ஐஸ்லாந்தில் தடம்தெரியாமல்
மறைந்துபோன ஒரு பனியாற்றுக்கு, முதன்முதலாக, ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
அப்பனியாற்றின் பெயர் ஓக்ஜோகல் என்பதாகும்.
ஐஸ்லாந்தின் நிலப்பரப்பில் 11 விழுக்காடு பனியாறுகள் உள்ளன. ஒவ்வோராண்டும் ஐஸ்லாந்து
11 பில்லியன் டன் ஐஸை இழக்கிறது. 2200வாக்கில் ஐஸ்லாந்தில் உள்ள 400க்கும் மேற்பட்ட
பனியாறுகள் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிடும் என்று அறிவியலாளர்கள் நம்புகிறார்கள்.
ஓக்ஜோகல் பனியாறானது,
பனியாறு என்ற நிலையை 2014இல் இழக்க ஆரம்பித்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
1890இல் 16 சதுர கிமீ பரப்பளவில் இருந்த பனியாறு 2012இல் 0.7 சதுர கிமீ அளவிற்குச்
சுருங்கிவிட்டதாகவும், 2014இல் எவ்வித நகர்ச்சியும் இல்லாத நிலையில் அது உயிருள்ள பனியாறு
என்ற தன்மையை இழந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பருவ நிலை மாற்றத்தின் விளைவாகவே
இப்பனியாறு மறைந்துவிட்டதாகவும், தொடர்ந்து பல பனியாறுகள் இவ்வாறாக மறைந்துவிடும் என்றும்
அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கு
ஐஸ்லாந்தில் அந்தப் பனியாறு இருந்து மறைந்த இடத்தில் ஒரு செம்புத்தகட்டில் “எதிர்காலத்திற்கான ஒரு கடிதம்” என்ற தலைப்பில்
பின்வரும் சொற்கள் செதுக்கிவைக்கப்பட்டுள்ளன. “அடுத்த 200 ஆண்டுகளில் அனைத்து பனியாறுகளுக்கும்
இதே நிலைதான் ஏற்படும். என்ன நடந்துகொண்டிருக்கிறது, என்ன செய்யவேண்டும் என்பதை நாம்
அறிவோம் என்பதை இந்த நினைவுச்சின்னம் உணர்த்துகிறது. நாம் தான் இதைச்செய்தோம் என்பதை
நீங்கள் மட்டுமே அறிவீர்கள்”. கடந்த மே மாதம் பதிவான கார்பன் டை ஆக்சைடின் அளவைக்குறிக்கின்ற
“415 ppm CO2” என்ற சொற்களும் அதில் பதியப்பெற்றிருந்தன.
பனியாற்றுக்குப்
பிரியாவிடையாக அமைந்த இறுதிச்சடங்கில் பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட தேவையை
வலியுறுத்துகின்ற வகையில் கவிதை வாசிப்பு, சிறிது நேர மௌனம், அரசியல் தலைவர்கள் மற்றும்
அறிவியலாளர்களின் உரைகள் இடம்பெற்றிருந்தன. ஐஸ்லாந்தின் பிரதமர் கத்ரோன் ஜாகோப்ஸ்டாட்டிர்,
முன்னாள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையர் மேரி ராபின்சன் மற்றும் இந்த நினைவுச்சின்னத்
திட்டத்தில் ஈடுபட்ட அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர்
கலந்துகொண்டனர். இந்த நிகழ்வானது ஐஸ்லாந்தில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ளோர்
அனைவருக்குமே ஒரு தூண்டகோலாக அமையும் என்றும், பருவ நிலை மாற்றத்தின் விளைவுகளில் இதுவும்
ஒன்று என்றும் பிரதமர் கூறினார். அந்நிகழ்வில்
கலந்துகொண்டோரில் பலர் அதிக சோகத்துடன் காணப்பட்டனர். “பருவநிலை மாற்றத்தின் விளைவால் பனியாறு மறைந்ததைக்
குறிக்க உலகிலேயே முதன்முதலாக வைக்கப்படுகின்ற நினைவுச்சின்னம் இதுவே” என்று டெக்சாஸைச்
சேர்ந்த ரைஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் கூறினார். ஐஸ்லாந்தின் புவியியல் நிபுணரான
ஒட்டர் சிகரோசன், 10 வருடங்களுக்கு முன்பே இப்பனியாறு மறைந்துவிட்டது என்றும், ஊடங்களுக்காகத்
தயாரிக்கப்பட்ட ஒரு நினைவுப்பொறிப்பாக ஒரு இறப்புச் சான்றிதழைக் கொண்டு வந்ததாகவும்
கூறினார். அந்த பனியாற்றில் இருந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியதை அப்பகுதி மக்கள்
நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர்.
