22 June 2019

அப்பா : கரந்தை ஜெயக்குமார்

நண்பர் திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களின் தந்தையார் அமரர் திரு சி.கிருட்டிணமூர்த்தி (9.11.1940-28.6.2018) அவர்களின் நினைவு மலர், தஞ்சாவூரில் அவரது இல்லத்தில் 18 ஜுன் 2019 அன்று காலை வெளியிடப்பட்டது. தன் தந்தையாரோடு பழகிய நண்பர்கள், பணியாற்றிய அலுவலர்கள், பிற துறை சார்ந்தோர், உறவினர்கள் ஆகியோர் பகிர்ந்துகொண்ட, நட்பின் நீங்காத நினைவலைகளைத் தொகுத்து "அப்பா" என்று தலைப்பிட்டு நூலாக்கி, தன் தந்தைக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தியுள்ளார் திரு ஜெயக்குமார். 


பல பதிவுகள் கவிதை வடிவிலும் உள்ளன. வலைப்பூ மற்றும் முகநூலில் வந்த இரங்கல் செய்திகளையும் நூலில் தந்துள்ளார். நூலினை வாசிக்கும்போது அன்னாரின் புகழினை அறியமுடிகிறது. அவரின் பெருமையை நினைவுகூர்கின்ற பெருமக்களின் சொற்களிலிருந்து சிலவற்றைக் காண்போம்:

“எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தேடிப் பழகி பரிவும் காட்டி தன் பழைய சொந்தத்தை பாலமாக்கி நெருங்கி வாழ்பவர்களும் சிலர் இருக்கின்றார்கள், அவர்களில் ஒருவராக எங்கள் சித்தப்பா” (எங்கள் சித்தப்பா, தமிழ்ச்செல்வி அரசு, ப.7)

“தன் வாழ்நாள் முழுவதும் யாருக்கும் சுமையாக இருந்துவிடாமல், சுமைதாங்கியாகவே வாழ்ந்தார். தன் பிரிவைக்கூட நொடிப்பொழுதில் துன்பமின்றி கடந்துவிட்டவர். இவரது போற்றத்தகுந்த மற்றொரு குணம் எக்காலத்தும், எவரிடத்தும் யாரைப்பற்றியும் விமர்சனங்களை முன்வைக்காதவர் என்பதேயாகும். தான் காணும் மனிதர்களின் நல்குணங்களைப் பெரிதாய் பேசுவாரே தவிர, ஏனையவற்றைச் சிறிதும் குறை கூறி பேசவேமாட்டார்.” (அண்ணனைப் போற்றுவோம், சிலம்புச்செல்வரடிப்பொடி தங்க.கலியமூர்த்தி, ப.15)

“எவ்வளவு கடினமான பாடமானாலும் அவர் அலட்டிக்கொள்ளாமல் மனதில் ஏற்றிக்கொள்வார். அதை எழுத்து வடிவத்தில் சிறப்பாக வெளிப்படுத்துவார். ஒரு சமயம் எங்களுக்கு ஒரு மொழிபெயர்ப்பு/மொழியாக்கம் வந்திருந்தது. நேரு, அவர் மகள் இந்திராவிற்கு சிறையில் இருந்து எழுதிய கடிதங்களில் ஒரு சிறு பகுதியை மொழியாக்கம் செய்யச்சொல்லிக் கேட்டிருந்தது. “I cannot send anything solid to you now”. அதை, பௌதீக, வேதியியல் மாணவர்கள், “நான் உனக்கு எதையும் திட வஸ்தாகவோ, திரவ வஸ்தாகவோ இங்கிருந்து அனுப்பமுடியாது” என்று மொழிபெயர்த்து அனுப்பியிருந்தார்கள். பாவம் நேரு. என் நண்பர், “என் எண்ண அலைகளை மட்டுமே இங்கிருந்து அனுப்பமுடியும்” என மொழிபெயர்த்து எழுதியிருந்தார்.” (அய்யாறு புத்தன், ஆர்.இராஜமாணிக்கம், ஐ.பி.எஸ்., ப.18)

“அலுவலகம் மற்றும் தனிப்பட்ட பிரச்சினை எதுவாக இருந்தாலும், அவர் யோசித்து முடிவாகச் சொல்லிவிட்டார் எனில், நாங்கள் அனைவரும் அம்முடிவைக் கட்டளையாக ஏற்றுக்கொள்வோம். மீறி எதையும் செய்ததாக நினைவில்லை. அந்த அளவிற்கு முன் யோசனையுடன் செயல்டுபவர்.” (ஆருயிர் அண்ணன் எஸ்.கே., என். ஜெகதீசன், ப.24)

“அவர் எனக்கு சுமார் 60 ஆண்டு காலம் நெஞ்சுக்கு நெருக்கமானவர். மற்றவர் துன்பம் அனுபவிப்பதை காணச் சகியாது அவரது துன்பம் துடைத்திட தான் தும்பம் மேற்கொண்டு உழைத்தவர். அவர் பணியாற்றிய புள்ளியல் துறையிலும் சரி, வெளியில் தொடர்பிலிருந்த பெருமக்கள் வரை மிகச் சிறப்காக அவர்கள் ஒவ்வொருவரின் உணர்வுகளிலும் கலந்து உறவாடியவர்” (கருணை உள்ளம் பொங்கும் கிருஷ்ணமூர்த்தி வாழ்க, சி.என்.தியாகராசன், ப.30)

“அவருடைய நண்பர்கள் வட்டாரம் ஆல் மரம் போல பரந்து விரிந்தது. எல்லா துறையிலும் நண்பர்கள் உண்டு” (பண்பாளர் கிருஷ்ணமூர்த்தி, அ.பிச்சை, ப.35)

“தனக்குக் கீழே பணியாற்றும் ஊழியர்கள் அறிக்கை அனுப்ப கால தாமதமானால், உதவி இயக்குநர் என்றும் பாராமல் அவர்கள் இருக்கையில் அமர்ந்து அந்த கோப்பை காட்டுங்கள் என்று வாங்கி அவரே பதிலை தயார் செய்து சற்றும் கோபப்படாமல் அந்த இடத்தைவிட்டு நகர்ந்து விடுவார்கள்.” (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ், ஆ.உதயச்சந்திரன், ப.44)

“அவருடைய திறமையால் படிப்படியாக புள்ளியியல் அலுவலர், புள்ளியியல் உதவி இயக்குநர், மண்டலப் புள்ளியியல் துணை இயக்குநராக கிட்டத்தட்ட 39 ஆண்டுகள் பணியாற்றி பணியிலிருந்து நன்முறையில் ஓய்வு பெற்றார்.” (நெருங்கிய நண்பர் அமரர் கி.பிள்ளை, காலகண்டன், ப.70)

“பொறாமை கொள்ளும் அளவிற்கு பெரிய நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். அவர் கையாண்ட ஆயுதம் மென்மையான பேச்சு மற்றும் அளப்பரிய அன்பினைப் பொழிதலே ஆகும். வயது வேறுபாடு, அந்தஸ்து வேறுபாடு பாராட்டாமல் அனைவரிடமும் அன்பினைப் பொழியும் வல்லமை மிக்கவர். அவர்கள் தம் சுமைகளைத் தனதாகக் கொண்டு சுமக்கக்கூடிய சுமைதாங்கியாகவே தொடர்ந்து வாழ்ந்துள்ளார்.” (சொல்லிமாளா தெய்வத்திரு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சிங்காரவேலு, ப.87)


அனைத்திற்கும் மேலாக மகன் எழுதியுள்ள பதிவு படிப்போர் மனதில் பெரிய வலியையும், ஏக்கத்தையும் ஏற்படுத்துகிறது.
“என் மடியில் படுத்தவாறு, முகத்தில் துன்பத்தின் ரேகையோ, கவலையின் அறிகுறியோ ஏதுமின்றி, சிறு குழந்தை போல் அமைதியான உறக்கத்தில் எந் தந்தை…வாழ்வில் எத்துணையோ துன்பங்களைக் கடந்து வந்தவரின் வாழ்க்கை, பத்தே நிமிடங்களில் முடிந்துவிட்டது…காலை மாலை உடற்பயிற்சி, கடந்த ஒரு வருட காமாக காலையிலி அரைமணி நேரம் யோகா, முறையான மருத்துவம் எனத் தன் உடலைப் பேணிக்காத்தவர் என் தந்தை….உடலில் அவ்வப்போது துன்பங்கள் எட்டிப் பர்த்தாலும், உள்ளத்தால் மகிழ்வான வாழ்வு வாழ்ந்தவர் என் தந்தை…ஒரு நாள் கூட உடல்நிலை சரியில்லை எனப் படுக்கையில் வீழ்ந்தவரல்ல என் தந்தை…பத்து நிமிடங்கள்…பத்தே பத்து நிமிடங்களில் எழுபத்து ஒன்பது ஆண்டுக்கால வாழ்வு முடிவுக்கு வந்துவிட்டது.” (எந்தை மறைந்தார், கரந்தை கி.ஜெயக்குமார், ப.63)

தந்தையின் பெருமையையும், அரிய குணங்களையும் ஆவணப்படுத்திய மகனின் முயற்சி போற்றத்தக்கது. தந்தையின் நினைவுகள் என்றும் அவரையும், குடும்பத்தையும் என்றும் துணை நின்று காக்கும்.

நூல் வெளியீடு புகைப்படம் நன்றி : திரு கரந்தை ஜெயக்குமார்

21 comments:

  1. சிறப்பான அஞ்சலி...
    மகன் தந்தைக்கு ஆற்றிய அருஞ்செயல்...

    ReplyDelete
  2. சிறப்பு.

    நல்ல தொகுப்பு.

