20 October 2018

மனதில் நிற்கும் இல்ல நவராத்திரி

          என் பதிவில் புகைப்படம் இல்லாமல் வருகின்ற பதிவு இதுவாகத் தானிருக்கும் என நினைக்கின்றேன். இப்பதிவில் உள்ளவை நினைவாக  மட்டுமே உள்ளபடியால் உரிய புகைப்படங்களை இணைக்க முடியா நிலை.
நினைவு தெரிந்த நாள் முதல் கொலு என்றால் கும்பகோணத்தில் எங்கள் வீட்டில் நாங்கள் வைத்த கொலுவே நினைவிற்கு வரும். குடும்ப சூழல் காரணமாக கும்பகோணத்தைவிட்டு தஞ்சாவூர் வந்த பின்னர் அந்த அழகினை ரசிக்கும் வாய்ப்பினை இழந்தேன். கடந்த பதிவில் கோயில் கொலுவினைப் பார்க்கச் சென்று பார்த்ததைப்பகிர்ந்திருந்தேன். இப்பதிவில் நாங்கள் வீட்டில் அப்போது கொலு வைத்த அனுபவத்தைக் காண்போம்.  
ஒவ்வோராண்டும் கொலுவினை எடுத்து வெளியே வைப்பதும், பின்னர் அதனை பாதுகாப்பதும் மிகவும் சிரமமான காரியமாகும். கும்பகோணம் சம்பிரதி வைத்தியநாதய்யர் தெருவில் நாங்கள் முன்பு வசித்த எங்கள் வீட்டில் ஐந்து  பெரிய மரப்பெட்டிகளில் கொலு பொம்மைகளை வைத்திருப்பார்கள். ஒவ்வொரு பொம்மையையும் பேப்பரைச் சுற்றி இடையே வைக்கோல் போட்டு ஒன்றோடொன்று உரசாமல் பாதுகாப்பாக வைத்திருப்போம். கீழிருந்து மேலாக அடுத்தடுத்த பெட்டிகள் சிறிதாக இருந்ததால் ஒன்றின் பாரம் மற்றொன்றின்மீது இறங்காமல் பெட்டிகள் இருக்கும். நவராத்திரியின் முதல் நாள் பெட்டிகளைத் தனித்தனியாக எடுத்து வெளியே தூசி தட்டி வைப்போம். வீட்டிலுள்ள அனைவருமே பெட்டிகளை இறக்குவோம். ஒவ்வொரு பொம்மையாக அது உள்ளே வைக்கப்பட்டிருக்கும் அமைப்பில் முனை உடையாதவாறும், கீறல் எதுவும் விழாத வகையிலும் எடுப்போம். ஒவ்வொரு ஆண்டும் புதிய கொலு பொம்மைகள் வாங்குவோம். எந்த பொம்மை கொலுவில் இல்லையோ அதனை வாங்குவோம். சிலர் அன்பளிப்பாக வாங்கித் தருவதும் உண்டு. அவ்வாறு வாங்கிய வகையில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகமாயின. 
பொம்மைகளை வெளியே எடுத்தபின் அகல பொம்மைகள், உயர பொம்மைகள், சிறிய பொம்மைகள் என்று சிறிய கூடத்தில் தரம் பிரிப்போம்.   பெரிய கூடத்தில் அமைப்பதற்காக அந்த பெட்டிகளை இரு புறமும் உயரத்திற்கேற்றவாறு அமைப்போம். பெட்டிகள் போதாத நிலையில் வேறு பொருள்களை வைத்து அடுத்தடுத்து படிகளை அமைப்போம். பின்னர் அதன்மேல் துணியை மேலிருந்து விரிப்போம்.  ஏழு படிகள் இரு தூண்களுக்கிடையே கம்பீரமாக அமைக்கப்படும். அது ஆடாதவாறு இருக்க ஆங்காங்கே கட்டைகளை இறுக்கமாக வைக்கப்படும்.
முதல் படியிலிருந்து ஒவ்வொரு படியாக பொம்மைகள் அடுக்கப்படும். வாயில் கை விரலை வைத்து அமர்ந்த நிலையிலுள்ள கண்ணன், அனந்த சயனத்தில் பெருமாள், ஆனந்தத்தாண்டவமாடும் நடராஜப்பெருமான், திருப்பதி ஏழுமலையான் போன்ற பல பெரிய பொம்மைகள் பார்ப்பவர்களின் கண்களை ஈர்த்துவிடும். எங்கள் வீட்டு கொலு பொம்மைகளில் விநாயகர், முருகன், லட்சுமி, சரஸ்வதி, லிங்கத்திருமேனியருகே உமையம்மை, தசாவதாரம், இராமர் பட்டாபிஷேகம், ராஜேஸ்வரி, மதுரை மீனாட்சி, கஜலட்சுமி போன்ற பொம்மைகளும்,  மகாத்மா காந்தி, திருமண நிகழ்வு, செட்டியார், பாவை விளக்கு, புதுமணத்தம்பதிகள் ஊஞ்சலாட்டம், பொய்க்கால் குதிரையாடும் ஆண், பெண் போன்ற பொம்மைகளும் அடங்கும்.  
தொடர்ந்து அகலமான பொம்மைகளை வைத்தால் பார்வையாக இருக்காது என்பதற்காக ஆங்காங்கே உயரமான அல்லது செங்குத்தான பொம்மைகளை வைத்து சரி செய்வோம். படியின் இரு புறங்களிலும் சிப்பாய், கையில் பறவையுடன் நிற்கும் பெண் போன்ற பொம்மைகளை வைப்போம்.  பூங்கா அமைத்தல், மெழுகுவர்த்தி வைத்து படகு விடல்,  வண்ணத்தாள்களால் அந்த இடத்தையே அலங்கரித்தல் என்று குடும்பத்தில் உள்ளோர் அனைவரும்  ஈடுபாட்டோடு செய்வோம்.
பூங்காவிற்காக உள்ள சிறிய மரப்பொம்மைகளை தனியாக சிறிய பெட்டியில் வைப்போம். ஆரம்பத்தில் சிமெண்டிலான படிகளைக் கொண்ட குளம் போன்ற அமைப்பு எங்கள் வீட்டில் இருந்த நினைவு உள்ளது. பின்னர் எவர்சில்வர் தொட்டியிலோ, அலுமினியப் பாத்திரத்தையோ குளமாகப் பயன்படுத்த ஆரம்பித்தோம். 
நவராத்திரி நிறைவுற்றதும் மறுபடியும் அனைத்து கொலு பொம்மைகளையும் அளவுவாரியாக அடுக்கி தாளைச்சுற்றி லாவகமாக வைப்போம். பெரிய பொம்மைகளுக்கு இடையே இடம் வீணாகாமல் இருப்பதற்காக சிறிய பொம்மைகளை நேராகவோ, பக்கவாட்டிலோ, குறுக்குவாட்டிலோ தாளைச் சுற்றி வைப்போம். படித்த நாளிதழ்களின் தாளை நறுக்கி இடையிடையே செருகுவோம். இடிபட்டு உடைந்துவிடக்கூடாது என்பதற்காக ஆங்காங்கே வைக்கோலையும் செருகுவோம்.  உடையாமல், மடங்காமல், வளையாமல் பொம்மைகளை அனைத்துப் பெட்டியிலும் வைத்து பணி நிறைவடைந்ததும் மகிழ்ச்சியுற்று, அடுத்த வருட நவராத்திரிக்காகக் காத்திருக்க ஆரம்பிப்போம்.
அவ்வாறான காத்திருப்பு தற்போது இல்லாவிட்டாலும் நினைவுகள் மட்டும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.

