15 February 2020

வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர் : புதிய தலைமுறை

வியக்க வைக்கும் விக்கிப்பீடியா பதிவர் என்ற தலைப்பில் என்னுடைய விக்கிப்பீடியா அனுபவங்கள் புதிய தலைமுறை (13.2.2020, பக்.30, 31) இதழில் வெளியாகியுள்ளது. அதனைப் பகிர்வதில் மகிழ்கிறேன், திரு சு.வீரமணி அவர்களுக்கும், புதிய தலைமுறை இதழுக்கும் நன்றியுடன்.

கல்வெட்டு, ஓலைச்சுவடி, அச்சு நூல்கள் என காலம்தோறும் ஒவ்வொரு வளச்சியிலும் கொடிகட்டிப் பறந்தது தமிழ். இப்போது இணையத்திலும் அதுபோல் தமிழின் கொடி பறக்கிறது. அதற்குக் காரணமானவர்களில் ஒருவர் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

உலகளவில் அனைத்து தகவல்களையும் தரக்கூடிய, கட்டற்ற செய்தி களஞ்சியமாக விக்கிப்பீடியா உள்ளதால், எந்த செய்தியைப் பற்றி அறிந்துகொள்ளவும் உடனே நாம் இணையத்தில் துலாவுவது விக்கிப்பீடியாவைத்தான். ஆங்கிலம், சீனம், ரஷ்ய மொழிகளில் அதிகளவிலான செய்திக் கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் உள்ளது. ஆனால், தமிழில் அந்தளவுக்கு விக்கிப்பீடியாவில் செய்திகள் இல்லையென்ற குறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை இருந்து வந்தது. அந்த குறையை போக்கி பல்வேறு தமிழ் கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் சேர்க்கும் நோக்கத்துடன் பல தமிழறிஞர்கள் விக்கிப்பீடியாவில் பயனராக இணைந்தனர்.



இவ்வாறு 2014இல் விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கி தமிழில் இல்லாத, தமிழில் வெளிவராத பதிவுகளை புதிதாக எழுதுவதையும், ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம். இப்போது வரை தமிழ் விக்கிப்பீடியாவில் 994 கட்டுரைகள், ஆங்கில விக்கிப்பீடியாவில் 146 கட்டுரைகள் என மொத்தம் 1140 கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரைச் சந்தித்தோம்.

விக்கிப்பீடியாவில் தகவல்களை பதிவேற்றிக்கொண்டே நம்மிடம் பேசிய முனைவர் பா.ஜம்புலிங்கம் “நான் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ளேன். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோதே கடந்த 25 ஆண்டுகளாக சோழ நாட்டில் உள்ள பௌத்தம் தொடர்பான சிற்பங்கள், விகாரைகள், அதன் எச்சங்கள் பற்றிய ஆய்வுகளை செய்து வந்தேன். அதற்கான களப்பணியின்போது நான் புதிதாக 30 புத்த, சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டறிந்துள்ளதுடன், சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளேன்.

இந்த தகவல்களை பதிவு செய்வதற்காகத்தான் முதன்முதலாக இணையத்தில் இணைந்தேன். சோழ நாட்டில் பௌத்தம் தொடர்பான தகவல்களை பதிவு செய்வதற்காக ‘சோழ நாட்டில் பௌத்தம்’ என்ற ப்ளாக் தொடங்கி எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ‘முனைவர் ஜம்புலிங்கம்’ என்ற பெயரிலும் ஒரு ப்ளாக் தொடங்கி எழுத ஆரம்பித்தேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்போதுதான் விக்கிப்பீடியா அறிமுகமானது. ஆங்கில விக்கிப்பீடியாவில் உலகிலுள்ள அனைத்து தகவல்களும் விரல் நுனியிலிருந்தது. ஆனால், தமிழ் விக்கிப்பீடியாவைப் பார்த்தபோது அதில் பெரும்பாலான தகவல்கள் இல்லை. அதனால், அதில் பயனராக இணைந்து புதிய பதிவுகளை எழுதுவோம் என்று சாதாரணமாக ஆரம்பித்த வேலைதான் இப்போது இந்த சூழலில் வந்து நிற்கிறது. ஆரம்பத்தில் நான் விக்கிப்பீடியாவில் இல்லாத அறிஞர்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், அருங்காட்சியகங்கள், புத்தக மதிப்புரை போன்றவற்றை எழுதினேன். பிறகு பல்வேறு தகவல்களை எழுத ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் உள்ள கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்தும், தமிழில் உள்ள கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் எழுதியுள்ளேன்”  என்றபடி நினைவுகளை அசைபோடுகிறார்.

2014ஆம் ஆண்டில் தொடங்கி ஆறு ஆண்டுகளாக விக்கிப்பீடியாவில் இயங்கிவரும் இவர், ஒவ்வொரு ஆண்டும் விக்கிப்பீடியாவில் அதிகக் கட்டுரைகள் எழுதியோர் பட்டியலில் முன்னணி இடத்தில் இருக்கிறார். விக்கிப்பீடியாவில் எப்படி எழுதுவது என்று இளைஞர்கள், சக அறிஞர்களுக்கு பயிற்சியளித்தும் வருகிறார்.

