத்து தபால் அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. (Holiday for post offices, p.4)

கல்கத்தாவில் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் உள்ள அனைத்துப்பகுதிகளிலும், முழுவதிலும் எங்கும் கொடி ஏற்றப்பட்டிருந்தது. மின் விளக்குகளால் எங்கும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கல்கத்தா முழுவதும் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. (Calcutta en fete, p.4) 

நாளை நாம் அந்நியப் பிடியிலிருந்து வெளியேறுகின்ற நாள் என்ற வகையில் கொண்டாடுவதற்கான நாளாகும் என்று இன்று மாலை நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில், மகாத்மா காந்தி கல்கத்தாவில் கூறினார். இந்தியாவின் நலனுக்காக அந்த நாள் 24 மணி நேரமும் நாம் பிரார்த்தனையையும் விரதத்தினையும் கடைபிடிப்பதோடு, இயலும் வரையில் நூல் நூற்போம் என்றார். கையால் நூற்றல் என்பதானது ஏழையையும் பணக்காரரையும் ஒன்றிணைப்பதோடு தொழிலில்லாத எண்ணற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் கையால் நூல் நூற்றல் பெரும் தொழிலாக அமைந்துள்ளது என்றார். பிரார்த்தனைக்கூட்டத்தில் இருந்த மக்கள் எந்தவித சிறு இடையூறுமின்றி அமைதியாக அவருடைய பேச்சைக் கேட்டனர். (Day of prayer and fast, p.4) 

இந்திய சுதந்திரப் போராட்டத்திற்காக, இந்திய தேசிய காங்கிரஸால் முதல் விதை விதைக்கப்பட்ட இடமான பம்பாய் விழாக்கோலமாகக் காட்சியளித்தது. மேகத்தைக் கிழித்துக்கொண்டு மின்னொளி எங்கும் பரவியிருந்ததைக் காணமுடிந்தது. பாமரனுக்கு சிறிதே வித்தியாசமாகத் தெரிந்த காங்கிரஸ் கொடியிலிருந்து சற்றே மாறுபட்ட, இந்தியாவின் மூவர்ணக்கொடியானது பம்பாயின் புகழ் பெற்ற கட்டடங்களின் உச்சியில் பட்டொளிவீசிப் பறந்தது. (Celebrations in Bombay, p.4) 

வியாழக்கிழமை நள்ளிரவில் புதிய இந்தியா (Dominion) பிறந்தது. வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டு அவையானது நாட்டை நிர்வகிக்கும் அதிகாரத்தைப் பெற்றதோடு, லூயி மௌண்ட்பேட்டன் பிரபுவை டொமினியனின் முதல் கவர்னர் ஜெனரலாகத் தேர்வு செய்ததற்கான ஒப்புதலை வழங்கியது. அதற்கு முன்னதாக டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்திய சுதந்திரத்திற்காக இன்னுயிர் ஈந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் அவர், “நம் அன்பினையும் மரியாதையையும் மகாத்மா காந்திக்குச் செலுத்துவோம். அவர் நமக்கு ஒரு கலங்கரை விளக்காக, வழிகாட்டியாக, தத்துவஞானியாக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வந்துள்ளார்.” இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் நல்லமுறையில் நடத்தப்படுவர் என்ற உறுதிமொழியைத் தந்தார். குடிமகனுக்குரிய அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்றும், அதே சமயம் அவர்கள் தாம் வாழும் நாட்டிற்கும், சட்ட அமைப்புக்கும் நன்றியுணர்வோடு நடந்துகொள்ளவேண்டும் என்றும் கூறினார். அவை உறுப்பினர்கள் இந்தியாவிற்காகவும், அதன் மக்களுக்காகவும் தம்மை அர்ப்பணித்துக்கொள்வதான தீர்மானத்தை நேரு கொண்டுவந்தபோது தன் எழுச்சிமிகு உரையில் இந்தியாவிற்கான சேவை என்பதானது பாதிக்கப்பட்ட கோடானு கோடி பேருக்கான சேவை என்பதே என்றும், நம் தலைமுறையினரின் மாமனிதரின் இலக்கானது ஒவ்வொருவர் கண்ணிலிருந்து ஒவ்வொரு கண்ணீர்த்துளியையும் துடைக்க வேண்டும் என்பதே என்றும், அது நமக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் கண்ணீரும் கம்பலையும் இருக்கும் வரை நம் பணியானது தொடர்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்றும் கூறினார். ஒருமித்த வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டடபின் உறுப்பினர்கள் சரியாக 12.00 மணிக்கு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருமதி ஹன்சா மேதாவால், இந்திய மகளிர் சார்பாக வழங்கப்பட்ட தேசியக்கொடியைப் பெற்றபின் அவையானது ஒத்திவைக்கப்பட்டு. வெள்ளிக்கிழமை காலை கூடுவதாக அறிவிக்கப்பட்டது.  (Free India is born, p.5)

