11 July 2020

ரயில் போகிறது : தேடலுக்கான ஆரம்பம்

கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி என்று அழைக்கப்பட்ட, தற்போது அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது (1972-75) சம்பிரதி வைத்தியநாதன் தெருவிலிருந்த எங்கள் வீட்டிலிருந்து குட்டியாம்பாளையத்தெரு, தண்ணீர்த்தொட்டியைக் கடந்து (இப்போது தண்ணீர்த்தொட்டி இடிந்த நிலையில் உள்ளது) தஞ்சாவூர் முதன்மைச்சாலை வழியாக பள்ளிக்குச் செல்வது வழக்கம். சில சமயங்களில் சிங்காரம் செட்டித்தெரு, மௌனசுவாமி மடத்துத்தெரு வழியாகவும் செல்வேன். அவ்வாறு போகும்போதும் வரும்போதும் குட்டியாம்பாளையத்தெருவில் வரம் தரும் மாரியம்மன் கோயில் அருகில் குடியிருந்த ஜோசியர் ஒருவர் (பின்னர் அவரது மகன் வேதகுமார் எங்களுக்கு கல்லூரி நண்பரானார்) அவ்வப்போது என்னை அழைத்து, திண்ணையில் உட்காரவைத்து சில புத்திமதிகளைக் கூறுவார். வீட்டைப்பற்றியும், படிப்பைப் பற்றியும், பள்ளிப்படிப்பிற்குப் பின் உள்ள இலக்கினைப் பற்றியும் பொறுமையாகப் பேசுவார். என்னைப் போலவே பலரை அவ்வாறு அழைத்து உட்காரவைத்துப் பேசுவதையும் பல முறை பார்த்துள்ளேன்.

ஒரு முறை அவர் “ரயில் போகிறது” என்பதை ஆங்கிலத்தில் கூறும்படி கேட்டார். நான், “The train is going”, “The train go” “Train go” என்றவாறு பதில் கூறினேன். அப்போது அவர் “Third person singular present tense வரும்போது கடைசியில் ‘s’ சேர்க்கவேண்டும்” என்றார். “The train goes” என்றோ  “Train goes” என்றோ சொன்னதாக நினைவு. ஒரு சொற்றொடரை எழுதும் உத்தியைத் தந்ததோடு, எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும் என்பதை அது உணர்த்தியது.

தாத்தாவின் கண்டிப்பில் வளர்ந்த நான் பொறுமையாக அவர் சொல்வதைக் கேட்பேன். அப்போதெல்லாம் வெளியில் பெரியவர்கள் கூறும் புத்திமதிகளையும், நண்பர்களின் பெற்றோர் கூறும் அறிவுரைகளையும் நான் மட்டுமல்ல, என் நண்பர்களும் பொறுமையாகக் கேட்பதுண்டு. அவை பின்னாளில் என் வாழ்வின் பல கட்டங்களில் உதவின. என் வாசிப்புப்பழக்கத்தினை மேம்படுத்தவும், பல கட்டுரைகளை நான் எழுதவும், என் தேடலுக்கான ஆரம்பமாகவும் அப்போது இடப்பட்ட அடித்தளங்களில் ஒன்றாக இந்நிகழ்வினைக் கருதுகின்றேன். மற்றவர்கள் ஏற்றார்களோ இல்லையோ, அவர் கூறிய புத்திமதிகள் பலவற்றை நான் கடைபிடித்துவந்துள்ளேன். அவற்றில் இந்த ரயில் போகிறது நிகழ்வும் ஒன்றாகும். 

இப்போதெல்லாம் பெற்றோர் அந்த அளவிற்குப் பழக விடுகின்றார்களா என்பதும் வளரும் மாணவர்களும், குழந்தைகளும் இவ்வாறாக பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கின்றார்களா என்பதும் சிந்திக்கும் அளவிலேயே உள்ளது. குழந்தைகள் வளரும்போது மன நிலையில் பக்குவப்படுவதானது அவர்களின் முன்னேற்றத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் என்பதை அனுபவத்தில் கண்டுள்ளேன். 

