02 December 2017

மைசூர் மிருகக்காட்சி சாலை

ஆகஸ்டு 2017இல் மைசூர் பயணத்தில் ஸ்ரீசாமராஜேந்திர விலங்கியல் தோட்டம் (Sri Chamarajendra Zoological Gardens) என்றழைக்கப்படும் மைசூர் மிருகக்காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். இதற்கு முன் 1980களில் கோயம்புத்தூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும்போது நண்பர்களுடன் சென்றிருந்தபோதிலும் இப்போதைய அனுபவம் வித்தியாசமாக இருந்தது. பெயரை மட்டும் கூறினால் போதும் அந்த பிராணியை அங்கு காணலாம். அந்த அளவிற்கு விதம் விதமான உயிரினங்கள்.  125ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டம் காரணமாக மிருகக்காட்சி சாலையில் பெரும்பாலான இடங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. 

  • 1892ல் 10 ஏக்கர் பரப்பளவில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது 79 ஏக்கரைப் பெற்றுத் திகழ்கிறது.
  • மைசூர் மன்னர் சாம்ராஜ்ய உடையாரால்  தோற்றுவிக்கப்பட்டது.
  • ஆரம்ப காலத்தில் அரண்மனை மிருகக்காட்சி சாலை என்றழைக்கப்பட்டது. 
  • ஆரம்பத்தில் அரச குடும்பத்தாருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டனர். 
  • 1902 முதல் பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். 
  • நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. 
  • உலகின் மிகச்சிறந்த மிருகக் காட்சி சாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
  • 25 நாடுகளைச் சேர்ந்த 168 இனங்களைக் கொண்ட 1500 மிருகங்கள் இங்கு உள்ளன. 
  • முதன்முதலாக கொரில்லாக்களையும், பென்குவின்களையும் இறக்குமதி செய்யும் பெருமை பெற்றது. 
  • வெள்ளைப் புலியின் வெற்றிகரமான இனப்பெருக்கத்திற்குப் பிறகு ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து பல விலங்குகள் இங்கு கொண்டுவரப்பட்டன.
  • விலங்குகளை நேசிக்கும் விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக இங்கு மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
  • அமெரிக்காவைச் சேர்ந்த சல்லி வாக்கர் என்பவர் மைசூர் மிருகக்காட்சி சாலையின் நண்பர்கள் என்ற அமைப்பினை 1980இல் உருவாக்கினார். தத்தெடுக்கும் ஒரு விலங்கிற்கான அனைத்து செலவினையும் தத்தெடுப்பவர் மேற்கொள்ளவேண்டும் என்ற அடிப்படையில் விலங்கினைத் தத்தெடுக்கும் முறை இங்கு பேணப்படுகிறது.
  • இங்கு கரஞ்சி ஏரி உள்ளது. அந்த ஏரியில் 45 வகையான பறவைகள் காணப்படுகின்றன.  

















உயர்ந்த மரங்கள், அழகாக பராமரிக்கப்படும் சாலை, சுற்றுச்சூழல் கவனம், பாதுகாப்புக்கான நடவடிக்கை, எங்கு பார்த்தாலும் பசுமை, பறவைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள கூண்டு போன்ற அமைப்பு போன்ற வகையில் மிகவும் சிறப்பாக அமைந்துள்ள மிருகக்காட்சி சாலை தற்போது 125 ஆண்டு விழாவினைக் கொண்டாடுகிறது. 
சுற்றிப்பார்க்கும்போது மேலும் மேலும் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. காலை 8.30 முதல் மாலை 5.30 வரை இந்த மிருகக் காட்சி சாலை யினைப் பார்வையிடலாம்.  செவ்வாய்க்கிழமை விடுமுறை. நுழைவுக் கட்டணம்  பெரியவர்களுக்கு ரூ.25உம், சிறியவர்களுக்கு (5 முதல் 12 வயது) ரூ.10உம் ஆகும். முழுமையாக சுற்றிப்பார்க்க ஒரு நாளாகும். இயலுமாயின் காலையோ மாலையோ முழுமையாகப் பார்க்கும் வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்வது நலம். முடிந்தவரை குழந்தைகளோடு சென்றால் இன்னும் கொண்டாட்டமே. இந்தியாவில் குறிப்பிடத்தக்க மிருகக்காட்சி சாலைகளில் ஒன்றான இங்கு வாய்ப்பு கிடைக்கும்போது செல்வோம்.  


