Showing posts with label நிகழ்வுகள். Show all posts
Showing posts with label நிகழ்வுகள். Show all posts

24 March 2026

சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி: பதிப்பாசிரியர் வீ.ஜெயபால்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலின் கருவூரார் சன்னதியில், அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பாக சித்தர் பெருவிழாவின் 33ஆம் ஆண்டு நிகழ்வின் ஓர் அங்கமாக அருள்மிகு சித்தர் கருவூரார் அருளிய பூஜா விதி (பதிப்பாசிரியர் சித்தாந்த வித்யாநிதி முனைவர் வீ.ஜெயபால்) என்னும் நூல் 19.4.2008இல் வெளியிடப்பட்டது.  

இந்நூலில் தஞ்சாவூர், பெரிய கோயிலில் அருள்பாலித்து வரும் கருவூர் சித்தரின் வரலாறும், அவருடைய அற்புதங்களும், அவர் அருளிய பூஜாவிதி என்னும் நூலுக்கான உரையும் இடம்பெற்றுள்ளதோடு கருவூர் சித்தரின் யோக அனுபவங்களும் தெளிவாக்கப்பட்டுள்ளதாகப் பதிப்பாசிரியர் கூறுகிறார்.  

இந்த நூல் வெளியீட்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றினைப் பெற்றேன். தலைமையுரையாற்றியதும், விழா தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதும் நெஞ்சில் நிற்கும் அனுபவம்.

இதற்கு முன்பாக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகத் தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றியுள்ளேன். 







-------------------------------------------------------------------------------------------
நன்றி: அகத்தியர் சன்மார்க்க சங்கம், தஞ்சாவூர், 
தினமலர் 
-------------------------------------------------------------------------------------------

03 March 2026

மெய்கண்ட சித்தாந்த சாத்திரம் (சொற்பொழிவுகள்): சிவப்பிரகாசம்

தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் சித்தாந்த சாத்திரங்களான 14 நூல்களைப் பற்றி சைவ நெறியாளர்கள் 14 மாதக்கூட்டங்களில் சொற்பொழிவாற்றினர். அதில் 18.9.1998இல் சிவப்பிரகாசம் குறித்து உரையாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். பின்னர், சொற்பொழிவுகள் நூல் வடிவம் பெற்றது. அதில் என்னுடைய உரையின் அச்சு வடிவம் வெளியானது. 

உமாபதி சிவாச்சாரியார் அருளிய  சிவப்பிரகாசம்







முதன் முதலாக தஞ்சாவூர், பெருவுடையார் கோயிலில் இவ்வாறான ஒரு உரையாற்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததும், அச்சொற்பொழிவுகள் இடம் பெற்ற தொகுப்பில் என் கட்டுரை இடம் பெற்றதும் எனக்குக் கிடைத்தப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.     



-------------------------------------------------------------------------------------------
நன்றி: சைவ சித்தாந்தப் பெருமன்றம், தஞ்சாவூர் 
-------------------------------------------------------------------------------------------

15 January 2026

ஞானசம்பந்தர் வாழ்வும் வாக்கும்: பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல்

தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டத்தினர் தஞ்சைப்பெரிய கோயில் அம்பலவாணர் சன்னதியில் தஞ்சாவூர் நகரச் சைவ சமயப் பேரமைப்புகளை ஒருங்கிணைத்து திருமுறைச் சான்றோர் வாழ்வும் வாக்கும் என்னும் தொடர் சொற்பொழிவினை அறிஞர் பலரைக் கொண்டு 16.6.1997 முதல் 13.7.1997 வரை 28 நாட்கள் நடத்தினர். அவ்வுரைகள் தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம் அவர்களால் தொகுக்கப்பெற்று  பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல் (தஞ்சை அருள்நெறித் திருக்கூட்டம், சிவகமலாம்பிகை இல்லம், 435, முல்லை, புதிய வீட்டு வசதிப்பிரிவு, தஞ்சாவூர் 613 005, 1997) என்னும் தலைப்பில் நூல் வடிவம் பெற்றது. 

அந்நூலின் வெளியீட்டுக்குழுவில் உறுப்பினராகச் செயல்படும் நல்வாய்ப்பினையும், அதில் பெண்ணாடம் திரு அ.வடிவேலனார் அவர்களின் பொழிவினைத் தொகுக்கும் வாய்ப்பினையும் பெற்றது என் நினைவில் நிற்கும் அனுபவங்களில் ஒன்று.  








