29 December 2018

சான்ஸ் ஃபார்காட்டிகா : நினைவாற்றலைப் பெருக்க புதிய எழுத்துரு

நூல்கள் வாசிப்போருக்கும், தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும் ஒரு இனிய செய்தி. ஆஸ்திரேலியாவில் மெல்போர்னில் உள்ள ஆர்எம்ஐடி பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் வடிவமைப்புப் பிரிவின் ஆய்வாளர்கள் சான்ஸ் ஃபார்காட்டிகா (Sans Forgetica) என்ற ஒரு புதிய ஆங்கில எழுத்துருவினை (font) உருவாக்கியுள்ளனர். வாசகர்கள் மனதில் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளவும், மாணவர்கள் நினைவாற்றலை தக்கவைத்துக்கொள்ளவும் இந்த புதிய எழுத்துரு உதவும் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

புதிய எழுத்துருவினைக் கண்டுபிடிக்க இப்பல்கலைக்கழகம் 400 பல்கலைக்கழக மாணவர்களை வைத்து ஓர் ஆய்வு மேற்கொண்டது. சாதாரண ஏரியல் எழுத்துருவில் 50 விழுக்காட்டினர் நினைவுவைத்துக்கொண்டபோது புதிய எழுத்துருவான சான்ஸ் ஃபார்காட்டிகாட்டிகாவில் 57 விழுக்காட்டினர் நினைவில் வைத்துக்கொண்டிருந்ததை ஆய்வின் முடிவில் காணமுடிந்தது.

இந்த எழுத்துருவினை உருவாக்க ஆறு மாதங்கள் ஆகியுள்ளன. பரிசோதனையின்போது மூன்று வெவ்வேறு வகையான மாதிரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து மெய்ப்பு வாசிப்பு உள்ளிட்ட பல நிலைகளில் இந்த எழுத்துரு சோதிக்கப்படவுள்ளது.

தேர்வு எழுதவுள்ள மாணவர்களை மனதில் வைத்தே இந்த எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அயலக மொழிகளைக் கற்போருக்கும், நினைவாற்றல் இழந்த முதியோருக்கும் இது உதவும்.   இந்த எழுத்துருவானது இடது புறத்தில் ஏழு டிகிரி பின்சாய்ந்த நிலையில், எழுத்துகளுக்கிடையே இடைவெளியுடன் காணப்படுகிறது.  பெரும்பாலான வாசகர்களுக்கு பிற்சாய்வுநிலை அமைப்பிலான எழுத்துரு புதிதாக இருக்கும். ஏனென்றால் இது ஆறுகளைக் காண்பிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. எழுத்துக்களின் ஆரம்பம் வடிவத்தை மனதில் தக்கவைத்துக்கொள்வதற்காக மூளையின் செயல்பாட்டை சற்றே நிதானித்து செயல்படுத்தும் வகையில் உள்ளது. தன்னை சரியான நிலையில் தயார்படுத்திக்கொள்ள மூளை தயாராகும்போது பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற ஏரியல், டைம்ஸ் நியூ ரோமன் எழுத்துருக்களைப் பார்ப்பதைப் போலவே சான்ஸ் ஃபார்காட்டிகா எழுத்துருவையும் பார்க்கும்.

மூளையில் தகவலை ஆழமாகப் பதிய வைக்க இந்த எழுத்துரு உதவும். படிப்பதற்குச் சிரமம் இருப்பது போலத் தெரியும். எழுத்துருவின் வடிவின் அடிப்படையில் படிக்கத் தாமதமாகும்போது இயல்பாக நினைவாற்றல் அதிகமாகிறது.  நினைவைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வேகத்தடுப்பு என்பதானது சேர்க்கப்படுகிறது. வேகத்தடுப்பிற்கும் வாசிக்கப்படும் உரைக்கும் ஒரு சரியான  சம நிலையை இந்த எழுத்துரு சிறப்பாகச் செய்கிறது. அப்போது நினைவுத்திறன் மேம்படுகிறது.

மாணவர்கள் தேர்வுக்குப் படிக்கும்போது உதவுவதைப் போல இந்த எழுத்துரு உதவுகிறது. ஒரு நூலினை இந்த எழுத்துருவில் ஒருவர் படிப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த எழுத்துருவில் ஒவ்வொரு சொல்லையும் வாசிக்க ஒரு வாசகர் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றார். செலவழிக்கப்படுகின்ற அந்த நேரத்தில் மூளையானது தகவலை தகவமைத்துக்கொள்வதற்கு வாய்ப்பு தரப்படுகிறது. எழுதும்போது உரிய வடிவத்தை நிறைவு செய்ய மனம் முயற்சிக்கும்போது வாசிப்பின் வேகம் குறைந்து நினைவாற்றலின் வேகம் அதிகரிக்கிறது. இது மாயமல்ல. முயற்சியின்பாற்பட்ட அறிவியல் ஆகும். அவ்வாறே நாம் குறிப்பெடுக்கும்போது, சில நிமிடங்களுக்கு முன்பாக என்ன எழுதினோம் என்பதை மறந்துவிடுவோம். ஆனால் இந்த எழுத்துருவானது நாம் எழுதும் குறிப்புகளை அதிக நேரம் நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிறது.

