17 August 2019

விக்கிபீடியாவில் 700ஆவது பதிவு

6 ஜுலை 2014இல் தமிழ் விக்கிபீடியாவில் எழுதத் தொடங்கி, அண்மையில்  700 பதிவுகளை நிறைவு செய்துள்ளேன். முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதைப் போல ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம் கிடைப்பதை உணர்கிறேன். கடைசியாக எழுதப்பட்ட 100 பதிவுகளின் பின்புலத்தினைப் பார்ப்போம்.

மைசூர் பயணத்தின்போது பல இடங்களுக்குச் சென்றுவந்தோம். அவற்றில் ஒன்றான நேரில் நாங்கள் பார்த்த மெழுகு அருங்காட்சியகம் பற்றி எழுதி, உரிய படங்களை இணைத்தேன்.
பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் அரிச்சந்திரபுரம் என்ற இடம் உள்ளது. அங்குள்ள சந்திரமௌலீஸ்வரர் கோயிலில் 24 நவம்பர் 2017இல் குடமுழுக்கு நடைபெற்றதை நாளிதழ் செய்தி வழியாக அறிந்தேன். 28 நவம்பர் 2017இல் அங்கு சென்று கோயிலைப்புகைப்படம் எடுத்து, உரிய விவரங்களைத் திரட்டினேன். அப்போதுதான் அது ஒரு தேவார வைப்புத்தலம் என்பதை அறிந்தேன்.
கடந்த 10 வருடங்களாக வெளிநாட்டு இதழ்களைப் படித்துவரும் நிலையில் தமிழ் விக்கிபீடியாவில் இல்லாத சில இதழ்களைப் பற்றி பதிவுகளைப் பதிந்தேன். அவ்வகையில் டான், தி கார்டியன் வீக்லி, தி சன், போன்ற இதழ்களைப் பற்றி சுருக்கமாகப் பதிந்தேன்.



தமிழகத்தில் நடைபெறுகின்ற முக்கிய விழாக்களில் ஒன்று பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெறுகின்ற முத்துப்பந்தல் விழாவாகும். வைகாசி பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுவது திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் முத்துப்பந்தல் அளிப்பதாகும். திருஞானசம்பந்தப்பெருமான் அடியார் கூட்டத்தோடு வரும்போது நண்பகலாக இருக்கும். வெப்பம் அதிகமாக இருந்ததை அறிந்த இறைவன் தன் பூத கணங்களை அனுப்பி அவருக்கு முத்துப்பந்தல் அளித்து அவரை அழைத்து வருமாறு கூறுவார். 15 ஜுன் 2018 அன்று நடைபெற்ற முத்துப்பந்தல் விழாவிற்கு நேரில் சென்று, ஞானசம்பந்தப்பெருமானுடன் வந்த அடியார் கூட்டத்துடன் சென்று பின்னர் தேனுபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நிகழ்வுகளிலும் கலந்துகொண்டேன். வந்த மறுநாளே விக்கிபீடியாவில் பதிவினை எழுதினேன். 
திருச்சிராப்பள்ளியிலுள்ள அகில இந்திய வானொலி நிலையம் தன் 80ஆவது அண்டு துவக்க விழாவினை 16 மே 2018இல் கொண்டாடியதாக நாளிதழில் படித்தேன். அச்செய்தியினையும், பிற தொடர்புடைய செய்திகளையும் இணைப்பாகத் தந்து திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தைப் பற்றி ஒரு பதிவினைத் தொடங்கினேன்.
அதுபோலவே சென்னையில், இந்திய விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட திரு கு.மகாலிங்கம் (87) என்பவரால் ஒரு நூலகம் சிறப்பாக நடத்தப்பட்டு வருவதையறிந்தேன். நாளிதழ் செய்தியின் அடிப்படையில் அதிலிருந்த செய்திகளை மேற்கோளிட்டு மகாத்மா காந்தி நூல் நிலையம் என்ற தலைப்பில் புதிய பதிவினை ஆரம்பித்தேன்.
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் புதிய துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்ரமணியன் அவர்கள் 4 அக்டோபர் 2018இல் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து அடுத்த நாளில் 5 அக்டோபர் 2018இல் அவரைப் பற்றிய பதிவினை எழுதினேன். 

நிகழ்வு நடைபெறும் நாளன்றே பதிவினைத் தொடங்கிய வித்தியாசமான அனுபவம் ஒற்றுமைக்கான சிலை பதிவைப் பற்றியதாகும். 31 அக்டோபர் 2018 அன்று பிரதமர் நரேந்திர மோடி, சர்தார் படேலின் சிலையைத் திறந்துவைத்தார். அன்று தமிழ் விக்கிபீடியாவில் அச்சிலை பற்றிய விவரம் உள்ளதா என்று தேடியபோது இல்லாததால் அன்றே ஆங்கில விக்கிபீடியாவில் இருந்த கட்டுரையினை நேரடியாக மொழிபெயர்த்து, ஒற்றுமைக்கான சிலை என்ற பதிவினைப் பதிந்தேன். 
சற்றொப்ப அதே வகையில் ஆரம்பிக்கப்பட்டது 11.11.11. என்ற தலைப்பில் அமைந்ததாகும். முதல் உலகப்போரில் ஜெர்மனிக்கும் அதற்கெதிரான கூட்டுப்படைகளுக்கிடையில் போர் நிறுத்தம் ஏற்பட கையொப்பமிடப்பட்ட நிகழ்வே அது. அந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் நாள் காலை 5.45க்கு பிரான்சில் கையொப்பமிடப்பட்டு, அன்று பகல் 11.00 மணிக்கு செயல்பாட்டிற்கு வந்தது. அதனால் அதனை 11.11.11 என்றழைப்பர். தமிழில் இவ்வாறே 11.11.11 என்ற தலைப்பிட்டு, நூற்றாண்டு நினைவு நாளின் அடுத்த நாளான 12 நவம்பர் 2018இல் எழுத ஆரம்பித்தேன். பின்னர் சக விக்கிபீடிய நண்பர்கள் இத்தலைப்பினை போர் நிறுத்த நினைவு நாள் என்று மாற்றினர்.

தேவார வைப்புத்தலங்கள் பற்றிய பதிவுகளில் இல்லாத கோயில்களுக்கு புதிய பதிவு எழுதும் பணியையும், முன்னரே பதிவிட்டிருந்தனவற்றை மேம்படுத்தும் பணியையும் இக்காலகட்டத்தில் மேற்கொண்டேன். அதற்கு அடிப்படையாக பு.மா.ஜெயசெந்தில்நாதன் எழுதிய தேவார வைப்புத்தலங்கள் (வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009) நூலை எடுத்துக்கொண்டேன். அதில் 147 தலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதனை வகைப்படுத்தி, உரிய வார்ப்புரு தந்ததோடு, அந்தந்த கோயில்களின் பெயரை இணைத்தேன்.
ஆங்கில விக்கிபீடியா அனுபவம்
விக்கிபீடியாவில் நேரடியாக கட்டுரைகளைப் பதியவும், வரைவிற்கு அனுப்பி பின்னர் அது தேர்ந்தெடுக்கப்பட்டு கட்டுரை வடிவம் பெறும் வசதியும் உள்ளது. ஆங்கில விக்கிபீடியாவில் பெரும்பாலும் நேரடியாகவே கட்டுரையினைப் பதிந்துவருகிறேன். 
நேரடிப்பதிவு நீக்கம்
அவ்வகையில் 2015இல் தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் பற்றி (Brihadeeswarar Temple Car Festival) நேரடியாக எழுதியிருந்த பதிவு, போதிய ஆதாரங்கள் இல்லை என்று நீக்கப்பட்டது. 
வரைவு, கட்டுரை வடிவம் பெறல்
பிறிதொரு முறைப்படி 2017இல் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலைப்பற்றி (Thukkachi Abatsahayesvar templeஎழுதி வரைவு ஒப்புதலுக்கு (draft for approval) அனுப்பியிருந்தேன். சக விக்கிபீடியர்கள் கேட்ட சில கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் மறுமொழி கூறிய பின்னர் அப்பதிவு கட்டுரை வடிவம் பெற்றது. 
பதிவு, வரைவாக மாற்றப்படல்
5 ஜுலை 2019இல் Agastheeswaram Agastheeswarar Temple என்ற தலைப்பில் பதியப்பட்ட ஒரு பதிவானது, 14 ஜுலை 2019இல் போதிய ஆதாரங்கள் இல்லாததால் வரைவாக மறுபடியும் ஆக்கப்படுவதாகவும், மேலும் கூடுதல் விவரங்களைத் தந்து கட்டுரையை செழுமைப்படுத்தவேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது. அதனை மறுபடியும் கூடுதல் விவரங்களுடன் மேம்படுத்தியுள்ளேன். தட்டச்சு செய்த பதிவு வரைவாவது இம்முறைதான். வரைவு நிலையிலிருந்து இயல்பு நிலைக்கு அப்பதிவு திரும்பும் நாளுக்காகக் காத்திருக்கிறேன். 



