14 September 2019

தமிழரின் நீர் மேலாண்மை : முனைவர் மணி.மாறன்

அண்மையில் நான் வாசித்த நூல் முனைவர் மணி.மாறன் எழுதியுள்ள தமிழரின் மேலாண்மை. அன்றாடப் பிரச்னைகளில் ஒன்றான, நாம் அதிகம் கவனத்தில் கொள்ளாத, ஆனால் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்ற ஒரு பொருளை தன் ஆய்வின் களமாக எடுத்துக்கொண்டு அதில் முழுக்க தன்னை ஈடுபடுத்தி நூல் வடிவம் வந்துள்ள நூலாசிரியரின் முயற்சியானது பிற ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும், சாதிக்கத்துடிக்கும் இளைஞர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.


 வாசிப்பவருக்கு அனைத்துமே முக்கியம் என்று தோன்றுமளவு ஒவ்வொரு பத்தியிலும், பக்கத்திலும் செறிவான செய்திகளைக் கொண்டுள்ள நீர் மேலாண்மைக்கான, தமிழரின் பல்லாயிரமாண்டு பெருமையினைப் பேசுகின்ற இந்நூல் இலக்கியத்தில் நீர் மேலாண்மை, தொல்லியல் சான்றுகளில் நீர் மேலாண்மை, கலைப்படைப்புகளில் நீர், கலையும் இலக்கியமும் என்ற உட்தலைப்புகளையும், துணைநூற்பட்டியலையும், அரிய புகைப்படங்களைப் பின்னிணைப்பாகவும் கொண்டு அமைந்துள்ளது. சங்க காலந்தொட்டு இலக்கியங்கள் தொடங்கி நீருக்கும், நீர் நிலைகளுக்கும், நீர் மேலாண்மைக்கும் அளித்த, அளிக்கப்பட்டுவருகின்ற முக்கியத்துவம் உள்ளிட்ட பல கூறுகளைக் கொண்டு அமைந்துள்ள அந்நூலின் சில பகுதிகளைக் காண்போம்.

மழையின் தோற்றம் கண்ட தமிழர்கள், எவ்வக்காலங்களில் மழைப்பொழிவு இராது எப்தனையும், வானில் உள்ள கோள் நிலை கண்டு தெளிவாக அறிந்து வைத்திருந்தனர். (ப.16).

ஓடை, ஆறு மட்டுமே இயற்கையாக அமையப்பெற்றவை. தடுப்பணை, மணற்போக்கி, ஏரி, குளம், கலிங்கு, மதகு, தூம்பு போன்றவையும், கொப்பு, கிளை, வாய்க்கால் போன்ற அனைத்தும் மக்களால் ஏற்படுத்தப்பட்டவையாகும். …நீரைத் திருப்பி ஏரிகள், குளங்களில் சேமித்து வைத்துக்கொள்ளும் வழக்கம் பன்னெடுங்காலத்திற்கு முன்பே தமிழர்களிடம் இருந்துள்ளதற்கு ஏராளமான இலக்கிய, கல்வெட்டு, செப்பேட்டுச் சான்றுகள் காணப்படுகின்றன. (ப.18).

அணைகளைப் பழந்தமிழர்கள் ஆற்றின் குறுக்கே நேராகக் கட்டாமல் வளைவாகவே அமைத்துள்ளனர். வாத்து அலகு போல வளைவாக அமைவது சிறந்தது என்று இன்றைய நீரியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். (ப.21).

ஏரிகள் அமைக்கப் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள், தண்ணீரைப் பகிர்வதிலும், சிக்கனமாகப் பயன்படுத்துவதிலும் தமிழர்கள் கடைப்பிடித்த நீர் மேலாண்மைக் கோட்பாடுகள் இன்றைக்கும் பொருந்துவதாகவே உள்ளன. (ப.21).

செம்மண் நிலத்தில் உள்ள கிணற்று நீரை முகந்து பெரிய வாயையுடைய சாடிகளில் வைத்துத் தெளியச் செய்து குற்றமற்ற தூய நீரைப் பெற்றனர் என்ற ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட குடிநீர் மேலாண்மைத் திறத்தைப் பதிவு செய்துள்ளார் சங்ககாலப்புலவர். (ப.37).

