24 July 2016

கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (முதல் பகுதி) : ப.தங்கம்

ஓவியர் ப.தங்கம் (9159582467) அவர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பில் சித்திரக்கதையைப் படைத்துள்ளார். முதல் பகுதியாக உருப்பெற்றுள்ள இந்நூல் மூலமாக நாம் நேசித்த கல்கியின் கதாபாத்திரங்களை நம் முன் ஓவியங்களாகக் கொண்டுவந்துவிடுகிறார் நூலாசிரியர். இந்நூலானது பொன்னியின் செல்வன் புதினத்தின் ஆடித்திருநாள், ஆழ்வார்க்கடியான் நம்பி, விண்ணகரக்கோயில், கடம்பூர் மாளிகை, குரவைக்கூத்து, நடுநிசிக்கூட்டம், சிரிப்பும் கொதிப்பும், பல்லக்கில் யார்?, வழிநடைப்பேச்சு, குடந்தை ஜோதிடர், திடும் பிரவேசம் என்ற 11 அத்தியாயங்களில் முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டு அமைந்துள்ளது. இவர், 2001இல் ஆரம்பித்த தங்கப்பதுமை இதழின் மேலட்டை இளவரசி குந்தவையை நமக்கு அறிமுகப்படுத்தும் முயற்சியைக் கொண்டு அமைந்ததாகும்.
ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் அன்று கதையின் நாயகனான வந்தியத்தேவன் வீரநாராயண ஏரியை ரசித்துக்கொண்டு குதிரையில் வரும் காட்சியில் சித்திரக்கதை தொடங்குகிறது. குடந்தையில் ஜோசியர் வீட்டில் வானதி ஜோசியரிடம் குந்தவைக்கு வரப்போகும் மணமகனைப் பற்றி ஆவலாகக் கேட்டுக் கொண்டிக்கும் நேரத்தில் வந்தியத்தேவன் குதிரையில் அங்கு வந்து ஜோசியரைப் பார்க்க முயல ஜோசியரின் சீடன் அவனைத் தடுக்கிறான்.  அதையும் மீறி வந்தியத்தேவன் உள்ளே நுழைந்ததும் அங்கே குந்தவையைப் பார்க்கிறான். அத்துடன் சித்திரக்கதையின் முதற்பகுதி நிறைவுறுகிறது. 
கல்கி எழுத்தில் வடித்ததை சித்திரத்தில் கொண்டுவருவது என்பது மிகவும் சிரமமான காரியமாகும். இருந்தாலும் அதனை ஒரு சவாலாக ஏற்று நூலாசிரியர் கதையின் நிகழ்வுகளை மனதில் உள்வாங்கிக்கொண்டு எந்த அளவு சுருக்கமுடியுமோ அந்த அளவிற்குச் சுருக்கி அதே சமயம் நிகழ்வுகளின் நேர்த்தி குறையாமல் நமக்கு அளித்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. அவ்வாறான ஓவியங்களில் சிலவற்றைப் பார்ப்போம்.


வந்தியத்தேவன் குதிரையில் வரும்போது ஆடிப்பெருக்கின் அழகினை ரசித்துக்கொண்டு வரும்போது அவன் முகத்தில் காணும் ஆர்வம் (ப.2),  சோழர் குல மன்னர்களைப் பற்றி அதிசயிக்கும்போது அவன் முகத்தில் காணும் ஆச்சர்யம் (ப.3), பனை மரம் வரையப்பட்ட ஓடங்களைக் கண்டு அவற்றைப் பற்றி அறிய எழும் ஆவல் (ப.6) பழுவேட்டயரைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற துடிப்பு (ப.8), அதே சமயம் சூரியன் மறைவதற்குள் கடம்பூரை அடைய வேண்டும் என்ற மன உறுதி (ப.10) என வந்தியத்தேவனின் முகபாவங்களை தன்னுடைய சித்திரங்களில் மிகவும் அருமையாக வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர்.

