தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் இராஜராஜ சோழர் முடிசூட்டுப் பெருவிழா மற்றும் தமிழர் கலை, பண்பாட்டுப் பெருவிழா 3 ஆகஸ்டு 2019 அன்று காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை அழைப்பிதழில் கண்டுள்ளவாறு சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் வாய்ப்பினை சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் வழங்கியிருந்தனர். சிறப்புரை தொடங்குவதற்கு முன்பாக எம்பெருமானையும், அன்னையையும் சன்னதியில் சென்று வணங்கினேன்.
தொடர்ந்து துவக்கவிழா தொடங்கவிருந்த நடராஜர் மண்டபம் வந்துசேர்ந்தேன். விழாவிற்காக வந்திருந்த குழு நண்பர்களிடம் திரு உதயசங்கர் அறிமுகப்படுத்தினார்.
மிகவும் சிறப்பாக நிகழ்ச்சி நிரலின்படி நிகழ்வுகள் தொடங்கின. தென்னகப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர் எம்.சுப்பிரமணியம் அவர்கள் தலைமை வகித்தார். இவ்வாறான நிகழ்வுகள் நடத்தப்படவேண்டியதன் அவசியத்தையும், தென்னகப்பண்பாட்டு மையம் நம் வரலாற்றுப்பெருமைகளை வெளிக்கொணரும் அனைத்து முயற்சிகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தலைமையுரையில் எடுத்தரைத்தார். தஞ்சை தமிழ்ச்சங்கத்தலைவரும், தமிழ்ப்பல்கலைக்கழக முன்னாள் கட்டடக்கலைத்துறைப் பேராசிரியருமான முனைவர் தெய்வநாயகம், திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரான பேராசிரியர் முனைவர் சண்முக.செல்வகணபதி ஆகியோர் உரையாற்றினர். சொற்பொழிவாளர்கள் தம் உரையில் பெரிய கோயிலின் சிறப்பையும், மன்னனின் மாண்பினையும் உரைத்ததுடன், இளைய தலைமுறையினர் இவ்வாறான விழாக்கள் மூலமாக நம் பண்பாட்டை முன்எடுத்துச்செல்வதையும் பாராட்டினர்.
|
(வலமிருந்து) ஜம்புலிங்கம், பேராசிரியர் தெய்வநாயகம், முனைவர் எம்.சுப்பிரமணியம், திரு உதயசங்கர் |
சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு நிறைவு செய்து அரை நூற்றாண்டு காலமாக பௌத்தம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள ராஜராஜனுக்கும் பௌத்தத்திற்கும் இடையேயான தொடர்பினைப் பற்றிச் சிறப்புரையாற்றினேன்.
|
கருவறை தென்புறவாயிலின் படிக்கட்டில் புத்தர் சிற்பம் |
|
ராஜராஜனின் திருவாயிலில் புத்தர் சிற்பம் |
தஞ்சாவூர் பெரிய கோயிலில் புத்தர் சிற்பங்கள், புத்தர் ஓவியம், நாகப்பட்டின புத்த விகாரை கட்டுவதற்காக ராஜராஜசோழன் அனுமதி தந்தமை, கடந்த 25 ஆண்டு களப்பணியின்போது கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 70 புத்தர் சிலைகளில் பெரும்பாலானவை ராஜராஜசோழன் காலத்தைச் சார்ந்தவையாகவோ அதற்குப் பின்னுள்ள காலத்தைச் சார்ந்தவையாகவோ உள்ளமை என்ற நிலைகளில் விவாதப் பொருள் அமைந்தது.
|
பேராசிரியர் சண்முக செல்வகணபதியுடன் திரு உதயசங்கர் |
தென்னகப் பண்பாட்டு மையம், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு, தஞ்சை தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து இவ்விழாவில் கலந்துகொண்டு, உரையாடியது சிறிது நேரமாக இருந்தாலும் அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக என்னை விழாவிற்கு அழைத்த திரு உதயசங்கர் அவர்களுக்கும், சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குழு உறுப்பினர்களின் ஆர்வமும், ஈடுபாடும் என்னை பிரமிக்க வைத்தன. 1990களின் ஆரம்பத்தில் நான் பௌத்த ஆய்வில் தடம் பதித்த காலத்தில் இருந்த ஆர்வத்தினை அவர்களிடம் கண்டேன். அடுத்து கும்பகோணம் செல்ல வேண்டியிருந்ததால் பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இயலா நிலையில். நண்பர்களிடம் பிரியாவிடை பெற்று அங்கிருந்து புறப்பட்டேன்.
சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழுவினர் தம் முகநூல் பக்கத்தில் விழா தொடர்பான பிற புகைப்படங்களைப் பகிர்ந்திருந்ததோடு, அடுத்த ஆண்டில் இராஜராஜனின் 1035ஆவது முடிசூட்டு விழாவினை இன்னும் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தனர். அவர்களுடைய ஆய்வுத்தேடலும், பணியும் சிறக்க மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்புரைக்குப் பின் வரலாற்றுச்சிறப்புகளை விளக்கும் மரபு நடை, மங்கள நாதஸ்வரம், வீணை, நாட்டியம் உள்ளிட்ட தமிழர் கலை மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் தொடர்பாக குழு நண்பர்கள் வெளியிட்டிருந்த புகைப்படங்களில் சிலவற்றைப் பகிர்வதில் மகிழ்கிறேன், அவர்களுக்கு நன்றியுடன்.