தடம் மாறிய காவிரியின் போக்கை ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு (கரிகாலன் காலத்திற்கு முன்) ஒழுங்குபடுத்த நினைத்த சோழ மன்னன் ஒருவன் ஒகேனக்கல் மலைத்தொடர் பகுதியில் மலையை வெட்டித் தடம் அமைத்துச் சோழ நாட்டிற்குக் காவிரியைக் கொண்டுவந்துள்ளான்.  கரிகாலனின் முன்னவனாகிய சோழ மன்னன் ஒருவன் மலை திரித்துக் காவிரி ஆற்றின் போக்கைச் சோழ நாட்டிற்குத் திருப்பினான் என்பதைச் சோழர் கால இலக்கியங்கள் கூறுமாப் போலச் சோழர்தம் செப்பேடுகளும் அச்செய்தியை வலியுறுத்திக் கூறுகின்றன. (ப.59).

கி.பி.7ஆம் நூற்றாண்டில் வரையப்பெற்ற புண்ணியகுமாரனுடைய மேல்பாட்டுச் செப்பேடுகளிலும், கி.பி.11ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெளிவந்த கங்கை கொண்ட சோழனுடைய திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலும், வீரராஜேந்திர சோழனின் கன்னியாகுமரிக் கல்வெட்டிலும் கரிகாலன் காவிரிக்குக் கரை அமைத்து அதன் வெள்ளத்தை தடுத்து நாட்டிற்கு நலம் புரிந்தமை கூறப்பட்டுள்ளது. (ப.71).

கி.மு.முதல் நூற்றாண்டில் இருந்த சோழன் கரிகாற்பெருவளத்தானாகிய திருமாவளவனே முதலில் காவிரிக்கு கரை அமைத்துச் சோழ மண்டலத்தை வளப்படுத்தியவன் என்பது தெளிவாகத் தெரிகிறது. (ப.72).

தமிழக மன்னர்கள் ஒரு கோயிலை நிர்மாணிக்கும்போதும், ஒரு கிராமத்தையோ அல்லது ஒரு நகரத்தையோ அமைக்கும்போதும் முதலில் கவனம் செலுத்தியது நீர் நிலைகள் பற்றியே ஆகும். (ப.75).

இராஜேந்திர சோழன் தன் மகத்தான சாதனைப் படைப்பொன்றில் அவனுக்கு இறவாப் புகழ் தந்த கங்கை வற்றியை இணைத்துக் கூற நினைத்தான். நாடே கண்டிராத பரும் ஏரியாக அவன் வெட்டுவித்த கங்கை கொண்ட சோழபுரத்துப் பேரேரியைத் தன் வெற்றிச் சின்னமாக நிலைபெறச்செய்யவேண்டும் என்பது அவனது அவா. (ப.80).

தமிழ்நாட்டு வணிகர்கள், அலைகடல்களுக்கு அப்பால், நெடுந்தொலைவில் உள்ள சயாம் நாட்டிற்குச் சென்று, வைணவ சமயத்திற்குரிய திருமாலின் கோயில் எடுத்து, அங்கே குளமும் வெட்டியதை எண்ணும்போது நீரின்றி அமையாது உலகு எனும் தமிழரின் உயரிய நீர் மேலாண்மைத்திறம் வெளிப்படுகிறது. (ப.91).

மலைச்சரிவுகள், ஏரிகள், குளங்களின் கரையில் மரம் வளர்ப்பதையும், அதனை வெட்டுவதைத் தவிர்ப்பதையும் முன்னோர்கள் பெரும் அறச்செயல்களாகப் பேணி வந்தனர். நீர் நிலைகளின் கரையில் உள்ள மரங்களை வெட்டுவதைக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகக் கொண்டனர். மேலும் பொதுக்குளங்கள் நீர் நிலைகளைச் சிதைப்பது பெரும் குற்றமாகக் கருதப்பெற்றது. (ப.99).
அரசனின் அதிகாரமோ, அச்சுறுத்தலோ இன்றி ஊர் மக்களே ஒன்றிணைந்து நீர் நிலைகளையும், மரங்களையும் குறிப்பாக ஏரிகளின் கரைகளைக் காக்கும் மரங்களையும் அழிக்கக்கூடாது என முடிவெடுத்து, அதனையும் மீறி அழிப்பவர்களை நிலமாகத் தண்டம் செலுத்த வேண்டியதை ஓர் உடன்பாடாக எழுதிப் பதிவு செய்துள்ளமை அறியமுடிகிறது. (ப.101).

