07 February 2015

நான்காம் திருமுறை : திருநாவுக்கரசர் தேவாரம்


தினமும் ஒரு தேவாரப் பதிகம் படிக்க ஆரம்பித்து, ஞானசம்பந்தர் தேவாரத்தினை நிறைவு செய்த பின் அண்மையில் நாவுக்கரசர் தேவாரம் (4ஆம் திருமுறை) முதல் திருமுறையினை நிறைவு செய்துள்ளேன். சமண சமயம் தொடர்பான கருத்துக்களையும், அவருடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ள விதம் சைவத்தின் மீதான அவருடைய ஈர்ப்பை அதிகமாக வெளிப்படுத்துகிறது. பிற நிலைகளில் ஞானசம்பந்தர் தேவாரத்தில் போலவே இறைவனையும், இயற்கையையும் பாடும் பாடல்களைக் காணமுடிகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் வித்தியாசமான நடையினைக் கொண்டுள்ள அவரது பாடல்களில் சிலவற்றைப் படிப்போம்.
 



1) பொது : விடந்தீர்த்த திருப்பதிகம்
இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலின் முதல் அடியின் முதல் சொல்லும் ஒன்று முதல் பத்து வரையிலான எண்களைக் கொண்டு அமையும் வகையில் பாடியுள்ளார்.

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பால்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந்துனக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கைதானே.
(பதிகத்தொடர் எண்.18 பாடல் எண்.10)


அவர் அணிந்த ஐந்தலைப்பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.


2) பொது : திருஅங்கமாலை
இப்பதிகத்தில் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றினையும் குறித்து முதல் சொல் வரும் வகையில் தலையே, கண்ணே, செவியே இறைவனை வணங்கு என்று கூறுகிறார். பின்வரும் பாடல் கண்காள் எனத் தொடங்குகிறது.

கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னை
கண்காள் காண்மின்களோ.
(பதிகத்தொடர் எண்.9 பாடல் எண்.2) 
 
கண்களே, கடல்விடத்தை உண்ட நீலகண்டனாய் எட்டுத் தோள்களையும் வீசிக்கொண்டு நின்ற நிலையில் ஆடும் பெருமானைக் காணுங்கள்.


3) திருவாரூர்
இப்பதிகத்தில் உடலைப்பற்றியும், உடலுக்குள்ள ஒன்பது வாசல்களைப் பற்றியும், அவை தரும் துன்பங்களைப் பற்றியும் கூறுகிறார்.


புழுப்பெய்த பண்டி தன்னைப் புறமொரு தோலான் மூடி
ஒழுக்கறா வொன்ப துவா யொற்றுமை யொன்றுமில்லை
சழக்குடை இதனு ளைவர் சங்கடம் பலவுஞ் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டே னாரூர்மூ லட்ட னீரே. 
(பதிகத்தொடர் எண்.52 பாடல் எண்.2)
   
ஆரூர் மூலட்டனீரே ! புழுக்களை உள்ளே அடக்கிவைத்த வண்டியை வெளியே ஒரு தோலினாலே மறைத்து, திரவம் ஒழுகுதல் நீங்காத ஒன்பது வழிகள் ஒன்றற்கு ஒன்று ஒவ்வாத வகையில் அதன்கண் அமைய, இவ்வண்டிற்குள் குற்றமுடைய ஐம்பொறிகளும் பல துயரங்களை விளைவிக்க, அவற்றால் கலக்கமுற்று வாழ இயலாதேனாய் உள்ளேன்.

 
4) கோயில்
சிதம்பரத்தில் பாடிய இப்பதிகத்தில் மனிதராய்ப் பிறப்பெடுக்க விரும்பத்தக்க செயலாக இறைவனைக் காண்பதைக் கூறுகிறார். 

குனித்த புருவமுங கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.
(பதிகத்தொடர் எண்.81 பாடல் எண்.4) 

வளைந்த புருவங்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும், கங்கையால் ஈரமான சடைமுடியையும், பவளம் போன்ற சிவந்த மேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும், பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும்  காணும் வாய்ப்பினைப் பெறுவதாம் பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும். 