-------------------------------------------------------------------------------------------
நன்றி: பன்னிரு திருமுறைச் சான்றோர் வாழ்வியல்
தொகுப்பாசிரியர்: தேவாரமணி சிவ.திருச்சிற்றம்பலம் 
-------------------------------------------------------------------------------------------

26 October 2025

தேனுகா: 11ஆம் ஆண்டு நினைவு

தேனுகா அவர்களின் 11ஆவது ஆண்டு நினைவு நாள் நேற்று (25.10.2025) மாலை கும்பகோணம், காந்தியடிகள் நற்பணிக்கழகத்தில் கழக அமைப்பாளர் திரு பாலுஜி என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கவிஞர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள், காந்தியடிகள் நற்பணிக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், உள்ளூர்ப்பெருமக்கள்  கலந்துகொண்டு அவருடைய பெருந்தன்மை, கலை ரசனை, விட்டுக்கொடுத்துப்பேசும் தன்மை, மாற்றுக்கருத்துக்கொண்டோரிடமும் இன்முகத்துடன் பழகும் பாங்கு, அவருடைய நட்பினால் தாம் பெற்ற அனுபவம் என்ற பல நிலைகளில் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அவருடனான என்னுடைய நட்பினைப் பற்றிப் பேசும் நல்வாய்ப்பினைப் பெற்றேன். 



ஒளிப்படம் : (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்



"தேனுகா என்ற பெயரைக் கேட்டாலே அவருடைய சாதனைகள் நினைவிற்கு வரும். அவரைப் பற்றி சில அனுபவங்களைப் பகிர்வதில்  மகிழ்கிறேன். அவருடைய கலைத்துறை சார்ந்த செயல்பாடு, என்னுடைய ஆய்வு தொடர்பின் காரணமாக ஏற்பட்ட பிணைப்பு என்ற வகையில் அவருடைய நட்பு அமைந்தது. அவ்வப்போது நாளிதழ்களில் அவருடைய செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்தபோதுதான் அவரைப் பற்றி அறிந்தேன். அதனடிப்படையில் அவரை முதன்முதலாக அவர் பணியாற்றிய, கும்பகோணம் பொற்றாமரைக்களக்கரையில், மூர்த்திக்கலையரங்கை அடுத்திருந்த பாரத மாநில வங்கி அலுவலகத்தில் சந்தித்தேன். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் என் பௌத்த ஆய்வினைப் பாராட்டினார். திருவலஞ்சுழியிலும், புகழ்பெற்ற களம்கரி ஓவியக்கலைஞர் இருந்த சிக்கல்நாயக்கன்பேட்டை (நான் பேசும்போது இவ்விடத்தில் பெயரை மறந்துவிட்டேன். பின்னர் திரு ஆடலரசன் அவ்வூரின் பெயரை நினைவுபடுத்தினார்) அருகிலும் புத்தர் சிலைகள் இருந்ததாகத் தான் கேள்விப்பட்டதாகக் கூறினார். 

அவர் கூறிய திருவலஞ்சுழி சிலை சென்னையிலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் உள்ளதை, 1940இல் மயிலை சீனி வேங்கடசாமி பௌத்தமும் தமிழும் நூலில் குறிப்பிட்டிருந்ததை அவரிடம் கூறினேன். பிறிதொரு பயணத்தில் அவர் சொன்ன மற்றொரு சிலையைப் பார்க்கச் சிக்கல்நாயக்கன்பேட்டைக்குச் சென்றபோது பல வருடங்களுக்கு முன் அம்மணசாமி என்ற ஒரு சிலை இருந்ததாகவும், தற்போது இல்லை என்றும் கூறினர். பின்னர் அங்கு ஓவியக்கலைஞரைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து திரும்பினேன். 