கரிகாலன் காவிரியின் இரு கரைகளையும் வலிமையுடையதாகச் செய்ததோடு, பெரு வெள்ளங்களால் சோழ நாடு பேரழிவுகளுக்கு உட்படாதவண்ணம் கல்லணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றுக்கு நீர்ப்பெருக்கு வடியுமாறு வழிவகுத்தான். கல்லணை என்ற செயல்திட்டம் தொல்காப்பியம், பததுப்பாட்டு போன்ற சங்கத் தமிழ் நூல்களில் கற்சிறை என்ற பெயரால் விளக்கப்பெறுகின்றது. (ப.110).

ஆடல்வல்லப்பெருமானின் விரிசடையின் வலது புறம் உற்று நோக்குமாயின் விண்ணகத்தில் பிறக்கும் நீரின் பேராற்றல் விண்ணகக் கங்கையாக உருவகப்படுத்தப்பெற்று, ஒரு பெண் ஒருவில் காட்சியளிப்பதைக் காணலாம்.  இடுப்புக்கு மேலாக ஒரு பெண் தன் இரு கரங்களையும் கூப்பியவாறு இருக்க இடுப்புக்குக் கீழே விண்ணகத்தில் இருந்து கழன்றவாறு இறங்கும் பெருநீர்ச்சூழலைக் காணலாம். (ப.121).  

பொதுவாக சைவ, வைணவ ஆலயங்களில் திருக்கோபுரங்களின் நிலைக்கால்களில் கங்கை, யமுனை என்ற இரண்டு நதி தெய்வங்களைப் பெண் உருவில் காட்டுவர். ஆனால் தஞ்சைப்பெரிய கோயிலை உருவாக்கிய மாமன்னன் இராஜராஜன் நிலைக்கால்களில் மட்டுமே நதி தெய்வங்களைக் காட்டாது இரண்டாம் திருக்கோபுரமாகிய இராஜராஜன் திருவாயில் எனும் கோபுரத்தையே நீரின் வடிவமாகக் காட்டியுள்ளார்.  (ப.129) 

தஞ்சைப் பெரிய கோயிலின் விமானத்தினை வான் கயிலாயம் என்ற மலையாகவே கலையியல் அடிப்படையில் படைத்த காரணத்தால் அக்கயிலாய மலை உள்ளடக்கிய இக்கோயில் வளாகம் முழுவதும் பெய்யும் மழை நீரினை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும்படிக் கடடடத்தை அமைத்து அங்கு இரு கால்வாய் திறப்புகளை அமைத்துள்ளான். மழை பெய்யத்தொடங்கியவுடன் சிவகங்கை குளத்திற்குச் செல்லும் கால்வாயினை மூடிவிட்டு கோயிலின் பின்புறம் உள்ள நந்தவனத்திற்குச் செல்லும் கால்வாயின் மதகினைத் திறந்து வைத்திருப்பர். (ப.131).

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயிலின் முன்புறத்தில் சாரபுட்கரணி என்ற தீர்த்தக்குளம் உள்ளது. இக்குளக்கரையின் தென்மேற்கு மூலையில் காவிரி அம்மனுக்கென ஒரு தனிக்கோயில் உள்ளது…..பொன்னி வள நாட்டில் காவிரித்தாயாருக்கு என எடுக்கப்பெற்ற ஒரே கோயில் இதுவேயாகும். (ப.137).

திருவிடைமருதூர், கங்கை கொண்ட சோழபுரம், விரிஞ்சபுரம் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களின் திருச்சுற்றில் அத்திருக்கோயில் இறைவனுக்குத் திருமஞ்சனம் செய்வதற்குரிய திருமஞ்சன நீர் எடுப்பதற்காகவும், கோயில் பணிகளுக்காகவும், மக்களுக்குப் பயன்படும் வகையிலும் சிம்மக்கிணறுகளை அமைத்துள்ளனர். (ப.140).

திருவலஞ்சுழி திருக்கோயிலின் அம்மன் கோயில் திருச்சுற்று மண்டப வடபுற விதானத்தில் ஒரு நீண்ட நாயக்கர் கால ஓவியக்காட்சி உள்ளது. குடகு மலையில் உற்பத்தியாகும் காவிரி சோழ நாட்டில் பாய்ந்து கடலில் கலக்கும் காட்சியே இங்கு ஓவியமாகத் தீட்டப்பெற்றுள்ளது. (ப.144).

தஞ்சை மாவட்டத்தில் கற்பாறையான நிலப்பகுதியே இல்லை எனப் பொதுவாகக் கூறுவர். ஆனால், இது தவறான கூற்றாகும். கச்சமங்கலத்திலிருந்து கிழக்கே 3 கிமீ தொலைவு வரை வெண்ணாறு ஓடும் பகுதி எவ்வாறு தொடர்ந்து கற்பாறை பூமியாகத் திகழ்கின்றதோ, அதே போன்று கச்சமங்கலத்திலிருந்து தெற்காகத் திருச்சி மாவட்டத்திலுள்ள திரு எறும்பியூர் மலைக்குன்றம் வரை பூமிக்கு அடியில் பாறை அமைப்புகள் இருப்பது கள ஆய்வில் அறியப்பெற்றது. (ப.147). 

நீர் மேலாண்மை இயலின் பல்வேறு கூறுகள் பற்றிக் கண்கூடாகக் காண்பதற்கு ஏற்றதொரு களமாக விளங்குது தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்திலுள்ள வெண்டையம்பட்டி பேரேரி ஆகும். (ப.179).

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் பண்டு திகழ்ந்த குமிழிகள் பெரும்பாலும் சுவடின்றி அழிந்துவிட்டன. குமிழியின் மதகுத் தூண்கள் ஒரு சில ஏரிகளில் காணப்பெற்றாலும் அவை பிற்காலத்தில் ஏற்படுத்தப்பெற்ற புதிய மதகு அமைப்பினால் பயனற்றவையாகவே காணப்படுகின்றன. ஆனால் சோழ நாட்டின் பகுதியாக விளங்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகள் பலவற்றில் பண்டைக்கால குமிழிகளின் அமைப்பு முறை மாறாமல் அப்படியே உள்ளது. (ப.182).

தூய நீர் மேலாண்மை குறித்தும், பழந்தமிழர்களின் நீரியல் சிந்தனையும், தொலைநோக்கு உணர்வினையும், நீர் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நெறிமுறைகள் பற்றியும், நீரின் சேமிப்பு அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டிய கட்டாயச்சூழல் இன்று நிலவுகிறது என்பதே கள ஆய்வில் கண்ட உண்மையாகும். (ப.174).


நூல் : தமிழரின் நீர் மேலாண்மை
ஆசிரியர் : முனைவர் மணி.மாறன், (9443476597, 8248796105) தமிழ்ப்பண்டிதர், சரசுவதி மகால் நூலகம், தஞ்சாவூர்
பதிப்பகம் : ஏடகம், 2481, ஜவுளி செட்டித்தெரு, தெற்கு வீதி, தஞ்சாவூர்
பதிப்பு : ஆகஸ்டு 2019
விலை : ரூ.250

18 comments:

  1. எடுத்துக் காட்டி இருக்கும் பகுதிகள், புத்தகம் எவ்வளவு சுவாரஸ்யமானது, தகவல் சுரங்கமானது என்பதைக் காட்டுகிறது.  நல்ல அறிமுகம்.

    ReplyDelete
  2. அந்தக்காலத்து ஆட்சியாளர்களுக்கு தொலை நோக்குப் பார்வையும்  மக்களின் மேல் நன்மையையும்  கொண்டிருந்திருக்கின்றனர் என்று தெரிகிறது.  மக்களும் தங்கள் பொறுப்புணர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். பேராசை கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. இது தான் உண்மையான விமர்சனமும் பார்வையும் கூட. குறிப்பாக கடைசி வார்த்தைகள். மக்கள் எவ்வழியோ மன்னன் அவ்வழி.

      Delete
  3. அன்பு முனைவர் ஐயா அவர்களுக்கு வணக்கம். எத்தனை வளமாக இருந்த நாடு என்பதற்கு இந்தப் புத்தகம் மிகப் பெரிய சான்று.
    சோழ மன்னர்களின் கருணையையும் ஆளுமையயும்
    பற்றிப் படிக்கும் போது மனம் நெகிழ்கிறது.
    காவிரித்தாய் சிறு கோவிலை திருச்சேரையில் தரிசித்திருக்கிறேன்.

