15 December 2018

அயலக வாசிப்பு : நவம்பர் 2018

நவம்பர் 2018இல் அயலகச் செய்தியில் கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சிஎன்என், சன், அப்சர்வர் டான், டெய்லி மெயில் ஆகியவற்றில் வெளிவந்த சில செய்திகளையும், முதல் உலகப்போர் நிறைவுற்ற நாளன்று The Hindu நாளிதழில் 100 ஆண்டுகளுக்கு முன் வெளியான செய்தியினையும் காண்போம்.

2000இல் வெளியான, சிறந்த திரைப்படத்திற்கான விருது உள்ளிட்ட ஐந்து ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற, கிளாடியேட்டர் திரைப்படம் பார்த்துள்ளோம். நினைவிருக்கிறதா? அதன் தொடர்ச்சியாக 2ஆம் பகுதி விரைவில் வெளிவரவுள்ளது.


ஒருமுறைப் பயன்பாடு என்ற பொருளைக் கொண்ட ‘Single-use’ என்ற சொல் இந்த ஆண்டின் (2018) சிறந்த சொல்லாக காலின்ஸ் அகராதியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நெகிழியிடம் நாம் அடிமையானதையும், சிறிய பை தொடங்கி தேக்கரண்டி வரை நாம் பயன்படுத்துகின்ற, பிளாடிக்கால் ஆன பொருள்கள் இப்போது உலகை ஆக்கிரமித்துள்ளதையும் இது உணர்த்துகிறது.

உலகில் முதன்முதலாக செயற்கை அறிதிறன் செய்தி வாசிப்பாளரை (AI news anchor) சீனாவின் செய்தி நிறுவனமான சின்குவா (Xinhua) இந்த வாரம் அறிமுகப்படுத்தியுள்ளது. சோர்வறியா அந்த வாசிப்பாளரின் குரல், முக உணர்வு வெளிப்பாடு போன்றவை வழக்கான செய்தி வாசிப்பாளரிடம் காணப்படுவதைப் போலவே இருக்கும். அவருக்கு கியூ காவோ (Qiu Hao) என்று பெயரிடப்பட்டுள்ளது. சில நேரங்களில் தலையை லேசாக ஆட்டியபடியும், கண் சிமிட்டிய படியும், கண் புருவங்களை உயர்த்திய நிலையிலும் அவர் செய்தி வாசித்தபோது பார்வையாளர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வருடத்தின் 365 நாளும் நான் உங்களுடன் இருப்பேன். என்னை நீங்கள் வரையறையின்றி நகல் எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு செய்தியினை அளிப்பதற்காக நான் பல வேறுபட்ட தளங்களில் இருப்பேன்” என்று அவர் கூறுகிறார்.

வரலாற்று சிறப்புமிக்க முதல் உலகப்போர் நிறுத்த ஒப்பந்தம் 11 நவம்பர் 1918இல் காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர். அதன் நூற்றாண்டு நினைவு நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. லண்டன், பிரான்ஸ், பெல்ஜியம், ஆஸ்திரிரேலியா, இந்தியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நடைபெற்ற முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நினைவு நிகழ்வுகள். போர் முடிந்து 100 ஆண்டுகள் நிறைவு அமைதியையே எங்கும் வெளிப்படுத்தியது.

