ஒவ்வோராண்டும் ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதியும், பிற அகராதிகளும் அந்த ஆண்டுக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்கின்றன. ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 2018இன் சிறந்த சொல்லாக டாக்சிக் என்ற சொல்லையும், 2019இன் சிறந்த சொல்லாக கிளைமேட் எமர்ஜென்சி என்ற சொல்லையும் தெரிவு செய்திருந்தது. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலை உள்ளதாகவும், ஒரு சொல்லுக்குள் இந்த ஆண்டை அடக்கமுடியாது என்றும் அந்த அகராதி தெரிவித்ததோடு, சிறந்த சொல் என்பதற்கு மாறாக, எதிர்பாரா ஆண்டிற்கான சொற்களை அளித்துள்ளது.
முந்தைய ஆண்டுகளிலிருந்து இந்த ஆண்டு சற்றே மாறுபட்டுவிட்டதாகத் தோன்றுகிறது என்றும், ஆங்கில மொழியானது இந்த ஆண்டு வழக்கம்போல தன் வளர்ச்சிக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது என்றும், அந்தச் சூழலில் தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின்படி மொழியியலாளர்கள் ஆராய்ந்தபோது ஆண்டின் சிறந்த சொல் என்ற வரையறைக்குள் அடங்குகின்ற அளவிற்கு 2020ஆம் ஆண்டு அமையவில்லை என்றும் ஆக்ஸ்போர்டு அகராதியினர் தெரிவித்துள்ளனர். 2020ஆம் ஆண்டிற்கான சொல் தெரிவு செய்ய இயலாத நிலையில் அவர்கள், வழக்கத்திற்கு மாறாக, 2020இல் மொழியில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக வைத்து எதிர்பாரா ஆண்டிற்கான சொற்கள் (Words of an Unprecedented Year ) என்ற ஓர் அறிக்கையைத் தயாரித்துள்ளனர்.
பொதுவாக ஆக்ஸ்போர்டின் ஆண்டின் சிறந்த சொல் என்பதானது வழக்கம்போல இந்த ஆண்டும் ஓர் ஆர்வத்தினைத் தூண்டிவிட்டிருந்தது என்றும், ஒவ்வோராண்டும் பண்பாட்டு முக்கியத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட, ஒரு முக்கியமான தாக்கத்தினை உண்டாக்குகின்ற, ஒரு சொல்லைத் தெரிவு செய்வது தொடர்பாக விவாதித்தாகவும் அவ்வகராதியினர் கூறியிருந்தனர். நிறைவாக அவர்கள் ஒரு குறிப்பிட்ட சொல்லைத் தெரிவு செய்ய இயலா நிலையைக் குறிப்பிட்டு ஆக்ஸ்போர்டு அகராதிகளின் 2020க்கான எதிர்பாரா ஆண்டின் சொற்களைக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் முக்கிய இடத்தைப் பெற்றது 2020ஆம் ஆண்டில் உலகெங்கும் முக்கிய இடத்தைப் பெற்ற பெயரடையாகும். "எதிர்பாராத வகையில் ஆங்கிலம் பேசுகின்ற உலகில் கொரோனா தொடர்பாக பல புதிய சொற்கள் இடம்பெற்றதோடு, மொழியின் முக்கியமான இடத்தைப் பெற ஆரம்பித்தன," என்கிறது அந்த அறிக்கை. கொரோனாவின் பாதிப்பானது மொழியைக்கூட விட்டுவைக்கவில்லை என்பதை இதன்மூலம் உணரமுடிகிறது.
அந்த அறிக்கையில் பல சொற்கள் (“bushfire”, “acquittal”, “covid-19”, “Black Lives Matter”, “Mail-in”, “Belaurusian”, “Moonshot”, “net zero”, “superspreader”) மாதவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஆஸ்திரேலியா எதிர்கொண்ட காட்டுத்தீ (ஜனவரி/புஷ்பயர்), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு விசாரணையிலிருந்து விடுவிப்பு மற்றும் 11 பிப்ரவரி 2020 முதன்முதலில் பதிவான கோவிட்-19 என்ற சொல்லைத் தொடர்ந்து அதன் தொடர்பான ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல், முகக்கவசம், நோய்ப்பரவல், பாதுகாப்பு கவச உடை, வீட்டிலிருந்து பணியாற்றல், இணையவழி கருத்தரங்கு போன்றவை (பிப்ரவரி/அக்குவைட்டல், கோவிட்-19), கருப்பு இனத்தவருக்கான நீதி (ஜுன்/ப்ளாக் லிவ்ஸ் மேட்டர்), அமெரிக்காவில் அஞ்சல்வழி வாக்குகள், பெலாரஸ் நாட்டில் ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய மறுதேர்தல் (ஆகஸ்ட்/மெயில்-இன், பெலாருசியன்), ஐக்கிய ராஜ்ஜிய அரசின் பெருமளவிலான கொரோனா பரிசோதனைத்திட்டம் (செப்டம்பர்/மூன்ஷாட்), 2060க்குள் கார்பன் நடுநிலை என்ற சீன அதிபர் சீ சின்பிங்கின் உறுதிமொழி மற்றும் வெள்ளை மாளிகையில் அதிக அளவிலான கொரோனா பரவல் (அக்டோபர்/நெட்ஜீரோ, சூப்பர்ஸ்பிரெட்டர்) போன்றவை அடங்கும். நோய்ப்பரவல் என்ற சொல்லானது கடந்த ஆண்டைவிட 57,000 விழுக்காடு அதிகம் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கோவிட்டுக்கு முன், கோவிட்டுக்குப் பின் என்ற பயன்பாடுகளும் அதிகம் காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஒவ்வோராண்டும் சிறந்த சொல்லை அறிவித்த இந்த அகராதியானது, திங்களன்று (23 நவம்பர் 2020) 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு சொல்லைத் தெரிவு செய்ய முடியவில்லை என்பதை முதன்முதலாக அறிவித்துள்ளது. 2020இன் சிறந்த சொல்லாக லாக் டவுன் என்ற சொல்லை காலின்ஸ் அகராதியும் க்வாரன்டைன் என்ற சொல்லை கேம்பிரிட்ஜ் அகராதியும் அறிவித்துள்ளன. 2020ஆம் ஆண்டை எதிர்பாராத ஓர் ஆண்டு என்று அந்த அகராதி கூறியுள்ளதைக் காணும்போது 2020இல் உலகையே உலுக்கிய கொரோனாவைக் குறிக்கின்ற வகையில் 2020 என்ற சொல்லே இவ்வாண்டின் சிறந்த சொல்லாக அமைய வாய்ப்புள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
துணை நின்றவை
Word of the Year, Wikipedia
Word of
the Year 2020, Oxford Languages 2020, Words of an Unprecedented
Year
Oxford English Dictionary couldn't pick just
one 'word of the year' for 2020, CNN, 23 November, 2020
Can you describe the year 2020 in one word?
Neither can the Oxford Dictionary, Windsorstar, 24 November 2020
Cambridge Dictionary’s Word of the Year 2020, A blog from Cambridge University, Quarantine, 24 November 2020