புகைப்படங்கள் நன்றி : சோழ மண்டல வரலாற்றுத்தேடல் குழு முகநூல் பக்கம்
நல்லதொரு நிகழ்வினைக் கண்டு மகிழ்ச்சி...
ReplyDeleteமுன்னெடுத்துச் சென்ற நல்லிதயங்கள் வாழ்க.. வாழ்க...
நல்லதொரு நிகழ்வு பற்றிய செய்திகள் மகிழ்ச்சி தந்தன. சிறப்பான செயல்களை புரிந்து வரும் குழுவினருக்கு வாழ்த்துகள். தகவல் பகிர்வுக்கு நன்றி முனைவர் ஐயா.
ReplyDeleteசிறப்பான நிகழ்வுகளை அழகான புகைப்படங்கள் மூலமும் சுவாரஸ்யமான தகவல்கள் மூலமும் சொல்லியிருப்பதைப் படித்து, பார்த்து ரசித்தேன்.
ReplyDeleteவிழாவினை எங்களையும் காண வைத்த முனைவர் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteசிறப்பான நிகழ்வு ஐயா... வாழ்த்துகள்...
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல சிறப்பாக விழா கண்ட நிகழ்ச்சி. படிபடிக்க சுவாரஸ்யமாக இருந்தது. அழைப்பிதழ் பத்திரிக்கை படங்களும், நிகழ்ச்சி நடந்தேறிய படங்களும், இதர கலைநிகழ்ச்சிகள் சிறப்பான முறையில் அரங்கேறிய படங்களும் காண அருமையாக இருந்தன. எல்லாவற்றையும் எங்களுடனும் பகிர்ந்து காண வைத்த தங்களுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நல்ல பயனுள்ள விழா. கொண்டாட்டங்களின் விபரங்களோடு பகிர்ந்தமைக்கு நன்றி. எல்லாப் படங்களும் நன்றாக வந்திருக்கின்றன.
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி ஐயா...விழாவிற்கு இன்முகத்துடன் வந்துக் கலந்துக் கொண்டு அரிய செய்திகளை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டமைக்கு சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு சார்பாக மனமார்ந்த நன்றிகள் ஐயா...
ReplyDeleteநேரில் பார்த்த உணர்வை தந்தது படங்களும், செய்திகளும்.
ReplyDeleteஉங்களுக்கு வாழ்த்துக்கள்.
சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவிற்கும் வாழ்த்துக்கள்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றமைக்கு சிறப்பு வாழ்த்துக்கள் ஜம்பு சார். தங்கள் உரையும் குழந்தைகளின் நடனமும் அருமை.
ReplyDeleteவிழா ஆர்வலர்கள் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியை விளக்குவதாக படத்தில் தெரிகிறதே. அதுபோல மற்ற சிற்பங்களையும். அப்படித்தான் நடந்ததா?
ReplyDeleteநீங்கள் சொல்லியுள்ள புத்தர் சிலை எந்த இடத்தில் இருக்கிறது? என் படங்களில் அவை இல்லையே
இந்த மாதிரி, பெரியகோவிலின் சிற்பங்களை, முக்கிய இடங்களை விளக்கும் நிகழ்வு எப்போ மறுபடி நடைபெறும், இல்லையென்றால் யார் விளக்குவார்கள்?
பதிவில் குறிப்பிட்டதுபோல எங்கள் உரை நிறைவடைந்ததும் நான் கும்பகோணம் சென்றதால் பிற நிகழ்வுகளைப் பற்றி அறியமுடியவில்லை. புகைப்படங்கள் வாயிலாகவே அறிந்தேன்.
Deleteபுத்தர் சிலை உள்ள இடங்களை அந்தந்த புத்தர் படங்களுக்குக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.
அவ்வபோது இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதுதொடர்பாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. அதன்மூலம் அறிந்துகொள்ளலாம்.
ஐந்து வருடங்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நினைவில் வருகிறது. வாழ்த்துகள். பலரும் அமர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அடுத்த முறை எடுக்கும் போது முகம் தெரியும் அளவிற்கு எடுக்க வேண்டும் என்பதனை படம் எடுப்பவர்களிடம் சொல்லுங்க. இவையெல்லாம் எதிர்காலஆவணங்கள்.
ReplyDeleteஆவணப்படுத்தல் தொடர்பான உங்களின் கருத்தினை முழுமையாக ஏற்கிறேன்.
Deleteமகிழ்ந்தேன் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteநிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிடினும் அக்குறையை தங்கள் பதிவு போக்குகிறது . நன்றி ஐயா
ReplyDeleteவிழா தொடர்பான தகவல்களுடன் படங்களும் நன்றாக அமைந்துள்ளன.
ReplyDeleteமிக சிறப்பான நிகழ்ச்சி தங்கள் மூலம் பார்த்து , படித்து அறிந்துக் கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி ஐயா...
ReplyDeleteதாங்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டமைக்கு முதலில் வாழ்த்துகள் ஐயா.
ReplyDeleteநல்லதொரு நிகழ்வை மிக மிக அழகான படங்களின் மூலம் இங்குத் தொகுத்துக் கொடுத்தமையும் சிறப்பு.
கீதா
பார்ப்பதற்கே பரவசமூட்டும் நிகழ்வுகள்! மிக்க நன்றி ஐயா!
ReplyDelete