11 ஜுலை 2020 மாலை மேம்படுத்தப்பட்டது.

28 comments:

  1. இந்தளவு தாங்கள் உயர்ந்த நிலைக்கு வந்ததே இது(வும்) தான் முக்கிய காரணம் ஐயா...

    ReplyDelete
  2. நல்லனுபவங்கள்தாம் நல்லறிவைத் தருகின்றன.
    அருமை நண்பரே...!

    ReplyDelete
  3. அருமையா சொன்னீங்க. அடுத்தவங்களோட பழக இப்போதெல்லாம் யாருமே விடுவதில்லை. எனவே நத்தைக் கூட்டு மனப்பான்மையில்தான் பெரும்பாலான குழந்தைகள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  4. இப்போதெல்லாம் பெற்றோர் அந்த அளவிற்குப் பழக விடுகின்றார்களா என்பது மட்டுமல்ல, இக்காலப் பிள்ளைகள் பெற்றோர்களுடன் பழகுகிறார்களா என்பதே சந்தேகம்தான்.
    பெரியோர் பேசுவதைக் கேட்பதும், அதன் வழி நடப்பதும், நம்மை நல்வழிப் படுத்தும் என்பதை உணர்ந்துள்ளேன் ஐயா.
    தங்களின் நினைவலைகளைத் தொடருங்கள்
    நன்றி

    ReplyDelete
  5. ஒரு எடுத்துக்காட்டு பலசெய்திகளைக் கூறுகிறது

    ReplyDelete
  6. //இவ்வாறாக பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கின்றார்களா என்பதும் சிந்திக்கும் அளவிலேயே உள்ளது. //

    இருக்கிறார்கள், ஸார். அமெரிக்காவில் இருக்கும் என் பேரன்கள், பேத்தி அப்படித்தான் இருக்கிறார்கள். யார் எது பற்றி அவர்களுடன் பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக் கொள்வார்கள். தனக்குத் தோன்றும் சந்தேகங்களையும் கேட்டு பதில் பெற முயற்சிப்பார்கள். இதெல்லாம் நம் வளர்ப்பின் அடிப்படையில் படியும் குணங்கள் என்றே நான் நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. //கும்பகோணத்தில் பேட்டைத்தெருப்பள்ளி //

    இப்பொழுது இந்த பேட்டைத் தெருவின் பெயர் மாறியிருக்கிறதா? அறிந்து கொள்ள ஆவல். ஏனென்றால் இந்த பேட்டைத் தெருவில் இருக்கும் ஒரு வீட்டில் தான் நான் பிறந்தேன். அந்நாளைய வீட்டு இலக்கம் எழுதப்பட்ட ஒரு தபால் கவர் கூட என் தஸ்தாவேஜூக்களில் ஒன்றாக பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முன்பொரு பதிவில்கூட இக்கேள்வியை நீங்கள் கேட்ட நினைவு. நண்பர்களிடம் தற்போது கேட்டேன். பேட்டை பாக்கியநாதன் தெரு (தாலுகா போலீஸ் ஸ்டேஷனைத் தொடர்ந்து), பேட்டைக்கடைத் தெரு என்றழைப்பதாகக் கூறினர்.

      Delete
    2. வினைதீர்த்த விநாயகர் கோயில் தெரு என்ற பெயர் மாற்றத்தில் இன்னொரு பேட்டைத் தெரு இருக்கிறதோ?..

      Delete
    3. முன்பு வினைதீர்த்த செட்டி அக்கிரகாரம் என்றழைக்கப்படும் வினைதீர்த்தத் தெரு, பேட்டை கடைத்தெருவின் தொடர்ச்சியான பேட்டை சாலைக்காரத் தெருவில் உள்ளடங்கிய நிலையில் உள்ளது. அத்தெருவில் ஒரு சிவன் கோயிலும், அதன் எதிரில் சிறிய விநாயகர் கோயிலும் உள்ளன. செங்கல் கட்டுமானத்தைக் கொண்ட அந்தக் கோயிலைப் பற்றி கும்பகோணம் வினைதீர்த்த தெரு விசுவநாதசாமி கோயில் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் ஒரு பதிவு எழுதுவதற்காக குறிப்பெடுக்க அங்கு சென்றுவந்தேன்.