விக்கிப்பீடியாவில் எழுதுவதற்காக எந்த மதிப்பூதியமும் அந்த நிறுவனத்திலிருந்து  வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் தனது சொந்தக் காசை செலவு செய்து தமிழகத்தில் உள்ள முக்கியமான கோயிலகள், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கெல்லாம் சென்று அதனைப் பற்றி பதிவு செய்துள்ளார் ஜம்புலிங்கம். நாம் விக்கிப்பீடியாவில் தேடும் பெரும்பாலான கோயில்களைப் பற்றிப் பதிவு செய்திருப்பது இவர்தான்.

தொடர்ந்து பேசிய ஜம்புலிங்கம், “உலகில் அதிக கல்வெட்டுகள், சுவடிகள் கொண்ட மொழி தமிழ்தான். அதுபோல இணையத்திலும் நமது தமிழ் வியாபித்து நிற்கவேண்டும். அதற்காகத்தான் உழைத்து வருகிறேன். இளைஞர்கள், அறிஞர்கள் அனைவரும் கடமையாக நினைத்து விக்கிப்பீடியாவில் பதிவு செய்தால் அது தமிழ்ச் சமூகத்துக்கு பயனுற்றதாக இருக்கும்” என்கிறார்.   
புகைப்படம் நன்றி : புதிய தலைமுறை
             
விக்கிபீடியா தொடர்பான பிற பதிவுகள்: 
டிசம்பர் 2019 : விக்கிபீடியாவில் 900ஆவது பதிவு
பிப்ரவரி 2020 : விக்கிபீடியா வேங்கைத்திட்டம் :முதலிடத்தில் தமிழ்
---------------------------------------
The Hindu நாளிதழில் வருகின்ற வித்தியாசமான சொற்களைப் பற்றி அவ்வபோது முகநூலில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் அண்மையில் பதிந்த பதிவு.

Love letter சொல் பயன்பாடு.

"போர்ச்சூழலில் ஸ்கேட்போர்டு கற்றுக்கொள்ளல் (நீ ஒரு பெண்ணாக இருப்பின்)" திரைப்படமானது ஆப்கானிய நாட்டுப் பெண்களுக்கான என் அன்புக்காணிக்கை என்று அதன் இயக்குநர் கரோல் டைசிங்கர் கூறினார். The film's director Carol Dysinger also highlighted.......... "This movie is my love letter to the brave girls of that country," she said. (The Hindu of even date, p.16) (போஸ்டர் நன்றி : https://skateistan.org/)



---------------------------------------

16 comments:

  1. தகவல்கள் அறிந்தேன்.   வாழ்த்துகள்.  

    கட்டுரையில் நீங்கள் தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகள் பற்றிக் குறிப்பிடவில்லையோ...

    ReplyDelete
  2. மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துகள் ஐயா...

    ReplyDelete
  3. இன்னும் பல சிறப்புகளை எய்த வேண்டும் தாங்கள்....

    ReplyDelete
  4. முனைவர் அவர்களின் உயரம் இன்னும் உயர்ந்திட மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. சிறப்பு. உங்களைப் போன்ற இன்னும் பலர் விக்கிப்பீடியாவை மெருகேற்ற வேண்டும். வரலாறு மட்டுமன்றி நடப்பு விவகாரங்களும் கூட தமிழில் விக்கிபீடியாவில் எழுதப்பட வேண்டும்.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    ReplyDelete
  6. மனம் நிறைந்த வாழ்த்துகள் முனைவர் ஐயா. தொடரட்டும் தங்களது அரும்பணி.

    ReplyDelete
  7. உங்களை விக்கிபீடியா பதிவர் என்று மட்டுமே ஒரு சிமிழ் வட்டத்திற்குள் அடைக்க முடியாதில்லையா?. உங்களது மற்ற செயல்பாடுகளையும் தெரிவித்திருக்கலாம்.

    ReplyDelete
  8. உங்களை சந்தித்து உரையாட வேண்டும் என்னும் ஆவல் அதிகமாகிற்து

    ReplyDelete
  9. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. வாழ்த்துகள் ஐயா
    தொடரட்டும் தங்களின் அயரா தமிழ்ப் பணி

    ReplyDelete
  11. வணங்குகிறேன் ஐயா!. உங்கள் பணி தொடர வாழ்த்துகள். 

    ReplyDelete
  12. Your contributions to tamil in Wikipedia is incomparable,

    my best wishes...

    ReplyDelete
  13. மிகச் சிறப்பு அய்யா

    ReplyDelete
  14. அய்யா தங்களின் தமிழ் இணையப் பதிவு சாதனை படைக்க வாழ்த்துக்கள்.தஞ்சை அப்பாண்டை ராஜ்

    ReplyDelete
  15. மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. வாழ்த்துகள். தொடர்க இனிய பணி.

    ReplyDelete