தமிழ் விக்கிப்பீடியாவில் தஞ்சாவூர் மாவட்டக் கோயில்கள், தஞ்சாவூர் மாவட்ட முக்கிய நபர்கள், நான் படித்த பள்ளி, கல்லூரி, நூலகம் என்ற நிலைகளில் பதிவுகளைப் பதிய ஆரம்பித்தபோது முக்கிய நபர்கள் என்ற வகையில் முதலில் மனதிற்கு வந்தவர் தேனுகா. அவரிடம் சில விவரங்களைப் பெற்று விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பதிவினை செப்டம்பர் 2014இல் தொடங்கினேன்.  ஒவ்வொன்றாகப் பதிந்துவரும்போது அவருடைய புகைப்படத்தையும் பதிவில் இணைத்தேன். சக விக்கிப்பீடியர்கள் புகைப்படத்தைப் பதியும்போது சில நெறிமுறைகளைக் கடைபிடிக்கவேண்டும் என்று கூறி அவரிடம் எழுத்து அனுமதி பெற்றுப் பதிவில் இணைத்தால் காப்புரிமை சிக்கல் எழாது என்று கூறவே அவரிடம் அதை அனுப்பும்படிக் கேட்டேன். 

வாய்ப்பிருப்பின் நேராகவே கும்பகோணம் வந்து அவரைப் புகைப்படம் எடுப்பதாகக் கூறினேன்.  மறுநாள் அனுப்புவதாகக் கூறினார். நான் புகைப்படத்தை எதிர்ப்பார்த்த வேளையில் அவர் இயற்கையெய்திய செய்தி இடியாய் வந்தது. கும்பகோணத்தில் அவருடைய வீட்டிற்குச் சென்று இறுதி அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பினேன். அவர் பற்றிய பக்கத்தை ஆரம்பித்து அவருடைய மரணச்செய்தியைப் பதிவில் சேர்க்கவேண்டிய சூழல் எனக்கு ஆழ்ந்த வேதனையைத் தந்தது. நான் பதிய எண்ணி அவருடைய பக்கத்தைத் திறந்தபோது சக விக்கிப்பீடியர், கலை இலக்கிய விமர்சகர் தேனுகா காலமானார் என்ற தலைப்பில் 25.10.2014இல் தினமணி நாளிதழில் வெளியான செய்தியை மேற்கோள் காட்டி அவர் இயற்கையெய்திய செய்தியை இணைத்திருந்தார். அவருடைய புகைப்படமும் பிறிதொரு விதியின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

தினமணி நாளிதழில் அவர் எழுதிய தொடரைப் பற்றி அவ்வப்போது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டேன். அப்போது நான் கூறிய சில தகவல்களை கூடுதல் தகவல்கள் என்று கூறி மனம் மகிழ்ந்தார். அவருடைய இவ்வாறான மற்றவர்களின் கருத்தைக் கூர்ந்து கேட்டு, ஏற்கும் பழக்கம் என்னை அதிசயிக்கவைத்தது.

தஞ்சாவூர், தென்னகப் பண்பாட்டு மையத்திற்கு ஒரு விழாவிற்காக வந்திருந்த அவரைக் காணச் சென்றேன். நிகழ்வு ஆரம்பிக்கும் முன்பாக அவர் என்னை அவ்விடத்தைச் சுற்றி அழைத்துச்சென்று அங்குள்ள சிற்பங்களின் பெருமைகளை எடுத்துக்கூறினார். 

தி இந்து நாளிதழின் சகோதர இதழான ப்ரண்ட்லைன் இதழை அவ்வப்போது வடிவமைப்பு மாற்றம் செய்வார்கள். ஒரு முறை அவ்வாறு மாற்றம் பெற்றபோது சத்யஜித்ரே இருந்தால் இந்த வடிவமைப்பை வரவேற்றிருப்பார் என்ற குறிப்பு அவ்விதழில் இடம்பெற்றிருந்தது. அவ்வாறே தற்போது தேனுகா இருந்திருந்தால் என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலின் வடிவமைப்பைப் பாராட்டியிருப்பார். அவருடைய கலை ரசனை அத்தகையது.

இத்தகு புகழ் பெற்ற கலைஞரின் நினைவை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வது நம் அனைவரின் கடமை."

ஒளிப்படம் : நிற்போர்: (இ-வ) அயூப்கான், கோபாலகிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, சூரியசந்திரன், மோகனகிருஷ்ணன், எம்.எஸ்.பாலு, ஆடலரசன், ரமேஷ்பாபு, ........,ராதாகிருஷ்ணன்
அமர்ந்திருப்போர்: (இ-வ) பா.ஜம்புலிங்கம், பாலுஜி, மோகன்

கழகம் வெளியிடும் மாத இதழ் பாலுஜியின் கவிதையுடன், தேனுகா சிறப்பிதழாக அன்னாரை நினைவுகூரும் வகையில் சிறப்பாக அமைந்திருந்தது. அவ்விதழ் மேடையில் வெளியிடப்பட்டதோடு, நிகழ்விற்கு வந்திருந்த பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டன. 