புகைப்படங்கள் எடுக்க உதவி : என் மனைவி திருமதி பாக்கியவதி, மகன் திரு சிவகுரு
நன்றி: 
  • http://mysore.nic.in/tourism_zoo.htm
  • http://mysorezoo.info
  • Wikipedia: Mysore Zoo
  • விக்கிபீடியா ஸ்ரீசாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்
------------------------------------------------
கர்நாடக உலா : இதற்கு முன் பார்த்தது/வாசித்தது
சரவணபெலகோலா : அமைதி தவழும் கோமதீஸ்வரர், 1 அக்டோபர், 2017
------------------------------------------------

15 comments:

  1. படங்களும் பகிர்வும் அருமை ஐயா
    இரண்டு முறை சென்றிருக்கிறேன்
    நன்றி
    தம +1

    ReplyDelete
  2. அழகான புகைப்படங்கள் விளக்கிய விடயங்கள் நன்று.
    1983-மே மாதம் கடைசியாக சென்றது மீண்டும் காண ஆவல் கொள்கிறது.

    ReplyDelete
  3. படங்கள் அழகு. மைசூர் நகருக்கு சிறு வயதில் சென்ற போது இங்கேயும் சென்றிருக்கிறேன் - பார்த்தவை நினைவில் இல்லை!

    ReplyDelete
  4. மைசூர் விலங்குகள் பூங்கா பற்றிய தகவல்கள்,படங்கள் அனைத்தும் அங்கு செல்ல இருப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டி.

    ReplyDelete
  5. படங்கள் அருமையா இருந்தது வெள்ளை மயில் படம் மிகவும் அழக எடுத்திருக்காங்க , விளக்கங்களும் அருமை

    ReplyDelete
  6. படங்கள் அருமை!

    ReplyDelete
  7. மிக பிடித்த இடம்...நிறையமுறை சென்றது உண்டு..ஐயா

    ReplyDelete
  8. மைசூர் விலங்குகள் பூங்கா சென்றதில்லை...மிகவும் ஸ்வாரஸ்யமானத் தகவல்கள்/. படங்கள் அருமை

    கீதா: நாங்கள் முன்பும் சென்றிருக்கிறோம். அருமையான விலங்கியல் பூங்கா. இயற்கைப் பூங்கா எனலாம். என் மகன் அங்கு அவன் கால்நடை மருத்துவம் படிக்கும் நேரம் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கு பயிற்சி எடுத்துக் கொள்ள 5வருடம் சென்றிருந்தான். இப்போது இன்னும் நிறைய மாற்றங்கள் வந்துள்ளது. படங்கள் எல்லாம் அருமை.

    ReplyDelete
  9. சிறு வயதில் இந்த மிருககாட்சி சாலைக்கு சென்றுள்ளேன். Mysore Zoo என்று சொல்வார்கள். அருமையான படங்கள், விரிவான செய்திகள். பதிந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிறு வயதில் பள்ளிச்சுற்றுலாவில் சென்று இருக்கிறேன்.
    படங்கள், செய்திகள் அருமை.

    ReplyDelete
  11. தகவல்களுக்கும் புகைப்படங்களுக்கு மிக்க நன்றிகள் ஐயா.

    கோ

    ReplyDelete
  12. சென்ற ஆண்டு மைசூர் சென்றிருந்தும் பார்க்காமல் வந்துவிட்ட ஏக்கம் ஒரு பெருமூச்சாய் வெளிப்படுகிறது. நல்ல தகவல்களுடன் கூடிய பதிவு. படங்கள் மிக அருமை.

    ReplyDelete