ஆங்கில விக்கிபீடியாவில் நான் எழுதிய கட்டுரைகளில் 20 கட்டுரைகள் மதிப்பீடு செய்யப்பட்டதாக 23 ஆகஸ்டு 2019 அன்று மின்னஞ்சல்கள் பெறப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை தமிழ் விக்கிபீடியாவில் உள்ள தேவார வைப்புத்தலங்கள் தொடர்பானவையாகும். ஒரே நாளில் இவ்வாறாக மதிப்பீடு செய்யப்படுவது இதுதான் முதல் முறையாகும்.

என் எழுத்துப்பணிக்குத் துணைநிற்கும் சக விக்கிபீடியர்கள், வலைப்பூ நண்பர்கள், பிற நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்தார் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.


விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 

21 comments:

  1. இதுவொரு அளப்பெரிய சாதனையே
    சுட்டிகளுக்கு பிறகு கணினி வழியில் சென்று படிப்பேன்.

    தங்களது மகத்தான எழுத்துப்பணி மென்மேலும் சிறக்க எமது மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வேண்டுகிறேன்....

    ReplyDelete
  3. வாழ்த்துகள்
    தங்களின் சாதனை தொடரட்டும்

    ReplyDelete
  4. இது பெரிய சாதனை... மிகவும் மகிழ்ச்சி ஐயா... வாழ்த்துகள்...

    ReplyDelete

  5. தங்களின் சாதனை தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வணக்கம் சகோதரரே

    தங்களது சாதனைகள் பிரமிக்க வைக்கின்றன. தாங்கள் மேலு‌ம் பலநூறு பதிவுகள் தந்து,எங்கள் பார்வைக்கு விருந்தாக்க வேண்டுமென இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  7. செயற்கரிய செய்வார் பெரியர்...! வாழ்த்துக்கள் ஐயா!

    ReplyDelete
  8. 700 பதிவுகள் என்பது மிகப்பெரிய விஷயம்.. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  10. எனக்கும் ஆசை. ஆனால் என்னவோ .. தடைபட்டுக் கொண்டே போய் விட்டது. இனிமே எங்கே ....!?

    ReplyDelete
  11. 5 ஆண்டுகளில் 700 பதிவு - அரும் பெரும் சாதனை _2020 ல் 1000 . ஆவது பதிவு எதிர்பார்க்கிறோம் - வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. பெரு மகிழ்ச்சியும் பேருவகையும்!

    ReplyDelete
  13. எழுநூறு பதிவுகள் நிறைவு செய்வதெபது அரிய சாதனை!
    மனம் நிறைந்த வாழ்த்துக்களும் இனிய பாராட்டுகளும்!!

    ReplyDelete
  14. இணையத்தில் தங்கள் பங்களிப்பு அசாதரண்மானது, 1000 தாண்டியும் தொடர வாழ்த்துகள் ஐயா!

    ReplyDelete
  15. மனம் நிறை வாழ்த்துகள் முனைவர் ஐயா. 700 பதிவுகளா. மிகப் பெருமிதம் . எத்தனை
    உழைப்பு இதில் பதிவாகி இருக்கிறது.
    மிகவும் மகிழ்ச்சி ஐயா. ஆயிரத்தைத் தொட வாழ்த்துகள்.
    வணக்கம்.

    ReplyDelete
  16. மிகப்பெரிய சாதனை ஐயா...
    தொடரட்டும்... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. விக்கிப்பீடியாவில் எழுதுவிஷயஙள் அப்படியே ஏற்றுக் கொள்ள்ப்படுபவைஆகாவே இதிலெழுதுவதற்கு நேர்மை அவசியம் தங்கள் பணிசிறக்க வாழ்த்துகள்

    ReplyDelete
  18. மிக்வும் சிறந்த பணி ஐயா. வாழ்த்துகளும், பாராட்டுகளும்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  19. விக்கிப்பீடியாவில் 700 பதிவுகள்... மனம் நிறைந்த வாழ்த்துகள் ஐயா. மேலும் உங்கள் பணி சிறப்படைய வாழ்த்துகள்.

    ReplyDelete