முன்னதாக தேனுகா நினைவாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப்பட்டன.

திரு பாலுஜி அவர்களுக்கும், நண்பர்களுக்கும்  நன்றி கூறிவிட்டு அவரைப் பற்றிய எண்ணங்களோடு  கிளம்பினேன். அந்த நினைவானது என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்தது. அம்மாமனிதரை மறக்கமுடியுமா?

-----------------------------------------------------------
புகைப்படங்கள் நன்றி : திரு ஆடலரசன், 
திரு அயூப்கான்/களஞ்சியம் இதழ்
-----------------------------------------------------------

தொடர்புடைய பதிவுகள்

28.10.2025இல் மேம்படுத்தப்பட்டது.

03 October 2023

விக்கிப்பீடியா 20 ஆண்டு நிறைவு : தஞ்சைக்கூடல்

தமிழ் விக்கிப்பீடியா தொடங்கி செப்டம்பர் மாதம் 20 ஆண்டுகள் நிறைவுற்று 21ஆம் ஆண்டு துவங்குவதைக் குறிக்கும் விழா தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 23-24.9.2023இல் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுகளை திரு மா.செல்வ சிவகுருநாதனும் திரு பி. மாரியப்பனும்  (சத்திரத்தான்) ஒருங்கிணைத்தனர்.


முதல் நாளன்று (23.09.2023) விக்கிப்பீடியாவின் சிஐஎஸ்-ஏ2கே அமைப்பும், தமிழ்ப் பல்கலைக்கழக அறிவியல் தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையும் இணைந்து நடத்திய கல்வியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சியைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்  வி. திருவள்ளுவன் துவக்கிவைத்து தலைமையுரை ஆற்றினார். பதிவாளர் (பொ) முனைவர் சி. தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார். வளர்தமிழ் புலமுதன்மையர் முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன் முன்னிலை வகிக்க, நோக்கவுரையினை திருவாரூர் கருவூல கூடுதல் அலுவலர் திரு கி. மூர்த்தி நிகழ்த்தினார். அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. இந்து வரவேற்புரையாற்ற விக்கிபீடியா நிர்வாகி ஸ்ரீபாலசுப்ரமணியன் நன்றியுரையாற்றினார். 

துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றல். (உடன் இடமிருந்து : விக்கிப்பீடியர் பி.மாரியப்பன் (சத்திரத்தான்), விக்கிப்பீடியர் ஸ்ரீபாலசுப்ரமணியன், பதிவாளர் (பொ) சி.தியாகராஜன், வளர்தமிழ்புல முதன்மையர் இரா.குறிஞ்சிவேந்தன், விக்கிப்பீடியர் கி.மூர்த்தி, அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறைப் பேராசிரியர் இரா.இந்து)

மேம்பாட்டுப்பயிற்சியின்போது பதிவு செய்த கல்லூரி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியாவில் பயனராகப் பதிந்து, புதிய கட்டுரைகளை எழுதுவது தொடர்பான பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த 75க்கும் மேற்பட்ட கல்லூரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் இதில் பங்கேற்று, புதிய பயனராகப் பதியும் முறையை அறிந்துகொண்டனர். அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் இல்லாத இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட துறைகளைச்சார்ந்த கட்டுரைகளைப் புதிதாகத் தொகுத்தனர். முன்னரே இருக்கும் கட்டுரைகளை மேம்படுத்தினர். ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள கட்டுரையை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடங்குவதற்கான உத்திகளும் அவர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டன. அதற்கு முன்பாக ஒவ்வொருவரும் தம் பெயரில் பயனர் கணக்கினைத் தொடங்கினர். அவ்வாறாகத் தொடங்கப்படும் கணக்கில் பதியப்படும்போது ஒவ்வொருவரின் பங்களிப்பும் அறியவரும் என்றும், அதனால் அந்த முறையிலேயே தொடர வேண்டும் என்றும் அவர்களுக்குப் பயிற்றுநர்கள் வலியுறுத்தினர். விக்கிப்பீடியாவில் எழுதுவது மிகவும் எளிது, மிகவும் அணுக்கமாக விக்கிப்பீடியாவை அணுகலாம், எழுதலாம் என்பதானது பயிற்சியாளர்களுக்குப் பயிற்றுவிக்கப்பட்டது. ஒவ்வொருவரிடமும் தாமும் அதிகமாகப் பங்களிக்க வேண்டும் என்ற ஓர் அவா இருந்ததைக் காணமுடிந்தது. விக்கிப்பீடியாவைப் பற்றியும், பிற திட்டங்களான விக்சனரி, விக்கிமூலம், விக்கி பொதுவகம், விக்கி நூல்களைப் பற்றியும் பயிற்றுனர்கள் சுருக்கமாக அறிமுகம் தந்தனர்.    