இவ்வாறாகப் பல இடங்களில் தனது சித்திரங்கள் மூலமாக, கல்கி நம்மை அழைத்துச்சென்ற இடங்களுக்கு அழைத்துச்செல்வதோடு, பொன்னியின் செல்வனின் கதாபாத்திரங்களையும் நமக்கு மிகவும் அணுக்கமாகக் கொண்டுவருகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு கதாபாத்திரமும் வெளிப்படுத்தும் எண்ண உணர்வுகள் மிகவும் அனாயாசமாக ஓவியமாக நூலாசிரியரால் வடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக உணர்வினை சித்திரங்களாகக் கொண்ட இடங்களில் சிலவற்றைப் பார்ப்போம். 
  • பழுவேட்டரையர் யானை மீது வரும் காட்சியைப் படைக்கும்போது அங்கு ஒலிக்கும் முரசுச்சத்தம் நமக்குக் கேட்பதைப் போன்ற உணர்வு (ப.15) 
  • வந்தியத்தேவனின் குதிரை மிரண்டு ஓடும்போது அதனைப் பார்த்து மக்கள் ஓடும்போது அவர்களின் முகத்தில் காணப்படும் மிரட்சி (ப.20) 
  • பலத்த காவலை மீறி கடம்பூர் மாளிகைக்குள் செல்ல முயற்சித்தபோது வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் கந்தமாறனின் பெயரைச் சொன்னதும் அவ்வீரர்கள் பின்வாங்கும்போது வெளிப்படுத்தும் எச்சரிக்கை உணர்வு (ப.32) 
  • கந்தமாறன் தன் அன்னையிடம் வந்தியத்தேவனை அறிமுகப்படுத்தும்போது, அங்கு இருந்த பெண்கள் கூட்டத்தில் பழுவேட்டரையருடன் பல்லக்கில் வந்த பெண்ணைத் தேடும் ஆர்வம் (ப.40) 
  • குரவைக்கூத்தும், வெறியாட்டமும் முடிந்தபின்னர் சிற்றசர்களும் அதிகாரிகளும் வேஷம் போட்டவனைப் பற்றிப் பேசிக்கொண்டே வந்தபோது அவர்கள் மனதில் தோன்றிய பதட்டம் (ப.53) 
  • விருந்துக்கு வந்தவர்களிடையே நள்ளிரவில் பழுவேட்டரையர், சுந்தரசோழரின் உடல்நிலையை மாலை நேரம் வானில் தோன்றும் வால் நட்சத்திரத்தோடு ஒப்பிட்டுப் பேசும்போதும் ஆதித்த கரிகாலருக்கு தம் யோசனை கேட்கப்படாமல் இளவரசுப்பட்டம் சூட்டப்பட்டது குறித்துப் பேசும்போதும் வெளிப்படும் வேதனை (ப.65)
  • சுந்தரசோழரின் குமாரர்களான ஆதித்த கரிகாலரும், அருள்மொழியும் பட்டத்திற்கு வருவது நியாயமில்லை என்று கூறி மதுராந்தகருக்குத்தான் பட்டம் உரியது என்று பழுவேட்டரையர் கூறும்போது அடைந்த மனக்கொதிப்பு (ப.75) 
  • தஞ்சாவூரில் உடல்நலமில்லாமல் இருக்கும் தன் மாமனைப் பார்க்க வந்தியத்தேவன் கிளம்பும்போது கந்தமாறனும் உடன் வந்து அவனை கொள்ளிட நதிக்கரையில் கொண்டுவந்துவிடும்போது இருவர் முகத்திலும் காணப்படும் நட்பின் ஆழம் (ப.82)
  • ஆழ்வார்க்கடியானுடன் பேசக்கூடிய வாய்ப்பினைப் பெற்ற வந்தியத்தேவன், அவர் மூலமாக அவருடைய தங்கையாகப் பாவிக்கும் நந்தினியைப் பற்றித் தெரிந்துகொண்டதும் வந்தியத்தேவனின் மனம் உருகிய நிலை (ப.94)
  • குந்தவையும் வானதியும் குடந்தை ஜோதிடரைக் காண்பதற்காக வரும்போது அதற்கான காரணத்தை வானதி கேட்க, குந்தவை வெளிப்படுத்தும்போது பொறுப்புணர்வு (98)
  • அக்காவை (குந்தவை) மணக்கும் வீரர் எப்போது வருவார் என ஜோசியரிடம் கேட்கும்போது வானதி முகத்தில்  தோன்றும் பரிகாசம் (108)
  • அதே சமயம் அங்கு குதிரையில் வந்த வந்தியத்தேவன் ஜோசியருடைய சீடன் தடுத்ததையும் மீறி உள்ளே சென்றபோது குந்தவையின் முகத்தைப் பார்த்து தன் கண்களால் வெளிப்படுத்தும் உணர்வு (110) 
மன வெளிப்பாட்டு உணர்வுகளுடன் காட்சி அமைப்பு, இயற்கைச்சூழல், சமூக நிலை என்ற பன்முகநோக்கில் அனைத்தையும் சித்திரங்களாக அழகாகத் தீட்டியுள்ளார். வீர நாராயண ஏரிக்கரைக் காட்சி, கோட்டை அமைப்பு, குரவைக்கூத்து நடைபெறும் மேடை, கோட்டை, பல்லக்கு, படகு, போர்க்கருவிகள் பயன்பாடு, அக்கால மன்னர்கள், இளவரசர்கள், மந்திரிகள், மக்களின் ஆடை அணிகலன்கள், அணியும் முறை, குடந்தை ஜோதிடரின் இல்ல அமைப்பு என்ற ஒவ்வொரு நிலையிலும் முழுக்கவனம் செலுத்தியுள்ள விதம் பாராட்டத்தக்கது.

