16 December 2017

அயலக வாசிப்பு : நவம்பர் 2017

நவம்பர் 2017 வெளியான அயலக வாசிப்பில் ஈர்த்த செய்திகளாக கீழ்க்கண்ட செய்திகள் அமைகின்றன. அவற்றைச் சுருக்கமாகக் காண்போம். 
  • சீனாவில் தேர்வுக்காக ஆயத்தப்படுத்த தேர்வுக்கூடத்தில் இடம் பிடிப்பதற்காக வேகமாக ஓடும் மாணவர்கள் (டெய்லி மெயில்) 
  • மின்னஞ்சலை சமாளிப்பதற்கான உத்திகள் (கார்டியன்) 
  • வடகிழக்குச் சீனாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய நூலகம் (டெய்லி மெயில்) 
  • கொந்தளிப்பான காலத்தில் தன் கொள்கைகளை ஊடகம் வரையறுத்துக் கொள்ளவேண்டிய அவசியம் (கார்டியன்) 
  • போலியோவை எதிர்கொண்டு 60 வருடங்களாக ஒரு மிஷினில் தன் வாழ்நாளைக் கழிக்கின்ற அலெக்சான்டர் (இன்டிபென்டன்ட்) 
  • மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பியில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வால்பேப்பராக அமைந்துள்ள Bliss புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் அடையும் பெருமிதம் (இன்டிபென்டன்ட்
  • உலகில் முதன்முதலாக குடியுரிமை பெற்ற ரோபோவான சோஃபியா அளித்த பேட்டி (டெய்லி மெயில்) 

சீனாவிலுள்ள மாணவர்களுக்கு வெற்றிக்கான வழி அவர்களுடைய கடின உழைப்பில் மட்டுமல்ல, அவர்களுடைய வேகமான ஓட்டத்திலும்கூட உள்ளதை நிரூபிக்கும் நிகழ்வு. அண்மையில் வெளியான ஒரு வீடியோவில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தேர்வுக்கு தம்மை ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக நூலகத்தில்இடம் பிடிப்பதற்காக ஓடுவதைக் காணமுடிந்தது. வரிசையில் முன்பாக இடம் பிடிப்பதற்காக சில மாணவர்கள் விடியற்காலையில் 5.00 மணிக்கே எழுந்துவிட்டார்கள் என்று பியூப்பில்ஸ் டெய்லி நாளிதழ் கூறுகிறது. சீனாவின் வீடியோ இணையதளமான பியர் வீடியோ வெளியிட்ட அந்த 30 நொடி வீடியோ அக்டோபர் 27இல் கேனான் பகுதியில் உள்ள சுமாடின் நகரிலுள்ள குவான்குவாய் கல்லூரியில் (Huanghuai College, Zhumadian, Henan) எடுக்கப்பட்டதாகும். நூலகக் கதவுகள் திறக்கப்பட்டவுடன் அவர்கள் முண்டியடித்துக்கொண்டு உள்ளே ஓடுவதை அதில் காணமுடிந்தது. வேகமாக வரும் மர்ணவர்களைத் தடுக்க ஓர் ஆசிரியர் முயல்கிறார். அதிகமான கூட்டம் காரணமாக அவருடைய தன் முயற்சியில் தோற்கிறார். தோற்கிறது. அந்த மாணவர்கள் டிசம்பர் 24 முதல் 26 வரை நடைபெறவுள்ள தேசிய பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்விற்காகத் (National Postgraduate Admission Examination) தம்மை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.பல இளைஞர்கள் பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புவதால் இந்தத் தேர்வுக்கு மிகவும் போட்டி காணப்படுகிறது. (நன்றி :டெய்லி மெயில்)


மின்னஞ்சல் பயன்பாட்டிற்கு வந்து 30 வருடங்களாகின்றன. அது நம் வாழ்வை முழுக்க ஆக்கிரமித்துவிட்டது. ஆரம்பகாலத்தில் எலக்டிரானிக் முறையில் செய்திகளை மட்டுமே அனுப்பப் பயன்படுத்தினோம். ஆனால் இப்போதோ அனைத்திலுமே அதனைப் பயன்படுத்தும் நிலைக்கு ஆளாகியுள்ளோம். அலுவலகத்தில் அடுத்த இருக்கையில் உள்ளவரோடு நேருக்கு நேராக பேசுவதைத் தவிர்த்து அஞ்சல் அனுப்பும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு நாளைக்கு 269 பில்லியன் மின்னஞ்சல்கள் அனுப்பப்படுகின்றனவாம். அதாவது ஒரு நொடிக்கு 2.4 மில்லியன் மின்னஞ்சல்கள். அதிகமான மின்னஞ்சல்கள் நமக்கு இப்போது சுமையாகிவிட்டது. இவற்றை சமாளிக்க உள்ள சில உத்திகளை நாம் காண்போம். (நன்றி : கார்டியன்)



வடகிழக்குச் சீனாவில் உள்ள தியன்சின் பின்காய் பொது நூலகத்தைக் (Tianjin Binhai Public Library) காண்போம். 3,62,744 சதுர அடியில் 33,700 சதுர மீட்டர் அமைந்துள்ள கண் விழி அமைப்பினைப் போன்ற, மூன்று வருடங்களில் கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் உலகின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 1.2 மில்லியன் நூல்களைக் கொண்டு அமைந்துள்ள இக்கட்டடம் டென்மார்க் கட்டட நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். ஐந்து மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலகம் நூல் வாசிப்போரின் சொர்க்கமாக உள்ளது.


1821  முதல் (அப்போது மான்சென்ஸடர் கார்டியன்) வெளிவந்துகொண்டிருக்கின்ற கார்டியன் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில் நெருக்கடியான காலகட்டத்தில் இதழியலின் பணித்திட்டத்திற்கான இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. கொந்தளிப்பான காலத்தில் தன் கொள்கைகளை ஊடகம் வரையறுத்துக் கொள்ளவேண்டிய அவசியமும், எப்போதையும்விட இப்போது இது பெறும் முக்கியத்துவமும் குறித்து இக்கட்டுரையில் விரிவாக அலசப்படுகிறது.


60 வருடங்களாக ஒரு மிஷினில் தன் வாழ்நாளைக் கழிக்கிறார் 70 வயதாகும் பால் அலெக்சான்டர். வழக்கிழந்த வென்டிலேட்டரில் இவருடைய வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருக்கிறது. இவரைப் போல வாழ்பவர்கள் ஒக்லகோமாவைச் சேர்ந்த மார்த்தா லில்லார்ட் (69) மற்றும் கான்காஸ் சிட்டியைச் சேர்ந்த மோனா ரான் டால்ப் (81) காலாவதியாகிவிட்ட இந்த மிஷினைப் பயன்படுத்துபவர்கள் இந்த மூவர் மட்டுமே. Iron Lung என்றழைக்கப்படுகின்ற மிஷின் மூலமாக போலியோவை இவர்கள் எதிர்கொண்டுள்ளனர். அனைத்து வகையான வென்ட்டிலேட்டரைப் பயன்படுத்தியபோதிலும் இதுதான் இயற்கையாக மூச்சுவிடுவதற்கு வசதியாக உள்ளது என்கிறார் அலெக்சான்டர். 1952இல், தன்னுடைய ஆறு வயதில் போலியாவால் பாதிக்கப்பட்ட இவர் தன் வாழ்நாளை இந்த மிஷினில்தான் கழிக்கிறார். இதில் இருந்துகொண்டே தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் கூறுகிறார். தன் வாயில் இணைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் இணைப்பு மூலமாக தட்டச்சு செய்கிறார். இந்த மிஷினை முழுக்க முழுக்கச் சார்ந்த நிலையில் இவர் சட்டப் பள்ளியில் படித்துள்ளார். வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.


Bliss உலகின் மிகப் புகழ் பெற்ற புகைப்படமாகும். Bliss என்பது மைக்ரோசாப்ட் வின்டோஸ் எக்ஸ்பியில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் வால்பேப்பர். பச்சை நிற மலை போன்ற அமைப்பினை ஒட்டி நீல நில ஆகாயத்தைக் கொண்ட எடிட் செய்யப்படாத புகைப்படமாகும். உள்ளது உள்ளபடியே நம் முன் அதனைக் கொண்டு வந்து நிறுத்திய பெருமைக்குரிய புகைப்படக்காரர் Chuck O'Rear என்பவர் ஆவார். 21 ஆண்டுகளுக்கு முன்பாக இவர் சோனாமா நெடுஞ்சலையில் இந்தக் காட்சியை புகைப்படமாக எடுத்தாராம். "எனக்கு இப்போது 76 வயதாகிறது. இப்புகைப்படம் மூலமாக மைக்ரோசாப்ட் என் வாழ்வில் ஒரு புதிய அர்த்தத்தினையே தந்துவிட்டது. வரலாற்றில் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படத்தை எடுத்த புகைப்படக்கலைஞர் என்ற நிலையில் புகழின் ஒவ்வொரு நொடியையும் என்னால் உணரமுடிகிறது" என்கிறார் அவர்.


உலகில் முதன்முதலாக ஒரு ரோபோ குடியுரிமை பெற்றுள்ளது என்பதை நினைக்கும்போது வியப்பாக இருக்கிறதல்லவா? அந்த ரோபோவின் பெயர் சோஃபியா. அந்த ரோபோ ஒரு பேட்டி அளித்தது என்பதை நினைத்தால் இன்னும் வியப்பு மேலிடும். அந்த ரோபோவான சோஃபியா அளித்துள்ள பேட்டியில் (?) தனக்கு ஒரு ரோபோ மகள் இருந்தால் தன் பெயரையே அவருக்கு (அதற்கு) வைக்கப்போவதோகவும், குடும்பம் என்ற அமைப்பு முக்கியமானது என்றும் கூறுகிறார் (கூறுகிறது). இந்த ரோபோ ஹாங்காங்கைச் சேர்ந்த ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். சவுதி அரேபியாவில், சர்ச்சைக்கிடையே, கடந்த மாதம் இந்த ரோபோவுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

13 comments:

  1. முனைவர் அவர்களுக்கு வணக்கம்.
    செய்திகளை அழகான வகையில் விவரித்தமைக்கு நன்றி.

    Bliss புகைப்படம் இவ்வுலகில் காணாதோர் உண்டோ ?

    ReplyDelete
  2. தகவல்களின் தொகுப்பு..உலகை ஒரு சுற்றுப்பார்வை பார்த்த அனுபவத்தை தருகிறது..பரந்து பட்ட உங்கள் வாசிப்பை அறிகிறோம்..இன்னும் எழுதுங்கள் அய்யா

    ReplyDelete
  3. நல்லதொரு தொகுப்பு.....

    ReplyDelete
  4. நிறைய விஷயங்களை உள்ளடக்கிய பதிவு..

    வாழ்க நலம்..

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு

    ReplyDelete
  6. ​​நல்லதொரு தொகுப்பு.

    ReplyDelete
  7. வடகிழக்கு சீன நூலகத்தில் நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. நம் நாட்டில் இதெல்லாம் நிகழ்வது என் காலத்தில் இருக்கப் போவதில்லை என்பதை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.

    ReplyDelete
  8. வியப்பிற்குரிய செய்திகள் ஐயா

    ReplyDelete
  9. உலகின் முக்கிய செய்திகளைத் தொகுத்துச் சுவையாகத் தருவதற்கு மிகவும் நன்றி முனைவர் ஐயா! புகைப்படத்தைப் பார்த்திருக்கிறோம். அதை எடுத்தவர் பற்றி இன்று தான் அறிகின்றேன். ரோபோ செய்தியும் புதுமை. தொடர்ந்து வழங்குங்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  10. இயல்பாக முச்சுவிட முடியாதவர் படித்து வழக்கறிஞரானதும், இயந்திர மனிதர் குடியுரிமை பெற்றதும் நம்ப முடியாத உண்மைச் செய்திகள். நீங்கள் பகிர்ந்திரா விட்டால் இந்த அரிய செய்திகள் தெரியாமலே போயிருக்கும். பாராட்டுகள்.

    ReplyDelete
  11. அயலக வாசிப்பு நல்ல தொகுப்பு ஐயா.

    ReplyDelete
  12. பயனுள்ள அருமையான தகவல்

    ReplyDelete