மறக்க முடியாத நாள் என்ற தலைப்பில் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாறு, மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்பு, இரு உலகப்போர்களின் தாக்கம், பிரிவினையின் சோகம் உள்ளிட்டவை  மிகவும் சிறப்பாக விவாதிக்கப்பட்டுள்ளன. (The Red letter day, p.5)  இந்திய அமைச்சரவையின் இடம்பெறும் அமைச்சர்கள், பாகிஸ்தான் உதயம், உலக உரிமைகளில் இந்தியாவின் பங்கு, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் உள்ளிட்ட பல செய்திகள் இப்பக்கத்தில் இடம் பெற்றுள்ளன. நேரு, ஆச்சார்ய கிருபளானி, சரோஜினி நாயுடு, சி.ராஜகோபாலாச்சாரி, சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலானா ஆஸாத், சர் டெரன்ஸ் ஷோன், ஹென்றி கிராடி, பிரதமர் ஓ.பி.ராமசாமி ரெட்டியார் உள்ளிட்டோரின் வாழ்த்துச் செய்திகள், (Independence Day: Leaders messages, p.7, Dominion of Indian Government, p.8)  இந்தியாவின் தந்தை மகாத்மா காந்தி என்ற தலைப்பிலான செய்தியில் அவருக்குப் புகழாரம் (Father of the Nation: India’s debt to Mahatma Gandhi, p.12, Greatness of Bharathi: Contribution to culture, p.12) உள்ளிட்ட பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. சுதந்திர தின செய்திகளைத் தவிர பிற செய்திகளையும் காணமுடிந்தது.     

முதல் பக்கத்தில் ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி மற்றும் நாம் இருவர் திரைப்படங்களுக்கான விளம்பரம் வெளிவந்துள்ளது. பல நிறுவனங்கள் சுதந்திர நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து தேசியக்கொடி, வந்தே மாதரம், தியாகிகளைப் போற்றல், சுதந்திர உதயம், புதிய விண்மீன் பிறந்தது, அடிமைத்தளையிலிருந்து விடுதலை, உறுதியேற்போம், ஆசியாவின் ஜோதி நம் தேசியக்கொடி, நாட்டை வணங்குவோம், தேசியக்கொடிக்கு வணக்கம், வேற்றுமையில் ஒற்றுமை, நாட்டிற்கு வெற்றி, இறுதியாக சுதந்திரம், சுதந்திரத்தின் அடையாளம், வரலாற்றின் சிறப்புமிக்க நாள் 15 ஆகஸ்டு 1947 என்பன போன்ற பொருண்மைகளையும் சொற்களையும் தேசியக்கொடி மற்றும் இந்தியாவின் வரைபடங்களின் பின்புலத்தோடு விளம்பரங்களை வெளியிட்டுள்ளன. திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி மற்றும் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளுக்கான ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் விளம்பரங்கள் உள்ளிட்ட பல விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.