ஜெர்மனி சரணடைந்தது என்ற தலைப்பில் 12 நவம்பர் 1918 நாளிட்ட The Hindu இதழில் முதல் உலகப்போர் நிறைவுற்றதைக் குறிக்கும் செய்தி இன்றைய இதழில் (The Hindu, OpEd, 12 November 2018) வெளிவந்துள்ளது. "ஜெர்மனி சரணடைந்தது மற்றும் தொடர் நிகழ்வுகளையொட்டி எங்களது அலுவலகத்திற்கு நாளை விடுமுறை. ஆதலால் நாளை இதழ் வெளிவராது" என்ற அறிவிப்புடன் "அமைதியின் உதயம்" என்ற தலைப்பில் தலையங்கம் அன்று வெளிவந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செரினா வில்லியம்ஸ் எதிர்கொள்ளும் ஒற்றை மேற்கோள் சிக்கல் என்னவென்று பார்ப்போம். GQ எனப்படுகின்ற ஆண்களுக்கான பேஷன் இதழ் மேலட்டையில் இந்த ஆண்டின் சிறந்த ஆண்கள் என்று மூவரையும், வில்லியம்சையும் வெளியிடவுள்ளது. செரினா வில்லியம்ஸ் மிகச்சிறந்த டென்னிஸ் வீராங்கனை ஆவார். அவருடைய நல்ல திடகாத்திர உடலமைப்பு கடந்த ஆண்டு அவரை ஆண் என்று அழைக்கவைத்தது. மேலும் அவர் ஆண்களுக்கான விளையாட்டுகளை விளையாடுகிறார் என்றும் அப்போது கூறப்பட்டது. இவ்விதழ் அவரை 'Woman' of the year என்று கூறியுள்ளது Woman என்ற சொல் ஒற்றை மேற்கோளில் காட்டப்பட்டதே சிக்கலின் ஆரம்பம். இந்த ஒற்றை மேற்கோளானது அவருடைய பாலினத்தையும், அவருடைய பெண்மைத்தன்மையையும் குறை கூறுவதாக உள்ளதாக அவருடைய ரசிகர்கள் கூறுகிறார்கள். இது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ஸ்போர்டு அகராதி 2018இன் சிறந்த சொல்லாக Toxic (தமிழில் நச்சு) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. எப்போதும் போல் அல்லாமல் பலவகையான பொருள்கள், சூழல்கள், நிகழ்வுகள் அடிப்படையில் இந்த ஆண்டு இந்த சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. (Single use என்ற சொல்லை காலின்ஸ் அகராதி 2018இன் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுத்திருந்தது.)

உலகிலேயே உயரமான பெண், கிழக்கு சீனாவில் ஷாங்டன் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கின்ற சீன மாணவியான சாங் சியூ (11) என்று ஓர் ஐயத்தை எழுப்புகிறது டெய்லி மெயில். அவருடைய உயரம் 6 அடி 10 அங்குலம் (2.1 மீ) ஆகும். அவர் தேசிய கூடைப்பந்து சங்க விளையாட்டு வீரர்களின் சராசரி அளவான 6 அடி 7 அங்குலத்தைவிட சற்று உயரமாக உள்ளார். கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, இங்கிலாந்தைச் சேர்ந்த, 6 அடி 2 அங்குலம் உயரமுள்ள ஸோபி ஹாலின்ஸ் (12) கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அவரைவிட உயரமான இவர் கின்னஸ் நிறுவனத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை.கூட்டத்தில் எங்கிருந்தாலும் இவரை எளிதில் கண்டுகொள்ளலாம். கூடைப்பந்து விளையாட்டு வீராங்கனையாக ஆக வேண்டுமென்பதே இவருடைய விருப்பம். கின்னஸ் சாதனையில் அவர் இடம்பெற அவருடைய குடும்பத்தார் முயற்சி எடுக்கின்றார்களா என்பது இன்னும் தெரியவில்லை. (விரிவான பதிவினை இலக்கை நோக்கும் உயரமான பெண் என்ற தலைப்பில் முன்னர் படித்துள்ளோம்.)

22 நவம்பர் 1963. அந்த எட்டு நொடிகள் உலகை மாற்றிய நொடிகள். லீ கார்வே ஆஸ்வால்ட் ஆறாவது மாடி ஜன்னலிலிருந்து மூன்று முறை சுட, ஒரு குண்டு கென்னடியின் கழுத்தினை ஊடுறுவிச் சென்றது. ரகசியப் பிரிவினைச் சேர்ந்த கிளிண்ட், பின் வந்த காரிலிருந்து வேகமாக வந்து ஜனாதிபதியின் காரை நோக்கி ஓடி வருகிறார். ஜனாதிபதியையும், அவருடைய மனைவி ஜாக்கியையும் மனிதக்கவசமாக இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அவர் சில நொடிகள் தாமதித்து வந்துள்ளார். அவர் நெருங்கி வருவதற்குள் அடுத்த குண்டு கென்னடியின் தலையினைத் துளைத்துச் சென்றது. தற்போது 86 வயதாகும் கிளிண்ட், கென்னடி சுட்டுக்கொல்லப்பட்ட 55ஆம் ஆண்டு நினைவு நாளில் தன் எண்ணங்களைப் பகிர்கிறார். கிளிண்ட் தான் இன்னும் வேகமாக ஓடி வந்திருக்கவேண்டுமோ என்று இன்றும் கூறுகிறார். ஜனாதிபதியின் மரணத்திற்கு தன்னைக் குற்றம் சாட்டிக்கொள்கிறார்.


