17 December 2016

ஏழாம் திருமுறை : சுந்தரர் தேவாரம்

தினமும் நாளொரு பதிகம் வாசித்து வரும் நிலையில் ஆறாம் திருமுறையைத் தொடர்ந்து அண்மையில் ஏழாம் திருமுறையை (சுந்தரர் தேவாரம்) நிறைவு செய்துள்ளேன். சைவ சமய ஆசாரியருள் மூன்றாமவராக உள்ள சுந்தரர் தம்பிரான் தோழர் என்றும், வன்தொண்டர் என்றும் அழைக்கப்படுகின்றார்.  பெரிய புராணம் தோன்றுவதற்குக் காரணமாக அமைந்த திருத்தொண்டத்தொகையைப் பாடிய பெருமையும் இவருக்கு உண்டு. சுந்தரர் பாடல் பெற்ற இத்தலங்களுக்கு கோயில் உலாவின்போது செல்லும் அரிய வாய்ப்பு கிடைத்தது. தலங்களைக் காண்போம், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல்களில் சிலவற்றைப் பொருளுடன் வாசிப்போம், வாருங்கள். 
திருஎதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி) (ஐராவதேஸ்வரர்)
தந்தை யாரும் தவ்வை யாரும்
எட்டனைச்சார் வாகார்
வந்து நம்மோடு உள்அ ளாவி
வானநெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சி னீரே
திகழ்மதியும் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள் பாடி
என்பதுஅடை வோமே. (9) ப.92
நெஞ்சீரே, தந்தையாரும் தமக்கையாரும் நமக்கு எள்ளளவும் துணையாகமாட்டார். ஆதலின் நீர் எம்பால் வந்து உள்ளாய்க் கலந்து உசாவி, எமக்கு வீட்டு நெறியைக் காட்ம் நினைவுடையீராயின், விளங்குகின்ற திங்களைச் சூடும நம் தந்தை கோயிலை திருஎதிர்கொள்பாடி எனப்படுவதாகிய ஊரிடத்துச் சென்று அடைவோம், வாரீர்.

திருக்கலயநல்லூர் (சாக்கோட்டை) (அமிர்தகலசநாதர்)
தண் கமலம் பொய்கை புடை சூழ்நதழகார் தலத்தில்
தடங்கொள்பெருங் கோயில்தனில் தக்கவகை யாலே
வண்கமலத் தயன்முன்னாள் வழிபாடு செய்ய
மகிழ்ந்தருளி இருந்தபரன் மருவிய ஊர் வினவில்
வெண்கவரி கரும்பீலி வேங்கையொடு கோங்கின்
விரைமலரும் விரவுபுனல் அரிசிலின்தென் கரைமேல்
கண்கமுகின் பூம்பாளை மதுவாசங் கலந்த
கமழ்தென்றல் புகுந்துலவு கலயநல்லூர் காணே. (10), ப.155
திருக்குளத்தையுடைய இப்பெருங் கோயிலின்கண் முறைப்படி பிரமதேவன் முற்காலத்தில் வழிபாடு செய்ய, அதற்கு மகிழ்ச்சியுற்றிருந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஊர் யாது? என்று வினவின் பல வளங்களையும் கொழித்துக்கொண்டு வருகின்ற அரிசிலாற்றின் தென் கரையில் மணம் வீசும் தென்றல் காற்றுப் புகுந்து உலாவுகின்ற திருக்கலயநல்லூரேயாம்.

திருப்பழமண்ணிப்படிக்கரை (நீலகண்டேஸ்வரர்)
உங்கைக ளாற்கூப்பி உகந்
தேத்தித் தொழுமின்தொண்டீர்
மங்கையொர், கூறுடையான் வா
னோர்முத லாய பிரான்
அங்கையில் வெண்மழுவன் அலை
யார்கதிர் மூவிலைய
மங்கைய பாதனிடம் பழ
மண்ணிப் படிக்கரையே. (5), ப.194
தொண்டர்களே, உமையை ஒரு கூற்றில் உடையவனும், தேவர்களுக்கு முதற்பொருளாய தலைவனும், அகங்கையில் வெள்ளிய மழுவை உடையவனும், கொல்லுதல் பொருந்திய ஒளியுடைய முத்தலை வேலை (சூலத்தை) ஏந்திய தாமரை மலர் போலும் பாதங்களையுடையவனும் ஆகிய இறைவனது இடமாகிய திருப்பழ மண்ணிப்படிக்கரையை விரும்பித் துதித்து, உங்கள் கைகளால் கூப்பித் தொழுங்கள்.