பெருமுயற்சியில் ஈடுபட்டுள்ள நூலாசிரியரைப் பாராட்டுவோம். அவர் தீட்டியுள்ள இந்நூலை வாங்கிப் பார்ப்போம், ரசிப்போம், படிப்போம், ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்வோம், நம் மண்ணின் பல்லாண்டு பெருமையினை முன்னோக்கி எடுத்துச்செல்வோம், வாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பினரையும் கவர்ந்திருக்கும் வகையில் அமைந்துள்ளது இந்நூலின் தனிச்சிறப்பு. நூலை மிகவும் சிறப்பாக அச்சிட்டுத் தந்த முல்லைபாரதிக்கு சிறப்பு பாராட்டுகள்.
-------------------------------------------------------------------------------
நூலின் வெளியீட்டு விழா 24 சூலை 2016 அழைப்பிதழ்

-------------------------------------------------------------------------------


கல்கியின் பொன்னியின் செல்வன், சித்திரக்கதை, முதல் பகுதி
சித்திரம் :  ப.தங்கம்
பதிப்பகம் : தங்கப்பதுமை பதிப்பகம், ஞானம் நகர் ஆறாவது தெரு மெயின் ரோடு,
மாரியம்மன் கோயில் அஞ்சல், தஞ்சாவூர் 613 501
கைபேசி :  9159582467
விலை : ரூ.200
ஆண்டு : 2016                           
இந்நூலாசிரியரின் பிற நூல்கள்


15 July 2016

சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

முனைவர் ரெ.குமரன் (களப்பாள் குமரன்) அவர்களின் சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு மற்றும் சங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை நூல்கள் முறையே பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையினைப் பற்றிய சுருக்கக் களஞ்சியமாக அமைந்துள்ளன. சங்க இலக்கியம் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், குறிப்பாக அறிவியல் பார்வையில், உற்றுநோக்கப்படவேண்டும் என்ற தன் அவாவினை இந்நூல்களில் மிக அருமையாக முன்வைக்கின்றார் நூலாசிரியர். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த அவர் அவை ஆர்வலர்களுக்கும் அறிஞர்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற நன்னோக்கினை நூல்களின் முகப்பில் குறிப்பிட்டுள்ளார். இவற்றைப் படித்து நிறைவு செய்ததும் சங்க இலக்கியம் மீதான ஆர்வம் எனக்கு அதிகமாகிவிட்டது. 

சங்க இலக்கியம் அறிவோம் : பத்துப்பாட்டு
இந்நூலில் பத்துப்பாட்டான திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய 10 நூல்களைப் பற்றிய குறிப்புகளை நூலாசிரியர், நூலின் அமைப்பு, பெருமை, பதிப்பு விவரம் என்ற நிலையில் தந்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றைப் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.