துணை நின்றவை
Iceland
Builds First Monument In Memory of Glacier Lost To Climate Change, NDTV, 18
August 2019
Funeral
for lost ice: Iceland bids farewell to glacier, abc news, 18 August 2019
Iceland
holds funeral for first glacier lost to climate change, Guardian, 19 August
2019
அதிசயமான தகவலை எங்களோடு பகிர்ந்து கொண்ட முனைவர் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம் சகோதரரே
ReplyDeleteகுடிநீராக பயன்பெற்று வந்த பனியாற்றுக்கு இறுதிச்சடங்கு நடைப்பெற்ற சம்பவம் மனதை கலங்க வைக்கிறது. ஒரு ஆறே காணாமல் போனால், அங்குள்ள மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு வருத்தம் வந்திருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
உலகில் இது போன்ற வியப்பூட்டும், மனதை கலங்க வைக்கும் தகவல்கள் என பலதும் தங்கள் பதிவு மூலமாக நாங்கள் அறிகிறோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுவாரஸ்யமான தகவல். ஆனால் இயற்கையைச் சீரழிக்கும் மனித குலத்தை தடுத்து நிறுத்த முடியுமா என்பது கேள்விக்குறியே.
ReplyDeleteநீர் நிலைகள் நம்மூரிலும் மறைந்து வருகின்றன.
ReplyDeleteநீங்கள் இந்த செய்தியைப் பகிர்ந்து கொண்டதால்
சூழ்னிலைக் குற்றவாளிகளை உலகம் எந்த விதத்திலும் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்று ஆதங்கமாக இருக்கிறது.
மிக நன்றி ஐயா.
ஓக்ஜோகல் உச்சரிப்பு நமது ஒகேனக்கல்லை நினைவில் கொண்டு வந்தது. அறியாத தகவல்கள் அறிய வந்தன. நன்றி.
ReplyDelete//“பருவநிலை மாற்றத்தின் விளைவால் பனியாறு மறைந்ததைக் குறிக்க உலகிலேயே முதன்முதலாக வைக்கப்படுகின்ற நினைவுச்சின்னம் இதுவே”//
ReplyDeleteகேட்கவே கஷ்டமாய் இருக்கிறது.
//அந்த பனியாற்றில் இருந்த நீரைக் குடிநீராகப் பயன்படுத்தியதை அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியோடு நினைவுகூர்ந்தனர்.//
மக்களின் மனநிலை எவ்வளவு பாரமாக இருக்கும், மனிதன் செய்யும் தப்பால் இயற்கை இப்படி ஆக்கி விடுகிறது என்பதை படிக்கும் போது இனியாவது மக்கள் உணர்ந்து கொண்டால் சரி என்று இருக்கிறது.
அருமையான தகவல்
ReplyDeleteபூகோளக் காலநிலை மாற்றம் இன்னும் பல மாற்றங்களைச் செய்யும்.
வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளை 'மரம் வெட்டாதீர்கள், ஏர் கண்டிஷன்கள் இப்படித் தயாரியுங்கள், கார்களுக்கான கட்டுப்பாடு' என்று ஏகப்பட்டது சொல்கிறார்கள். ஆனால் அவங்க இதை எதையும் கடைபிடிப்பதில்லை.
ReplyDeleteதிரு மணிகண்டன் ஆறுமுகம் (மின்னஞ்சல் வழி mani.tnigtf@gmail.com)
ReplyDeleteமுடிவை நோக்கி ....
பயணிக்கிறதோ
நன்றி அய்யா
ஆ.மணிகண்டன்
வருந்தத்தக்கது.
ReplyDeleteஅரிதான தகவலைப் பகிர்ந்தமைக்கு நன்றி. படிக்க சுவாரசியமாக இருந்தாலும் மனதை வருத்தும் செய்தி!
ReplyDeleteமனிதன் மற்ற கோள்களை ஆராய்வதற்கு முன் நமது கோளை எப்படி காக்க வேண்டிய முயற்சியில் ஈடுபடவேண்டும் என்ற எண்ணத்தை தங்களின் கட்டுரை அருமையாக உணர்த்துகிறது.
ReplyDelete