08 September 2018

அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018

ஆகஸ்டு 2018இல் அயலகச் செய்தியில் எக்ஸ்பிரஸ், நியூயார்க் டைம்ஸ், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த செய்திகளைக் காண்போம். இந்த மாதம் வெளியானவற்றில் பெரும்பாலானவை டெய்லி மெயிலில் வெளிவந்தவையாகும். இவற்றில் மாலினாங் என்ற கிராமம் பசுமையைக் காப்பதைப் பற்றிய செய்தியும், ஜபல்பூரில் இரண்டு அடி உயரமுள்ள பூசாரி தொடர்பான செய்தியும் இந்தியா தொடர்பானவையாகும். 

கடும் மழையின் காரணமாகவும், கட்டுமானப்பணிகளின் காரணமாகவும், சீனப்பெருஞ்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. சீனாவின் வட பகுதியில் சான்சியில் தாய் மாவட்டத்தில் (Dai County in Shanxi Province) பெய்த மழையின் காரணமாக சுவரின் பகுதி் இடிந்துள்ளது. சுற்றுலா அலுவலர்கள் அதனை சீர்செய்துகொண்டிருப்பதாகவும், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சீனா பல ஆண்டுகளாக குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதற்கு அதிகமாக தடை விதித்திருந்தது. 1984இல் கிராமப்புறத்தைச் சார்ந்த பெற்றோர்களின் முதல் குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் அவர்கள் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதித்தது. சிறுபான்மையினத்தைப் பொறுத்தவரை இதற்கு விதிவிலக்கு இருந்தது. வயதானோர்களின் எண்ணிக்கை அதிகமாகிவருவதை அறிந்த சீன அரசு, ஒரே குழந்தையைக் கொண்டுள்ள பெற்றோர்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள அனுமதித்தது. இந்த வரையறையை இரண்டாண்டு கழித்து, 1 ஜனவரி 2016 முதல் அனைவருக்கும் உயர்த்தியது. ஒரு குழந்தைக் கொள்கையை சீனா தளர்த்தி இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சீன அரசு அனுமதித்த போதிலும் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள பெற்றோர் விரும்பாததால் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வருவதாக அரசு கூறுகிறது.

இந்தியாவின் பெரிய நகரங்களான டில்லி, மும்பை, கொல்கத்தா போன்றவை கழிவுகளின் பிரச்னையால் பொலிவு இழந்துகொண்டிருக்கும் நிலையில் வடகிழக்கு இந்தியாவிலுள்ள மாலினாங் (Mawlynnong) என்ற கிராமம் அழகான பசுமையினைக் கொண்டும், சுத்தமான பாரம்பரியத்தைக் கடைபிடித்தும் அனைவரையும் ஈர்த்துள்ளது. 2015இல் தன்னுடைய வானொலி உரையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த அழகான கிராமம் மற்றவர்களுக்கு தூண்டுதலாக இருக்கும் என்றும் இது நம் நாட்டிற்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும் பெருமையுடன் கூறினார். பல ஆண்டுகளாக இந்தக் கிராமம் சுத்தமாக இருத்தலை தன் இலக்காகக் கொண்டுத் திகழ்வதாகவும், அக்கிராம மக்களுக்கு சுத்தமாக இருப்பதைக் கடைபிடிப்பது ஒரு வழக்கமாக ஆகிவிட்டதென்றும் அப்போது அவர் கூறினார். “எங்களுடைய கொள்ளுத்தாத்தா பாட்டியும் அவர்களுடைய பெற்றோரும் சுத்தமான பழக்கங்களைக் கொண்டிருந்தனர். எங்கள் கிராமம் ஒரு நாள் சுற்றுலாவினரைக் கவர்கின்ற இடமாக அமையும் என்று நாங்கள் நினைக்கவில்லை” என்கிறார் புதிய வீடுகளைக் கட்டி வருகின்ற, அந்த கிராமக் கவுன்சிலின் உறுப்பினர். கிராமத்தின் அழகைப் பாதுகாக்க இரண்டு மாடிக்கு மேலுள்ள வீடுகளைக் கட்டக்கூடாது என்றும், அவ்வாறு செய்ய ஆரம்பித்தால் தம் கிராமத்தின் அழகு போய்விடும் என்றும், யாரும் சுற்றுலாவிற்குத் தம் கிராமத்திற்கு வரமாட்டார்கள் என்றும் அவர் கூறுகிறார். இக்கிராமத்தில் அனைவருடைய வீட்டிலும் கழிப்பறை உள்ளது. தூய்மையான பாரதம் என்ற, மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளையொட்டி முன்னெடுக்கப்பட்டுச் செல்கின்ற திட்டத்தின் இலக்கினையொட்டி இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரான்சில் எஜமான விசுவாசத்தை காட்டும் நாயைக் கண்டு அனைவரும் வியந்துள்ளனர். தன் எஜமானரின் பேத்தி கடலில் விளையாடிக்கொண்டிருந்ததைக் கண்ட நாய், அவள் அதிகம் விளையாட ஆரம்பித்தால் ஆபத்தாகப் போய்விடும் என்று எண்ணி அவளுடைய சட்டையை தன் வாயால் கவ்விக் கொண்டுவந்து கரையோரத்தில் விட்டது