இவ்விதழில் வெளியான தமிழ்க்கலைக்களஞ்சியம் தொடர்பான செய்தி (Encyclopaedia in Tamil: One lakh fund to be collected, The Hindu, 15 August 1947, p.10): “தமிழில் கலைக்களஞ்சியம் : ஒரு இலட்ச ரூபாய் திரட்டப்படவுள்ளது” தமிழில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளிக்கொணர ஒரு இலட்ச ரூபாய் திரட்டுவதற்கான ஓர் இயக்கத்தை கல்வியமைச்சர் திரு டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் ஆரம்பித்துள்ளார். நிதி கேட்ட அவருடைய வேண்டுகோளின் அடிப்படையில் இதுவரை ஏழு நபர்களிடமிருந்து ரூ.33,000 பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் விவரம் : டாக்டர் ஆர்எம்.அழகப்ப செட்டியார் மற்றும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.10,001), திருவாரூர் திரு விஎஸ்.தியாகராஜ முதலியார் மற்றும் சிவகங்கை ராஜா (ஒவ்வொருவரும் ரூ.5,000), கொட்டையூர் திரு கேவி ஏஎல்எம் ராமநாதன் செட்டியார்,  தேவக்கோட்டை திரு ஏஎல் ஏஆர் சோமநாதன் செட்டியார் மற்றும் கண்டனூர் வி.டி.வீரப்ப செட்டியார் (ஒவ்வொருவரும் ரூ.1,001). 

15 ஆகஸ்ட் 1947இல் வெளியான இந்த முழு இதழையும் பெற விரும்புவோர் விருப்பம் தெரிவித்தால் புலனவழி (9487355314) அவர்களுக்கு அனுப்புவேன். இதுவரை பல நண்பர்களுக்கும், மாணவர்களுக்கும் இதனை அனுப்பியுள்ளேன். 

வழக்கம்போல எங்கள் இல்லத்தில் இன்று (15 ஆகஸ்டு 2020) சுதந்திர தின நாளையொட்டி கொடியேற்றினோம்.



08 August 2020

முதல் மொழியாக்க அனுபவம்

The Hindu இதழில் வெளியான (“Cooperation, not confrontation”, Alladi Kuppuswami, 16.8.1999, p.12) கட்டுரை 1999இல் முதன் முதலாக நேரடியாக மொழியாக்கம் செய்தது மறக்கமுடியாத அனுபவம் ஆகும்.

1970களின் இடையில் The Hindu வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில் புதிய சொற்களுக்கான பொருளைத் தேட ஆரம்பித்தேன். பின்னர் சிறு சிறு பத்திகளை அவ்வப்போது மொழியாக்கம் செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சோதனை முயற்சியாக, பெரிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம் செய்ய எண்ணி இக்கட்டுரையை எடுத்துக்கொண்டேன்.

முதன்முதலாக ஆங்கிலக்கட்டுரையை நேரில் பார்த்துத் தட்டச்சு, தமிழ்த் தட்டச்சுப் பொறியில் தொடர்ந்து, இடைவெளியின்றி ஒரே அமர்வு, தவறு வந்துவிட்டால் திருத்தமுடியாத நிலையில் கவனம் செலுத்துதல், அகராதிகளைப் பார்க்காமல் நேரடியாக மொழியாக்கம், முடிந்தவரை எளிய சொற்களைப் பயன்படுத்தியது என்ற வகையில் மொழியாக்கம் அமைந்தது. ஒவ்வொரு பத்தி ஆரம்பிக்கும்போதும் இடைவெளி, ஒவ்வொரு வாக்கியமும் முடிந்தபின் ஒற்றை எழுத்து இடைவெளி, தேவையான இடங்களில் இடைக்கோடு, வலது பக்கம் தாளுக்கு வெளியே சென்றுவிடாமல் தட்டச்சு போன்றவற்றை மனதில் வைத்துக்கொண்டு இதனைச் செய்தேன். இதற்காக முன்வரைவோ, தற்காலிகப் பதிவோ எடுக்கவில்லை. இது முதலில் நேரடியாக (original) தட்டச்சிடப்பட்டதாகும். இதனை 65 நிமிடங்களில் தட்டச்சு செய்து அதனையும் குறிப்பிட்டுள்ளேன். சுமார் 10 இடங்களில் தட்டச்சுப்பிழை இருந்தது. அதனை திருத்தும் வெண்மை மை (correcting fluid) கொண்டு சில இடங்களில் திருத்தினேன். என்னைப் பொருத்தவரை இதனை ஒரு சாதனையாகவே அப்போது எண்ணினேன். அதனை இன்னும் பாதுகாத்து வருகிறேன்.