வீரமங்கை 
யானை தாக்கினும் அரவு மேல் செலினும்
நீல் நிற விசும்பின் வல்வேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பெரும்பா.4.134-135 
யானை தன்னைத் தாக்க வந்தாலும், தன்மேல் பாம்பு ஊர்ந்து சென்றாலும், இடி இடித்தாலும் கருவுற்ற பெண்கூட இவற்றிற்கெல்லாம் அஞ்சாத - மறத்தன்மை மிக்க வாழ்க்கை குறிஞ்சி நில மக்கள் வாழ்க்கை. (ப.43)

நீராடல் 
தீது நீங்க கடல் ஆடியும்
மாசு போக புனல் படிந்தும்
கடியலூர் உருத்திரங்கண்ணனார், பட்டினப், ப்பூதனார், முல்லைப்.9.99-100 
பரதவர், தங்கள் தீவினைகள் நீங்குவதற்காகக் காவிரி கடலொடு கலக்கும் இடத்தில் நீராடுவர். கடல் நீரில் குளித்தமையால் உலில் படிந்த உப்பு நீங்குவதற்காக நன்னீரில் நீராடுவர். (ப.117)
   
கவண்கல் 
பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடுங் கல்
இருவெதிர் ஈர்ங்கழை தத்தி கல்லெனக்....
வரும்விசை தவிராது மரம் மறையாக் கழிமின்
பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், மலைபடு.10.206-210 
புனத்தில் விளைந்த தினைக் கதிர்களை உண்ண வரும் யானைகளை, மலை வாழ் மக்கள், பரண் மீது நின்று கவண் கல் எறிந்துவிரட்டுவர். அக்கற்கள், மரங்களில் குட்டிகளுடன் தாவித்திரியும் குரங்குகளை அஞ்சி ஓடச்செய்யும். வழி செல்வார்க்குக் கவண்கற்களால் ஏதம் விளைதலும் கூடும் ஆதலின் மரங்களில் மறைந்து செல்க எனக் கூத்தன் உணர்த்தினான். (ப.136)

இந்நூலில் சுமார் 50 அரிய நூல்களைப் பற்றிய குறிப்புகள் நூலின் பெயர், நூலாசிரியர் பெயர், பதிப்பாண்டு, பதிப்பகம் உள்ளிட்ட விவரங்கள் அட்டைப்படத்தில் உள்ளபடி தரப்பட்டுள்ளன. இதில் 100 ஆண்டுகளுக்கு முந்தைய நூல்களும் அடங்கும் என்பது வியப்பிற்குரியது. தமிழர் அறிவியல் பல்லாண்டுகளுக்கு முன்பே வளர்ந்திருந்த திறத்தை மேற்கோள் காட்டி இன்றைய சூழலோடு நூலாசிரியர் ஒப்பிட்டுக் காட்டும் விதம் அருமையாக உள்ளது. இந்நூலின் முக்கியப் பகுதியில் இதுவும் ஒன்றாகும்.

சங்க இலக்கியம் அறிவோம் : எட்டுத்தொகை 
இந்நூலில் எட்டுத்தொகையான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டு நூல்களைப் பற்றிய குறிப்புகளையும், ஒவ்வொரு நூலிலும் காணப்படுகின்ற முக்கியமான கூறுகளில் சிலவற்றையும் உரிய பாடல் மற்றும் பொருளுடன் தந்துள்ளார். தேவையான இடங்களில் பிற இலக்கியங்களை ஒப்புநோக்கியுள்ளார்.

மழை அறிவியல் 
இரு விசும்பு அதிர மின்னி
கருவி மாமழை கடல முகந்தனவே
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார், நற்.329.11-12 
கருமை மிக்க வானம் ஒலியுண்டாகுமாறு இடித்து மின்னி மழைக்குரிய மேகக் கூட்டத்தோடு கடலில் சென்று நீர் முகந்து எழுந்த கார்காலம் வந்துற்றது.   (ப.35)

மண நாள் 
கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை...
கபிலர், நற்.376.6 
கரிய நிறத்தைக் கொண்ட  அரும்புகள் மலர்ந்த கணியனைப் போலக் காறும் கூறும் வேங்கை. (திருமணம் செய்வதற்கு ஏற்ற காலமாக வேங்கை பூக்கும் பருவத்தைக் கொள்வர்)  (ப.40)

