1927ஆம் ஆண்டு முதல் ஆண்டின் மிகச்சிறந்த நபர் விருதினை அளித்து வரும் டைம் இதழ் முதன்முதலாக அப்பெருமையை இந்த ஆண்டுக்கு ஒரு பெண் குழந்தைக்குச் சூட்டி பெருமைப்படுத்துகிறது. 2019இல் டைம் இதழ் மிகக்குறைந்த வயதில், அதாவது 16ஆம் வயதில், ஆண்டின் மிகச் சிறந்த நபராக கிரேட்டா தன்பர்க்கை அறிவித்தது நினைவிருக்கலாம். கிட்டத்தட்ட அவரை நினைவுபடுத்துகின்ற மற்றொருவரை 2020இல் கிட் ஆஃப் தி இயர் (Kid of the year), என்று அவ்விதழ் அறிவித்துள்ளது.
எட்டு வயது முதல் 16 வயதிற்குட்பட்ட, அமெரிக்காவைச் சேர்ந்த 5,000 சிறுவர்களிலிருந்து முதன்முதலாக ஆண்டின் சிறந்த சிறுமியாக டைம் இதழ் தேர்ந்தெடுத்துள்ள அறிவியலாளர் கீதாஞ்சலி ராவ் (15) ஆவார். கூர்ந்து கவனித்தல், கருத்து உதிர்ப்பு, ஆய்வு மேற்கொள், கட்டுமானம் செய் மற்றும் தொடர்புகொள்ளல் என்பதே இவருடைய செயல்பாட்டு அம்சங்கள் ஆகும். உலகில் பரவலாகக் காணப்படுகின்ற அசுத்தமான குடிநீர் தொடங்கி அபினி போதைப்பழக்கத்திற்கு அடிமையாதல் மற்றும் இணைய அச்சுறுத்தல் உள்ளிட்ட அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் தீர்வினைக் கொண்டுள்ளார் இந்தச் சிறுமி.
2005இல் அமெரிக்காவின் தென்மேற்கு மத்தியப் பகுதியில் அமைந்துள்ள
கொலராடோவின் தலைநகரான டென்வர் நகரில் பிறந்த இவர் பல வகையான புதிய தொழில்நுட்பங்களை,
பல துறைகளில் கண்டுபிடித்துள்ளார். அவற்றுள் முக்கியமானவை குடிதண்ணீரில் கலந்திருக்கின்ற
ஈயத்தின் அளவைக் கண்டறியும் கருவி, இணைய அச்சுறுத்தலை எதிர்கொண்டு நுணுக்கமாகக் கண்டுபிடிக்கின்ற
செயலி மற்றும் க்ரோம் விரிவாக்கம் போன்றவையாகும்.
டைம் இதழில் இவர், ஏஞ்சலினா ஜோலிக்கு அளித்த இணைய வழியிலான பேட்டி
வெளியாகியுள்ளது. அறிவியலாளர் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. வழக்கமாக
தொலைக்காட்சியில் ஒரு அறிவியலாளரைப் பார்க்கும்போது அவர் மிகவும் வயதானவராகவே இருப்பார்.
பெரும்பாலும் ஒரு வெள்ளையர்தான் அறிவியலாளராக இருப்பார். மக்கள் அவ்வாறாக ஒரு முத்திரையைக்
குத்திவிடுகின்றனர். உலகில் பரவலாகக் காணப்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பது மட்டுமன்றி
மற்றவரையும் அவ்வாறு செய்யத் தூண்டவேண்டும் என்பதே தன் இலக்கு என்கிறார் அவர். தன்னுடைய
சொந்த அனுபவத்தின் அடிப்படையில் என்னால் செய்ய முடியும் என்றால் உங்களாலும் செய்ய முடியும்.
அதனை மற்றவர்களாலும் செய்ய முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் அவர். அனைவருடைய முகத்திலும் புன்சிரிப்பைக்
காணவேண்டும் என்பதே இந்த இளம் அறிவியலாளரின் ஆவலாகும். அனைவரையும் மகிழ்ச்சியோடு இருக்க வைப்பதையே தன்னுடைய
விருப்பமாகக் கொண்டுள்ளார்.
சமூக மாற்றத்திற்கு ஏற்றவாறு அறிவியலையும்
தொழில்நுட்பத்தையும் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து சாதனை படைத்தவர் அவர். கார்பன்
நானோடியூப் சென்சார் தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வு செய்ய தன்னுடைய விருப்பத்தினை பெற்றோரிடம்
தெரிவித்தபோது அவருடைய வயது 10. 2014இல் முதன்முதலாக அமெரிக்காவில் மிச்சிகனில் உள்ள
கிளிண்ட் என்ற இடத்தில் ஏற்பட்ட குடிநீர் மாசு இவருக்கு ஓர் ஆரம்பமாக அமைந்தது. அப்போதுதான்
குடிநீரில் உள்ள ஈயத்தின் அளவினைக் கணக்கிட்டார். கீதாஞ்சலியின் கண்டுபிடிப்புக்கு
தேதீஸ் (Tethys) என்ற, சுத்தமான நீரைக்குறிக்கின்ற, கிரேக்க பெண் கடவுளின் பெயர் சூட்டப்பட்டது.