Dictionary.com தளம் Misinformation என்ற சொல்லை இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகத் தேர்ந்தெடுத்துள்ளது. Disinformation என்பதற்கு பதிலாக Misinformation என்ற சொல் வேண்டுமென்றே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், போலிச்செய்திகளை (Fake news) எதிர்த்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காக Misinformation தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் ஆக்ஸ்போர்டு Toxic என்ற சொல்லையும், காலின்ஸ் Single use என்ற சொல்லையும் தேர்ந்தெடுத்தது நினைவிருக்கலாம்.


பிரான்சில் பெற்றோர்கள் இனி குழந்தைகளை அடிக்க முடியாது. பிரான்சில் 85 விழுக்காடு பெற்றோர்கள், குழந்தைகள் நல்லபடியாக வளர வேண்டும் என்பதற்காக தம் குழந்தைகளை அடிப்பதாகக் கூறுகிறார்கள். இருந்தபோதிலும், பிரெஞ்சு பாராளுமன்றம் பெற்றோர்கள் இனி அவ்வாறாக குழந்தைகளை அடிக்கக்கூடாது என்று கூறியுள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி பெற்றோர் உடல்ரீதியாகவோ, வாய்மொழி வழியாகவோ, உளவியல் அடிப்படையிலோ குழந்தைகளின்மீது எவ்வித செயல்களையும் மேற்கொள்ளக்கூடாது என்கிறது. இவ்வாறாகத் தாக்கப்படுகின்ற குழந்தைகள் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்படுவதாக அறிவியல் ஆய்வுகள் உணர்த்துகின்றன என்று புதிய சட்டத்திற்கு ஆதரவு தருவோர் கூறுகின்றனர்.


-------------------------------------------------------------------------------
சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூவில் இம்மாதப் பதிவு : 
உரையினை யுடியூபில் கேட்க :
-------------------------------------------------------------------------------

12 comments:

  1. எல்லாமே சுவாரஸ்யமான செய்திகள். கென்னடி பற்றிய செய்தி சுவாரசியம். செயற்கை செய்தி அறிவிப்பாளர் பார்க்கப் பார்க்க போரடித்து விடாதோ...

    ReplyDelete
  2. செய்திகளை தொடரந்து படித்தாலும் பல செய்திகள் நம் கண்களில் படாமலே போய்விடுகின்றன....அப்படி விடுபட்ட செய்திகளை அழகாக தொகுத்து வழங்கிய விதம் அருமை

    ReplyDelete
  3. அரிய செய்திகள் தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஒவ்வொரு செய்தியும் அருமை...

    மிகவும் நன்றி ஐயா...

    ReplyDelete
  5. அருமை அய்யா

    ReplyDelete
  6. அருமையான தொகுப்பு நன்றி

    ReplyDelete
  7. அருமை. நன்றி.

    ReplyDelete
  8. முதல் முறையாக உங்களிடம் பேசினேன் ஜம்புலிங்கம் சார். ரொம்ப தெளிவான விளக்கம், guidance. மிக்க நன்றி. இந்த முறை பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை பார்க்கமுடியவில்லை (ஓட்டுனருக்குத் தெரியாததால் கீழ்ப்பழையாறை சிவன் கோவிலுக்குக் கூட்டிச் சென்றார்). இந்த முறை ஐராவதேஸ்வரர் கோவிலையும் அதைத் தொட்டடுத்துள்ள அம்பாள் கோவிலையும் தரிசித்தேன்.

    தஞ்சை பெரிய கோவில் கொடுத்த உணர்வினை எழுத்தில் வடிக்கமுடியாது.

    ReplyDelete
  9. என்ன ஒரு கோஇன்சிடென்ன்ஸ் என்பிறந்த நாளும்/ "Eleventh hour of the eleventh day of the eleventh month" என்றும், 11.11.11 என்றும் கூறுவர். /இந்தமாதிரி நாளமைவதுஅபூர்வம் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ரிபீட் ஆகும்

    ReplyDelete
  10. மிக அருமையான செய்தித் துணுக்குகள். மிகவும் பாதித்தது கென்னடியின் மரணம்.
    சீனாவின் வாசிப்பாளர் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.மிக நன்றி ஐயா.

    ReplyDelete
  11. அருமையான செய்தித் தொகுப்பு. கென்னடியின் மரணம் கொஞ்சம் வேதனைதான். உயரமான பெண் பற்றி முன்பே வந்ததோ...செயற்கை செய்தி அறிவிப்பாளர் வியப்பு!

    அயலகச் செய்திகளைத் தங்கள் மூலம் அறிய முடிகிறது

    கீதா

    ReplyDelete
  12. (Thro email shobanaobg@gmail.com)
    Good selection of information .sir.... interesting.
    Bana Venkatesh

    ReplyDelete