ஆழிப்பேரலை - சுனாமி 
துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை
நிலம் பொறை ஒராஅ நிர் ஞெமர வந்து ஈண்டி
உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம்
வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து
அரிசில்கிழார், பதிற்.72.8-11 
எல்லா உயிர்களும் இறக்கின்ற ஊழிக்காலத்தின் இறுதி புகுகின்றபோது, நிலவுலகின் பாரம் நீங்க, நீரானது எங்கும் பரவும்படி வந்து நெருங்கும். அந்நீரில் மோதும் அலைகள் விரைந்து வீசும். இவ்வாறு உயிர்களைக் கொல்வதற்குச் சினந்து எழுகின்ற வெள்ளம் எல்லை இன்னதென்று வரையறுத்து அறிதற்கு இயலாத திசைகளில் இருளொடு சேர்ந்து பரவும்.  (ப.88)

தாலி 
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று என்ப ஆஅய் கோயில்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், புறநா.127.5-6 
பிறிதோர் அணிகலமின்றிக் கொடுத்தற்கரிய மங்கல நானை அணிந்த மகளிருடன் நின், (ஆய் அண்டிரன்) அரண்மனை பொலிவழிந்து காணப்பட்டது என்று சொல்லுவர். (ப.215)

பாடலுக்குப் பொருள் கூறும்போது பல இடங்களில் அந்தந்தப் பொருண்மைக்குத் தகுந்தவாறு கீழ்க்கண்டவாறு கருத்துகளை நூலாசிரியர் தருகிறார். இவ்வாறான கருத்துகள் பிற அறிஞர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் பலநோக்குப் பார்வையில் சங்க இலக்கியத்தை முன் எடுத்துச்செல்ல மிகவும் உதவியாக இருக்கும்.
...காப்புக்கட்டுதல் இன்று கிராமக் கோயில் சடங்கு. இன்று காசு முடிந்து போடுதல் உண்டு. இச்சடங்குகளின் வளர்ச்சி நிலையை ஆய்க. (ப.54)
...இவ்வழக்கம் உண்மையா/இலக்கியப்புனைவா? எச்சங்கள் இன்று உள்ளனவா? குறிஞ்சி வாழ் மக்களின் வாழ்வியலை ஆய்க. (ப.54)
...உலகத்தோற்றம் ஒடுக்கம் குறித்த செய்திகளை இன்றைய அறிவியலோடு ஒப்பிட்டு ஆய்க. (ப.94)
...இதன்கண் உள்ள புராணக்கதைகளை மீட்டுருவாக்கி அறிவியல் உண்மைகளை அறியுமாறு ஆய்க.  (ப.95)
...காலமே கடவுள் ஆம் தன்மை குறித்து ஆய்க.  (ப.111)


மேற்கண்ட இரு நூல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நிலையில் அல்லித்தீவு என்ற புனைகதையைப் படைத்துள்ளார் இந்நூலாசிரியர். ஆண்கள் பெண்களாக, பெண்கள் ஆண்களாக வாழும்  நிலமான கற்பனை உலகிற்கு அழைத்துச்சென்று நம்மை பிரமிக்கவைக்கிறார். படிக்கும்போது நாம் வேற்றுலகில் இருப்பதுபோன்ற உணர்வை அடையலாம். முதலில் நாம் படித்த இரு நூல்களின் ஆசிரியர் இவரா என்று வியக்குமளவு முழுக்க முழுக்க வித்தியாசமாக அல்லித்தீவைப் படைத்துள்ளார்.   

சங்க இலக்கியத்தின் அருமை பெருமைகளை அறிந்துகொள்ள மேற்கண்ட இரு நூல்களையும், கற்பனையின் வளத்தை அறிந்து வேறோர் உலகிற்குச் செல்ல அல்லித்தீவையும் வாசிப்போம். வாருங்கள்.