5) திருவையாறு
திருவையாற்றில் இவர் பல பதிகங்களைப் பாடியுள்ளார். இருப்பினும் இறைவனின் திருவடிகளின் பெருமையை அவர் சொல்ல நாம் கேட்போம்.

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்தி
நாடகக் கானங்கை முன்செங்க ணேனத்தின் பின்னடந்த
காடகக் கால்கணங் கைதொழுங் காலெங் கணாய் நின்ற கால்
ஆடகக் காலரி மாறேர வல்லனை யாற்றனவே.
 (பதிகத்தொடர் எண்.98 பாடல் எண்.2) 

பாடகம் என்ற மகளிர் கால் அணியை அணிந்த திருவடி, கழல் என்ற ஆடவர் காலணியை அணிந்த திருவடி, சூரியனுடைய கதிர்கள் மறைதற்குரிய மாலையிலே கூத்தாடும் திருவடிகள், பார்வதிக்கு முன்னர் சிவந்த கண்களை உடைய பன்றியின் பின்னே காட்டுப்பகுதியில் நடந்த திருவடிகள், அடியவர் கூட்டங்கள் வழிபடும் திருவடிகள், எமக்குப் பற்றுக்கோடாய் நிற்கும் திருவடிகள், அரியாகிய திருமால் திருவடியின் இருப்பைப் பன்றி வடிவெடுத்துப் பூமியை அகழ்ந்துசென்று ஆராயுறு பேராற்றலுடையன என்னுமாறு ஐயாற்று எம்பெருமானுடைய திருவடிகள் உள்ளன.

பன்னிரு திருமுறை மூலமும் உரையும், தொகுப்பாசிரியர் சதுரா ஜீ.ச.முரளி, சதுரா பதிப்பகம், சோமங்கலம், சென்னை, 2008  

நாம் முன்னர் நிறைவு செய்தது
ஞானசம்பந்தர் தேவாரம் (முதல் மூன்று திருமுறைகள்) 

21 comments:

  1. தொடரட்டும் தங்களது ஆனிமீக நூல்களின் விமர்சனம்
    தமிழ் மணம் 2

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    நூல் விமர்சனத்தில் ஞான சம்மந்தர் பாடிய பாடல் பற்றிய சிறப்பான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன்.. பகிர்வுக்கு நன்றி ஐயா த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. பாடங்களும் விளக்கங்களும் படித்து மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி
    தம 4

    ReplyDelete
  4. கண்காள் உட்பட அனைத்தும் சிறப்பு....

    ReplyDelete
  5. சதுரா ஜீ.ச.முரளி அவர்களிடம் பன்னிரு திருமுறை மூலமும் உரையும் புத்தகம் எங்கள் சாரும் வாங்கி இருக்கிறார்கள்.
    அவரிடம் நிறைய புத்தகங்கள் வாங்கி இருக்கிறார்கள்.
    பன்னிரு திருமுறை முற்றோதல் சித்திரை மாதம் ஆரம்பித்து பங்குனி மாதம் முடிப்பார்கள் என் கணவரும் அவர்கள் அம்மாவும்.
    நீங்கள் தினம் படிப்பது மகிழ்ச்சி.
    நீங்கள் பகிர்ந்த பாடல்களும், விளக்கமும் அருமை, நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் திருமதி கோமதி அரசு அவர்களே,

      ஓராண்டில் பன்னிரு திருமுறை முற்றோதலை நிறைவு செய்து வரும் தங்களது மாமியார் மற்றும் உங்கள் கணவர் ஆகியோரது திருவடிகளுக்கு வணக்கம். வருங்காலத்தில் உங்கள் சந்ததியினரும் இந்த அருஞ்செயலைத் தொடர்ந்து செய்து (அருட் குழந்தை திருஞானசம்பந்தர் கூறியபடி**) குலம், நிலம், நிறைந்த செல்வம், அழகிய வடிவம், ஒப்பற்ற கொடை வண்மை, மிக்க வெற்றித்திரு, இவ்வுலகிடை தொடர்ந்து வரும் சந்ததி, இறைவனடியார் என்ற பெருமிதம் ஆகியன தம்பால் விளங்க எல்லா நலங்களும் மிகப்பெற்று வாழ்க என வாழ்த்துகிறேன்.