இப்போதுதான் முதன்முறையாக குறிப்பிட்ட கொள்கையினைக் கொண்ட வடிவக் கோட்பாட்டோடு உளவியல் கோட்பாடு இணைந்து ஒரு எழுத்துரு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த எழுத்துருவினை sansforgetica.rmit என்ற பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வசதி உள்ளது. வழக்கமாக உள்ள எழுத்துருக்களை எதிர்கொண்டு இந்த புதிய எழுத்துரு வெற்றி பெறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

This line is typed in Sans Forgetica by Dr B Jambulingam 
என்று இந்த எழுத்துருவில் தட்டச்சு செய்தது




துணை நின்றவை

Font of all knowledge? Researchers develop typeface they say can boost memory, The Guardian, 4 Oct 2018

Researchers create new font designed to boost your memory, Washington Post, 5 Oct 2018 

Scientists create new ‘Sans Forgetica’ FONT that promises to boost your memory, Mirror, 5 Oct 2018 

Scientists create a new ‘Sans Foretica’ font they say can could boost your memory, Daily Mail, 4 Oct 2018

14 comments:

  1. புதிய எழுத்துரு. படிக்கக் கஷ்டமாக இருந்தாலும் நினைவில் வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

    தேடித்தேடி புதிய விஷயங்களைத் தரும் உங்களுக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  2. வியப்பாக இருக்கிறது ஐயா
    ஒவ்வொரு எழுத்தும் உடைந்த நிலையில் இருப்பதுபோல் காட்சியளிப்பது, தொடர்ந்து படிக்கும்பொழுது, கண்களுக்கு அயர்ச்சியை உருவாக்குமோ என்ற எண்ணம் எழுகிறது ஐயா

    ReplyDelete
  3. வித்தியாசமாகத்தான் இருக்கிறது. ஆனால் திரு. கரந்தையார் அவர்கள் சொல்வதுபோல் கண்களுக்கு அயர்ச்சி உண்டாகலாம்.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரரே

    வித்தியாசமான எழுத்துருக்கள். தாங்கள் கண்டு பிடித்து எங்களுடன் பகிரும் தகவல்கள், புது மாதிரியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது. நல்லதொரு முயற்சிகளுக்கு பாராட்டுகள். நீங்கள் சொல்வது போல், இந்த எழுத்துரு படிக்கும் போதும் எழுதும் போதும் நீண்ட பொழுதினை எடுத்துக்கொள்ளும் நிலைபாட்டினை உடையது. அதனால் நம் நினைவாற்றலில் தக்க வைத்துக் கொள்ளும் என்பது வியப்பான விஷயந்தான். பகிர்வுக்கு நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  5. என்னவொரு ஆராய்ச்சி....! வியந்தேன்...

    ReplyDelete
  6. புதிய எழுத்துரு ஆராய்ச்சி வியப்பு. நினைவாற்றலைப் பெருக்க என்பதும் நல்ல விஷயம் தான். நீங்கள் பல பல புதிய தகவல்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துவது மிகவும் சிறப்பான விஷயம் பாராட்டுகள் ஐயா.

    எழுத்துரு உங்கள் பெயரி இருக்கும் ஆங்கில எழுத்தான பி என்பது 3 போலத் தெரிகிறதே...

    ReplyDelete
  7. என் ஹெச் எம் மூலம் பெறப்படும் எழுத்துரு மட்டுமே என்னளவில் சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  8. கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்தே எனக்கும் தோன்றியது.

    ReplyDelete
  9. முயற்சி செய்தால் ஓரளவு பயன்படும் என்றே தோன்றுகிறது ஸார் ..படிப்பது சற்று சிரமம்தான்..புதியவிஷயம் ஸார் .நன்றி

    ReplyDelete
  10. உபயோகனமா தகவல். புதிய கண்டுபிடிப்பை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. மிகவும் பயனுள்ள தகவல். இருப்பினும் நண்பர் ஜெயக்குமார் அவர்களின் எண்ணமே எனக்கும் தோன்றுகிறது.

    ReplyDelete
  12. ஒரு திரைப்படத்தில் வரும் உரையாடல்தான் நினைவு வருகிறது: "எப்பிடியெல்லாம் டெவலப்பாயி போய்க்கிட்டிருக்காய்ங்க பாருய்யா அவிய்ங்க!!"

    நம்மூரில் இருக்கிற தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தவே ஆளில்லை. ஆங்கிலத்திலோ எழுத்துருவை வைத்து நினைவாற்றல் வளர்ப்பது வரை வந்து விட்டார்கள். கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது.

    மிகவும் சுவையான அரிய தகவல்! நன்றி ஐயா!

    ReplyDelete
  13. ஒரு எழுத்துரு இத்தனை வலிமையுடையதா? அரிய தகவலுக்கு நன்றி ஐயா..

    ReplyDelete
  14. பல புதிய தகவல்கள்

    ReplyDelete