முந்தைய மொழியாக்கத்தைப் பார்க்காமல் தற்போது நான் மொழியாக்கம் செய்த முதல் பத்தி : “மகாத்மா காந்தியின் தலைமையின்கீழ் அகிம்சை என்ற ஆயுதத்தோடு நாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தபோது நாம் நமக்கிடையே இருந்த ஜாதி, இனம், சமயம், இடம், பாலினம் உள்ளிட்ட அனைத்து வேற்றுமைகளையும் மறந்தோம். மிக மோசமான போலீசாரின் லத்தியை பலர் எதிர்கொண்டார்கள். பலர் சிறைக்குச் சென்றனர். அவர்கள் தம் சுதந்திரத்தை மட்டுமன்றி தம் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் இழந்தார்கள். இந்த வெற்றிக்கு ஆடவர்-மகளிர், பணக்காரன்-ஏழை, கல்லாதவர்-கற்றவர் என்ற அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் இருந்தது.”






நாளடைவில் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழியாக்கம் செய்வதற்கும் இதுபோன்ற அனுபவம் உதவியது. தொழில்நுட்பம், அறிவியல், சட்டம், பொறியியல் போன்ற துறை தொடர்பானவற்றை மொழியாக்கம் செய்வதில் சற்றே சிரமம் உள்ளதால் அதில் கவனம் செலுத்துவதில்லை.  மொழியாக்கம் தொடர்பான பிற அனுபவங்களைப் பற்றி பிறிதொரு பதிவில் விவாதிப்போம்.

12 June 2020

வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள்

பத்திரிகைகள் ப்ராட்ஷீட்  (23.5" x 29.5"), பெர்லினர்  (12.4" x 18.5"), டேப்ளாய்ட்   (11.0" x 16.9"), டேப்ளாய்ட் அளவில் உள்ள காம்பாக்ட் என்ற நான்கு வகைகளில் உள்ளன. ப்ராட்ஷீட் பெரும்பாலும் ஆறு பத்திகளைக் கொண்டிருக்கும். அதற்கென ஒரு பாரம்பரிய முறையைக் கொண்டு ஆழமாகவும், நுணுக்கமாகவும் செய்தியை அணுகும். படித்தவர்கள் மத்தியில் ப்ராட்ஷீட் முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும். காம்பேக்ட் என்பது டேப்ளாய்ட் அளவினைப் போன்றதேயாகும். தரம் மற்றும் உயர்நிலை என்ற வகையில் தனித்து வெளிப்படுத்திக் கொள்வதற்காகவும்,  டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து சற்றே வேறுபடுத்திக் காண்பித்துக் கொள்வதற்காகவும், டேப்ளாய்ட் இதழியல் என்பதிலிருந்து வேறுபடுத்திக்கொள்ள விரும்புவதாலும் காம்பேக்ட் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.