      Delete
    4. ஆமாம், ஐயா. அதே வினைதீர்த்தத் தெரு தான். தங்கள் தேடலுக்கு நன்றி. அடுத்த தடவை கும்மோணம் வரும் பொழுது நேராக அந்தத் தெருவிற்கே சென்று பார்ப்பேன். மிக்க நன்றி.

      Delete
    5. மகிழ்ச்சி. வாய்ப்பிருப்பின் சந்திப்போம்.

      Delete
  8. வணக்கம் முனைவர் அவர்களே...

    இன்றைய இளைய சமூகத்தினர் பெரியவர்களிடம் மட்டுமல்ல, பெற்றோர் சொல்வதை கேட்பதுகூட கௌரவக் குறைச்சலாக கருதுகின்றனர்.

    இனிதமிழில் மரியாதை என்ற வார்த்தைகள் நாளடைவில் மறைந்து அழிந்து விடும்.

    ReplyDelete
  9. பெரியவர்களின் அறிவுரை கேட்டுக் கொள்வது நல்லதே. தற்போது இருக்கும் சூழல் அப்படியானதாக இல்லை. குழந்தைகள் பெரும்பாலும் தன் அப்பா/அம்மா தவிர வேறு யாரிடமும் பேசுவது கூட குறைவாகவே இருக்கிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம்.

    நல்ல பகிர்வு ஐயா.

    ReplyDelete
  10. மூத்தோர் சொல் அமுதம் .
    பெரியவர்களை மதித்து அவர்கள் சொன்னதை கேட்டதால் உயர்வு கிட்டி இருக்கிறது.

    ReplyDelete
  11. அருமை அய்யா...

    ரயில் போகிறது என்பது வண்டித் தொடராக உங்கள் தேடலை உருவகமாகச் சொல்கிறது... சிற்பியின் நரகம் சிறுகதையில், நடராசர் சிலையைத் தான் எப்படி வடித்தேன் என்பதைத் தனது நண்பரும், கிரேக்க தத்துவவாதியும் நாத்திகனுமான பைலார்க்கஸ் என்பவனிடம் விளக்குவார் சிற்பி, எந்தெந்த பாவத்தை எங்கெங்கே பார்த்து அதைச் சிலையில் கொண்டு வந்தேன் என்று.... நீங்கள் அப்படியாக உங்கள் வளர்ச்சியின் முக்கிய மைல் கற்களை, அவை ஊன்றப்பட்ட இடம், காலம், யார் முன்னிலையில் என்பனவற்றோடு நினைவில் தேக்கி வைத்துக் கொண்டாடவும் செய்கிறீர்கள்...நீடு வாழ்க!

    இப்போதும் இளம் தலைமுறையினர் ஆர்வத்தோடு இப்படியும், வேறு பட்ட வடிவங்களிலும் தங்கள் தேடல் மேற்கொள்வதை நம்பிக்கையோடு பார்க்கிறேன்.

    எஸ் வி வேணுகோபாலன் 
    சென்னை 24
    94452 59691 

    ReplyDelete
  12. மிக மிக சுவாரஸ்யமான பதிவு!
    அப்போதெல்லாம் ஆசிரியர்கள் நம் அறிவை வளரச்செய்வதற்கு பல விதமாக அறிவுரை சொன்னார்கள். அவர்கள் சொன்ன விதம் , பழகிய விதம் நம் மனதில் அப்படியே பசுமரத்தாணி போல பதிந்து விட்ட காரணத்தாலாயே நமக்குள் ' தேடல்' சிறு வயதிலேயே தொடங்கி விட்டதாக நான் கருதுகிறேன்.
    எனக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு.

    ReplyDelete
  13. நம் காலத்தில் விக்கிப்பீடியா நம் பெற்றோர் ஆசிரியர்கள் தாத்தா பாட்டிகள்.நான் பேச்சுவாக்கில் சின்ன சின்ன துணுக்குகள் மகாபாரதம் ராமாயணம் லேருந்து சொல்வது வழக்கம்.வேற்று மதமாயிருந்தும் எப்படி என்று கேட்பார்கள்.சிறு வயதில் அப்பா ஈஸிசேரில் அமரும் போது அவர் லுங்கியில் தொட்டில் போல் உட்கார்ந்து கேட்ட கதைகள்தான்.இப்போ எல்லாம் Google தான் எல்லோருக்கும்.

    ReplyDelete
  14. எளிமையான வாழ்க்கை அனுபவம்....எழுத்துருவில் ஊட்டியமைக்கு நன்றி அய்யா

    ReplyDelete
  15. இளம் தலைமுறையினர் பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கின்றார்களா என்பதும் சிந்திக்கும் அளவிலேயே உள்ளது.உண்மைதான் ஐயா. தங்களின் இளம் பிராய "ஞான சேகரிப்பு" இந்நாளில் உங்களுக்கு பெரிதும் உதவுவதாக சொல்வது ஏற்புடையதே.

    ReplyDelete
  16. பெரியவர்கள் இதற்கெல்லாம் தடை சொல்ல மாட்டார்கள்.  இளையவர்களுக்குதான் பொறுமை இருக்காது!

    ReplyDelete
  17. நல்ல பதிவு.சிறு வயது அறிவுரைகளும் சுய சிந்தனைகளும் மனதில் பதியும்போது காலப்போக்கில் சந்தற்பங்களுக்கு ஏற்றாற்போல் அவை வெளிப்பட்டு உங்கள் செயலாக்கத்திற்கு உதவும்.ஆனால்,மனம் என்பது விழிப்படைந்துவிட்டால் பின்னர் ,"தானே தனக்கு தலைவிதி " என்பதை யாராலும் மாற்ற முடியாது.சிந்தனை,அதன் காரணமாக செயல் என்றாலும் செயலின் விளைவுகள் நம் கையில் கிடையாது.பெரியவர்கள் சொல்கிறார்கள்,பெற்றோர்கள் சொல்லுகிறார்கள் ,வேத நூல்களில் சொல்லியிருக்கிறது என்பதர்காகமட்டுமே ஒன்றை ஏற்கவேண்டாம் .உனது அறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே நீ ஏற்கவேண்டும்.

    ReplyDelete
  18. அருமை... அருமை..
    பயனுள்ள பதிவு...
    இன்று நல்ல வழி சொன்னால் வேப்பங்காய் போல் இருக்கிறது..

    ReplyDelete
  19. அருமை ஐயா! இளம் தலைமுறையினருக்கு அறிவுரை பிடிப்பதில்லை.நல்ல அறிவாளிகள்தான். பண்பும் கற்றால் நல்லது

    ReplyDelete
  20. உண்மை. பெரியாரைப் பேணித் தமரா கொளல் வேண்டும் .

    ReplyDelete
  21. // பெரியவர்கள் கூறுகின்ற அறிவுரைகளை ஏற்கும் மனப்பக்குவத்தில் இருக்கின்றார்களா என்பதும் சிந்திக்கும் அளவிலேயே உள்ளது //

    சிந்திக்கவே வேண்டாம் ஐயா . விடை தான் நமக்கு தெரியுமே . :)

    ReplyDelete
  22. ஐயா, எப்படி இருக்கிறீர்கள்? நலம்தானே! மறக்க முடியாத நினைவுகளை அசை பொட்டிருக்கிறீர்கள். இந்தக்காலத்துப் பிள்ளைகளுக்கு நாம் தேவையில்லை. எல்லாத்துக்கும் கூகுள் ஆண்டவரிடம்தான் போகிறார்கள். நம்முடைய அறிவுறையெல்லாம் அலட்சியமாகத்தான் அணுகுகிறார்கள்.

    ReplyDelete
  23. தாத்தா சொல் கேட்கும் பிள்ளைகளே இப்போது அதிகமில்லை. வெளியார் சொல்வதையா அவர்கள் கேட்கப்போகிறார்கள்? காலம் மாறிவிட்டது ஐயா! ஆனால் மோசமில்லை. பின்னால் திருந்திவிடுவார்கள்.

    ReplyDelete