      அன்பன்
      மா. அருச்சுனமணி
      உலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியா

      ** திருமுறை 1.21.11
      திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர
      நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபது நவில்பவர்
      நிகழ்குல நிலநிறை திருவுரு நிகரில கொடைமிகு சயமகள்
      புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.

      Delete
  6. தேவாரம் படித்து நன்னெறியில் நிற்க - திருவருள் மழை பொழியும்.

    நல்லாரைக் காண்பது நன்று - என்றார்கள்..

    தங்களைக் காணவும் பேசவும் பெற்றேன்.. பெருமகிழ்ச்சி..

    சிவாய திருச்சிற்றம்பலம்..

    ReplyDelete
  7. பாடல்களும் அதற்கான விளக்கங்களும் மிக அருமை!

    ReplyDelete
  8. ஆஹா... பாடல்களும் அதற்கான விளக்கமும் அருமை ஐயா...
    தொடருங்கள்.

    ReplyDelete
  9. வணக்கம் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களே,
    மூன்று திருமுறைகளை முற்றோதல் செய்து, தினம் ஒரு பதிகம் பாடி - படித்து வரும் தங்களது திருவடிகளுக்கு வணக்கம். திருமுறைகளைப் போற்றி வரும் தங்களது பணி வாழ்க என வாழ்த்துகிறேன்.

    அன்பன்
    மா. அருச்சுனமணி
    உலகச் சைவப் பேரவை ஆஸ்திரேலியா
    arjunamani@gmail.com

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. பாடல்களும் விளக்கங்களும் அருமை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  12. ஆன்மீக நூல்களையும் தெரிந்து கொண்டேன் ஐயா....

    ReplyDelete
  13. அன்பின் அய்யாவிற்கு,
    அருமையான விளக்கம் கண்டு மகிழ்ந்தேன். நன்றி.

    ReplyDelete
  14. தேவாரம் என்னும் தேவாமிர்தம் போன்ற இறை நெறி பாடல்களை பகிரந்தமைக்கு
    முனைவர் அய்யா அவர்களுக்கு இனிய நன்றி!
    நன்னெறி வளரட்டும்!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  15. சமண சமயம் தொடர்பான கருத்துக்களையும், அவருடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ள விதத்தையும் தாங்கள் பகிர்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  16. சமண சமயம் தொடர்பான கருத்துக்களையும், அவருடைய அனுபவங்களையும் அவர் பகிர்ந்துள்ள விதத்தையும் தாங்கள் பகிர்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

    ReplyDelete
  17. தேவாரப் பாடல்களும் விளக்கங்களும் அருமை ஐயா. நன்றி

    ReplyDelete
  18. திருப்பதிகங்களின் கட்டமைப்பைக் கவனித்தேன்.
    பதிவு மிக மிக நன்று ஐயா.
    மகிழ்ந்தேன்
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  19. முறையாகப் படித்ததில்லை. இங்கும் அங்கும் சிலபதிகங்கள் மட்டுமே படித்திருக்கிறேன். வாசிக்க வேண்டும்.

    ReplyDelete
  20. நான் இப்பொழுது தான் சி.எஸ். தேவநாதன் அவர்களின் “தினம் ஒரு திருவாசகம்” என்ற ஒரு நூலை தினமும் படித்துக்கொண்டு வருகிறேன். இனிமேல் தான் தேவாரம் படிக்க வேண்டும்.
    தங்களின் திருப்பணிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete