26 October 2019

நாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவெழுகூற்றிருக்கை : திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் அருளிய திருவெழுகூற்றிருக்கையினை அண்மையில் நிறைவு செய்தேன். அப்பாடலின் சில அடிகளுக்கான பொருளைக் காண்போம். 



ஒரு பேர் உந்தி இரு மலர்த் தவிசில்,
ஒரு முறை அயனை ஈன்றனை; ஒருமுறை,
இரு சுடர் மீதினில் இயங்கா மும்மதில் -
இலங்கை இரு கால் வளைய, ஒரு சிலை
ஒன்றிய ஈர் எயிற்று அழல்வாய் வாளியில் 
அட்டனை; ...
எம்பெருமானே! இவ்வுலகைப் படைப்பதற்காக உன் திருநாபியில் ஒப்பற்றதாய்ப் பெரியதான தாமரை மலரின் இதழ்களான ஆசனத்தில் ஒரு தரம் பிரமனைப் படைத்தாய்; உனக்கு உயிராகிய பிராட்டியை மீட்பதற்கு நீ செய்தது; இரண்டு சுடர்களாகிய சந்திர சூரியர்கள் இலங்கையின் மீது சஞ்சரிக்கவும் அஞ்சுகிற ஒரு காலத்தில் மூவகை அரண் வாய்ந்த இலங்கை அழியுமாறு உன்னுடைய ஒப்பற்ற சார்ங்கத்தின் இரண்டு முனைகளை இணைத்து நாண் பூட்டி வளையச் செய்து அம்புகளை எய்தாய். இந்த அம்புகள் இரண்டு எயிறுகள் வாய்ந்தவை; அழலை உமிழ்வன. 

...ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை; கூறிய
அறுசுவைப் பயனும் ஆயினை;  சுடர் விடும்
ஐம் படை அங்கையுள் அமர்ந்தனை;...
வராகப்பெருமானாய் அவதரித்து ஏழு உலகங்களையும் வெள்ளத்தினின்றும் பெயர்த்தெடுத்து பூமிப் பிராட்டியை எயிற்றில் கொண்டு விளங்கினாய். நூல்களில் கூறப்படுகின்ற மாந்தர் உகக்கும் சுவைகளாகிய தித்திப்பு, உவர்ப்பு, புளிப்பு, கைப்பு, துவர்ப்பு, காரம் இவையாகிய பயனுமாய், உயிர்களைக் காப்பதற்கு என்றே திருக்கைகளில் ஒளி விடுகின்ற சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு இவற்றை ஏந்திய நிலையிலேயே இருக்கிறாய்.

...மதுமலர்ச் சோலை வண்கொடிப் படப்பை,
வரு புனல் பொன்னி மாமணி அலைக்கும்
செந்நெல் ஒண் கழனித் திகழ் வனம் உடுத்த,
கற்போர் புரிசைக் கனக மாளிகை,
நிமிர் கொடி சும்பில் இளம்பிறை துவக்கு,
செல்வம் மல்கு, தென் திருக்குடந்தை,
அந்தணர் ந்திர மொழியுடன் வணங்க,
ஆடு அரவ அமளியில் அறி துயில் அமர்ந்த
பரம! நின் அடியிணைப் பணிவன்,
வரும் இடர் அகல மாற்றோ வினையே.
திருக்குடந்தையில் வளம்; சோலைகளிலே தேன் வெள்ளம் குறைவதில்லை. எங்கும் கொடிக்கால்களும், நீர் நிலங்களும் வாய்ந்துள்ளன. பெருகிவரும் காவிரியாறு எங்கும் இரத்தினங்களைக் கொழிக்கின்றது. வயல்களில் செந்நெல் அடர்ந்து உள்ளது. தோப்புகள் சூழ்ந்துள்ளன. கற்றோர்கள் வாழப்பெறும் மதில்கள் சூழ்ந்த பொன்மயமான மாளிகைகளும் மலிந்துள்ளன. மாளிகையின் மேல் பறக்கும் துகிற்கொடிகள் ஆகாயத்தில் திரியும் இளஞ்சந்திரனை மறைப்பன. இவ்வாறு பலவகைப்பட்ட செல்வம் அடர்ந்த திருக்குடந்தையில் அந்தணர் வேத மந்திரங்களை ஓதி வணங்கி, விரித்தாடும் படங்களையுடடைய ஆதிசேடனாகிய அணையில் யோக நித்திரை செய்யும் பிரமனே! என்னுடைய துன்பங்களை நீ மாற்றுவாய். உன்னுடைய திருவடிகளை வணங்குகின்றேன்.


நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் : தொகுதி 3
உரையாசிரியர் :  முனைவர் இரா.வ.கமலக்கண்ணன்
வர்த்தமானன் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா தெரு, தியாகராய நகர், 
சென்னை 600 017, முதற்பதிப்பு 2011
தொலைபேசி : 99418 63542, 90949 63125, 93806 30192, 2814 4995, 2814 0347,
43502995

இதற்கு முன்னர் நாம் வாசித்தது: நம்மாழ்வார் அருளிய பெரிய திருவந்தாதி  (2585-2671)

26 அக்டோபர் 2019 காலை மேம்படுத்தப்பட்டது.

16 comments:

  1. சுவைத்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  2. இன்னும் பத்து வருடங்கள் கடந்து வர வேண்டும். நாம் வாசிக்கும் ஒவ்வொரு விசயங்களும் நம் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது சுவைக்கும். ஆழமான தாக்கத்தை உருவாக்கும். இது போன்ற வாசிப்பு வாசிக்கும் அளவிற்கு என் வயது மற்றும் என் வாழ்க்கை அனுபவங்கள் இப்போதைய சூழலில் இருக்காது என்றே தோன்றுகின்றது. இவையெல்லாம் பட்டியலில் உள்ளது. பார்க்கலாம். காலம் தீர்மானிக்கும். காலம் வழிகாட்டும்.

    ReplyDelete
    Replies
    1. @ஜோதிஜி - //நம் வாழ்க்கையோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும்.// - நான் நினைக்கிறேன், நம் ஆர்வத்தோடு தொடர்புடையதாக இருக்கவேண்டும். ஒரு ஃபீல்டில் ஆர்வத்துக்கு வயது ஒரு கிரைடீரியா கிடையாதல்லவா?

      Delete
    2. பக்தி மார்க்க விசயங்களில் என் ஆர்வம் இல்லை. அவற்றையெல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். பத்தாண்டு காலம் முழுமையாக அதற்குள் மூழ்கி முத்தெடுத்து அதன் முழுமையான அனுபவங்களை உள் வாங்கி விட்டு வெளியே வந்து விட்டேன். இரட்டையர்களை திருவண்ணாமலையில் தான் பிறக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அங்கே தான் பிறந்தார்கள். உச்சி கால பூஜை வரைக்கும் பதிகம் பாடிக் கொண்டிருந்தேன். நான் மட்டும் தான் அங்கே இருந்தேன். அய்யா கூட என்னை தொந்தரவு செய்யாமல் சென்று விட்டார். பிறகு இரவு புறப்பாடு சமயத்தில் தான் ஆட்கள் உள்ளே வந்தார்கள். அந்த அளவுக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளவனாக இருந்தேன். வாழ்க்கையில் என்ன நடக்கும்? எப்போது நடக்கும்? என்பதன் எதார்த்தம் புரிந்து மனம் சார்ந்த கட்டுப்பாடு சமாச்சாரங்களில் இறங்கி அதுவும் கைகூடி விட்டது. எதுவும் பாதிப்பதில்லை. எதையும் பாதிக்கவிடுவதில்லை. அலையில் மிதந்து செல்லும் சருகு போல வாழ்க்கையை மாற்றிக் கொண்ட காரணத்தால் இப்பொழுதெல்லாம் எதையும் டீப்பாக உள்ளே நுழைந்து ஆராய விரும்புவதில்லை.

      Delete
    3. //அலையில் மிதந்து செல்லும் சருகு போல வாழ்க்கையை// - இது போதும் புரிந்துகொள்ள. வாழ்த்துகள் ஜோதிஜி.

      Delete
  3. படிப்படியாக விளக்கம் அருமை.

    ReplyDelete
  4. திருவெழுக்கூற்றிருக்கை வாசித்தேன். மிக்க மகிழ்ச்சி.

    பாடல் splitting கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.

    ReplyDelete
  5. இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  6. வழக்கம் போல் அருமையான விளக்கம். அதைவிட ஜோதிஜியின் ஞானம்தேடிய கதை வியக்கவும்சிந்திக்கவும் வைக்கிறது. மிகப் பக்குவம் அடைந்திருக்கிறார். இவர் எதையும் ஓர் காரியமாகத் தான் இயல்பாகச் செய்து கொண்டிருப்பார் என நினைக்கிறேன். தன்னிலிருந்து விலகித் தன்னைத் தானே புரிந்து கொண்டு விட்டார் போலும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அம்மா.

      Delete
    2. நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளி நல்வாழ்த்துகள்.

      Delete
  7. வணக்கம் சகோதரரே

    திருமங்கையாழ்வார் அருளிய திருவெழுகூற்றிருக்கை பாடல்களும், அதன் விளக்கமும் அருமை.

    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  8. அருமையான கண்ணோட்டம்

    இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete
  9. நானுமொரு திருவெழுக்கூற்றிருக்கை என்பாணியில் எழுதி இருக்கிறேன் பார்க்கவும் http://gmbat1649.blogspot.com/2012/08/blog-post_21.html

    ReplyDelete