தமிழ் விக்கிப்பீடியா பயிற்றுநர்களாக பார்வதிஸ்ரீ, பா.ஜம்புலிங்கம், வெ.வசந்தலட்சுமி, தகவலுழவன், மா.செல்வகுருநாதன், ஞா.ஸ்ரீதர், பி.மாரியப்பன் ஆகியோர் செயல்பட்டனர். 

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட பதிவாளர் (பொ), அறிவியல் துறைத்தலைவர், விக்கிப்பீடியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்

முதல் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியா பயனர்கள்

விழாவின் இரண்டாம் நாளன்று (24.9.2023) நடைபெற்ற பயனர்கள் கூடல் நிகழ்வில் வரவேற்புரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றேன். சுருக்கமாக தஞ்சாவூரைப் பற்றியும், விக்கிப்பீடியாவில் என்னுடைய அனுபவத்தையும் பேசினேன். இதே மேடையில் தமிழ்ப் பல்கலைக்கழகப் பணியிலிருந்து ஏப்ரல் 2017இல் பணி நிறைவு பெற்றதையும் உரையில் குறிப்பிட்டேன்.
இரண்டாம் நாள் நிகழ்வில் வரவேற்புரை 

குறிப்பிடத்தக்க பணியாற்றிய பங்களிப்பாளர்கள் என்ற வகையில் மூன்று பிரிவில் ஆறு பயனர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.  அந்த வகையில் திரு மா.செல்வசிவகுருநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்தேன். இவ்வாறான விருதுகள் வளர்ந்து வரும் விக்கிப்பீடியர்களுக்கும்,  ஆர்வமாக செயலாற்றும் விக்கிப்பீடியர்களுக்கும் ஓர் உந்துதலாக இருப்பதோடு, பிற விக்கிப்பீடியர்கள் ஆர்வமாகப் பங்களிக்க உதவும் என்று நம்புகிறேன். 
 
விருது பெற்ற பயனர்கள்:
செயல்நயம் மிக்கவர் 
பார்வதிஸ்ரீ, நீச்சல்காரன், செல்வசிவகுருநாதன்
5000+ கட்டுரை எழுதியவர்
ஸ்ரீபாலசுப்ரமணியன், சத்திரத்தான்
அறிமுகப்பயனர்
ஷா.பத்ருநிஷா  
மா.செல்வசிவகுருநாதனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், கி.மூர்த்தி, மா.செல்வசிவகுருநாதன், பா.ஜம்புலிங்கம்

தொடர்ந்து சரஸ்வதி மஹால் நூலகப் பண்டிதர் முனைவர் மணி.மாறன் இலக்கியம், வரலாறு, தொல்லியல் நோக்கில் தஞ்சாவூரைப் பற்றிய ஒரு பறவைப்பார்வையை எடுத்துரைத்தார். 
மணி.மாறனுக்கு நினைவுப்பரிசு வழங்கல்
(இடமிருந்து) சத்திரத்தான், தேனி.மு.சுப்பிரமணி, மணி.மாறன், பா.ஜம்புலிங்கம்
தமிழகம் முழுவதிலுமிருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற தன்னார்வப் பயனர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு, தமிழ் விக்கிப்பீடியாவின் 20 ஆண்டு கால வளர்ச்சி, கட்டுரைப் பதிவில் முன்னேற்றம், நெறிமுறைகள், தொழில்நுட்ப மேம்பாடு, அடுத்தகட்ட நகர்வு, கட்டுரைகளின் எண்ணிக்கைகளை அதிகமாக்க மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சி உள்ளிட்டவற்றைப் பற்றி விவாதித்தனர்.