கைன்ட்லி (Kindly) எனப்படுகின்ற செயலி
மற்றும் க்ரோம் விரிவாக்க சேவை மூலமாக இணைய அச்சுறுத்தலை, அதன் ஆரம்ப நிலையிலேயே செயற்கை
நுண்ணறிவின் துணைகொண்டு கண்டுபிடிக்க முடியும் என்கிறார் அவர். அச்சுறுத்தல் தொடர்பான
சில சொற்களுக்கான குறியீடுகளை முதலில் அமைத்துக்கொண்டு அதனை அவருடைய பொறி மூலமாக அனுப்பும்போது,
அதையொத்த சொற்களை அடையாளப்படுத்த முடிந்தது என்கிறார் அவர். இந்த உத்தி மூலமாக ஒரு
சொல்லையோ சொற்றொடரையோ தட்டச்சு செய்யும்போது
அது அச்சுறுத்தல் தொடர்பானதா என்பதை விளங்கிக்கொள்ள முடியும் என்கிறார் அவர்.
அச்சுறுத்தல் தொடர்பான சொல்லாக இருந்தால் அச்சொல்லை எடிட் செய்யவோ, உள்ளது உள்ளபடி
அனுப்பவோ முடியும் என்றும், தம்முடைய இலக்கு தண்டிப்பதற்கு அல்ல என்று கூறுகிறார்.
3எம் என்ற நிறுவனத்தின் அறிவியலாளருடன்
இணைந்து தம் சோதனைகளை மேற்கொண்டார். 2017இல் அமெரிக்காவில் நடைபெற்ற இளம் அறிவியலாளர் சவாலில் வெற்றி
பெற்றார். தம் கண்டுபிடிப்புகளுக்காக போர்ப்ஸ் நிறுவனத்தால் பாராட்டு பெற்றார்.
2018இல் நடைபெற்ற மாநாட்டில் தம் கருத்தினை பகிர்ந்துகொண்டார். டெட் தளத்தில் மூன்று
முறை உரையாற்றியுள்ளார். செப்டம்பர் 2018இல் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு
நிறுவனத்தின் இளைஞருக்கான சுற்றுச்சூழல் விருதினைப் பெற்றார். மே 2019இல் டிசிஎஸ் இக்னைட்
இன்னொவேசன் மாணவர் சவாலில் கலந்துகொண்டு உயரிய விருதினைப் பெற்றார். அமெரிக்காவிலுள்ள அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல்
மற்றும் கணிதம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்டெம் திட்டத்தில் உறுப்பினராக உள்ளார்.
துணை நின்றவை
Gitanjali Rao, Inventor, Lone Tree, Colorado, Forbes, Young Scientist Challenge, 2017
Gitanjali Rao: Girl of 11 takes US young scientist prize, BBC News, 19 October 2017
7 Young inventors who see a better way, Time
Kid of the Year: Gitanjali Rao, 15, Lone Tree, Colo, Time
Gitanjali Rao: Time magazine names teenage inventor its first ‘kid of the year’, Guardian, 4 December 2020
A Young Girl Scientist's Guide to Innovation, TED.com talks
அரியவர்களைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
ReplyDeleteஇந்தஇளம் சாதனையாளரை பாராட்டவேண்டும்.
ReplyDeleteசிறப்பு... அருமை ஐயா...
ReplyDeleteஅருமையான பதிவு அய்யா. வளரிளம் பருவத்தினருக்கு பொதுவாக இருக்கும் ஆசைகளின் பக்கம் கவனம் செலுத்தாமல் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று எண்ணும் அன்பு உள்ளத்தை பெற்றிருக்கும் கீதாஞ்சலி மற்றும் அவரின் பெற்றோர் போற்றப்பட வேண்டியவர்கள் என்றால் மிகையாகாது.
ReplyDeleteவியப்பாக இருக்கிறது
ReplyDeleteபோற்றுவோம்
வணக்கம் சகோதரரே
ReplyDeleteநல்ல செய்தி. இந்த இளம் வயதில் இவ்வளவு திறமைசாலியாக வளர்ந்திருக்கும் இந்த இளம் சாதனையாளரை மனதாற பாராட்டுவோம். நல்ல செய்தியினை பகிர்ந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
மிக்க நன்றி அய்யா . எப்போதும் சிறப்பான பதிவுகள் தங்களுடையவை .
ReplyDeleteஅருமை வியப்பு.
ReplyDeleteஇளம் அறிவியலளார் - சிறப்பான செய்தியைப் பகிர்ந்த உங்களுக்கு நன்றி. சாதனையாளருக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்புத் தகவல் மற்றும் பலருக்கு முன்மாதிரி ஐயா!
ReplyDelete2021 இல் - தங்கள்
தளத்திற்கு அடிக்கடி வருவேன்.