சீனாவில், சாலையைக் கடக்க இரு நாய்கள் முயன்றிருக்கின்றன. அப்போது ஒரு நாயின் மீது ஒரு கார் ஏறி அது இறந்துவிட்டது. உயிரற்ற தன் நண்பனின் உடலைக் கண்ட அந்த நாய், அதற்குப் பாதுகாப்பாக அருகிலேயே அமர்ந்திருந்தது. பிராணிகளை நேசிக்கும் பலர் அதனைக் கண்டு துயருற ஆரம்பித்தனர். அதற்கு உதவ ஏன் யாரும் முன்வரவில்லை என்றும், ஓட்டுநர் அந்த சடலத்தை எடுத்துப் புதைத்திருக்கலாம் என்றும், அனைத்து உயிருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும், சில நேரங்களில் மனிதர்களைவிட பிராணிகள் அன்போடும் பொறுப்புணர்வோடும் இருக்கின்றன என்றும் அதனைப் பார்த்து பலர் பேச ஆரம்பித்தனர்.

2 அடி உயரமுள்ள, இந்தியாவில் ஜபல்பூரைச் சேர்ந்த பூசாரியான பரத் திவாரி (Bharat Tiwari, 53) மர்மமான மருத்துவ நிலையால் பாதிக்கப்பட்டு அதனை எதிர்கொண்டு வருகிறார். அதன் காரணமாக ஐந்து வயது முதல் அவருடைய எலும்புகள் வளைந்து, வளராத நிலையில் உள்ளார். மருத்துவர்களால் கணிக்க இயலாத அரிய வகை நோயினால், ஐந்து வயதில் பாதிக்கப்பட்ட அவருக்கு தற்போது வயது 53. உள்ளூரில் அவரை கடவுளின் அவதாரமாகக் கருதுகின்றனர். தோட்டக்கலையில் ஈடுபட்டு உதவுவதாக அவருடைய நண்பர்கள் கூறுகின்றார்கள். "பல கிராமங்களிலிருந்து மக்கள் என்னைப் பார்க்க வருகின்றார்கள், மரியாதை செலுத்துகின்றார்கள். அனைவரும் என்னை மதிக்கின்றார்கள். நான் அவர்களை ஆசீர்வதிக்கிறேன். அவர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருக்கின்றார்கள். சிறு வயதிலிருந்தே நான் இவ்வாறு இருக்கிறேன். எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்கிறார் பரத். "இதுவும் கடவுள் கொடுத்ததே. இதற்காக நான் வருத்தப்படவில்லை. எனக்கு எவ்வித நோயுமில்லை. நான் வருத்தப்படாத நிலையில் எனக்கு அது பிரச்சினையாகத் தோன்றவில்லை. மற்றவர்களைப் போலவே எந்த பிரச்னையும் இன்றி பயணிக்கிறேன். என் அன்றாடப்பணிகளை நானே கவனித்துக்கொள்கிறேன். துணிகளை துவைத்துக்கொள்வது, சந்தைக்குச் செல்வது, தேநீர் போடுவது என்பனவற்றை மற்றவர்களைப் போலவே நானும் செய்துவருகிறேன்" என்கிறார்.

ஒன்பது வயது முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட மாசை (Maasai) இனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கென்ய நாட்டு சிறுவர்கள் பெரியவர்களாக ஆவதை/வயதிற்கு வருவதை (coming of age) அறிவிக்கும் விழா ஐந்து அல்லது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை கென்யாவில் நடத்தப்படுகிறது. அண்மையில் இவ்விழா காசியாடோ வட்டத்தில் (Kajiado County, in the country's Great Rift Valley), நடைபெற்றது. விழாவின்போது அவர்களுடைய முகத்தின்மீதும், உடம்பின்மீதும் வண்ணம் பூசப்படுகிறது.அன்றைய இரவில் அவர்கள் காட்டில் தங்குகின்றனர். ஐந்து ஆண்டுகளில் அவர்கள், தம் இனத்தைக் காக்கின்ற தைரியமான மற்றும் பலமிக்க போராளிகளாகவும் கருதப்படுவர். அவர்களை ஆசீர்வதிக்கும் வகையில் மூத்தோர் அவர்களின்மீது பீரையும், பாலையும் தெளிக்கின்றனர்.