    இவ்வளவு நல செய்திகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிக நன்றி ஐயா..

    ReplyDelete
  4. தூய நீர் மேலாண்மை குறித்தும், பழந்தமிழர்களின் நீரியல் சிந்தனையும், தொலைநோக்கு உணர்வினையும், நீர் மாசுபாடுகளைத் தவிர்க்கும் நெறிமுறைகள் பற்றியும், நீரின் சேமிப்பு அவசியம் குறித்தும் கற்பிக்க வேண்டிய கட்டாயச்சூழல் இன்று நிலவுகிறது என்பதே கள ஆய்வில் கண்ட உண்மையாகும்.//

    படிக்க படிக்க முன்னோர்கள் நீர் மேலாண்மையை எப்படி கடைபிடித்து இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிகிறது.
    அருமையான நூல்.
    நூலில் உள்ளதை தொகுத்து அளித்தமைக்கு நன்றி.
    உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அற்புதமாக இருந்த பொற்காலத்தை அலங்கோலமாக ஆக்கி விட்டோம் என்பதை இந்நூலின் ஆதாரங்களிலிருந்து தந்த தங்களது குறிப்புகள் அருமை.

    நள்ளிரவில் முதல் நபராக படித்து விட்டேன் ஆனால் செல்வழியில் கருத்துரை பெட்டியில் எழுத இயலவில்லை

    ReplyDelete
  6. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்...

    அருமையான பகிர்வு ஐயா...

    நன்றி...

    ReplyDelete
  7. தமிழரின் பெருமைகளுள் ஒன்றான நீர் மேலாண்மையை குறிப்புகளுடன் எடுத்துக்காட்டியமைக்கு நன்றி. பாராட்டுக்கள். பகிர்வு மிக பயனுள்ளதாக அமைந்துள்ளது.

    ReplyDelete
  8. சிறப்பான பதிவு.. ஒவ்வொருவரின் உள்ளத்திலும் பதிய வேண்டிய செய்திகள்..

    ReplyDelete
  9. பெறுமதியான தலைப்பு
    நீர் மேலாண்மை உயிர் போன்றது
    நம்மவர் உணர்ந்து பணியாற்ற வேண்டும்

    ReplyDelete
  10. படிக்க மறக்காதீர்கள்
    நீங்களும் திருக்குறள் எழுதலாம்!
    http://www.ypvnpubs.com/2019/09/blog-post_13.html

    ReplyDelete
  11. சிறப்பான பதிவு. புத்தகம் வாங்கி வாசிக்க வைக்கின்றது. நன்றி.

    ReplyDelete
  12. திருச்சியில் இருந்து தஞ்சாவூபேரூந்து பாதை போகும்வழியில் பல இடங்களின் பெயர்கள் ஏதோ ஏரியைக் குறிக்கும்

    ReplyDelete
  13. நீர் மேல் எப்போதும் அலாதி ப்ரியம்...பழங்காலச் சோழ மன்னன் காவேரியை திருப்பி சோழநாட்டுக்கு கொணர்ந்தான் என்ற செய்தி அவர்கள் மேலும் மதிப்பு கூட செய்கிறது. அவசியம் நூல் வாங்கிப் படிப்பேன். நூலாசிரியருக்கு வாழ்த்துகள். மும்பையில் மழை கொட்டோ கொட்டென கொட்டுகிறது.

    ReplyDelete
  14. கரிகாலனுக்கு முன்பே ஓர் அரசனும் அவன் செய்த செயல் மட்டுமல்ல , தஞ்சை அருகில் கற்பாறை என்ற தகவலும் அருமை ஐயா . நன்றி

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரரே

    நல்ல பகிர்வு. நீரின் இன்றியமையாத பெருமையை விளக்கும் நல்ல சிறப்பான நூல் அறிமுகம். படித்து நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். நூலின் சுவாரஸ்யமான பல பிரிவுகளை தொகுத்து தந்தமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  16. நல்லதொரு நூல் அறிமுகம். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது.

    ReplyDelete