2020இன் சிறந்த சொற்களை (WOTY/Word of the year) ஆங்கில அகராதிகள் அறிவித்துள்ளன. ஜெர்மனி (1971), ஜப்பான் (1995), ரஷ்யா (2007), டென்மார்க் (2008), போர்ச்சுக்கல் (2009), நார்வே (2012), உக்ரைன் (2013) உள்ளிட்ட நாடுகள் ஆண்டின் தத்தம் மொழிக்கான சிறந்த சொல்லைத் தெரிவு செய்து அவ்வப்போது அறிவிக்கின்றன. ஜெர்மனியில் ஒவ்வோராண்டும் சொல் தேர்வில் மூன்று நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. 1971 முதல் சிறந்த ஜெர்மானியச்சொல்லும் (Word of the Year : Germany), 1991 முதல் பொருத்தமற்ற ஜெர்மானியச் சொல்லும் (Un-word of the Year : Germany), 2008 முதல் இளம் ஜெர்மானியரால் சிறந்த ஆங்கிலச் சொல்லும் (German Youth Word of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆக்ஸ்போர்டு அகராதி, 2020ஆம் ஆண்டை ஒரு சொல்லுக்குள் அடக்கிவிடமுடியாது என்றுகூறி எதிர்பாரா ஆண்டின் சொற்களை (Words of an unprecedented year) வெளியிட்டுள்ளது. “க்வாரன்டைன்” (கேம்பிரிட்ஜ்), “பாண்டமிக்” (மெரியம் வெப்ஸ்டர்), “லாக் டவுன்” (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும், “பான்டெமிக்” என்ற சொல்லை டிஸ்னரி இணைய தளமும், “செல்ப் ஐசோலேஷன்” என்ற சொல்லை ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையமும் தெரிவு செய்துள்ளன.
கொரோனாவின் பரவலும் பாதிப்பும் இப்பூமிப்பந்தில் எந்த அளவு விரவியுள்ளன என்பதை இந்த ஆண்டிற்கான சிறந்த சொற்கள் தெரிவிலிருந்து அறிந்துகொள்ளலாம். கொரோனாவின் கோரத்தாண்டவத்தினால் ஆண்டின் சிறந்த சொற்களாக கொரோனா தொடர்புடைய சொற்களே அகராதிகளாலும், அகராதிகளின் தளங்களாலும் சிறந்த சொற்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை ஆண்டின் சிறந்த சொற்கள் என்பதைவிட என்றும் மறக்கவேண்டிய சிறந்த சொற்கள் (Words to be forgotten ever) என்றுகூடச் சொல்லலாம்.
தொடர்ந்து எதிர்கொண்ட மோசமான விளைவுகளைக் குறிக்கின்ற கோவிட்19 என்ற சொல் 2020இல் உருவானது அதனைத் தொடர்ந்து அச்சொல்லுடன் தொடர்புடைய கொரோனா தீநுண்மி, தனிமைப்படுத்தப்படல், சமூக இடைவெளி, முகக்கவசம், தடுப்பூசி போன்ற சொற்கள் அதிகமாக புழக்கத்திற்கு வந்தன. இந்தச் சூழலில் இதுபோன்ற பல நிகழ்வுகளை எதிர்கொண்ட ஆண்டைக் குறிக்கின்ற 2020 என்பதே அனைத்து மொழிகளிலும் இந்த ஆண்டின் சிறந்த சொல்லாகக் கருதப்பட வாய்ப்புண்டு என்றது எக்கனாமிக் டைம்ஸ்.
இதுவரை ஆண்டின் சிறந்த சொல்லைத் (Word of the year) தெரிவு செய்த ஆக்ஸ்போர்டு அகராதி 2020ஆம் ஆண்டுக்குச் சிறந்த சொல் தெரிவு செய்ய இயலா நிலையைக் குறிப்பிட்டு, ஒரு சொல்லுக்குள் இந்த ஆண்டை அடக்கமுடியாது என்றுகூறி எதிர்பாரா ஆண்டின் சொற்கள் (Words of an unprecedented year) என்ற ஓர் அறிக்கையை வழங்கியுள்ளது. (அதனை முந்தைய பதிவில் படித்தோம்)
கேம்பிரிட்ஜ் அகராதி
கேம்பிரிட்ஜ் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “க்வாரன்டைன்” (quarantine/ தனிமைப்படுத்துதல்) என்பதாகும். கேம்பிரிட்ஜ் அகராதியானது தமக்குக் கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் தம் அகராதியில் அதிகமாக தேடப்பட்ட சொற்களில் ஒன்றாக க்வாரன்டைன் என்ற சொல் அமைந்ததாகவும், ஆய்வின்போதான தேடலில் பொதுமக்கள் இச் சொல்லைப் பயன்படுத்தியதை நோக்கும்போது தாம் அச்சொல்லிற்கான புதிய பொருள் உருவாவதைக் கண்டறிந்ததாகவும் கூறியுள்ளது. நோய்த்தொற்று ஏற்படாமல் இருக்கவும், நோயினைப் பரவவிடாமல் இருக்கவும் ஒரு குறிப்பிட்ட கால எல்லையளவிற்கு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறவும், சுதந்திரமாகப் பயணிக்கவும் அனுமதிக்கப்படா நிலை என்ற வகையில் அச்சொல்லுக்கான புதிய பொருள் அமைந்துள்ளதாகவும் நோய்த்தொற்றிலிருந்து தவிர்ப்பதற்காக பொதுமக்கள் வீட்டிலேயே இருந்த நிலையைக் குறிக்கின்ற லாக் டவுன் என்ற சொல்லுக்கு இணையாக இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவ்வகராதி கூறியுள்ளது. சொல்லுக்கான கூடுதல் விளக்கமானது தற்போது அகராதியில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், முன்பு பரவலாக கூறப்பட்டு வந்த பொருளிலிருந்து சற்று மாறுபட்ட நிலையில் அவ்விளக்கம் அமைந்ததாகவும் கூறியுள்ளது.