இவற்றில் டேப்ளாய்டை ப்ராட்ஷீட்டின் பாதி என்பர். இருந்தாலும் இந்த வரன்முறையை முற்றிலும் உண்மை எனக் கூறிவிடமுடியாது. ஏ3 அளவிற்கும் டேப்ளாய்ட் அளவிற்கும் பெரிய வேறுபாடு கிடையாது. ஏ2 தாளில் டேப்ளாய்டை அச்சடிக்கும்போது நாளடைவில் பொருத்தமாகிவிடுகிறது.  நாளிதழ் அளவுகளைக் குறிக்கப்படும் டேப்ளாய்ட், டேப்ளாய்ட் இதழியலையும் குறிக்கிறது.

1880களில் காணப்பட்ட, எளிதாக உட்கொள்ளக்கூடியதாகவுள்ள, தாராளமாகக் கிடைத்த டேப்ளாய்ட் மாத்திரைகளைக் குறிக்கவே முதன்முதலாக இச்சொல் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, சீனா, ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா, பிரேசில் உள்ளிட்ட பல நாடுகளில் டேப்ளாய்ட் அளவிலான இதழ்கள் வெளிவருகின்றன.

21ஆம் நூற்றாண்டு டேப்ளாய்டின் நூற்றாண்டு என்று வர்ணிக்கப்படுகிறது. இதழியல் வரலாற்றாளர்கள் டேப்ளாயிடியசம் என்பதானது ஐந்து முக்கியமான சகாப்தங்களைக் கடந்து வந்ததாகக் கருதுகிறார்கள். முதல் சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் 30 வருடங்கள்   பென்னி பிரஸ் என்ற நிலையில் மலிவான அச்சு, அச்சுத்துறை மற்றும் அஞ்சல் துறை வளர்ச்சி, பரபரப்பான செய்திகளின் வாசிப்பாளர்கள் என்ற வகையில் அமைந்ததாகும். இரண்டாவது சகாப்தமான 19ஆம் நூற்றாண்டின் இறுதிக்காலங்கள், பத்திரிகை அதிபர்கள் கோலோச்சிய காலமாக அமைந்தது. அக்காலத்தில் புலன் விசாரணையிலான செய்திக்கான முறைகள் கடைபிடிக்கப்பட்டு, பரபரப்புச் செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மூன்றாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 20 வருடங்கள், சுதந்திர, கவலையற்ற, ஜாஸ் பண்பாடு பரவிய காலமாகும். வானொலி விரிவடைந்துகொண்டிருந்த இக்காலகட்டத்தில் டேப்ளாய்ட் அச்சிதழின் ஊடாக ஜாஸ் இதழியல் போட்டியிட்டு செய்திகளைக் கொணர ஆரம்பித்தது. நான்காவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 70களில், தொலைக்காட்சியின் வரவு இதற்கு ஒரு போட்டியாக அமைந்தது. ஐந்தாவது சகாப்தமான 20ஆம் நூற்றாண்டின் 90கள் மற்றும் 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அச்சு ஊடகத்தில் மட்டுமின்றி மின்னூடகத்திலும், கணினிமூலமாக தகவல் பெறும் நிலையிலும் டேப்ளாய்ட் பரவலாகப் பேசப்பட ஆரம்பித்தது.

டேப்ளாய்ட் அதன் ஆரம்ப கால நிலையிலிருந்து பல பரிமாணங்களைக் கடந்து, வாழ்வின் ஓர் அங்கமாக மாறி வந்துகொண்டிருக்கிறது. டேப்ளாய்ட் இதழியல், பரபரப்பான அல்லது உணர்வுபூர்வமான செய்திகளைக் கொண்டுவருகின்ற இதழ்களோடு தொடர்புடையது. சுருக்கமான, எளிதாகப் படிக்கக்கூடிய, அதே சமயத்தில் மிகைப்படுத்தப்பட்ட வடிவில் செய்தியைத் தருவதாகும். டேப்ளாய்டில் ஐந்து பத்திகளுக்கு மேல் இருக்காது. நகரங்களில் வாழ்வோர் பேருந்தில் செல்லும்போது எடுத்துச்செல்லவோ, படிக்கவோ எளிதாக இருப்பதால் இதனைப் படிக்க ஆரம்பித்தனர்.