    ReplyDelete
  3. தந்தையை நினைவு கூர்ந்து மலரஞ்சலி வெளியிட்டமை கண்டு சிலிக்கிறது.

    வாழ்க அவரது புகழ் எமது அஞ்சலிகளும்...

    ReplyDelete
  4. அருமையான மனிதரை பற்றிய புத்தகம்.
    மகன் தந்தைக்கு செய்த சிறப்பான அஞ்சலி.
    நீங்கள் அந்த புத்தகத்தில் உள்ள உறவுகள், நட்புகள் சொன்னவைகளை தேர்வு செய்து கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  5. நல்லதொரு அஞ்சலி.

    சிறப்பானதொரு மனிதரைப் பற்றி தேர்ந்தெடுத்து கொடுத்த விஷயங்கள் நன்று.

    ReplyDelete
  6. இன்ய நண்பர் வெளியிட்ட சிறப்பான மலரஞ்சலி குறித்த அருமையான பதிவு. நன்றி.

    ReplyDelete
  7. நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டமைக்கும் அதனைப் பகிர்ந்து கொண்டமைக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வியப்பாக உள்ளது. பலருக்கும் முன் மாதிரியான உதாரணமும் கூட. உங்களை நினைத்து பெருமைப்படுகின்றேன். நல்வாழ்த்துகள்.

      Delete
  8. சிறப்பான அஞ்சலி...
    ஒரு நல்ல மனிதரைப் பற்றி அவரின் நட்புக்களும் உறவுகளும் சொன்னதை தொகுப்பை தந்ததற்கு உங்களுக்கு நன்றி அய்யா.

    ReplyDelete
  9. பெரிய விசயம் ...
    நற்பணி
    கரந்தையார் எப்போதும் ஆக்க பூர்வமாக சிந்திப்பவர் உங்களைப் போலவே

    பதிவுக்கு நன்றிகள்

    ReplyDelete
  10. பழகிய அனைவரும் "பண்பாளர்" என கூறியது நாமும் அப்படி வாழ என உறுதி மேற்கொள்ள வேண்டும் அதுவே நாம் இந்த கட்டுரையை படித்ததன் பயனாகும்.

    ReplyDelete
  11. பெற்றோருடன் வாழக் கொடுத்துவைத்தவர்கள்
    அவர்களை வழியனுப்புவதும் ஒரு வரப்பிரசாதம்தான் .
    இறந்தவர் ஆன்மா என்றென்றும் உங்களை வழிநடத்தும்.

    ReplyDelete
  12. மாமனிதருக்கான இனிய நினைவுகள் ..

    ReplyDelete
  13. தங்களின் இந்த பதிவினை படிக்கும் போது

    "தக்கார் தகவிலர் என்பது அவரவர்
    எச்சத்தாற் காணப்ப படும்"

    என்ற குறளே நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  14. மிகச் சிறப்பான அஞ்சலி.வாழ்த்துக்கள் கரந்தை ஜெயக்குமார் சகோதரருக்கு.

    ReplyDelete
  15. தந்தைக்கு "மலர்" அஞ்சலி செலுத்தும் தமையனின் அருஞ்செயல் போற்றத்தக்கது.

    புத்தக அறிமுகத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.

    கோ

    ReplyDelete
  16. அன்பு முனைவர் ஐயா,
    என் தந்தையையும், கணவரையும் மீண்டும் கண்டது போல இந்தப் பதிவு அமைந்திருக்கிறது.
    எனக்கு அறியத் தந்தமைக்கு நன்றி. திரு.ஜெயக்குமார் அவர்களின் தந்தை ஒரு அரிய மனிதர்.
    அவரது கடைசி நிமிடங்களைக் கேட்க மன்ம் கசிகிறது.
    என்னாளும் மந்த்தில் நிறுத்த வேண்டிய மாமனிதர்.வணக்கங்களுடன்
    வல்லிம்மா.

    ReplyDelete
  17. வணக்கம் சகோதரரே

    எளிய மனிதர். சிறப்பான உள்ளம் கொண்டவர். அன்னாரின் நினைவாக அவருக்கு மலர் அஞ்சலியாக வருட முடிவில் நூலை தொகுத்து வெளிட்டமைக்கும், அவரைப் பற்றிய சிறப்பான செய்திகளை எங்களுக்கு அறிய தந்தமைக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  18. மிக மிக மிக அருமையான அஞ்சலி. தொகுப்பும் மிகவும் சிறப்பு.

    இறுதி பாரா மனதை நெகிழ்ச்சியடையச் செய்தது.

    நல்ல மனிதருக்கு எங்கள் வணக்கங்கள்

    துளசிதரன், கீதா

    ReplyDelete
  19. அம்மாவிடம் ஒட்டிக்கொள்ளும் நாம் தந்தையிடம் எட்டி நிற்போம். தந்தையின் அன்பை பற்றி கேட்கும்போது கண்களிலும் மனதிலும் ஈரம் கசிகிறது.

    ReplyDelete