மெரியம் வெப்ஸ்டர் அகராதி
மெரியம் வெப்ஸ்டர் அகராதி தேர்ந்தெடுத்த சொல் “பான்டெமிக்” (pandemic/சர்வதேச அளவில் பரவி வருகின்ற தொற்றுநோய்) என்பதாகும். சில சமயங்களில் குறிப்பிட்ட ஒரு சொல்லானது ஒரு சகாப்தத்தையேக் குறிக்கும் வகையில் முக்கியத்துவம் பெறும் என்றும், அந்த வகையில் வழக்கத்திற்கு மாறான இந்த ஆண்டில் தமக்குக் கிடைத்தப் புள்ளிவிவரங்களின்படி ஒரு குறிப்பிட்ட சொல்லே ஆண்டின் சிறந்த சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதிக அளவில் தம் இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த சொல் பான்டெமிக் என்றும் அந்த அகராதி கூறியுள்ளது. அமெரிக்காவில் சீட்டில் மருத்துவமனையிலிருந்து முதல் கோவிட்-19 நோயாளி வெளியேறிய 3 பிப்ரவரி 2020ஆம் நாளன்று முதல் இச்சொல்லுக்கான தேடல் அதிகமானது என்றும், அதற்கு முந்தைய ஆண்டு அதே நாளில் தேடப்பட்டதைவிட 1621 விழுக்காடு அதிகமாக தேடப்பட்டதாகவும், இருந்தபோதிலும் முதன்முதலாக கோவிட் பாசிட்டிவ் கொண்ட நோயாளியைப் பற்றிய செய்தி வெளியான 20 ஜனவரி 2020 நாள் முதல் இச்சொல்லின் தேடலானது ஆரம்பமானது என்றும் அவ்வகராதி கூறியுள்ளது.
காலின்ஸ் அகராதி
காலின்ஸ்
அகராதி தேர்ந்தெடுத்த சொல் “லாக்டவுன்” (lockdown/பொது முடக்கம்) என்பதாகும். கோவிட்-19 பரவலைத் தடுப்பதற்காக
உலகம் முழுவதும் அரசுகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றான ஊரடங்கினை இச்சொல் குறிக்கிறது.
நோய்ப் பரவலைத் தடுப்பதற்காக உலகில் கோடிக்கணக்கான
மக்கள் ஒட்டுமொத்தமாக எதிர்கொண்ட அனுபவத்தை இச்சொல் குறிக்கிறது என்றும் கடந்த ஆண்டைவிட
இந்த ஆண்டில் இச்சொல் அதிகம் தேடப்பட்டதாகவும் இந்த அகராதி கூறுகிறது.