அமெரிக்காவில் 1970களில் பெரும்பாலான டேப்ளாய்டுகள், வார இதழ்களாயின. அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க ப்ராட்ஷீட்களாக தி நியூயார்க் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட், தி வால் ஸ்ட்ரீட் போன்ற ப்ராட்ஷீட் இதழ்களைக் கூறலாம். அச்சு விலையேற்றம் காரணமாக பல ப்ராட்ஷீட் இதழ்கள் தம் அளவினை குறைக்க ஆரம்பித்தன. 2008இல் தி நியூயார்க் டைம்ஸ் இதழும், தொடர்ந்து தி லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், தி வாஷிங்டன் போஸ்ட் ஆகிய இதழ்களும்  அளவினைக் குறைத்தன.  பின்னர் அதன் நடையும், தரமும் மாறி அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக 2000க்குப் பிறகு பெரும்பாலான இதழ்கள் வாசிக்க எளிதாக அமைவதாகக்கூறி, டேப்ளாய்ட் வடிவிற்கு மாற ஆரம்பித்துள்ளன.

நியூயார்க் வேர்ல்ட் இதழின் பதிப்பகத்தாரான ஜோசப் புலிட்சர், இலண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி மெயில் இதழின் நிறுவனரான ஹாம்ஸ்வொர்த் என்பவரை அழைத்து அவ்விதழை ஒரு நாளைக்கு வடிவமைத்துத் தரும்படி கூற, வழக்கமான பத்திரிகைக்கு மாறாக, அதன் பாதி அளவில் அவர் வடிவமைத்த இதழ் ஜனவரி 1, 1901இல் வெளியானது.

அப்போது அது 20ஆம் நூற்றாண்டின் பத்திரிகைள் என்று வர்ணிக்கப்பட்டது. இதழை வடிவமைத்தபோது அவர், அளவிற்கு முக்கியத்துவம் தராமல், சரியான முறையில் முழுமையாக அச்சிடும் இடத்தைப் பயன்படுத்தல் என்பதை இலக்காகக் கொண்டு, சிறிய அளவிலான கட்டுரைகள், சிறிய பத்திகள், எளிதான சொற்றொடர்களைக் கொண்டு அவ்விதழை அமைத்திருந்தார். 1903இல் அவர் இலண்டனில் டெய்லி மிர்ரர் என்ற டேப்ளாய்டை ஆரம்பித்தார். டேப்ளாய்டில் காணப்படுகின்ற சிகப்பு முகப்புப்பட்டையினை அவ்விதழில் காணலாம். அதில் குற்றச்செய்திகள், மனித சோகங்கள், பிரபலங்களின் கிசுகிசுக்கள், விளையாட்டு, நகைச்சுவை, புதிர் போன்றவற்றுடன் அதிக எண்ணிக்கையில் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. அக்காலகட்டத்தில் டெய்லி ஸ்கெட்ச் மற்றும் டெய்லி கிராபிக் இதழ்கள் அவருடைய இந்த உத்தியைப் பயன்படுத்த ஆரம்பித்தன. 

20ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இலண்டனின் பெரும்பாலான ப்ராட்ஷீட் இதழ்களான தி இன்டிபெண்டன்ட், தி டைம்ஸ், தி ஸ்காட்ஸ்மேன் போன்றவை அளவைச் சுருக்கி காம்பேக்ட்டிற்கு மாறின.  இலண்டனில் டெய்லி எக்ஸ்பிரஸ், டெய்லி மிர்ரர், டெய்லி ஸ்டார், டெய்லி மெயில், சன், தி மெயில் ஆன் சன்டே (ஞாயிறு),  சன்டே எக்ஸ்பிரஸ் (ஞாயிறு) ஆகியவை டேப்ளாய்ட் வடிவில் வெளிவருகின்றன. 