பிறந்து 22 வாரங்களே ஆன, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை கல்லன் பாட்டர் (Cullen Potter) பட்டம் பெற வருவதற்கான பின் புலத்தைப் பார்ப்போமா? பிறக்கும்போது குழந்தையின் சராசரி எடை ஐந்து பவுண்டு எட்டு அவுன்சிலிருந்து எட்டு பவுண்டு 13 அவுன்ஸ் (five pounds, eight ounces and eight pounds, thirteen ounces) எடையுடன் காணப்படுமாம். அலாபாமாவைச் சேர்ந்த என்ற மொல்லி பாட்டர் (Mollie Potter) என்ற பெண்மணிக்கு குழந்தை பிறந்தபோது 13.9 அவுன்ஸ் எடையே இருந்தது. எடை குறைவான அக்குழந்தை உயிருடன் இருப்பதற்கான சாத்தியக்கூறு இரண்டு விழுக்காடுதான் உள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடும்பத்தினர் மன உறுதியை விட்டுக்கொடுக்காமல் அவளுடைய துணைவருடன் மூன்று மாநிலங்களிலுள்ள 16 மருத்துவமனைகளுக்குச் சென்று அக்குழந்தையைக் காப்பாற்றுவதற்கான வழியைத் தேடியுள்ளார். பிறந்தவுடன் குழந்தை பெரும்பாலும் இறந்துவிடும் என்று கணிக்கப்பட்ட நிலையில் அக்குழந்தை 22 வாரங்களாக வளர்ந்துவருவது தாய்க்கு அதிக மகிழ்ச்சியைத் தந்துள்ளது. ஆதலால் அவர் தம் குழந்தை பட்டம் பெறுவதற்காக பட்டம் பெறுகின்ற மேடைக்கு வருவதுபோல ஏற்பாடு செய்திருந்தார். குழந்தை சிகிச்சை பெற்றுவருகின்ற தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து தாய் தன் குழந்தையை மகிழ்ச்சியோடு கூட்டிவருவதைக் கண்டு அனைவரும் வியந்தனர்.பிறந்து, மருத்துவமனையில் 160 நாள்கள் இருந்த அக்குழந்தை தற்போது வீட்டிற்குச் செல்ல தயாராகிவிட்டது. இரண்டு விழுக்காடு எல்லை என்பதை நாங்கள் கடந்துவிட்டோம். அனைத்தும் சரியாக உள்ளது. கடவுள் எங்களைக் காப்பாற்றிவிட்டார் என்று பெருமையுடன் கூறுகிறார் தாய். சிக்கலான நிலையைத் தாண்டிய அக் குழந்தையின் தற்போதைய எடைஐந்து பவுண்டு எட்டு அவுன்சாகும். இந்த அதிசயக்குழந்தைக்காகவே அவர் இவ்வாறாக போலி பட்டமளிப்பு நிகழ்வினை (faux graduation ceremony) நடத்தியுள்ளார்.

நன்றி : டெய்லி மெயில், நியூயார்க் டைம்ஸ், எக்ஸ்பிரஸ்

9 comments:

  1. தங்களின் அயலக வாசிப்பின் பயனாக எங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு தகவலும் வியப்பைத் தருகின்றன ஐயா.
    அதிலும் குறிப்பாக நாய் குறித்தான இரண்டு செய்திகளுமே மனதை நெகிழச் செய்கின்றன
    நன்றி

    ReplyDelete
  2. தகவல்கள் எல்லாமே ஆச்சர்யமளிக்கிறது பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. தகவல் தொகுப்பு அருமை. வாசிப்பு எப்போதுமே நம்மை வளப்படுத்திக்கொண்டே இருக்கும். தொடருங்கள், தொடர்வோம்.

    உங்கள் பதிவு எங்கள் தளத்தில்...

    Dr B Jambulingam | அயலக வாசிப்பு : ஆகஸ்டு 2018
    https://sigaram6.blogspot.com/2018/09/dr-b-jambulingam-2018.html
    #செய்திகள் #உலகம் #பத்திரிகை #வாசிப்பு #அனுபவம் #வலைத்தளம் #தமிழ் #பகிர்வு #எழுத்து #உலகநடப்பு #நிகழ்வுகள் #சிகரம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தளத்தில் பகிர்ந்தமை அறிந்து மகிழ்ச்சி, நன்றி.

      Delete
  4. ஐந்தறிவு உள்ள ஜீவன்களுக்கு தான் எத்தனை அறிவு...!?

    ReplyDelete
  5. வியப்பூட்டும் தகவல்கள். அயலக வாசிப்பின் மூலம் நாங்களும் பல விஷயங்கள் தெரிந்து கொள்கிறோம். நன்றி.

    ReplyDelete
  6. சுவாரஸ்யமான, சுவையான விஷயங்கள். உங்கள் வாசிப்பு எங்களுக்கும் பயனளிக்கிறது.

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே

    தங்களது அயலக வாசிப்பு செய்திகள் சுவையானவையாக இருந்தது. அனைத்தையும் படித்தறிந்தேன். நாய்களின் நன்றி மிக்க செயல்கள் மனதை கவர்ந்தன. மிகவும் நெகிழச் செய்தது. பிறப்பிலேயே குறைபாடுள்ள மனிதரின் தன்னம்பிக்கை பாராட்டப்படக் கூடியவை. மற்றும் அனைத்துச் செய்திகளுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. உங்களின் மூலம் பல செய்திகள் அறிகிறோம் ஐயா...

    ReplyDelete