05 December 2017

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம் : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய திருக்குறுந்தாண்டகத்தையும் (2032-2051), திருநெடுந்தாண்டகத்தையும் (2052-2081) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



மூவரில் முதல்வன் ஆய ஒரவனை, உலகன் கொண்ட
காவினை, குடந்தை மேய குருமணித் திரளை, இன்பப்
பாவினை, பச்சைத் தேனை, பைம் பொன்னை, அமரர் சென்னிப்
பூவினை, புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வர், தாமே? (2037)
(பிரமன், சிவன், இந்திரன் ஆகிய) மூவருக்கும் காரணமாயிருக்கும் ஒப்பற்றவன் பெருமான். மாவலியிடம் உலகத்தைத் தானம் வாங்கிக் கொண்ட உலக நாயகன். திருக்குடந்தையிலே பொருந்தி இருக்கும் சிறந்த நீல இரத்தினத் திரள் போன்றவன். இன்பமயமான பாட்டுப் போல செவிக்கு இனியனாய் இருப்பவன். தேன் போல நாவால் பாராட்டுவதற்கு இனியவன். பொன் போல அனைவராலும் விரும்பப்படுபவன். நித்திய சூரிகளின் தலையில் அணியத்தக்க மலர் போன்றவன். இவ்வாறான எம்பெருமானைப் புகழும் அடியவர்கள் எதைச் சொல்லிப் புகழ்வர்? 

உள்ளமோ ஒன்றில் நில்லாது; ஓசையின் எரி நின்று உண்ணும்
கொள்ளிமேல் எறும்பு போலக் குழையுமால் என் - தன் உள்ளம்,
தெள்ளியீர்!  தேவர்க்கு எல்லாம் தேவராய் உலகம் கொண்ட
ஒள்ளியீர், உம்மை அல்லால், எழுமையும் துணை இலோமே. (2040)
என் மனமோ எதிலும் நிலை நில்லாமல் இருக்கும். நெருப்பானது ஓசையுடன் பொருந்தி நின்று எரிகின்ற கொள்ளிக் கட்டையின் மேலுள்ள எறும்பு போல என் மனம் பிறப்பு இறப்புகளை நினைத்து உளைகின்றது. அந்தோ! தெளிவுடையவரே! தேவர்களுக்கெல்லாம் தேவராகி உலகை மாவலியிடமிருந்து பெற்ற ஒளியியுடையவரே! உம்மைத் தவிர எந்த நிலையிலும் நாங்கள் துணை இல்லாமல் இருக்கிறோம். 

ஆவியை, அரங்க மாலை அழுக்கு உடம்பு எச்சில் வால்
தூய்மையில் தொண்டனேன் நான் சொல்லினேன் தொல்லை நாமம்;
பாவியேன் பிழைத்தவாறு! என்று அஞ்சினேற்கு அஞ்சல் என்று
காவி போல் வண்ணர் வந்து, என் கண்ணுளே தோன்றினாரே. (2043)
உலகங்களுக்கு ஒரே உயிராய் திருவரங்கத்தில் எழுந்தருளி இருக்கும் அன்பே வடிவானவனை, அழுக்கே வடிவான உடம்பிலுள்ள எச்சில் நிறைந்த வாயால் தூய்மை இல்லாமல் இதர விஷயங்களில் தொண்டு பட்டுத் திரிந்த நான் அனாதியான திருமந்திரத்தைச் சொன்னேன். பாவியான நான் எவ்வளவு பெரிய தவறைச் செய்தேன் என்று பயப்பட்ட எனக்கு 'அஞ்சாதே' எனக் கூறி கருங்குவளை போல நிறமுடைய பெருமான் தாமே வந்து என் கண்ணினுள்ளே காட்சி அளித்தான்.  

பார் - உருவி, நீர், எரி, கால், விசும்பும் ஆகி,
பல் வேறு சமயமும் ஆய்ப் பரந்து நின்ற
ஏர் உருவில் மூவருமே என்ன நின்ற
இமையவர் - தம் திரு உரு வேறு எண்ணும் போது,
ஓர் உருவம் பொன் உருவம், ஒன்று செந்தீ;
ஒன்று மா கடல் உருவம், ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோது, ஒன்றாம் சோதி
முகில் உருவம் எம் அடிகள் உருவம் - தானே. (2053)

அழகிய உருவங்களில் மும்மூர்த்திகளே முக்கியமானவர் என்னும்படி இருக்கிற பிரம்மா, திருமால், சிவன் என்கிற மூவரின் தன்மைகளை வேறாகப் பிரித்துப் பார்க்கும்ப்து பிரமனின் வடிவம் பொன் போன்றது.திருமாலின் வடிவம் பெரிய கடல் போன்றது. களைப்பை எல்லாம் நீக்கவல்லது. சேர்ந்து நிற்கிற மூன்று தத்துவத்தையும் ஆராய்ந்தபோது கடினமான நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவற்றைப் படைத்தும், அனைத்துள்ளும் கலந்து நின்று விளங்கும் பரஞ்சோதி ஒருவனே. அது காளமேகம் போன்ற என் சுவாமியான திருமாலின் உருவமாகும்.  

