04 July 2020

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2019 : 117 பதிவுகள்

1 நவம்பர் 2019 முதல் 7 டிசம்பர் 2019 வரை நடைபெற்ற, ஆசிய மாதம் தொடர் தொகுப்பில் கலந்துகொண்டமைக்காக விக்கிப்பீடியாவிலிருந்து வாழ்த்து அட்டையும், சான்றிதழும் (மின்னஞ்சலில்) அண்மையில் வந்துள்ளன. இப்போட்டியில் 16 பயனர்கள் கலந்துகொண்டு 713 கட்டுரைகள் எழுதியுள்ளோம். இதில் நான் 117 கட்டுரைகளை எழுதி இரண்டாம் இடத்தில் உள்ளேன்.  


ஆசிய விக்கிப்பீடியக் குமுகங்களுக்கிடையில் புரிந்துணர்வை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு ஆசிய மாதம் (Asian Month) என்னும் தொடர்தொகுப்பினை விக்கிப்பீடியா நடத்தியது. சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா:  மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத்தளங்கள், கைத்தொழில்கள் கலாச்சாரம் பற்றியதாக இருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.


ஆசியா தொடர்பான ஒரு நாட்டைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இந்தோனேசியாவினைத் தேர்ந்தெடுத்தேன். 


இந்தோனேசிய அருங்காட்சியகங்கள்இந்தோனேசிய அரண்மனைகள், இந்தோனேசியக் கோயில்கள், இந்தோனேசியாவில் உள்ள இந்துக் கோயில்கள், இந்தோனேசியாவில் உள்ள பௌத்தக் கோயில்கள்ஆவணக்காப்பகங்கள், கலைக்கூடங்கள், ஆறு ஜனாதிபதி மாளிகைகள், தொல்லியல் தளங்கள், கோளரங்கம், தேசிய பத்திரிக்கை நினைவுச்சின்னம் உள்ளிட்ட தலைப்புகளில் 117 புதிய பதிவுகளைத் தொடங்கினேன். இவையனைத்தும் ஆங்கில விக்கிப்பீடியாவிலிருந்து என்னால் மொழிபெயர்த்து எழுதப்பட்டவையாகும்.


இந்துக் கோயில்களை கண்டி, புரா, மற்றும் கோயில் என்றவாறு அழைக்கின்றனர். கண்டி என்பது ஓர் இந்து அல்லது பௌத்தக் கோயிலாகும். இப்பிரிவினைச் சார்ந்த கோயில்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு வரையிலான இந்து-பௌத்த காலத்தில் கட்டப்பட்டவையாகும். புரா என்பது பாலினிய இந்துக் கோயிலாகும். கோயில் என்பது இந்துக் கோயிலைக் குறிக்கும். இவற்றில் சில பதிவுகளைக் காண்போம்.

இஜோ கோயில் யோக்யகர்த்தாவிற்கு அருகில் உள்ள கோயிலாகும். முதன்மைக் கோயிலுக்கு முன் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோருக்கான மூன்று பெர்வாரா (இதைப் படிக்கும்போது பரிவாரக் கோயில்கள் என்பது நினைவிற்கு வந்தது) கோயில்கள் உள்ளன. கருவறைக்குச்செல்லும் நுழைவாயிலின் மேற்குப் பகுதியில் இரு புறங்களிலும் ஜன்னல் அல்லது மாடம் (கோஷ்டம் என்று நாம் அழைப்பதைப்போல) போன்ற அமைப்புகள் உள்ளன. அதில் யாளி, மகர சிற்பங்கள் உள்ளன.

எம்பூல் தீர்த்தக்கோயில் பாலியில் தம்பக்சைரிங் என்னுமிடத்தில் அமைந்துள்ள, பெட்டிர்டான் அல்லது குளியல் கட்டமைப்பைக் கொண்ட, இந்து பாலினிய தீர்த்தக் கோயில் ஆகும். புனித நீரூற்றுக்காக அது பிரபலமானது. அங்கு பாலினிய இந்துக்கள் சடங்கு சுத்திகரிப்புக்கு செல்கின்றனர். கோயில் குளத்தின் நீரூற்று புனிதமானதாகக் கருதப்படுகிறது.

புரா கோவா லாவா எனப்படுகின்ற, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் பெரும்பாலும் சோகி கஹங்கன் ஜகத் அல்லது "உலகின் ஆறு சரணாலயங்கள்" என அழைக்கப்படுகின்ற பாலியில் உள்ள உள்ள ஆறு புனிதமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.

புரா தமன் சரஸ்வதி உபுத் தண்ணீர் அரண்மனை என்றழைக்கப்படுகின்ற பாலினிய இந்துக் கோயிலாகும். இக்கோயில் சரஸ்வதி தெய்வத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். புரா தமன் சரஸ்வதி அதன் தாமரை குளத்திற்காகச் சிறப்பினைப் பெறுகிறது.

