29 June 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவாசிரியம் : நம்மாழ்வார் (2578-2584)

நம்மாழ்வார் அருளிய திருவாசிரியத்தினை (2578-2584) அண்மையில் நிறைவு செய்தேன். அவற்றில் சில பாடல்களைப் பொருளுடன் காண்போம். 



ஊழிதோறு ஊழி, ஓவாது, வாழிய
என்று, யாம் தொழ, இசையுங்கொல்லோ? யாவகை
உலகமும் யாவரும் இல்லா, மேல் வரும்
பெரும்பாழ்க் காலத்து இரும் பொருட்கு எல்லாம்
அரும் பெறல் தனி வித்து ஒரு தான் ஆகித்
தெய்வ நான்முகக் கொழு முளை ஈன்று,
முக்கண் ஈசனொடு தேவு பல நுதலி,
மூவுலகம் விளைத்த உத்தி
மாயக் கடவுள் மா முதல் அடியே (2581)
மாயங்களை விளைக்க வல்லவனான ஸ்ரீமந்நாராயணன், ஆதிகாரணக் கடவுள் ஆவான். ஒரு காலத்தில் எல்லா உலகங்களும் உயிர்களும் தோன்றாமல் இருந்தன. அப்படிப்பட்ட பெரும்பாழ் எனப்படும் மகாப்பிரளய காலத்தில் எம்பெருமான் கணக்கற்ற ஆத்மாக்களான பொருள்களுக்கெல்லாம் பெறுவதற்குரிய மூவகைக் காரணமும் தானேயாகி நின்றான். உலகைப் படைக்க எண்ணிய அப்பெருமான், பிரம்மாவாகிய ஒரு மூளையைத் தன் உந்தித் தாமரையில் உண்டாக்கினான். அவன் மூலமாகச் சிவன், மற்றும் பல சிறு தெய்வங்களையும் படைத்தான். ஆக இவ்வகையாலே மூன்று உலகங்களையும் படைத்தான். உலகத் தோற்றத்துக்குக் காரணமாக அமைந்த கொப்பூழை உடைய அப்பெருமானின் திருவடிகளையே பற்றி எல்லாக் காலங்களிலும் இடைவிடாமல் பல்லாண்டு பாடி வணங்குவோம். நாம் உய்வு பெற அத்திருவடிகளே மூல காரணம் ஆகும். அவைகளைத் தொழுதபடி வாழிய என்று பாடி வணங்கும் பாக்கியம் நமக்குக் கிட்டுமோ?

நளிர் மதிச் சடையனும், நான்முகக் கடவுளும்,
தளிர் ஒளி இமையவர் தலைவனும், முதலா
யாவகை உலகமும், யாவரும், அகப்பட;
நிலம், நீர், தீ, கால், சுடர், இரு விசும்பும்,
மலர் சுட பிறவும், சிறிது உடன் மயங்க;
ஒரு பொருள் புறப்பாடு இன்றி, முழுவதும்
அகப்படக் கரந்து, ஓர் ஆல் இலைச் சேர்ந்த எம்
பெரு மா மாயனை அல்லது, 
ஒரு மா தெய்வம் மற்று உடையமோ யாமே? (2584)

எம்பெருமானுக்கு எல்லா உலகங்களும் எல்லாத் தெய்வங்களும் அடிமைப்பட்டவை. குளிர்ந்த சந்திரனைத் தலையிலே சூடியுள்ள சிவனும் பிரமதேவனும், ஒளியுள்ள தேவேந்திரனும் ஆகிய இம்மூன்று தெய்வங்களும் எம்பெருமானுக்கு உட்பட்டவராவர். எல்லா உலகங்களும் உயிர்க்கூட்டங்களும் அவனுக்கு உட்பட்டு அடங்குகிறவை. பிரளய காலத்தில் இத் தெய்வங்களும் உலகங்களும் உயிர்க்கூட்டங்களும அப்பெருமான் வயிற்றினுள்ளே அடங்கிக் கிடந்தன. அப்பெருமான் தன் வயிற்றினுள் எல்லாப் பொருளும் கலக்கும்படியாக ஒன்றுகூட வெளிப்படாதபடி இவற்றை வைத்துக் காத்தான். நிலம், நீர், தீ, சூரிய, சந்திரர்களைக் கொண்ட வானம் ஆகிய ஐந்து பூதங்களையும் தன் வயிற்றில் கொண்டான். சூரிய சந்திரர்களும் அவர்களைப் போன்ற பிற ஒளி மிகுந்த பொருள்களும் பகவ்னுக்குள்ளே அடங்குகின்றன. பிரளய காலத்தில் மேற்கண்ட எல்லாவற்றையும் பகவான் தன் வயிற்றில் அடக்கியவாறு மறைத்துக் கொண்டு ஒரு சிறிய ஆலந்தளிரில் பள்ளிகொண்டான். இது பெருமான் செய்த ஆச்சரியமான செயலன்றோ? மாயப் பெருமானை அல்லாது வேறு எந்தத் தாழ்ந்த தெய்வத்தையும் நாம் தலைவனாகக் கொள்ளமாட்டோம். 

நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: நம்மாழ்வார் அருளிய திருவிருத்தம்

15 comments:

  1. தாங்கள் படித்ததை எங்களுக்கும் விரிவாக்கமுடன் தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு. பாடல்களும் பொருளும் அருமை.

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு ஐயா
    நன்றி

    ReplyDelete
  4. பாடல்களும் அதன் அர்த்தமும் அறிந்தோம் ஐயா.

    கீதா

    ReplyDelete
  5. அருமையான விளக்கம் ஐயா...

    ReplyDelete
  6. பாக்களைப் பிரித்ததிலும், அர்த்தத்திலும் நான் தவறுகளைக் காண்கிறேன்.

    ஊழிதோறு ஊழி - ஊழி தோறூழி - இதனை ஊழி ஊழி தோறும் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளலாமே தவிர ஊழிதோறு ஊழி என்று பிரிக்கமுடியாது.

    இசையுங்கொல்லோ? - இசையுங்கொலோ?

    பெரும்பாழ்க் காலத்து - பெரும் பாழ் காலத்து

    அர்த்தத்திலும், காயும், கனியும், கிளையும் செடியும், விதை முளைவிட்டு அதன் பிறகு வருகின்றதுபோல, முதலில் பிரம்மா என்ற முளை விட்டது. பிறகு சிவன் முதலான தெய்வங்கள்.... இப்படித்தான் அர்த்தம். இதில் 'மூளை' என்று சொல்லியிருப்பதில் அர்த்தம் இல்லை.

    பாடலையும் கருத்தையும் பதிப்பிலிருப்பதை நீங்கள் போட்டிருக்கிறீர்கள் என்பதை அறிவேன்.

    நீங்கள் காஞ்சிபுரம் அத்தி வரதர் சேவைக்கு வருகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஆழ்ந்து வாசித்து கருத்து கூறியமைக்கு நன்றி. பாடலையும் கருத்தையும் பதிப்பிலிருப்பதைத்தான் நான் பகிர்ந்துள்ளேன். வாய்ப்பிருப்பின் காஞ்சிபுரம் வருவேன்.

      Delete
  7. வணக்கம் சகோதரரே

    நல்ல பாடல்களும், விளக்கங்களும்.. .நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் சில அருமையான பாடல்களையும், அதன் பொருளையும் எங்களுக்கு புரியும் விதத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. நாலாயிர திவ்விய பிரபந்தம் பாடலும் பொருளும் அருமை.

    ReplyDelete
  9. பாடலும் பொருளும் சிறப்பு.

    ReplyDelete
  10. பாடல்களும் அதன் பொருளும் அறிந்தேன். மிக்க நன்றி

    ReplyDelete
  11. என்னை போன்றவனுக்கும் புரியும் வகையில் எழுதிய தங்களுக்கு நன்றிகள் பல

    ReplyDelete
  12. பாடலோடு கூடிய பொருள் கண்டு மனம் மகிழ்ந்தது. இத்தகைய பாடல்களைப் பொருளோடு படிக்கையில் மனம் அதில் ஆழ்ந்து போகிறது.

    ReplyDelete
  13. Mr Kuppu Veeramani (thro: kuppu.veeramani@gmail.com)
    வணக்கம்.இத்தகைய பகிர்வுகள் வாயிலாகவேனும் தமிழறிவோம்.நெல்லைத்தமிழனின் திருத்தக்குறிப்பு மகிழ்ச்சி தருகிறது.நன்றி.

    ReplyDelete
  14. நன்றாக உள்ளது. இரசித்துப் படித்தேன். நன்றி பலப்பல..

    ReplyDelete