10 May 2016

கோயில் நகரம் கும்பகோணம் : தி இந்து

21 பிப்ரவரி 2016 அன்று வெளியான தி இந்து நாளிதழின் கும்பகோணம் மகாமகப்பெருவிழா மலர் இணைப்பின் 16ஆம் பக்கத்தில் திரும்பிய திசையெல்லாம் கோபுரங்கள் : கோயில் நகரம் கும்பகோணம் என்ற தலைப்பிலான எனது கட்டுரை என் பெயரின்றி வெளியாகியுள்ளது. இக்கட்டுரையின் மேம்பட்ட வடிவத்தைப் பகிர்வதில் மகிழ்கிறேன். எனது கட்டுரையை வெளியிட்ட தி இந்து நாளிதழுக்கு நன்றி.

கும்பகோணம் மகாமகப்பெருவிழா, தி இந்து, திருச்சி பதிப்பு, 21.2.2016, ப.16

பொதுவாக கும்பகோணத்திலுள்ளோர் முகவரி அடையாளம் கூறும்போதே கும்பேஸ்வரர் மொட்டை கோபுரம் அருகில், கம்பட்ட விஸ்வநாதர் சன்னதி, சக்கரபாணி சன்னதி, சார்ங்கபாணி சன்னதி, யானையடி, கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி,  என்று கோயில்களை முன்வைத்தே கூறுகின்றனர். அந்த அளவிற்கு கோயில்கள் கும்பகோணத்திலுள்ளோர் வாழ்வில் ஒரு முக்கியமான பங்கினை வகிக்கின்றன எனலாம். எந்த திசையில் நின்றாலும், இருந்தாலும் ஏதாவது ஒரு கோயில் கோபுரத்தினைக் காணும் பெருமை உடையது கும்பகோணம்.
புலவர் கோ.மு.முத்துசாமிபிள்ளை எழுதிய கும்பேசுவரர் திருக்கோயிலும் மகாமகத் திருவிழாவும் என்னும் நூல் கும்பகோணத்திலுள்ள கும்பேசுவரர் கோயிலைப் பற்றியும் 12 ஆண்டுகளுக்கொரு முறை கொண்டாடப்படுகின்ற மகாமகத் திருவிழாவைப் பற்றியும் பல அரிய தகவல்களை நமக்குத் தருகிறது. (வெளியீடு : தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1992). கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணத்தின் சிறப்பு, மகாமகம், மகாமகத் தீர்த்தங்கள் அளிக்கும் பலன்கள், சிற்பங்களும் ஓவியங்களும், பூசைகளும் திருவிழாக்களும், திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் அருளிய திருக்குடமூக்குப் பதிகங்கள் உள்ளிட்ட பல தலைப்புகளைக் கொண்டு இந்நூல் அமைந்துள்ளது.