அன்று ஆயர் குல மகளுக்கு அரையன் - தன்னை;
அலைகடலைக் கடைந்து, அடைத்த அம்மான் - தன்னை;
குன்றாத வலி அரக்கர் கோனை மாள,
கொடும் சிலைவாய்ச் சரம் துரந்து, குலம் களைந்து,
வென்றானை, குன்று எடுத்த தோளினானை;
விரி திரை நீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண் குடந்தைக் கிடந்த மாலை;
நெடியானை - அடி நாயேன் நினைந்திட்டேனே. (2080)
முன்பொரு காலத்தில் இடைக்குலத்தில் பிறந்த நப்பின்னைப் பிராட்டிக்கு நாயகரானவரும், பாற்கடலைக் கடைந்தவரும், கடலில் அணை கட்டிய சுவாமியும் குறைவில்லாத வலிமை உள்ள இராவணன் முடியும்படியாக கொடிய வில்லிலே அம்புகளைத் தொடுத்து எய்து அரக்கர் குலங்களைத் தொலைத்து வெற்றி பெற்றவரும் கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த தோளை உடையவரும் பொய்கைகள் நிரம்பிய திருவிண்ணகரிலே பொருந்தி எப்போதும் வாழ்பவரும் திருக்குடந்தையிலே பள்ளி கொண்டிருக்கும் அண்ணலும், அனைவரிலும் சிறந்தவரான பெருமானை நாய் போல தாழ்ந்த அடியேன் நினைத்தேன்.

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: பெரிய திருமொழி : திருமங்கையாழ்வார்

16 comments:

  1. பாடல்களும் விளக்கங்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  3. //என் மனம் பிறப்பு இறப்புகளை நினைத்து உளைகின்றது. அந்தோ! தெளிவுடையவரே! தேவர்களுக்கெல்லாம் தேவராகி உலகை மாவலியிடமிருந்து பெற்ற ஒளியியுடையவரே! உம்மைத் தவிர எந்த நிலையிலும் நாங்கள் துணை இல்லாமல் இருக்கிறோம். //

    இறைவன் ஒருவனே துணை.

    பாடல்களும், விளக்கமும் அருமை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. அருமை. "இருதலை கொள்ளியினுள் எறும்பு ஒத்து நினை பிரிந்த விரி தலையேனை விடுதி கண்டாய்" என மணிவாசகரும் நீத்தல் விண்ணப்பத்தில் விளம்பியுள்ளார்.

    ReplyDelete
  5. படித்த விடயங்களை அழகிய வகையில் எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
  6. பாடல்களும் விளக்கங்’களும் மிக அருமை!

    ReplyDelete
  7. பாசுரங்களு ம், விளக்கங்களும் அருமை ஐயா.....நல்ல பகிர்வு!

    கீதா

    ReplyDelete
  8. இனிய பாடல்களைப் பதிவில் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..

    ReplyDelete
  9. மிகவும் அருமை, பாடல்களும் அதற்கான விளக்கங்களும் இனிமை. ஆழ்வார் ஆராவமுதனிடம் கொண்ட பக்தி நம்மை சிலிர்க்க வைக்கிறது. தொடரட்டும் உங்களது எழுத்துப் பணி.

    ReplyDelete
  10. பாடல்களை விளக்கங்களுடன் நன்றி சார் நன்றி

    ReplyDelete
  11. பாடல்களைப் பொருளுடன்பகிர்ந்ததற்கு நன்றி சார்

    ReplyDelete
  12. அருமை. நன்றி.

    ReplyDelete
  13. // உள்ளமோ ஒன்றில் நில்லாது; ஓசையின் எரி நின்று உண்ணும்
    கொள்ளிமேல் எறும்பு போலக் குழையுமால் என் - தன் உள்ளம்,//

    ஆழ்வார்கள் பாசுரம் என்றாலே திகட்டாத தேன்தமிழ் வரிகள் தான்.

    ReplyDelete
  14. அருமை. நன்றி.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete