மகாபலிபுரம்
(மாமல்லபுரம்) இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில், தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து 50 கிமீ தொலைவில்
அமைந்துள்ள பண்டைய கடற்கரை நகரமாகும். யுனெஸ்கோவால் பாரம்பரியச்சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள,
7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, இவ்விடத்திற்கு அண்மைக்காலமாக சுற்றுலாப்பயணிகளும், யாத்ரீகர்களும்
வந்து செல்கின்றனர். இப்போது இவ்வூர் அலைச்சறுக்குக்கு
(சர்ஃபிங்) பெயர் பெற்ற இடமாக மாறிவருகிறது.
அலைச்சறுக்குக்குத் தயாராகும் ராகுல் பன்னீர்செல்வம் |
பத்தாண்டுகளுக்கு முன்பாக வெளிநாட்டு அலைச்சறுக்கு வீரர்கள் கண்டுபிடித்த நாள் முதல் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் அலைச்சறுக்கில் இங்கு அதிகமாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். மூமு என்றழைக்கப்படுகின்ற முகேஷ் பஞ்சநாதன் (32) அவர்களுக்கு அலைச்சறுக்கினைக் கற்றுக்கொடுக்கின்றார். மீனவக்குடும்பத்தில் பிறந்த அவர் 2007இல் அலைச்சறுக்கினை தானாகக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். அதற்காக வெளிநாட்டிலிருந்து அலைச்சறுக்கு விளையாட வந்தோரிடம் தக்கைப்பலகையினைப் பெற்றார். பின்னர் உள்ளூர் இளைஞர்களுக்கு இலவசமாக அதனைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். கடற்கரையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள முன்வருவோருக்கு அவர் தாமாக முன்வந்து கற்றுத் தருகிறார். சர்பிங் பெடரேசன் ஆப் இந்தியா என்ற அமைப்பில் முதல் நிலைப் பயிற்றுவிப்பாளராக பயிற்றுவித்தல் திறனை இவர் முறைப்படுத்திக்கொண்டார். தற்போது சொந்தமாக மூமுசர்ப்இந்தியா என்ற ஒரு அலைச்சறுக்குப் பள்ளியினை நடத்தி வருகிறார். தான் வைத்துள்ள 30 அலைச்சறுக்குப்பலகைகளை வாடகைக்கு விடுவதோடு, தன் உள்ளூர் குழுவினை வைத்துக்கொண்டு தனியாகவும், கூட்டாகவும் வகுப்புகளை நடத்திவருகிறார்.
அலைச்சறுக்குப் பலகையுடன் அலைச்சறுக்காளர்கள் |
கடலின்
அரிமானத்தைத் தடுப்பதற்காகவும், கடற்கரைக் கோயிலைக் காப்பதற்காகவும் அரசால் கடற்கரைப்பகுதியில் தடுப்பு
அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தியாவைச் சேர்ந்த அலைச்சறுக்காளர்களுடன், ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா,
ஜப்பான் ஆகிய நாட்டிலிருந்து வந்தவர்களும் 2 மீட்டர் கடல் அலையை எதிர்கொண்டு சறுக்கி
விளையாடுவதையும், அருகே தென் கொரியாவைச் சேர்ந்தவர்கள் அலைச்சறுக்கினைப்
பற்றி கற்பதையும் காணமுடிந்தது.
ஹோலி ஸ்டோக்ட் கட்டியுள்ள ஸ்கேட் பார்க்
|
காலையில்
நான் அலைச்சறுக்கில் ஈடுபட்டிருந்தபோது அப்பலகை பழுதானதைக் கண்டேன். பின்னர் மூமூவின்
பள்ளி அருகே 26 வயதான ராகுலைக் கண்டேன். அவர் அலைச்சறுக்கில் பயிற்சி பெற்றவர். கோவ்லாந்து
பாயிண்ட்டில் 2017இல் கடற்கரையில் நடைபெற்ற 20 நிமிட அலைச்சறுக்குப் போட்டியில் அவருடைய
வயதுப்பிரிவில் முதலிடம் பெற்றவர். முன்னாள் மாணவரான அவர் தற்போது பயிற்சியாளராக உள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த, முன்பு ஒரு கடை வைத்திருந்த, அலைச்சறுக்காளரிடம் அவர் பயிற்சி
பெற்றவராவார். அலைச்சறுக்கில் தேர்ந்தவரான
அவர் அலைச்சறுக்குப் பலகைகளை சீர்செய்வதிலும் வல்லவர்.
அருகில் உள்ள ஸ்விரல் நெஸ்ட் என்னும் மீனவரால் நடத்தப்படுகின்ற ஒரு தங்கும் விடுதி கடல் திமிங்கிலங்கள் என்ற அலைச்சறுக்குக்குழுவினைக் கொண்டுள்ளது. மகாபலிபுரத்தைச் சேர்ந்த, ஆறு வருடங்களாக அலைச்சறுக்கில் பயணிக்கின்ற, தற்போது 16 வயதாகும் நிதீஷ் என்பவரால் நடத்தப்படுகிறது. நான் அவரைச் சந்தித்தபோது கோவ்லாந்து போட்டிக்காகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்.
கடல் திமிங்கிலங்கள் அமைப்பின் உறுப்பினர் சஞ்சய் |
மகாபலிபுரத்தில்
ஸ்கேட்டிங் பார்க் ஒன்றைக் காணமுடிந்தது. பெங்களூரைச் சேர்ந்த ஹோலி ஸ்டோக்ட் 2015இல் இந்த பார்க்கினை
அமைத்துள்ளது. இந்தியாவின் பிற இடங்களிலும் அவர்கள் இவ்வாறான ஸ்கேட்டிங் பார்க்கினை
அமைத்துள்ளனர். அலைச்சறுக்கு
இந்தியாவில் மேற்கு கடற்கரைப் பகுதியில் கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் கிழக்குக் கடற்கரைப்பகுதியில்
ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் நன்கு வளர்ந்துவருகின்றபோதிலும் மகாபலிபுரம் இதற்கான
மணிமகுடமாகத் திகழ்கிறது.
நன்றி : தி கார்டியன்
சுருக்கமாக தமிழில் : பா.ஜம்புலிங்கம்
கார்டியன் இதழின் இக்கட்டுரையினை New waves : make a break for the 'crown jewel' of India's surf scene in Tamil Nadu : Ozzie Hoppe என்ற இணைப்பில் வாசிக்கலாம்.