புரா மாஸ்பகித்பஞ்ச மண்டலா என்ற கருத்துருவின்படி பாலியில் அமைக்கப்பட்ட ஒரே கோயில் என்ற பெருமையினைப் பெற்ற கோயிலாகும். 

பெசாகி கோயில் கிழக்கு பாலியில் அகுங் மலைச்சரிவுகளில் உள்ள பெசாகி கிராமத்தில் உள்ள ஒரு புரா வளாகத்தில்  அமைந்துள்ளது. புரா என்பது கோயிலையே குறிக்கிறது. இது பாலியில் உள்ள இந்து மதத்தின் மிக முக்கியமான, மிகப்பெரிய மற்றும் புனிதமான கோயில் ஆகும்.

மாரியம்மன் கோயில் வடக்கு சுமத்ராவில் மேடான் என்னுமிடத்தில் உள்ள, 1884 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட மாரியம்மன் கோயிலாகும். இக் கோயில் மேடானில் ஆரம்ப காலத்தில் குடியேறிய தமிழ்க் குடியேற்றவாசிகளின் கூட்டு முயற்சியால் கட்டப்பட்ட கோயிலாகும்.


ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தருகிறது. தற்போது ஆங்கில விக்கிப்பீடியா நடத்துகின்ற 10,000 இந்திய கட்டுரைப்போட்டிச் சவாலில் (1 மே 2020-31 ஜுலை 2020) முதன்முதலாகக் கலந்துகொண்டுள்ளேன். இன்றுவரை இதில் 41 பேர் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் விக்கிப்பீடியாவில் நான் ஆரம்பித்த தமிழ்நாடு தொடர்பான கட்டுரைகளிலிருந்து குறைந்தது 10 கட்டுரையாவது ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதத் திட்டமிட்டுள்ளேன். போட்டி நிறைவடைந்தபின் அதன் அனுபவத்தை எழுதுவேன்.

அஞ்சலில் பெறப்பட்ட வாழ்த்து அட்டை மற்றும், சான்றிதழ்



1 நவம்பர் 2021இல் மேம்படுத்தப்பட்டது.

12 comments:

  1. தளர்வில்லா உழைப்பு, அரிய சாதனை.  வாழ்த்துகளும், பாராட்டுகளும்.

    ReplyDelete
  2. அழகான படங்களும், செய்திகளும் நன்றி.

    போட்டியில் வெற்றி பெறுவீரகள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.
    மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. கோவில்கள் உள்ள இந்தோனேசியாவை தேர்ந்தெடுத்து எழுதியதற்கு பாராட்டுகள்! படங்களும் அருமை. ஆன்கில விக்கிபீடியாவிலும் தங்களின் முத்திரையை பதித்து வெற்றிபெற வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வாழ்த்துகள் ஐயா...

    நேரத்தை பயனுள்ளதாக ஆக்கி கொண்டு விட்டீர்கள்... பாராட்டுகள்...

    ReplyDelete
  5. அசாத்திய உழைப்பு. வாழ்த்துகள் ஐயா.

    தொடரட்டும் உங்கள் சாதனைகள்.

    ReplyDelete
  6. உங்களின் உழைப்பு பிரமிப்பாக இருக்கிறது. நிறைய தேடல்கள், விவரணங்கள், பதிவுகள் என்று உங்கள் சாதனைகள் வளர்ந்து கொண்டே வளர்கின்றன. வாழ்த்துகள் பாராட்டுகள் ஐயா. உங்கள் முயற்சிகள் உழைப்பு எல்லாம் மேலும் மேலும் பல சாதனைகளைப் படைத்திட வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம்.

    துளசிதரன்

    கீதா

    ReplyDelete
  7. பாலியில் உள்ள இந்துக்கள் தங்களை இந்திய இந்துக்களை விட உயர்வாக கருதுகின்றனறாம் என்பேரன் பாலி போய்வந்தபின் கூறியது

    ReplyDelete
  8. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.
    படங்களும், செய்திகளும் அருமை.

    ReplyDelete
  9. குமுகம் என்பது எனக்கு புதிய சொல் ஐயா.
    தங்கள் உழைப்பும் புகைப்படங்களும் மிக அருமை.

    ReplyDelete
  10. தங்களின் தளராத உழைப்பும் ஆராய்ச்சி திறனும் வியப்பளிக்கிறது , ஓய்வில் இருக்கவேண்டிய நேரத்தைவிட ஆய்வில் இருக்கும் நேரமே அதிகம் ஐயா உமக்கு. மேலும் பல விருதுகளும் அங்கீகாரமும் தங்களை வந்து சேரட்டும்.

    சிரமதாழ்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  11. வாழ்த்துகள் ஐயா
    விக்கிப்பீடியாவோடு இரண்டறக் கலந்துவிட்டீர்கள்

    ReplyDelete
  12. மகிழ்ச்சியான வாழ்த்துக்கள் அய்யா தங்களின் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி...

    ReplyDelete