தி மான்செஸ்டர் கார்டியன் என்ற பெயரில் வெளிவந்து, பின்னர் பெயர் மாற்றம் பெற்ற கார்டியன் இதழ் ப்ராட்ஷீட் (1821-2005), பெர்லினர் (2005-2018) இதழில் வெளியாகி 2018 முதல் டேப்ளாய்ட்டாக அல்லது வெளியாகிறது.

மாறாக ஐரோப்பாவின் மிகப்புகழ் பெற்ற ஜெர்மன் டேப்ளாய்டான பில்ட் வழக்கமான டேப்ளாய்டைவிட சற்றுப் பெரிதாக அதே சமயத்தில் ப்ராட்ஷீட்டைவிட சற்றுச் சிறிதாக அச்சிடப்பட்டது. அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்ற அவ்விதழ் அளவில் ப்ராட்ஷீட், நடையில் டேப்ளாய்ட் என்ற பெயரைப் பெற்றதாகும். ஜெர்மானிய மொழியில் பில்ட் என்றால் படங்களைக் குறிக்கும். புகைப்படங்களை அதிகம் கொண்டிருந்ததால், அதற்கு அப்பெயர் சூட்டப்பட்டது.

8 ஜுன் 2020 அன்று வெளியான பில்ட்

பிரிட்டனில் டேப்ளாய்டுகள் முகப்புப்பக்கத்தில் சிகப்பு வண்ணப்பட்டையைக் கொண்டிருக்கும். அமெரிக்க டேப்ளாய்டுகளைவிடவும் அவை அதிக அளவிலான உணர்வுபூர்வ செய்திகளையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக பல பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்து, இலண்டனில் இது தொடர்பாக சில விதிமுறைகளை நிர்ணயிக்கப்பட்டன.

இந்தியாவில் வெளிவருகின்ற பத்திரிகைகள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் அளவில் வெளிவருகின்றன. 1941 முதல் வெளிவந்த பிளிட்ஸ் இந்தியாவிலிருந்து வெளிவந்த முதல் டேப்ளாய்ட் என்ற பெருமையினைப் பெற்றது. ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் வெளிவந்த அவ்விதழ்  1990களின் இடையில் நின்றுவிட்டது.

இந்தியாவிலிருந்து டேப்ளாய்டாக வெளிவந்த/வெளிவருகின்ற இதழ்கள் தி ஆஃடர்னூன் டிஸ்பேச் கூரியர், (ஆங்கில நாளிதழ், மும்பை, 1985 முதல்), எபேலா (பெங்காளி நாளிதழ், கொல்கத்தா, 2018 வரை), கேரள கௌமாண்டி (மலையாள மாலை நாளிதழ், 2006 முதல்), ராஷ்ட்ர தீபிகா (மலையாள மாலை நாளிதழ், 1992 முதல்), பிரபஞ்சன் சாங்கட் (உருது நாளிதழ், ஆக்ரா, 2008 முதல்), நியூடெல்லி டைம்ஸ் (ஆங்கில வார இதழ், புதுதில்லி, 1991 முதல்), மெட்ரோ நவ் (ஆங்கில காலை நாளிதழ், 2006-2009) என்பனவாகும். இந்தியாவில் முதன்முதலாக பெர்லினர் அளவில் வெளியான இதழ் மிண்ட் (ஆங்கில நாளிதழ், புதுதில்லி, 2007), 2016இல் ப்ராட்ஷீட்டாக மாறியது.

தமிழகத்தில் தற்பொழுது வாசிக்கப்படுகின்ற நாளிதழ்கள் பெரும்பாலும் ப்ராட்ஷீட் வகையைச் சார்ந்ததாகும்.  தினமணி இதழின் அளவு தோராயமாக 21.0" x 26.5" ஆகும். தமிழகத்தில் சிறப்பு நிகழ்வுகளின்போது சில இதழ்கள் டேப்ளாய்ட் அளவிலான இணைப்பினை வெளியிடுகின்றன. ஆனந்த விகடன் வார இதழ், சில ஆண்டுகளுக்கு முன் சகோதரப்பதிப்பாக ஜுனியர் போஸ்ட் என்ற இதழை டேப்ளாய்ட்டில் வெளியிட்டது.