இந்நூலில் கும்பகோணத்திலுள்ள கோயில்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவை கும்பகோணம் வருபவர்களுக்கும், கோயில்களைச் சுற்றிப் பார்க்க விரும்புபவர்களுக்கும் மிகவும் துணையாக இருக்கும். கும்பகோணம் நகரிலுள்ள கோயில்கள் என்று நூலாசிரியர் முக்தீசுவரர் கோயில், வராகப்பெருமாள் கோயில், அனுமார் கோயில் (பெரிய கடைத்தெரு, குச்சிக்கட்டிச் சந்து, சடச்சாமி மடத்தெரு), ஆஞ்சநேயர் கோயில்  (ரெட்டியாயர் அக்கிரகாரம், புவனேந்திர அக்கிரகாரம்), கும்பேஸ்வரர் கோயில், ஆண்டவப்பிள்ளையார் கோயில், ஆயத்துறை விநாயகர் கோயில், இலுப்பையடி தர்மராஜர் திரௌபதியம்மன் கோயில் (இரும்பையாடி எனக்குறிப்பிட்டுள்ளார்), உச்சிப்பிள்ளையார் கோயில், உடையவர் சந்நதி, கம்பட்ட விஸ்வநாதர் கோயில், கரும்பாயிரம் பிள்ளையார் கோயில், கற்பக விநாயகர் கோயில், கன்னிகா பரமேசுவரி கோயில், காளஹஸ்தீஸ்வரர் கோயில், காளியம்மன் கோயில், குமரன் கோயில், சீரட்ட விநாயகர் கோயில், கூரத்தாழ்வார் கோயில், கொத்தன் ஒத்தைத்தெரு கோடியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி சுவாமி கோயில், கௌதமேஸ்வரர் கோயில், சக்கரபாணி கோயில், சஞ்சீவிராமசாமி கோயில், சார்ங்கபாணி கோயில் (சாரங்கபாணி என்று குறிப்பிட்டுள்ளார்), சரநாராயணப் பெருமாள் கோயில், காமாட்சி சோசியர்தெரு சித்தி விநாயகர் கோயில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், இரு சுந்தரமூர்த்தி விநாயகர் கோயில்கள், பழனியாண்டவர் கோயில், மூன்று சோமநாதர் கோயில்கள், நினைத்த காரியம் முடித்த விநாயகர் கோயில், தைக்கால் மதகடி திரௌபதியம்மன் கோயில், வட்டிப்பிள்ளையார் கோயில், செட்டிப்படித்துறை விஸ்வநாதசுவாமி கோயில், மேட்டுத்தெரு விஸ்வநாதசுவாமி கோயில், வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் விஸ்வநாதசுவாமி மற்றும் ராஜேந்திரபிள்ளையார் கோயில், பிரளயம் காத்த விநாயகர் கோயில், டபீர் தெரு ஜெகந்நாதப் பிள்ளையார் கோயில், எல்லையம்மன் கோயில் தெரு எல்லையம்மன் கோயில் மற்றும் திரௌபதியம்மன் கோயில், சக்கரபாணி கீழ வீதி திரௌபதியம்மன் கோயில், பகவத் விநாயகர் கோயில், வேங்கடேச அக்கிரகாரம் பட்டாபி ராமசாமி கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில், முத்துபிள்ளை மண்டபம் பாடகச்சேரி இராமலிங்கசுவாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), முத்துபிள்ளைமண்டபம் பாண்டுரங்கசாமி கோயில் (கும்பகோணம் நகருக்கு வெளியே), காவிரி கரைத்தெரு பிரசன்ன வெங்கசலாபதி கோயில், காவிரிக்கரைத்தெரு பொய்யாத பிள்ளையார் கோயில், பெசண்ட் ரோடு மன்னார்சாமி கோயில், பக்தபுரி அக்கிரகாரம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயில், முச்சந்தி பாதாள காளியம்மன் கோயில் , யானையடி அய்யனார் கோயில், தோப்புத்தெரு ராஜகோபாலசுவாமி கோயில் சார்ங்கபாணி மேல சன்னதித்தெரு ஏகதயோகீந்தர சுவாமிகள் கோயில் என்ற நிலையில் சுமார் 60 கோயில்களைக் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்ந்து மேற்கொண்ட தலப்பயணங்களின்போது இவற்றில் பெரும்பாலான கோயில்களைக் களப்பணியின்போது காணமுடிந்தது. இப்பட்டியலில் ராமசுவாமி கோயில் இல்லை. சஞ்சீவி ராமசுவாமி கோயில் என்று ராமசுவாமி கோயிலைக் குறிப்பிடுகிறார் போலுள்ளது.   நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், அபிமுகேஸ்வரர் கோயில்,  ஏகாம்பரேஸ்வரர் கோயில் போன்ற கோயில்கள் காணப்படவில்லை. மூன்று சோமநாதர் கோயில்களில் ஒன்றாக சோமேஸ்வரர் கோயிலைக் குறிப்பிட்டிருக்க வாய்ப்புண்டு. சிவபெருமானின் பெயரை பிற நிலையில் கூறும்போது கோயில் பெயரில் சில நுணுக்கமான வேறுபாடுகளைக் காணமுடியும். அதனால் அவ்விடுபாடு இருக்க வாய்ப்புள்ளது. 

இந்நூலை அடிப்படையாக வைத்துப்பார்க்கும்போது 1992இல் சுமார் 60 கோயில்கள் இருந்ததை அறியமுடிகிறது. இந்த பட்டியலில் கும்பகோணம் பவானியம்மன் கோயில், தாய் மூகாம்பிகை கோயில், நந்தவனத்து மாரியம்மன் கோயில், வீரபத்திரர் கோயில், மும்மூர்த்தி விநாயகர் கோயில், பிரமன் கோயில் எனப்படும் வேதநாராயணப்பெருமாள் கோயில், திருமழிசையாழ்வார் கோயில், நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளிட்ட பல கோயில்களைக் காண முடியவில்லை. இருப்பினும் கும்பகோணம் நகரம்  நிறைவான கோயில்களைக் கொண்ட ஊர் என்பதனை இதன்மூலம் அறியமுடிகிறது. தொடர்ந்து தலப்பயணம் மேற்கொள்ளும்போது இன்னும் பல கோயில்களை அறிய வாய்ப்புண்டு. இவ்வாறாக கும்பகோணத்தில் உள்ள பல கோயில்களை நமக்கு அறிமுகப்படுத்திய அவருக்கு நன்றி கூறி நூற்றுக்கும் மேற்பட்ட கோயில்களைக் கொண்ட கும்பகோணம் நகருக்குப் பயணிப்போம். 

17 comments:

  1. வாழ்த்துகள் நண்பரே...
    பெயரின்றி வெளியானதே
    சின்ன வருத்தம்...

    ReplyDelete
  2. விரிவான விளக்கங்கள் வாழ்த்துகள் முனைவரே தொடர்ந்து செல்லட்டும் தங்களது ஆன்மீகப்பணி
    த.ம.2

    ReplyDelete
  3. பெயரை போட மறந்தவர்கள் ,சன்மானத்தையாவது மறக்காமல் கொடுத்தார்களா :)

    ReplyDelete
  4. பெயரின்றி வெளியிட்ட அவர்களின் பொறுப்பின்மையை என்னவென்று சொல்வது? ம்ம்ம்...

