06 December 2020

உதிர்ந்தும் உதிராத : எஸ்.வி.வேணுகோபாலன்

பல துறைகளில் பரிணமித்து இயற்கையோடு இரண்டறக்கலந்த 24 முக்கிய நபர்களுக்கு அஞ்சலியாக அமைந்துள்ள கட்டுரைகளைக் கொண்டது எஸ்.வி.வேணுகோபாலன் அவர்களின் உதிர்ந்தும் உதிராத நூல். இலக்கியவாதிகள், கலைஞர்கள், நடிகர்கள், கவிஞர்கள், பாடகர்கள், சமூக ஆர்வலர்கள் என்ற அந்தப் பட்டியலில் உள்ளோர் நாம் அறிந்தவர்களே. ஆனால் அவர்களைப் பற்றி நாம் அறியாதனவற்றைத் தந்து அவர்களின் பெருமைகளை எழுத்தில் கொணர்ந்துள்ள ஆசிரியரின் முயற்சி பாராட்டத்தக்கதாகும்.


“எளிமையும் அசத்தலும் ஒருசேரக் கலந்த சாதனையாளர்தான் தென்கச்சி சுவாமிநாதன்” (ப.18)

“கண்ணாடி போட்டுக் கொண்டிருக்கும் குட்டிப் பெண்ணுக்கு கண்ணாடியே போட்டுக்கொள்ளாத பாட்டி அனாயாசமாக ஊசியில் நூல் கோத்துக் கொடுத்து உதவும் துணுக்கைப் பாருங்களேன், அதில் வேறு எத்தனை பாத்திரங்கள் எவ்வளவு முகபாவமும், உடல்மொழியும் காட்டுகின்றனர்!” (ஓவியர் கோபுலு, ப.21) 

“திருவாளர் பொதுஜனத்தை கார்ட்டூனில் 1957ல் உருவாக்கிக் கொடுத்து அரசியல் அபத்தங்களை, அத்து மீறல்களை, சமூக அவலங்களை அவரது தூரிகை வரைந்து தள்ளிக் கொண்டிருந்தது.” (ஆர்.கே.லட்சுமண், ப.25)

“பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ, ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம்.” (பி.பி. ஸ்ரீநிவாஸ், ப.60)

          “வாழ்க்கையின் அபத்தங்களை அனாயாசமாக நகைச்சுவை வசனங்களில் அபாரமன கற்பனையோடு கொண்டுவரும் திறமை அவரது தனித்துவமான அம்சங்களுள் ஒன்று.” (கிரேசி மோகன், ப.68)

          “கேலிச் சித்திரக்காரர்களுக்கு வரைவதற்குக் கொண்டாட்டமான பாங்கில் அப்படி ஒரு முகவாகு. பருத்த உடல். அதைவிடக் கனத்த உடல் மொழி. வசனத்தை உச்சரிப்பதில் ஒரு தனித்துவ ரசனையோடு ஒலிக்கும் ஒரு பாணி.” (நீலு, ப.71)

          “கருத்துச் சுதந்திரம் என்பது அவரைப் பொறுத்தமட்டில் வெற்று முழக்கமோ, முணுமுணுப்போ அல்ல. அது ஒரு போர்க்கொடி! ஜனநாயகத்தின் உயிர்! …..துணிச்சலின் பெயர்களில் ஒன்றாக இருந்தது அவர் பெயர்.” (கிரீஷ் கர்னாட், ப.102)

“மக்கள் இதயத்தை தொட நினைக்கும் கலைஞர்களுக்கு ருத்ரய்யாவின் பெயர் நிச்சயம் ஓர் உந்துவிசையாகவே இருக்கும்.” (ப.107)

 “குடியரசுத் தலைவர்கள் எல்லோரும் நினைவில் நிற்பதில்லை. இப்போது இருப்பவர் யார், முந்தைய குடியரசுத் தலைவர் யார் என்று கேட்டுப் பாருங்கள், முப்பது விழுக்காட்டுக்கு மேல் எனக்குத்தெரியாது என்று சொல்லிவிட்டுப் போவார்கள். கலாம் எப்படி நினைவில் நின்றுவிட முடிந்தது?” (ப.115)                   

மனோரமா, நா.முத்துக்குமார், டாக்டர் எஸ்.மாணிக்கவாசகம், மிருணாளினி சாராபாய், பாலு மகேந்திரா, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா, மணிவண்ணன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், வையம்பட்டி முத்துசாமி, டி.எம்.சவுந்திரராஜன், எஸ்.விசுவநாதன், கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ், கிருஷ்ணா டா வின்சி உள்ளிட்ட பலருக்கு அஞ்சலி  செலுத்தியுள்ளார்.

ஒவ்வொருவரையும் பற்றிய ஒரு பறவைப்பார்வையை ஆசிரியர் தந்துள்ளதைப் படிப்பவர்கள் அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமிப்பர். ஒவ்வொருவரின் மேதைமைத் தன்மை, குணம், சாதனை போன்றவற்றை அலசி ஆராய்ந்து திரட்டித் தந்துள்ளார். இவர்களில், நேரில் சந்தித்தவர்களைப் பற்றிப் பகிரும்போது மேலும் நெகிழ்ந்துவிடுகிறார். சுருக்கமாகவும், நுணுக்கமாகவும் அவர்களை நினைவுகூர்ந்த வகையில் அப்பெருமக்களை நம் மனதில் இடம் பிடிக்க வைத்துவிட்டார் ஆசிரியர்.        


எஸ்.வி.வேணுகோபாலன் (94452 59691), பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை 600 018 (044-24332424, 24332924, 24356935, thamizhbooks@gmail.com),  டிசம்பர் 2019, ரூ.135

நன்றி : புக்டே தளம், அத்தளத்தில் வாசிக்க : உதிர்ந்தும் உதிராத


11 comments:

 1. சிறப்பான நூல் அறிமுகம். நன்றி முனைவர் ஐயா.

  ReplyDelete
 2. ஐயா அவர்களின் எழுத்தும் பேச்சும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் தன்மை வாய்ந்தது. இசை குறித்த ஐயா அவர்களது பேச்சும், எழுத்தும், அக்காட்சிகளை கண் முன் நிறுத்தும் வல்லமை வாய்ந்தவை.
  தாங்கள் அறிமுகம் செய்த நூலினை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது
  அவசியம் வாசிப்பேன் ஐயா
  அருமையான நூலறிமுகம்
  நன்றி ஐயா

  ReplyDelete
 3. ஆசையை தூண்டும் விமர்சனம். முனைவர் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 4. மிகவும் சுவாரஸ்யமான ஒரு புத்தகம் பற்றி அறிமுகம்.  நன்றி.

  ReplyDelete
 5. பாராட்டுதலுக்கும் போற்றுத்தலுக்குமுறியவர்

  ReplyDelete
 6. அருமையான, செறிவான, நுட்பமான நூல் அறிமுகம் என்னைத் தொடர்ந்து வியக்க வைக்கிறது. முனைவர் பா ஜம்புலிங்கம் அவர்களது தொடர் வாசிப்பும், ரசனையான பதிவுகளும், சலிப்பில்லாத உழைப்பும், நேர்மையான அணுகுமுறையும், உள்ளம் திறந்த உரையாடலும் மிகக் குறுகிய கால அறிமுகத்தில் என்னைக் கவர்ந்த அம்சங்களாகும். இந்தக் குறிப்பிட்ட தொகுப்பு பற்றிய அவரது பதிவு உண்மையில் அபாரம். வாசிக்கத் தூண்டுவது, தாம் இன்புறுவது உலகு இன்புறக் காணும் பாங்கு! எப்படி நன்றி சொல்ல...

  கடந்த ஆண்டு இந்தியன் வங்கியில் பணி நிறைவு செய்வதை நோக்கிய நகர்வில், என் வாழ்க்கை இணையர் விடாது வற்புறுத்தி என்னைக் கொணர வைத்த இரு தொகுப்புகளில் ஒன்று இந்த நூல். அருமையான மனிதர்களது மறைவுச் செய்தி ஏற்படுத்திய பாதிப்பில் உடனுக்குடன் எழுதிய எளிய புகழஞ்சலி எழுத்துகள் இவை.  இந்தக் கட்டுரைகள் வெவ்வேறு சமயங்களில் எழுதப்பட்டவை, பல்வேறு ஏடுகளில், இதழ்களில் வந்தவை. சில, அடுத்த நாளே பிரசுரமானவை. 
  அய்யாவுக்கு என் உள்ளார்ந்த நன்றி 

  இந்த அறிமுகத்தையொட்டி இந்த நூலைவ் வரவேற்று எழுதியுள்ள அன்பர்களுக்கு நன்றி. கரந்தை அய்யா அவர்கள் எனது உரைகள் தொடர்ந்து கேட்டும், பார்த்தும், படைப்புகளை உடனுக்குடன் வாசித்தும் ஊக்கமளித்து வருவது வணக்கத்திற்குரியது.

  எஸ் வி வேணுகோபாலன் 

  94452 59691

  ReplyDelete
 7. நல்லதொரு தொகுப்பு ...

  ReplyDelete
 8. மிக்க நன்றி அய்யா

  ReplyDelete
 9. ஆச்சரியமாக உள்ளது. இப்படியும் விமர்சனம் எழுதலாம் என்று இன்று தான் உணர்ந்தேன். நன்றி.

  ReplyDelete
 10. முக்கியமான வரிகளை எடுத்து பதிவு செய்து, அதற்கான காரணத்தை அறிய வேண்டும் எனும் ஆர்வத்தை உண்டாகும் சிறப்பான விமர்சனம் ஐயா... நன்றி...

  ReplyDelete
 11. அருமையான நூலறிமுகம் .நன்றி அய்யா

  ReplyDelete