13 comments:

  1. இளமை நினைவுகள்... இனிய நினைவுகள்.

    ReplyDelete
  2. நீங்கள் சொன்னது உண்மைதான்.
    நினைவுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.
    உங்கள் நினைவுகள் அருமை.

    அந்த காலத்தில் வீட்டில் உள்ள பெட்டிகள், புத்தகங்களில் படிகள் அமைப்போம். ரேடிமேட் படி கிடையாது எங்கள் வீட்டிலும். அப்புறம் தான் படி வாங்கினோம்,அதை மாட்டவும் பெரிய சிரமம் ஏற்படவே அப்படியே அலமாரியில் வைத்து விட்டோம்.
    எடுத்து கட்டி செய்ய ஆள் பலம் வேண்டும்.

    ReplyDelete
  3. நினைவுகள் இனிமையானவை

    ReplyDelete
  4. தங்களது நினைவூட்டல்களோடு நானும் கலந்து வெளியேறியது போன்ற உணர்வு.

    ReplyDelete
  5. உங்கள் பதிவைப் படித்ததும் நானும் அழகான கொலு அமைத்தேன்- என் நெஞ்சகத்தில்.

    ReplyDelete
  6. கொலு சுமந்த சந்தோஷம்,/

    ReplyDelete
  7. எல்லோருமே கொலு அமைந்திருக்கும் விதம் பற்றி, நவராத்திரி பற்றி எழுதுவார்கள். நீங்கள் வித்தியாசமாக, கொலு பொம்மைகளை நுணுக்க‌மாக பாதுகாத்த விதம், படி அமைத்த விதம், திரும்ப அவற்றை சீராக அடுக்கிய விதம் என்று மிக அழகாக, சிறப்பாக எழுதியிருக்கிறீர்க்ள்!

    ReplyDelete
  8. கடந்த கால நினைவுகள் பல சமயம் இனிமையானவை. இந்தக் கொலுவைப்பாதுகாப்பதுதானே பெரிய வேலை என கோமதி அக்காவிடம் கேட்டிருந்தேன் நான்.. அதையே நீங்களும் இங்கு தெளிவு படுத்தியிருக்கிறீங்க..

    ஆனா இப்படித்தான் கிரிஸ்மஸ் ட்ரீயையும்.. அதை அலங்கரிக்கும் பொருட்களையும் இங்குள்ளவர்களும்.. ஏன் நாங்களும் பாது காக்கிறோம் ஹா ஹா ஹா.

    ReplyDelete
  9. நவராத்திரி நினைவுகள் அருமை :)

    ReplyDelete
  10. கொலு ஏற்பாடுகள் கண் முன் விரிந்தன

    ReplyDelete
  11. நல்ல நினைவலைகள். என் பிறந்த வீட்டிலும் படிகள் கட்ட அந்தக்காலத்து பிஸ்கட் டப்பாக்கள், செங்கல்கள் போன்றவற்றை முட்டுக்கொடுத்துப் பயன்படுத்துவார்கள். நாங்க கல்யாணம் ஆகி முதல் கொலு வைக்கையில் மரப்படிகள் செய்தோம். பல வருடங்கள் பயன்பட்டன. பின்னர் இரும்புப் படிகள் வாங்கிப் பின் அதுவும் கொடுத்தாச்சு. பின்னர் டேபிளில் வைத்தோம். பொம்மைகள் தானமாய்க் கொடுத்தாச்சு. இப்போதும் இருக்கும் பொம்மைகளை எடுத்து வைப்பதோடு சரி.

    ReplyDelete