திருக்கற்குடி (உச்சிநாதர்)
சந்தார் வெண்குழையாய்
சரிகோவண ஆடையனே
பந்தா ரும்விரலாள்
ஒருபாகம் அமர்ந்தவனே
கந்தார் சோலைகள்சூழ்
திருக்கற்குடி மன்னிநின்ற
எந்தாய் எம்பெருமான்
அடியேனையும் ஏற்றுக்கொள்ளே. (5) ப.226
அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே, சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட  ஆடையை உடையவனே, பந்தின்கண் பொருந்திய விரல்களையுடைய உமைய ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே, மணமிக்க சோலைகள் சூழ்ந்த திருக்கற்குடியில் நிலைபெற்றிருக்கின்ற என் தந்தையே, எங்கள் கடவுளே,  அடியேனையும் ஏற்று உய்யக்கொண்டருளுக.

திருப்புறம்பயம் (சாட்சிநாதேஸ்வரர்)
பண்டரீயன செய்ததீமையும்
பாவமும்பறை யும்படி
கண்டரீயன கேட்டிற்கவ
லாதுஎழுமட நெஞ்சமே
தொண்டரீயன பாடித்துள்ளிநின்று
ஆடிவானவர் தாந்தொழும்
புண்டரீக மலரும்பொய்கைப்
புறம்பயந்தொழப் போதுமே. (9)  ப.283
அறியாமை நிறைந்த மனமே. முற்பிறப்பில் நீக்குவதற்கு அரியனவாகச் செய்த தீய செயல்களின் பழக்கமும் அச்செயல்களால் வந்த பாவமும் விரைய நீங்கும்படி நான் கண்ட அரிய வழிகளை நீ கேட்டு நடப்பதாயின் தேவர்கள் பாடியும் ஆடியும் தொழுகின்ற, பொய்கைகளையுடைய திருப்புறம்பயத்தை வணங்கச் செல்வோம், கவலைப்படாமல் புறப்படு.

திருப்புன்கூர் (சிவலோகநாதர்)
நற்றமிர் வல்ல ஞானசம் பந்தன்
நாவினுக்கு அரையன் நாளைப்போ வானும்
கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி
கண்ணப் பன்கணம் புல்லன்என் றிவர்கள்
குற்றம் செய்யினும் குணம் எனக் கருதும்
கொள்கை கண்டுநின் குறைகழல் அடைந்தேன்
பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே (4), ப.425
தாமரைப் பொய்கைகள் சூழ்ந்த திருப்புன்கூரில் பொருந்தியிருப்பவனே. நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், திருநாளைப்போவாரும், மூர்க்க நாயனாரும், சாக்கிய நாயனாரும், சிலந்தியும், கண்ணப்பரும் ஆகிய இவரிகள் குற்றமான செயல்களைச் செய்திருந்தும், அவைகளைக் குணமான செயல்களாகக் கருதும் உனது திருவுள்ளத்தின் தன்மையை அறிந்து அடியேன் உனது கழலணிந்த திருவடியை அடைந்தேன், என்னை ஏற்றுக்கொள்வீராக.

தற்போது எட்டாம் திருமுறை வாசிக்க ஆரம்பித்துள்ளேன். இதில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும் இடம்பெறுகின்றன.  

பன்னிரு திருமுறைகள்,  தொகுதி 10, சுந்தரர் தேவாரம்,
உரையாசிரியர் வித்வான் எம்.நாராயண வேலுப்பிள்ளை,
வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 600 017
தொலைபேசி 28144995, 28140347, 43502995,

8 comments:

  1. விளக்கங்கள் அனைத்தும் அருமை ஐயா... எட்டாம் திருமுறை தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா
    படங்களுடன் விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. சுந்தரர் தரிசித்த தலங்களைப் பதிவில் கண்டு மகிழ்ச்சி..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
  4. அருமையான சிறப்புப் பதிவு
    பாடலையும் அதற்கான பொருளையும்
    படித்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. விளக்கம் சிறப்பு வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    தமிழ் மணம் 4

    ReplyDelete
  6. அருமையான பதிவு
    பாராட்டுகள்

    ReplyDelete
  7. #கண்ணப்பரும் ஆகிய 'ஐவர்கள்' குற்றமான செயல்களைச் செய்திருந்தும்#
    ஐவரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளின் காலத்தால் முந்தியவர்கள் என்பது தெரிகிறது :)

    ReplyDelete
  8. சக மார்க்கத்தில் இறை சேர்ந்த சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் பதிவு நன்று .
    அடியேன் ஆடி சுவாதியில் பிறந்தவன் என்பதால் சிறுவயதிலிருந்தே அவர்பால் ஈர்ப்பு எனக்கு அதிகமாக வளர்ந்தது ...

    ReplyDelete