எங்கள் தாத்தா ஜ. ரத்தினசாமி, நவசக்தி நாளிதழ் மற்றும் போல்ஸ்டார் நாளிதழ்களின் வாசகர் ஆவார். 1960களில் அவ்விதழ்களைப் பார்த்ததும், அவற்றுள் டேப்ளாய்ட் அளவில் வெளியான போல்ஸ்டார் நாத்திகம் இராமசாமியை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததாகவும் நினைவு.

வாசகர்கள் இலவச இணையதளத்தின் பக்கம் திரும்ப ஆரம்பித்துவிட்டதால் அண்மைக்காலமாக ப்ராட்ஷீட்டாகட்டும், டேப்ளாய்ட்டாகட்டும் இரண்டுமே கடினமான சூழலை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளன. இணைய வசதி எளிதில் கிடைக்கின்ற நிலையில் மிக விரைவில் ப்ராட்ஷீட் பத்திரிகைகள், டேப்ளாய்ட் அளவில் இணையத்தில் படிக்க வாய்ப்புகள் பெருக ஆரம்பித்துள்ளன. இணைய தளங்களில் ப்ராட்ஷீட், கிட்டத்தட்ட டேப்ளாய்ட் அளவிற்கே மாற ஆரம்பித்துவிட்டது எனலாம். அச்சிதழைவிட இணைய இதழ் கண்ணைக் கவரும் வகையில் தலைப்புச் செய்திகள், பார்க்க ஆவலைத்தூண்டுகின்ற வண்ணங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கொண்டு வெளிவர ஆரம்பித்துள்ளன. உதாரணமாக தி நியூயார்க் டைம்ஸ் இதழின் இணைய இதழ் நான்கு பத்திகளைக் கொண்டு, கிட்டத்தட்ட டேப்ளாய்ட்டைப் போலவே காட்சியளிக்கிறது. இரண்டாவது பத்தியானது மற்ற மூன்று பத்திகளைவிடவும் சற்றே அகலமாக இருக்கிறது. அந்த வகையில் நோக்கும்போது ப்ராட்ஷீட் நிலையிலான ஆழ்ந்த, பரந்த வாசிப்பு என்பதானது குறைய ஆரம்பித்து, டேப்ளாய்ட்டின் பக்கம் அனைவரும் திரும்பிப்பார்க்கின்ற நேரம் வந்துவிட்டது எனலாம்.

பரபரப்பான, உணர்வுபூர்வமான செய்திகளைத் தருகின்ற இதழியல் என்ற நிலையிலிருந்து மாறி அனைவரும் படிக்கும் வகையிலான செய்திகளைக் கொண்டு வருகின்ற இதழ், வாசிக்கவும் கையாளவும் எளிதான இதழ் என்ற வகையில் தற்போது டேப்ளாய்ட் இதழியலின் பயணம் தொடர்கிறது. போதிய விளம்பரம் இன்மை, அதிகமாக விற்பனையாகா நிலை போன்றவற்றின் காரணமாக அச்சு இதழிலிருந்து இணைய இதழிற்கான மாற்றம் வந்துவிட்ட நிலையில் மிக விரைவில் தமிழ்ப் பத்திரிகைகளும் காம்பேக்ட்டிலிருந்து டேப்ளாய்டுக்கு மாற அதிகமான வாய்ப்புகள் உள்ளன, அச்சு வடிவில் மட்டுமன்றி, இணைய இதழாகவும்.   

நன்றி : தினமணி, வாசகர்களை ஈர்க்கும் டேப்ளாய்ட்கள், 11 ஜுன் 2020