அவர்களுடைய பேச்சு, இன்னும் எழுதவேண்டும் என்ற ஒரு உத்வேகத்தைத் தந்தது. கேட்கப்பட்ட கேள்விகளுக்கும், ஐயங்களுக்கும் அவர்கள் மறுமொழி தந்தனர். அப்போது, ஒவ்வொரு நாளும் கற்கிறோம் என்பதைப் போல பல புதிய செய்திகளையும், உத்திகளையும்  கற்றேன். 
விக்கிப்பீடியாவில் பங்களிக்கின்ற முதுகலை மாணவர்களுடன் பா.ஜம்புலிங்கம்

மதியம்  நடைபெற்ற கலைப்பயணத்தில் தஞ்சாவூரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களான அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மஹால் நூலகம், கலைக்கூடம், தர்பால் ஹால் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டனர். போதிய நேரமின்மையைப் பொருட்படுத்தாது அவர்கள் ஆர்வமாக அனைத்து இடங்களையும் பார்வையிட்டனர். 




நிகழ்வின் செய்திகள் ஊடகங்களில் இடம் பெற்றன. துணைவேந்தரவர்களின் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 28 பிப்ரவரி 2024இல் உலகத்தமிழ் விக்கிப்பீடியா மாநாடு என்ற அறிவிப்பானது விக்கிப்பீடியர்களையும், தமிழின் மேன்மைக்காகப் பாடுபடுவோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அடுத்த இலக்கு நோக்கி நகர இந்த அறிவிப்பானது ஓர் உந்துகோலாக அமைந்தது.
இரண்டாம் நாள் நிகழ்வில் கலந்துகொண்ட விக்கிப்பீடியர்கள்
சுமார் 35 ஆண்டுகளாக நான் பணியாற்றிய, சுமார் 25 ஆண்டுகளாக ஆய்வினை மேற்கொண்ட தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தற்போது முதுகலைப் பயிலும் மாணவர்களுடன் உரையாடியது ஒரு மறக்கமுடியாத அனுபவம். இம்மாணவர்கள் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகின்றனர் என்பது பாராட்டப்படவேண்டியதாகும்.  

தி இந்து (ஆங்கிலம்), 23 செப்டம்பர் 2023


தினமணி, 24 செப்டம்பர் 2023


இந்து தமிழ் திசை, 24 செப்டம்பர் 2023

தினமலர், 25 செப்டம்பர் 2023

தினத்தந்தி, 25 செப்டம்பர் 2023


விழா அழைப்பிதழ்
 
இந்து தமிழ் திசை, 12 அக்டோபர் 2023


தினமணி, 12 அக்டோபர் 2023, ப.8


இதற்கு முன்னர் மதுரை, ஆனைக்கட்டி போன்ற இடங்களில் விக்கிப்பீடியா தொடர்பான கூடல்களில் கலந்துகொண்டபோதிலும் இதில் கலந்துகொண்டது நினைவில் நிற்கும் அனுபவமாகும். நூல் ஆய்வுப்பணி காரணமாக முழுமையாக செயல்பட முடியாவிட்டாலும், தொடர்ந்து விக்கிப்பீடியாவில் நான் எழுதி வருகிறேன். மூத்த விக்கிப்பீடியர்களின் பேச்சுகளும், வளர்ந்து வருகின்ற இளைய தலைமுறையினரின் ஆர்வமும் விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது. நம்மால் முடிந்த வரையில புதிய கட்டுரைகளை எழுதுவோம், அதிலுள்ள கட்டுரைகளை மேம்படுத்துவோம்.  இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களுடன் 1.57 லட்சம் கட்டுரைகளுடன் இந்தியாவின் மூன்றாவது பெரிய மொழி விக்கிப்பீடியாவான தமிழ் விக்கிப்பீடியாவினை அடுத்த இலக்கிற்கு முன்னோக்கி எடுத்துச்செல்ல ஒருமித்துப் பயணிப்போம். தமிழ் விக்கிப்பீடியாவினை முதன்மை இடத்திற்குக் கொணர நாம் அனைவரும் ஒன்று சேருவோம், வாருங்கள். 

விக்கிமேனியா, மதுரை, 14 ஆகஸ்டு 2022


விக்கிப்பீடியா வேங்கைத்திட்டம் 2.0 பயிற்சிப்பட்டறை, ஆனைக்கட்டி, 26-28 ஜனவரி 2023


நன்றி : நாளிதழ்கள், படங்களைப் பகிர்ந்தவிக்கிப்பீடியர்கள், நண்பர்கள்

4 ஜூலை 2024இல் மேம்படுத்தப்பட்டது.