சங்க இலக்கியம் அறிவோம் பத்துப்பாட்டு (ரூ.150)
சங்க இலக்கியம் அறிவோம் எட்டுத்தொகை (ரூ.200)
அல்லித்தீவு (ரூ.100)
நூலாசிரியர் : முனைவர் இரெ.குமரன் (பேசி 9443340426)
மின்னஞ்சல் kalappiran@gmail.com
பதிப்பகம் : கவின் பதிப்பகம், 18/17 காத்தூன் நகர், மூன்றாம் தெரு,
நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் 613 006 (பேசி 9962721280)

08 July 2016

மயிலாடுதுறை சப்தஸ்தானம் : புனுகீஸ்வரர் கோயில்

அண்மையில் கும்பகோணம் சப்தஸ்தானத்தைப் பற்றி ஒரு பதிவில் பார்த்தோம். 3 சூன் 2016 அன்று மயிலாடுதுறை சப்தஸ்தானத்தில் ஒரு கோயிலான, கூறைநாட்டில் அமைந்துள்ள, புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சப்தஸ்தானத்தோடு தொடர்புடைய பிற கோயில்கள் பின்வருவனவாகும்.

  • மயிலாடுதுறை ஐயாறப்பர் கோயில்
  • சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்
  • மூவலூர் மார்க்க சகாயேஸ்வரர் கோயில்
  • சோழம்பேட்டை அழகியநாதர் கோயில்
  • துலாக்கட்டம் காசி விஸ்வநாதர் கோயில் 
  • மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்

இக்கோயில்களில் ஐயாறப்பர் கோயிலும், மயூரநாதர் கோயிலும் சென்றுள்ளேன். பிற கோயில்களுக்கு விரைவில் செல்லவுள்ளேன். 
தற்போது புனுகீஸ்வரர் கோயிலுக்குச் செல்வோம். அழகான ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. இரண்டு பிரகாரங்களுடன் கோயில் அமைந்துள்ளது.  


மண்டப வாயிலின் முகப்பில் லிங்கத்தை புனுகுப்பூனை பூஜிப்பதைப் போன்ற சுதைச்சிற்பம் காணப்படுகிறது. முன்மண்டபத்தில் கொடி மரம் காணப்படுகிறது.கொடி மரத்தை அடுத்து பலிபீடமும், நந்தியும் உள்ளன.





அம்மன் சன்னதி
கோயிலின் வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அருகே பள்ளியறையும் அலங்கார மண்டமும் காணப்படுகின்றன. அம்மன் சன்னதியின் முன்பாக பலிபீடமும் நந்தியும் உள்ளன. அம்மன் சன்னதியைச் சுற்றி வரும்போது சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. 
மூலவர் கருவறை
மூலவர் புனுகீஸ்வரர் லிங்கத்திருமேனியாகக் காட்சியளிக்கிறார். மூலவர் கருவறைக்குச் செல்லும் முன்பாகக் காணப்படும் மண்டபத்தில் வரத விநாயகர், அனுமார், சோமாஸ்கந்தர், ஐயப்பன், 63 நாயன்மார்களில் ஒருவரான நேச நாயனார், சுப்பிரமணியர் ஆகியோர் சன்னதிகள் உள்ளன. கருவறைத் திருச்சுற்றில் சூரியன், பைரவர், கீழக்குமரர் எனப்படும் சுப்பிரமணியர் ஆகியோர் உள்ளனர். அருகே நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள் உள்ள மண்டபம் காணப்படுகிறது. கருவறை கோஷ்டத்தில் பிரம்மா, அடிமுடி காணா அண்ணல், தட்சிணாமூர்த்தி, விநாயகர் உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் சனீஸ்வரன், விநாயகர் காணப்படுகின்றனர். அருகே லிங்கத்திருமேனி காணப்படுகிறது. 

திருப்பணி
விரைவில் திருப்பணி நடைபெறவுள்ளதை அங்கு காணப்படுகின்ற ஏற்பாடுகளைக் கொண்டு அறியமுடிந்தது. ராஜகோபுரம், மூலவர் மற்றும் இறைவியின் விமானங்களில் மூங்கில் சாளரங்கள் போடப்பட்டு திருப்பணிக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. 

நன்றி: 
கும்பகோணம் நண்பர் திரு செல்வம் பணிநிறைவு விழாவிற்காக மயிலாடுதுறை சென்றபோது இக்கோயிலுக்குச் சென்றோம். உடன் வந்த தாராசுரம் நண்பர் திரு நாகராஜனுக்கு நன்றி.