    வாழ்த்துகள் முனைவர் ஐயா.. கும்பகோணத்தில் உள்ள கோவில்களை நின்று நிதானமாகத் தரிசிக்க அதற்காக என்றே ஒரு தனி உலாப் பயணம் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  5. பெரில்லாமல் கட்டுரையா
    அதிசயமாக இருக்கிறது ஐயா
    இது இருட்டடிப்பு அல்லவா

    ReplyDelete
  6. நிறைந்த விவரங்கள்..

    ஆனாலும் தனிப்பட்டவர்கள் - அறக்கட்டளை என்ற பெயரில் ஏதேதோ காரணத்திற்காக -

    புதிதாக கோயில்கள் எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்..

    சில மாதங்கள் - வருடங்களில் அவற்றையும் ஊடகங்களில் விளம்பரம் செய்து ஸ்தல புராணம் எழுதி விடுகின்றனர்..

    திருவலஞ்சுழி தென்னந்தோப்புகளில் புதிதாக கோயில்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன..

    இவற்றுக்கெல்லாம் காரணம் என்னவாக இருக்கும்?..

    ReplyDelete
  7. உங்கள் கட்டுரையை வெளியிட்டுவிட்டு பெயரை குறிப்பிட மறந்தது ஏன் என்று கேட்க வேண்டியது தானே சார்?

    உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  8. கோயில்களின் எண்ணிக்கை பிரமிக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி அய்யா!
    த ம 4

    ReplyDelete
  9. சிறப்பான பகிர்வு. உங்கள் பெயரைக் குறிப்பிடாமல் ஏன் வெளியிட்டார்கள்.... இது பொறுப்பின்மை..... நல்லதல்ல.

    ReplyDelete
  10. சில கோவில்களின் பெயர்கள் விடுபட்டுப்போனதற்குக் காரணம் யானைக்கும் அடி சறுக்கும் என்பதாலா

    ReplyDelete
  11. சிறப்பான பகிர்வு.
    வாழ்த்துக்கள் சார்.
    பெரில்லாமல் கட்டுரை
    அதிசயம்!!!.....
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  12. Mr.S.V.venugopalan(thro'email: sv.venu@gmail.com)
    அய்யா அபாரம்...மூச்சு முட்டுகிறது பட்டியலை வாசிக்க..
    எஸ் வி வி

    ReplyDelete
  13. தகவல்கள் அருமை அய்யா...

    ReplyDelete
  14. தகவல்கள் அருமை அய்யா...

    ReplyDelete
  15. கும்பகோணம் கோயில்கள் பற்றிய தங்களின் சிறப்புக்கட்டுரையும் அதற்கான மேற்கோள்களும் மிகவும் அருமையாக உள்ளன.

    ”திரும்பிய திசையெல்லாம் கோபுரங்கள் - கோயில் நகரம் கும்பகோணம்” என்ற தலைப்பினில் தங்களின் இந்தக்கட்டுரை ’தி இந்து’ தமிழ் நாளிதழில் 21.02.2016 அன்றே வெளி வந்துள்ளது கேட்க மிக்க மகிழ்ச்சி.

    தங்களின் பெயருடன் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தால் தங்களுக்கும், எங்களுக்கும் மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். என்ன செய்வது? ஏதோ இதில் இவ்வாறு மாபெரும் தவறு நடந்துள்ளது.

    எனக்கும் ஒருமுறை, ஓர் மிகப்பிரபல தமிழ் வாரப்பத்திரிகையால் இதுபோன்ற அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    எனினும் தங்களுக்கு என் பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  16. மிகநன்று முனைவர் ஐயா !
    ஆனால் தங்கள் பதிவுகளைத் தொகுத்து தங்கள் பெயரே இல்லாமல் வெளியிட்டு இருந்தும் அதற்கு நன்றி சொல்லும் தங்கள் பெருந்தன்மைக்கு என் தலை வணக்கம் ஆமா இந்த சுந்தர்ராஜ். கதிரவன் இவங்க கற்றது களவா ???????????

    தம +1

    ReplyDelete
  17. மிகச் சிறப்பான கட்டுரை. ஆனால் எப்படித் தங்கள் பெயரில்லாமல் வெளியிட்டார்கள்...எப்படி இப்படி ஒரு பெரிய நாளிதழுக்குப் பொறுப்பில்லாமல் போனது? நீங்கள் கேட்கவில்லையா ஐயா?

    தாங்கள் அதையும் பொருட்படுத்தாமல் பெரிது பண்ணாமல் நன்றி உரைத்தமை தங்களது பரந்த உள்ளத்தையும், நல்லுள்ளத்தையும், தன்னடக்கத்தையும்தான் வெளிப்படுத்துகின்றது ஐயா! அதற்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

    ReplyDelete