டிக்ஷனரி இணையதளம்
டிக்ஷனரி இணையதளமும் “பான்டெமிக்” என்ற சொல்லையே தெரிவு செய்துள்ளது. இச்சொல் இருத்தல் மற்றும் மனித இருத்தல் தொடர்பானவற்றைக் குறிக்கிறது. 1600களின் இறுதியில் ஒருவரின்/ஒன்றின் இருத்தலுக்கான ஆபத்தை, குறிப்பாக ஓர் இனம் எதிர்கொள்கின்ற பேரழிவினை இச்சொல் குறித்தது. லத்தீன் மொழியில் வினைச்சொல்லான இச்சொல் ஜெர்மன் பெயரைக் கொண்ட, முதன்முதலில் 1919இல் பதிவான, தத்துவ இயக்கம் என்பதிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்ததாகும். 2019இல் இருத்தலியல் என்பதானது காலநிலை மாற்றம், துப்பாக்கிக் கலாச்சாரம், ஜனநாயக நிறுவனங்கள் என்ற பரந்துபட்ட அளவில் விவாதிக்கப்பட்டது. பிப்ரவரி 25இல் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான பெர்னி சாண்டர்ஸ் பருவ நிலை மாற்றம் பற்றி விவாதித்தபோது இருத்தலியலுக்கான தேடல் 179 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. உலகளவில் நடைபெற்ற பருவ நிலை ஆர்ப்பாட்டங்களின்போதும், தன்னுடைய உரைகளின்போதும் செப்டம்பர் 2019இல் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க் கூறியதையும் நினைவில் கொள்ளவேண்டும். குறிப்பாக அமெரிக்க காங்கிரசிடம் அவர் தனக்கு ஒரு கனவு உள்ளதாகவும், ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்களும், ஊடகங்களும் பருவநிலை ஆபத்தை இருத்தலியலின் அவசர நிலையாகக் கொண்டு செயல்பட ஆரம்பிக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம்
ஆஸ்திரேலிய தேசிய அகராதி மையம் இவ்வாண்டின் சிறந்த சொல்லாக “ஐசோ” (Iso: self-isolation/தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளல்) என்ற சொல்லைத் தேர்ந்தெடுத்துள்ளது. செல்ப் ஐசோலேஷன் என்ற சொல்லின் சுருக்கமாக ஐசோ என்ற சொல் அமைவதாக அந்த மையம் கூறியுள்ளது. பிற அகராதிகளைப் போலவே இந்த சொல்லும் கொரோனா தொடர்புடையாக அமைந்துவிட்டது
2004 முதல் ஒவ்வோராண்டும் சிறந்த சொல்லை அறிவித்துவருகின்ற ஆக்ஸ்போர்டு
அகராதியை 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒரு சொல்லைத் தெரிவு செய்ய முடியவில்லை என்று அறிவிக்க
இட்டுச்செல்லும் நிலைக்குத் தள்ளியுள்ளது கொரோனா. பிற அகராதிகள் கொரோனா தொடர்பான சொற்களையே
தேர்ந்தெடுத்துள்ளன. தமிழிலும் ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல்
அமையும் என்று நம்புவோம். தமிழகக் கல்வி நிறுவனங்கள், அகராதி அமைப்புகள் இதற்கான முன்னெடுப்புகளை
மேற்கொள்ளலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால்
2020ஆம் ஆண்டைப் பொறுத்தவரை தமிழில் கொரோனா தீநுண்மி என்ற சொல்லே இந்த ஆண்டின்
சிறந்த தமிழ்ச் சொல்லாக அமைய வாய்ப்புள்ளது. போகிற போக்கினைப் பார்க்கும்போது அனைத்து மொழிகளிலும் 2021ஆம் ஆண்டிலும் இச்சொல் இடம் பெற்றுவிடுமோ என்ற ஐயத்தைத் தற்போதைய கொரோனா சூழல் ஆக்கிவிட்டுள்ளது.
துணை நின்றவை
- Word of the Year, Wikipedia
- Word of the Year (Germany), Wikipedia
- Un-word of the Year (Germany), Wikipedia
- Not 'pandemic', 'corona' or 'Covid-19', but '2020' could be the word of the year, Economic Times, 10 August 2020
- Word of the Year 2020, Oxford Languages 2020, Words
of an Unprecedented Year
- Oxford English Dictionary couldn't pick just one 'word of the year' for 2020, CNN, 23 November,2020
- Cambridge
Dictionary’s Word of the Year 2020, A
blog from Cambridge University, Quarantine, 24 November 2020
- Merriam-Webster’s
Word of the Year 2020, Pandemic
- Collins’s Word of the Year 2020 is lockdown
சிறந்த சொல் என்று சொல்வது பொருத்தமாயில்லை. அதிகம் உபயோகப்படுத்தப்பட்ட சொல் என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteநல்லதொரு பதிவு. அனைத்திலும் இடம் பெற்றது தீநுண்மி சம்பந்தமான வார்த்தைகள் என்பது ஒரு விதத்தில் வேதனை.
ReplyDeleteநூலாக்கம் - வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
இவை இந்த ஆண்டோடு முடியட்டும்...
ReplyDeleteஇன்னும் சில ஆண்டுகளுக்கு இச்சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக அமைய வாய்ப்பிருக்கிறது ஐயா
ReplyDeleteஇந்தக் சொல் உலக மக்கள் அனைவரது நாவிலும் மனதிலும் பதிந்துவிட்டது என்றே சொல்லலாம். இது வெகு விரைவில் மனதிலிருந்து அழிய வேண்டும்.
ReplyDeleteதங்களின் ஆய்வின் நூலாக்கத்திற்கு வாழ்த்துகள் ஐயா
துளசிதரன்
இந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை ஆண்டின் சிறந்த சொற்கள் என்பதைவிட என்றும் மறக்கவேண்டிய சிறந்த சொற்கள் (Words to be forgotten ever) என்றுகூடச் சொல்லலாம்.//
ReplyDeleteஆமாம். அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல். சிறந்த சொல் என்பது சற்றும் பொருந்தாதுதான். இது விரைவில் அழிய வேண்டும். மறக்கப்பட வேண்டும். ஆனால் பலரது மனதிலும் ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
நூலாக்கத்திற்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்!
கீதா